பின்தொடரும் நிழலின் குரல் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் நினைவில் இருந்து எழுகிறது அந்நாவல். நான் கல்லூரிக்காலத்தில் அந்நாவலை வாசித்தேன். என் கல்லூரிப் படிப்பைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் 2008ல் கல்லூரிப்படிப்பை விட்டேன். ஈழப்பிரச்சினையில் முழுவெறியுடன் மூழ்கி அதன் போராட்டங்களில் அலைந்தேன். 2009க்குப்பின் அத்தனை பேரும் அப்படியே எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்பதைக் கண்டேன். வேரில்லாமல் அலைந்துகொண்டிருந்தேன். குடிப்பிரச்சினையும் உண்டு.
அப்போது ஓர் இடதுசாரி பெரியவருடன் பேசும்போது விடுதலைப் புலி பிரச்சினையின் பல முகங்களைச் சொன்னார். இரண்டு நூல்களை வாசித்தேன். ஒன்று சி.புஷ்பராசா எழுதியது. ஈழப்போரில் எனது சாட்சியம். இன்னொன்று நான் வானத்தை வளைத்த கதை. செழியன் எழுதியது. ஒரே மாதத்தில் எல்லா திரையும் விலகியது. நான் எவ்வளவு மடையனாக இருந்திருக்கிறேன் என்னும் எண்ணம் வந்தது. அது இன்னும் பெரிய சோர்வை அளித்தது. ஏன் இந்த உண்மைகள் எனக்கு மட்டும் தெரியவில்லை? ஏன் நான் மடையனாக இருந்தேன்? ஓர் அரசியல்தரப்பை அப்படியே கண்மூடித்தனமாக எப்படி நம்பினேன்?
2012ல் பின்தொடரும் நிழலின் குரலை வாசித்தேன். அப்போதெல்லாம் அந்நாவல் கிடைப்பதே கடினம். சொல்லிவைத்து தேனி வரை போய் வாங்கி கொண்டுவந்து வாசித்தேன். மூன்றுமாதம் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன்.என் தோல்,சதை எல்லாவற்றையும் கிழித்து என் அகத்தை எனக்குக் காட்டியது. அகந்தைக்கும் கருத்தியலுக்குமுள்ள கள்ளவுறவைப் பற்றிப் பேசும் நாவல் அது. அதில் சாத்தான் வந்து அகந்தையை பற்றிப் பேசுகிறான். கிறிஸ்து குழந்தைபோல் வாழ்வதைப் பற்றிப் பேசுகிறார். சாத்தான் அணிதிரள்வதை, கூட்டமாகச் சிந்திப்பதைப் பற்றி போற்றிப்பேசுகிறான். கிறிஸ்து தனிமனிதனின் அறம் பற்றிப் பேசுகிறார்.
மகத்தான நாவல் என்றால் இதுதான். அது உத்திச்சோதனையோ வடிவச்சோதனையோ அல்ல. அது வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது. புதிய கேள்விகளை உருவாக்குகிறது. அது மார்க்ஸிய எதிர்ப்புநாவல் என்கிறார்கள். சொல்பவர்கள் அதே அப்பாவி கருத்தியலடிமைகள் அல்லது கருத்தியல் வெறியர்கள். மனசாட்சியுடன் பேசும் நாவல் அது.
மேலும் கொஞ்சநாள் கழித்து என் தம்பியும் மற்றவர்களும் மெரினா புரட்சி என்று பொங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கொஞ்சம் அடங்கிய பிறகு நான் அவனிடம் பின்தொடரும் நிழலின் குரலை கொடுத்தேன். காலம்தோறும் யாரோ யாரிடமோ அதை கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள்.
எம்.ரவிகிருஷ்ணன்
***
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307