சடம் [சிறுகதை] ஜெயமோகன்
சடமும் சித்தும் – அந்தியூர் மணி
அன்புள்ள ஜெ, நலம்தானே?
சடம் சிறுகதை குறித்தான விவாதங்கள் வந்த பிறகுதான் அதைப் படித்தேன்.
வஜ்ராயன பவுத்தத்தில் சில நுட்பமான வழிமுறைகள் உள்ளன. அருவருப்பு, அசூயை போன்ற எண்ணங்கள் ஏற்படாமல் அவற்றைப் படிக்கவோ, ஈடுபடவோ முடியாத அளவுக்கு மிகவும் பிறழ்வுத்தன்மை கொண்டவை. படிப்படியாக அவற்றைக் கூட்டிக் கொண்டே சென்று, இறுதியில் பெரும் பள்ளத்தில் நம்மைத் தள்ளிவிடுபவை. நமக்குள் இருக்குள் கீழான எண்ணங்களை துர்தேவதைகளாக உருவகித்து நம் அகங்காரம் அவற்றிடம் சரணடைவதற்கான வழிபாட்டு முறைகளைக் கொண்டவை. (நிறைவான துர்தேவதை, துர்தேவதையாக தொடர முடியுமா?)
ஒரு வழிபாட்டு முறையைப் பற்றிய குறிப்பு ஒன்றைப் படிக்க நேர்ந்தது. பூஜைக்குப் படைக்கவேண்டிய பொருட்கள் குறித்து சொல்லும்போது – பச்சை மாமிசம், நாயின் மாமிசம், அதன் மலத்தில் தோய்த்த மாமிசம், மனித மலத்தில் தோய்த்த மாமிசம் என்று படிப்படியாக நீண்டு கொண்டே செல்லும்.
இதையெல்லாம் செய்யத் தேவையில்லை, படிக்கும்போது நமக்குள் ஏற்படும் உணர்வுகளைக் கவனித்தாலே போதும், ஒன்று ஞானம் அடைந்துவிடலாம் அல்லது பைத்தியமாகிவிடலாம் (ஒருவேளை இரண்டும் ஒன்றுதானோ?). அருவருப்பும், அசூயையும் ஏன் ஏற்படுகின்றன, யாருக்கு ஏற்படுகின்றன, எதனால் ஏற்படுகின்றன என்று யோசித்தால் பல தளைகள் விலகுவது புரியும்.
எனது புரிதலின்படி நேர்மறையான எண்ணங்கள், செயல்களைக் காட்டிலும் எதிர்மறையானவை தரும் தாக்கம் அதிகம். ஒளியின் எல்லையை இருள்தான் காட்டவியலும், அதைப்போல நம் அகங்காரத்தின் எல்லைகளை, புரிதலின் போதாமைகளைக் காட்டும் கண்ணாடிகள் அவை.
கவனித்துப் பார்த்தால், நேர்மறையான எண்ணங்களும், செயல்களும் காலூன்றி நிற்கும் பாறைகள் அவை. ஒருவன் மிகவும் நேர்மறையானவன் என்றால், அதே அளவுக்கு அல்லது அதைவிட வலிமையான துர்குணங்கள் அவனுக்குள் இருக்கின்றன என்றுதான் பொருள். (நரம்பு புடைக்க அகிம்சை குறித்து பேசுபவர்களைக் கவனித்தால் புரியும்). நம்மைச் சற்றுக் கவனித்தாலே இன்னும் தெளிவாக அதை உணர்ந்து கொள்ளலாம்.
துர்குணங்கள் கொண்டவன் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றினாலும் உள்ளுக்குள் அவனே அறியாமல் உண்டாகும் மனஅழுத்தம் மிகவும் அதிகம். தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களிலும், செயல்களிலும் ஈடுபடுபவன் நகராத பொம்மைக்கு ‘கீ’ கொடுத்துக் கொண்டே இருக்கும் குழந்தையைப் போன்றவன். ஒரு கட்டத்தில் கையிலிருந்து அது துள்ளி ஓடும்போது குழந்தை திகைத்து அழும், பெரியவர்கள் திகைத்து விட்டு சிரிப்பார்கள்.
நம் மனதின் அழுக்குகளை வெளியேற்ற எல்லா பண்பாடுகளும், போதையிலிருந்து, கலைகள் வரை பல வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கும். Trickster எனும் ஆழ்படிமம் அதை முன்வைத்து உருவகிக்கப்பட்டது. ஜென்னில் குருவின் பிரம்படி என்று அதைத்தான் சொல்கிறார்கள். நீங்களும் நிறைய எழுதியிருக்கிறீர்கள்.
எனவே ‘சடம்’ கதையின் முடிவு ஆன்மீக ரீதியில் மிகவும் சரியானதாகத்தான் எனக்குத் தோன்றியது. இறுதியில் அவர் செய்யத் துணியும் செயல்தான் அவருக்கான last straw. அதன்பின் எழும் எண்ணங்கள் எல்லாம், அவரது மனம் தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளும் விளக்கங்களே (interpretations) தவிர, வெளியில் அவற்றுக்கு வெறெந்தப் பொருளும் இல்லை.
அந்தியூர் மணி தெளிவாக விளக்கி, என் புரிதலை மேலும் செறிவாக்கி இருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்.
கவிதையோ, தத்துவமோ நம்மை எங்கும் கொண்டு சேர்க்கப் போவதில்லை, நாம் செல்ல நேரிட்ட இடத்தை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகின்றன, அவ்வளவுதான். அந்த அறிதலின் பின்புலம் இல்லாதவன், புரிந்து கொள்ளவோ, புரிந்து கொண்டதை விளக்கவோ முடியாது. But he can be happy there, if he can.
எனது புரிதலின்படி அந்த குருவும், சுடலைப் பிள்ளைபோல “விபத்தினால்” ஞானமடைந்தவர், அதனால்தான் ‘சஜ்ஜடம்’ என்பதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடிவதில்லை, அவரால்.
பிற பாத்திரங்களைப் புரிந்து கொள்ள நான் முயலவில்லை. Dessert சாப்பிட்ட பிறகு சட்டினியும், ஊறுகாயும் எதற்கு?
அவர்களைக் குறித்த அந்தியூர் மணியின் விளக்கங்கள் நன்றாக இருந்தன. ஆனால் நமக்கு வெளியே உள்ளவற்றை – குறிப்பாக மனிதர்களை – அந்த அளவுக்கு நுட்பமாக புரிந்து கொள்ள முயல்வது வாசகனுக்குத் தேவைப்படலாம், என்னைப் பொறுத்தவரையில், ஒரு சாதகனுக்கு அவசியம் இல்லை. இல்லாவிட்டால் அது ஒரு முடிவேயில்லாத விளையாட்டாகிவிடும். பிறகு நம் முகத்தை மட்டுமே, நாம் அறிந்ததை மட்டுமே எல்லா இடங்களிலும் பார்த்துக் கொண்டிருப்போம்.
You can’t know it, but you can be it – Tao Te Ching
நன்றியுடன்,
ஆ.