பின்தொடரும் நிழலின் குரல் நாவல் மறுபிரசுரம் பற்றிய செய்திகளை வாசித்தேன். அழகான தயாரிப்பு. பழைய சோவியத் நூல்களை ஞாபகப்படுத்துகிறது. பழைய பின்தொடரும் நிழலின்குரல் நாவல் தயாரிப்பில் ஒரு ரொமாண்டிக் தன்மை அதன் அட்டையால் உருவானது. இது கறாரான ஒரு நூலாக தோற்றமளிக்கிறது.
நான் 2003 ல் வாசித்த நாவல். அப்போதே மறந்துவிடத் துடித்த நாவல். ஏன் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அரிவாள் போல நம்மை வெட்டும் ஒரு நாவல். அது நம் கண்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறது. நீ உண்மையிலேயே நீ சொல்லும் விசயங்களை நம்புகிறாயா? இல்லை என்றால் நீ யாரிடம் நடிக்கிறாய்? உனக்கு நீயே நடித்துக்கொண்டு நீ அடையும் லாபம் என்ன?
அகங்காரம், அதுதான் முக்கியமானது. நானெல்லாம் இன்னார் என்ற ஒரு நிமிர்வு. ஒருவகையான மிதப்பு. மற்றவர்களை ஏகத்தாளமாகப் பார்க்கவும் மற்றவர்களை விமர்சிக்கவும் அது நமக்கு ஒரு அதிகாரத்தை அளிக்கிறது. நான்லாம் மார்க்ஸியர் என்று பிரகடனம் செய்யாத மார்க்ஸியரே இருக்க மாட்டார்கள். அந்த அகங்காரத்தின் மேல் ஆழமாக குத்துகிறது பின்தொடரும் நிழலின் குரல். நீ உண்மையில் யார் என்று கேட்கிறது.
அந்தக்கேள்விக்கு முன்னால் எல்லா ஐடியாலஜியும் கூசிப்போகும். ஆனால் ஐடியலிசம் கூசாது. நான் இன்னார், இதன்பொருட்டு என அது சொல்லும். ஐடியாலஜி ஒரு ஏரி மாதிரி. ஐடியலிசம் ஓடும் நதி மாதிரி. அந்த வேறுபாட்டை ஓர் உரையில் சொல்கிறீர்கள். அதை நீங்கள் எழுதிக் கண்டுபிடித்த நாவல் என நினைக்கிறேன்.
குரல் வழியாக ஒரு பயணம் இருக்கிறது. அது முதலில் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. ஐடியாலஜியின் மூர்க்கமான ஆதிக்கம், அதிகாரப்போட்டியை முன்வைத்து ஐடியாலஜி இல்லாமல் ஐடியலிசம் நிற்க முடியுமா என்று கேட்கிறது. விவாதங்கள் வழியாக முன்னால் சென்றுகொண்டே இருக்கிறது. உணர்ச்சிமிக்க சம்பவங்கள், நாடகங்கள், பகடிகள் என்று நாவல் சென்று சென்று இரண்டு உச்சங்களை அடைகிறது.
சாத்தான் ஐடியாலஜியை பேசுகிறான். ஏசு ஐடியலிசத்தை பேசுகிறார். இரண்டு ஆப்ஷன்களையும் முன்வைத்துவிட்டு நாவல் நின்றுவிடுகிறது. அந்த உச்சத்துக்குப்பின் ஒரு மென்மையான வைண்டிங் அப்.
நாவலை வாசித்து கொந்தளித்து, மறக்க நினைத்து, மெல்லமெல்ல நினைவில் போட்டு மீட்டி அந்த நாவலை முழுசாக உள்வாங்க ஐந்தாண்டுகள ஆயின. வழக்கமான நாவல் அல்ல. வெறும் இலக்கியச் சோதனை முயற்சி அல்ல. ஆத்மார்த்தமான ஒரு தேடல் உள்ள நாவல். ஆகவே வாசகனையும் ஆத்மார்த்தமாக தொடுகிறது. இலக்கிய இன்பத்துக்காக வாசிக்கவேண்டிய நாவல் அல்ல. நாம் நம்மை எப்படியெல்லாம் சிந்தனையில் ஏமாற்றிக்கொள்கிறோம் என்பதை அறிய, நாம் நம்மை எப்படி மீட்கலாம் என்று அறிய வாசிக்கவேண்டிய நாவல்
மகேந்திரன் ஜி
***
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307