அண்ணாமலையின் வாசிப்பு- விவாதம்

முகநூலில் சி.சரவணக் கார்த்திகேயன் இந்த எதிர்வினையை ஆற்றியிருந்தார்

அண்ணாமலையின் வாசிப்பு பற்றிய என் குறிப்பு: அந்த இருபதாயிரம் நூல்கள்…

சி.சரவணக் கார்த்திகேயன் குறிப்பு

நல்ல கட்டுரை. முதல் பத்தி அனாவசியம்.

On serious note, உண்மையில் வாசிப்புப் பழக்கமே இல்லாத ஒருவன் தான் ஏராள நூல்களை வாசித்ததாகப் பொய் சொல்லும் போது வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எரிச்சலடையவே செய்வான். அது ஒரு ஈகோதான். தான் நேரம், உழைப்பு, சிந்தை மூன்றையும் செலவிட்டு இத்தனை நூல்கள் படித்திருக்கிறோம், ஆனால் அதைச் சிறுமைப்படுத்துவது போல் ஒருவன் கூசாமல் பொய் சொல்லி, அதை எளிதில் நம்பவும் வைத்து விட்டானே என்றுதான் கடுப்பாகும். மாறாக, வாசிப்புப் பழக்கமே இல்லாதோருக்கு இது பொருட்டே இல்லை. சரி ஏதோ சொல்கிறான் என நம்புவர் அல்லது சந்தேகம் வந்தாலும் ஏதோ ஒரு சின்னப் பொய் என்று கடந்து விடுவர். வாசிப்பு என்றில்லை, அரசியல், ஆன்மீகம், சமூக சேவை, கலை என ஒவ்வொரு விஷயத்திலும் போலிகளும் பொய்ப் பிம்பங்களும் மிகைப் பிம்பங்களும் உண்டாக முக்கியக் காரணம் அவர்களைப் போலி என்று உணர்ந்தவர்கள் பேசாமல் இருந்து விடுவதே. அதனால்தான் வாசிப்பு பற்றிய அண்ணாமலையின் பொய்யை கிழித்தெறிய வேண்டியுள்ளது. ஆனால் தமிழின் முதன்மை வாசகரான ஜெயமோகனுக்கு அதைக் கடக்கும் முதிர்ச்சி இருப்பது வியப்புக்கு உரியதே.

சரி, அவரது இந்தப் பொய்யினால் புத்தகங்களுக்கு, வாசிப்புக்கு நம் சூழலில் என்னதான் நன்மை நிகழும் என்றும் விளங்கவில்லை. அண்ணாமலை மாதிரி நாமும் ஆயிரக்கணக்கில் நூல்கள் வாசிக்க வேண்டும் என மக்கள் கிளம்புவார்களா? எனக்கு நம்பிக்கை இல்லை. வாயைப் பிளந்து கை தட்டி நகர்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். ஒருவேளை அவரது வாசிப்பு உண்மை என்றாலுமே கூட இப்படி ஒரு விளைவு நடக்குமா எனத் தெரியவில்லை.

ஆனால் என் கவலை ஒன்று இருக்கிறது.

நாளை இதே அண்ணாமலை ‘சரி 20,000 புத்தகங்கள் வாசித்ததை ஜெயமோகன் உள்ளிட்டோர் ஆதரவுடன் தமிழக மக்களை நம்ப வைத்து விட்டோம்’, இப்போது அடுத்த கட்டத்துக்குப் போய் மேலும் அடித்து விடுவோம் என எண்ணி: “நான் 100 பாகம் கொண்ட (ஒவ்வொன்றும் தலா 1000 பக்கம் கொண்ட) உலகின் மிகப் பெரிய நாவலை எழுதியிருக்கிறேன்” என்கிறார் என வைத்துக் கொள்வோம். அது உண்மை என நிலை பெற்றும் விடுகிறது. ஏனெனில் நம் ஆட்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள். அதுவும் சங்கிகள், சங்கி ஆதரவாளர்கள் பொய் என்றால் உறுதியாக நம்புவர். எல்லாம் தாண்டி உலகின் இறுதி உறுதி ஆதாரமான வாட்ஸாப் ஃபார்வேர்ட் ஒன்று இது தொடர்பாய் இருந்தால் போதும், மிச்சமிருக்கும் சின்னச் சந்தேகங்களும் காணாமலாகி விடும். ‘எழுத்தாளர்கள் என்ன பெரிய புடலங்காய்கள், அண்ணாமலையே தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர், நேருவுக்குப் பிறகு, ஈஎம்எஸ்ஸுக்குப் பிறகு, கலைஞருக்குப் பிறகு அவர்களை விடச் சிறந்த எழுத்தாள அரசியல்வாதி அண்ணாமலை’ என்று தமிழ் மக்கள் நம்பத் தொடங்குவர்.

ஏற்கெனவே ஜெயமோகனின் தொட முடியா (அசல்) சாதனை காரணமாக அவர் மீது காண்டாக இருக்கும் சக எழுத்தாளர்கள் இதுதான் சாக்கென்று அண்ணாமலை அப்படிச் சொல்வதைப் புறந்தள்ள முடியாது என்று மழுப்பலாகச் சொல்லக்கூடும். ஆக, உலகின் மிகப் பெரிய நாவலை எழுதியவர் அண்ணாமலை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவருக்குப் போட்டியே இல்லை, வெகு தூரம் பின்னே இருப்பது அதில் கால்வாசி கூட இல்லாத வெண்முரசு என்று மக்கள் மத்தியிலும் வரலாற்றிலும் பதிவாகும். அப்போது அது பொய் எனச் சொல்லி மறுப்போரும், எதிர்ப்போரும், கேலி செய்வோரும் இருப்போம். அப்போதும் “உண்மையில் பொதுவெளியில் ஒருவர் நூல்களைப் பற்றிப் பேசுவது, வாசிப்பைப்பற்றிப் பேசுவது என்பது, அது எப்படிப்பட்ட பேச்சானாலும் வரவேற்புக்குரியது. அதைநோக்கிச் சிரிப்பவர்கள் புத்தகங்களுடன் தொடர்புடையவர்களாக இருக்க முடியாது.” என்று எழுதப் போகிறோமா?

இன்னொன்று ஜெயமோகனும் அண்ணாமலை சொல்வது பொய் என்றே சொல்கிறார். ஆனால் அண்ணாமலையை நோக்கிச் சிரிப்போர் புத்தகங்களுடன் தொடர்புடையோராக இருக்க முடியாது என்று முத்திரை குத்துவது அந்தப் பொய்யை எதிர்ப்போரை ஊக்கமிழக்க வைக்கும். அதன் வழி அப்பொய் எதிர்ப்பின்றி வரலாற்றில் நிலைபெறவும் கூடும்.

இது narrative-களின் யுகம். உண்மை என்ன என்பது முக்கியமற்றதாகி வரும் காலகட்டம். ஆக, நமக்கு அதில் ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு பொய்யையும் மறுக்க வேண்டிய இக்கட்டில்தான் இருக்கிறோம்.

சி.சரவணக் கார்த்திகேயன்

*

என் எதிர்வினை

அண்ணாமலை சொல்வது மிகை என்பதை அறிய புத்தக வாசிப்பு இருக்கவேண்டும் என்பதில்லை – ஒன்று இரண்டு என கணக்குபோட தெரிந்திருந்தாலே போதுமானது. அதை எவரும் அப்படியே எடுத்துக் கொள்ளப்போவதில்லை. அரங்கசாமியே நான் நக்கலடிப்பேன் என எதிர்பார்த்துத்தான் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனால் அப்படி ஒரு பேச்சு, வாசிப்பு முக்கியம் என்னும் உரையாடல் வந்தால் மிக நல்லது என நான் நினைத்தேன். அவர் தொடர்ந்து புத்தகங்களை மொத்த எண்ணிக்கை குறிப்பிடுவதை விட்டுவிட்டு பெயர் சொல்ல ஆரம்பித்தால் மேலும் நல்லது. நான் சொல்வது அதையே. சில நூல்வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியிருப்பதைப் பார்த்தேன். யூடியூபில் பார்க்கலாம். நூலை படித்துவிட்டு வந்து நூலை ஒட்டியே தன் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.

நானும் இதேபோன்ற மிகைப் பேச்சுக்களை கேட்டு எரிச்சலடைந்து எதிர்வினையாற்றிய வரலாறு உடையவன்தான். இன்றைக்கு மொத்தமாகவே எங்கும் புத்தகம், இலக்கியம் பற்றிய பேச்சே இல்லையோ என அச்சம் கொள்கிறேன். நான் எதைப்பற்றி இணையத்தில் தேடினாலும் என் தளத்துக்கே கூகிள் கொண்டுவந்து விடுகிறது. ஆகவே எந்த பேச்சையும் நான் வரவேற்கிறேன்.

வாசிப்பு என்பது முக்கியமான ஒரு தகுதி என அறியப்பட்ட சிலர் மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கட்டுமே என நினைக்கிறேன். ஏற்கனவே வாசிப்பைப் பற்றி அறிந்தவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை, வேடிக்கையாகக்கூட இருக்கும். ஆனால் வெளியே கோடானுகோடிகள் புத்தகம் எனும் சொல்லையே அப்படி எவரேனும் கேள்விப்படுபவர்களாக இருந்துகொண்டிருக்கும் சமூகம் நம்முடையது.

உண்மையிலேயே அப்படி வாசிக்க வந்த பலர் எனக்கு தெரிந்த நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள். என் தீவிர வாசகர் ஒருவருக்கு புத்தகவாசிப்பு ஆரம்பித்தது மறைந்த நடிகர் விவேக் ஒரு புத்தகம் பற்றி டிவியில் பேச அவர் அதை தேடி வாசித்ததன் வழியாக நடந்தது.

ஜெ

முந்தைய கட்டுரைமழையீரம் பூக்கும் மலர்
அடுத்த கட்டுரைமு.இளங்கோவன்