அந்த இருபதாயிரம் நூல்கள்…

அன்புள்ள ஜெ

ஐந்து வயதில் நீங்கள் புத்தகம் வாசித்ததையே நம்பமுடியாத உலகம் இது, 20000 புத்தகங்களை 30 வயதுக்குள் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன், சாத்தியம்தானே?

(5000 நூல்கள் உங்களிடம் இருப்பதாக சொல்லி மயக்கி,திருமணம் செய்தபின் வெறும் 500 நூல்களை தந்து ஏமாற்றியதை ஏற்கனவே சமூகம் அறிந்துவிட்டது – மனைவி எழுத்தாளராவதன் அபாயம்)

வாசிப்பு குறித்து எந்த சர்ச்சை வந்தாலும் அது சுவாரஸ்யம்தானே ?

அரங்கா

***

அன்புள்ள அரங்கா,

ஒரு பெண்ணை கவரவே ஐந்தாயிரம் என்று சொல்கிறோம். ஒரு நாட்டை கவர ஐம்பதாயிரம் என்று சொன்னால் என்ன பிழை? காதலிலும் அரசியலிலும் எல்லாமே சரிதான்.

உண்மையில் பொதுவெளியில் ஒருவர் நூல்களைப் பற்றிப் பேசுவது, வாசிப்பைப்பற்றிப் பேசுவது என்பது, அது எப்படிப்பட்ட பேச்சானாலும் வரவேற்புக்குரியது. அதைநோக்கிச் சிரிப்பவர்கள் புத்தகங்களுடன் தொடர்புடையவர்களாக இருக்க முடியாது.

தமிழ்ச்சூழலில் சாமானியர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட புத்தகங்கள் என உலகில் ஒரு பொருள் உள்ளது, அதை சிலபேர் வாசிக்கிறார்கள் என்று தெரியாது. புத்தகங்களை மேற்கோள்காட்டும் மேடைப்பேச்சாளர்களே அரிதினும் அரிதானவர்கள். ஆகவே புத்தகம், வாசிப்பு பற்றிய எந்தப்பேச்சுமே நம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்வதே. திரு அண்ணாமலை அவர் வாசித்த நூல்களைப் பற்றி சொல்லவேண்டும். எந்த நூலாக இருந்தாலும் சரி. வாசிப்பு பற்றி பேசப்பட்டால் போதும்.

உண்மையில் சமீபத்தில் திருமதி பர்வீன் சுல்தானாவுடன் ஓர் உரையாடலின் நடுவே திக் என ஓர் உணர்வு. உயிருடனிருந்தபோது திரு மு.கருணாநிதி பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அவர் மறைந்தபோது உருவான வெற்றிடம் அப்போதுதான் தெரிந்தது. வாழ்நாளெல்லாம் தன்னை ஓர் எழுத்தாளனாக முன்வைத்துக்கொண்டிருந்த அரசியல்தலைவர் அவர். அந்த வகைமையில் அவரே ஒருவேளை தமிழ்வரலாற்றின் கடைசி ஆளுமையாகக்கூட இருக்கலாம். அப்போது அவருடைய இன்மையை, அதன் மாபெரும் ஏக்கத்தை மிக ஆழமாக உணர்ந்தேன்.

இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு மறைந்த சில ஆண்டுகளுக்குள் அந்த உணர்வை கேரளத்தில் பலரும் அடைந்தனர். அவர் இருந்தபோது அவர் ஒரு தரப்பு. ஓங்கி ஒலித்த அதிகாரத்தரப்பும் கூட. ஆகவே பெரும்பாலானவர்கள் அவருடன் மானசீகமாக விவாதித்து, மறுத்து எழுந்தவர்கள். ஆனால் அவர் மறைந்தபோது கேரள அரசியல்தலைவர்களில் எழுத்தாளராகவும் அறிஞராகவும் திகழ்ந்த கடைசி ஆளுமை அவரே என உணர்ந்தனர். இனி அந்த ‘மாடல்’ உருவாகவே முடியாது என்பது பெரும் சோர்வை அளிப்பதாக அவருடைய முதன்மை கருத்தியல் எதிரியாக இருந்த பால் சகரியா எழுதினார்.

எழுதுபவர்கள், வாசிப்பவர்கள் அரசியலை நடத்திய ஒரு காலம் நமக்கிருந்தது என்பதையே இன்று இருபது வயதான ஓர் இளைஞருக்கு சொல்லி நம்பவைக்க முடியாத சூழல் உள்ளது. இனி அது நிகழப்போவதில்லை என்றும் கண்கூடாக தெரிகிறது. தேசிய அளவிலேயே அந்த வகைமை அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது. ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் எனச் சிலர் தவிர வேறு முகங்களே இல்லை.

இனி வரப்போகும் அரசியல்வாதிகள் கார்ப்பரேட் நிர்வாகிகள் போன்றவர்கள். பெரும் விளம்பர அமைப்புகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொது ஆளுமைகள். அதாவது படிமங்கள். படிமங்களுடன் படிமங்களே மோதமுடியும். ஆகவே வேறு வழியே இல்லை

ஆகவே எவர் எதன்பொருட்டு நூல்களை, வாசிப்பைப் பற்றிப்பேசினாலும் நன்றே.

*

நான் மூன்று மொழிகளில் எவ்வளவு வாசித்திருப்பேன்? எப்படி கணக்கிடுவதென தெரியவில்லை. இப்போதும் நான் பார்த்த, கேள்விப்பட்ட எவரை விடவும் வேகமாக வாசிக்கக்கூடியவன். ஒரு நல்ல வாசகரே கூட என்னைவிட பாதிவேகத்தில்தான் வாசிக்கமுடியும். என் வாசிப்பு வேகம் வயதால் குறைந்திருக்கும் என நினைத்தேன். சமீபத்தில் சோதித்துப் பார்த்தேன். 1184 பக்கம் கொண்ட இரா.முருகனின் மிளகு நாவலை மூன்று நாட்களில் படித்தேன். மொத்தம் ஏழுமணி நேரம் ஆகியது. விசை அப்படியேதான் உள்ளது.

ஆனால் நான் எதையும் விட்டுவிட்டு வாசிப்பவன் அல்ல. எல்லா சொற்களையும் வாசிப்பவன். இயல்பாகவே வேகமாக வாசிப்பவன் என்றாலும் 1992-ல் ஊட்டி குருகுலத்தில் பீட்டர் மொரேஸ் நடத்திய விரைவான வாசிப்புக்கான பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன். சில அடிப்படை விதிகள், சில பழக்கங்கள் உள்ளன. எளிதில் பயிலக்கூடியவை.

நான் பொதுவாக மறப்பதுமில்லை. அந்த தன்னம்பிக்கையால் எப்போதும் நூல்களை நினைவில் இருந்தே பேசுகிறேன். எல்லா விமர்சனநூல்களையும் நினைவில் இருந்தே எழுதியிருக்கிறேன். வெண்முரசு நினைவிலிருந்தே எழுதப்பட்டது – ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினர் தகவல்களை சரிபார்த்தனர். நினைவில் இல்லாதது நம்மிடமில்லை என்பது என் கொள்கை.

ஐந்து வயதில், அதாவது ஒன்றாவது படிக்கையில், சாண்டில்யனின் ராஜமுத்திரை வாசித்தேன். தொடர்ந்து வாசித்த பி.எம்.கண்ணனின் ’ஜோதிமின்னல்’, க.அ.கயிலைராஜனின் ’அவள் அல்லவோ பெண்’, மாயாவியின் ‘கண்கள் உறங்காவோ’ எல்லா நூல்களும் நினைவிலுள்ளன. ஓவியங்கள், பக்கங்களின் கறைகள்கூட நினைவிலுள்ளன.

1969ல் ஜெயகாந்தனை வாசித்தேன், அதாவது மனிதன் சந்திரமண்டலத்திற்குச் சென்றதற்கு சிலநாட்கள் கழித்து. சந்திரனில் மனிதன் என்ற தினத்தந்தி அட்டை, சந்திரனில் மனிதன் சென்றதை கேலிசெய்து குமுதத்தில் வந்த  அப்புசாமி கார்ட்டூன் (பூனை ஒரு பானையை தள்ளிவிட அப்புசாமி ஸ்பேஸ் சூட் ஹெல்மெட் அணிந்திருப்பதுபோல அவர் தலையில் அது விழுந்திருக்கும்) முதலில் வாசித்த ஜெயகாந்தன் நாவல் பாரீஸுக்கு போ. அதைப்பற்றி பேசிய ஆசிரியர், அவர்கள் விளையாடிய பேட்மிண்டன், எதுவுமே மறக்கவில்லை.

அன்று இரண்டு நூலகங்களில் உறுப்பினர். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம். அருமனை அரசு நூலகம். இது தவிர அரசுப்பள்ளி நூலகம். வாரத்துக்கு இரண்டு நூல்கள் ஒரு நூலகத்தில். என் கணக்கு நாளுக்கு குறைந்தது ஒரு நூல். அப்படிப்பார்த்தால் ஆண்டுக்கு எப்படியும் முந்நூறு. பத்தாண்டுகளில் மூவாயிரம் தாண்டியிருக்கும். முப்பதாண்டுகளில் ஐந்தாயிரம் அல்ல மேலேயே வந்திருக்கும் என நினைக்கிறேன்.

காசர்கோடு வாழ்க்கையில் நோய்க்கூறு போல வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருநாளில் பதினெட்டு மணிநேரம்கூட. மலையாள எழுத்தாளர்களைச் சந்திக்கையில் எவரைவிடவும் மலையாள இலக்கியம் நான் படித்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். மிக அரியவர்களைக்கூட படித்திருக்கிறேன். நான்கு நூலகங்களில் உறுப்பினர் அப்போது. என் வாழ்க்கையில் உச்சகட்ட வாசிப்பு வெறியுடனிருந்த நாட்கள் அவை.

தமிழிலும் மலையாளத்திலும் வேகமாக வாசிப்பேன். ஆங்கிலத்தில் அதில் பாதி வேகம்தான். என் அகமொழி ஆங்கிலத்துடன் இன்னும்கூட பொருந்தவில்லை. ஆங்கிலத்தை முறையாக வாசிப்பதற்காக 1978-ல் கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டேன். சொற்களை ஒரு பெரிய பேரேட்டில் எழுதி மனப்பாடம் செய்து திறனை வளர்த்தேன். 1992ல் சென்னை அமெரிக்கன் கான்சுலேட் உறுப்பினர் ஆகி அவர்கள் அளித்த தபால்வழி நூல்கள் வழியாக பயிற்சி எடுத்தேன்.

இன்று வரை ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் மொழியின்பம் என்பது இன்றும் கைகூடவில்லை. ஆங்கிலச் சொற்றொடர்களை என்னையறியாமலேயே தமிழாக்கம் செய்துதான் வாசிக்கிறேன் என நினைக்கிறேன். அது சரியான வாசிப்பு அல்ல.

வாசிப்பதன் ரகசியமென்பது ஒருமுகப்படுதல்தான். ஒருமுகப்படாமல் வாசிப்பது போல நேரவிரயம் வேறில்லை. இருபது நிமிடத்தில் வாசிப்பதை நடுநடுவே வாட்ஸப் பார்த்தால் ஒருமணி நேரத்தில்தான் வாசிக்கமுடியும். ஆகவேதான் நான் வாட்ஸப் உட்பட எதிலுமே அகப்படாமலிருக்கிறேன். அழைப்பு எண் பார்த்து நானே பிறரை அழைத்தால்தான் உண்டு. வாசிக்கையில் எப்போதும் முழுமையாக நூலுக்குள் செல்வது என் வழக்கம்,

வேடிக்கையை விடவேண்டாம். ஆனால் கணவர் எழுத்தாளர் மட்டுமல்ல மனைவி எழுத்தாளர்களும் சுவாரசியப் புளுகுகளை எடுத்துவிடுவதுண்டு என்பதை ஞாபகம் கொள்ளவேண்டும். நான் பாலக்கோட்டில் இருக்கையில் மூவாயிரம் நூல்கள் வைத்திருந்தேன். அதற்காகவே தொலைபேசி நிலைய கட்டிடத்தின் மேலேயே மூன்று அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன்

ஆனால் 1991ல் தர்மபுரிக்கு மாறி திருமணம் வரை ஒற்றை அறையில் தங்கியாகவேண்டும் என்னும் நிலை உருவானபோது நூல்களை அள்ளி பலருக்கும் அளிக்க ஆரம்பித்தேன். தர்மபுரியிலும் பாலக்கோட்டிலும் பல நூலகங்களுக்கு பெரிய பெரிய அட்டைப்பெட்டிகளில் நூற்றுக்கணக்கில் நூல்களை அளித்திருக்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி என்னை தேடி போலீஸ் வந்தபோது அறையை காலிசெய்யச் சொன்னார்கள். ஒரே நாளில் காலி செய்தபோது மீண்டும் பாதிநூல்களை பலருக்கும் அளிக்க நேர்ந்தது. ஆவலுடன் வாங்கிச்சென்ற பலர் எம்எல் அமைப்பினர். இப்போது எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் தெரியவில்லை.  (நான் மாத்ருபூமி இதழில் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஒரு நீள்கட்டுரை எழுதியிருந்தேன்)

அன்று ஒரு மனநிலை இருந்தது. மீண்டும் நான் வாசிக்கப்போவதில்லை என உணர்ந்த நூல்களை எவருக்காவது அளித்துவிடவேண்டும் என்று.  அது சுந்தர ராமசாமியின் கொள்கை. அவர் தன் நூல்களை கொடுத்துக்கொண்டே இருந்தவர். நானும் ஆண்டுக்கு ஆயிரம் நூல்களை அளித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவை சோவியத் ருஷ்ய நூல்கள், ஏராளமானவை கேளிக்கை வாசிப்புக்குரிய நூல்கள்.

(அவர்களில் பல ஆசிரியர்களை இன்று தேடினாலும் கிடைக்கவில்லை. எச்.ஆர்.சென்னகிருஷ்ணன், பி.ஆர்.நாதன், க.பஞ்சாபகேசன், ய.லட்சுமிநாராயணன், வே.கபிலன்… அந்நூல்களை வைத்திருந்தால் ஒருவேளை அரிய நூல்சேகரிப்பாக இருந்திருக்குமோ?)

பின்னர் கட்டுரைகள் எழுதும்போது குறிப்புகளுக்காக தேடும்போது நூல்கள் இல்லாமலாவது எவ்வளவு பெரிய இழப்பு என தெரிந்தது. ஆனாலும் நூல்களை அள்ளி அளித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

என் வீட்டில் ஒன்பது அடுக்குகளாக நூல்கள் உள்ளன. ஒரு நல்ல நூலகம். 2002 முதல் ஏராளமான நூல்களை பா.பிதலீஸ் உள்ளிட்ட உள்ளூர் நூலகர்கள் வாங்கிச்சென்றனர். புதுவாசகர் சந்திப்புகள், விஷ்ணுபுரம் விழாக்கள் ஒவ்வொன்றிலும் நூல்களை கட்டுக்கட்டாக கொண்டு வந்து அளித்தேன். 2016 முதல் மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் நூல்களை அளித்தேன். அடுக்குகளில் ஒன்று காலியாயிற்று. இப்போது மீண்டும் வைக்க இடமில்லாமல் வீடெல்லாம் நூல்கள். நூல்களை வைக்க வேறொரு திட்டம் இருக்கிறது.

சமீபத்தில் என் நூல்களை அளைந்தபோது நான் வாசிக்காத நூல்கள் அனேகமாக இல்லை என்பதை கண்டேன். உண்மையில் இவ்வளவு நூல்கள் இருக்கின்றன இன்னும் வாசிக்க என்னும் நினைப்பின் கிளுகிளுப்பு இருந்தது. அது சட்டென்று வடிந்துவிட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் வாசிப்பில் இருந்து விடுபட்டாகவேண்டியிருக்கிறது என இன்று நினைக்கிறேன். நினைவிலுள்ளவற்றையும் இறக்கிவைக்க வேண்டியிருக்கிறது. என் நினைவுத்திறன் பற்றிய பெருமிதம் ஒரு காலத்தில் இருந்தது. இன்று அந்நினைவுத் தொகுப்பை விட்டு வெளியேறவே எண்ணுகிறேன்.

நூல்கள் நிறைந்த உள்ளம் உலகியல் உள்ளத்தைவிட மேலானது. ஆனால் அங்கே தியானத்தின் அமைதி நிறையவேண்டுமென்றால் நூல்கள் காலியாகவேண்டும். என் நூலக அடுக்குகளை காலிசெய்ததைப்போல மூளையையும் காலிசெய்தாகவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை