வரலாற்று நாவலுக்கு சிறந்த உதாரணம் என்றால் அதில் முதலிடம் பெறுவது சிக்கவீர ராஜேந்திரன் என்கிற கன்னட நாவல்.
அதிகப் பிரதிகள் விற்பனை, வெகுரசனையில் முன்னணி, பல ஆண்டுகள் தொடராக வந்தது, நேர்மறையாக கட்டமைப்பதற்காக வரலாற்றிலிருந்து விலகுவது, ஜனரஞ்சகமான புனைவு வெளி இவைகளால் மட்டும் ஒரு சிறந்த வரலாற்று நாவல் உருவாகி விடுவதில்லை. தமிழில் அப்படி சிறந்த வரலாற்று நாவல் இதுவரை உருவாகி வந்துள்ளதா? என்பதும் விவாதத்துக்கு உரியதாகவே இன்றும் தொடர்கிறது.
மிதமிஞ்சிய வர்ணனைகள் கொண்ட வரலாற்று காவியங்கள் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவை நாவல் வகைமைக்குள் அடங்குவதில்லை. வழக்கத்தில் பெரும்பாலான வரலாற்று நாவல்கள் தொடர்களாகவே எழுதப்பட்டன… எழுதப்பட்டும் வருகின்றன. நிறையத் தொடர்கள் வாசகர்களின் ரசனை மற்றும் பதிப்பாளரின் நிர்பந்தம் பொருட்டு நாவல் என்கிற பெருவெளியிலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டு பயணிக்கிறது.
“புனைவுத்தருக்கத்தின் ஒருமையே தொடரை வாசிக்கத் தூண்டுகிறது. புணைவுத்தருக்கம் அறுபடுவது வழியாகவே நாவலின் வடிவம் உருவாகிறது ” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
பெரும்பாலா வரலாற்று நாவல்கள் பெண்களின் அங்க அவையங்களையும், காதலையும் , வீரத்தையும் மிதமிஞ்சி பேசுகின்றன. இல்லை, பேசுவதுக்கூட இல்லை. மிதமிஞ்சிய போதை கிழவனின் பால்ய நினைவுகளுடன் மீமிகை கற்பனைகள் கலந்த உளறல்களாக அவை உள்ளன. இது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டதாக ஒரு வரலாற்று நாவல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கான கோட்பாட்டின் முழுமையான சாரத்தைப் பிரதிபலிக்கும் நூலாக மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய “சிக்க வீர ராஜேந்திரன்” விளங்குகிறது.
“வரலாற்றை அணுகும் முறையில் ஏற்படும் அடிப்படையான பார்வை மாற்றம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதிய சிக்க வீர ராஜேந்திரன் என்ற நாவலே உதாரணம்” என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இவ்வகை தூண்டுதலே இந்நாவலை தேடிக் கண்டறிந்து வாசிக்க போதுமானதாக இருந்தது.
கி.பி. 1820 லிருந்து 1834 வரை மைசூருக்கு அருகில் கூர்க் எனப்படும் குடகு பிரதேசத்தின் மன்னனாக ஆட்சி புரிந்த சிக்க வீர ராஜேந்திரனின் வரலாற்றை இந்நாவல் வெளிச்ச வட்டமிட்டு பேசுவதற்கு காரணம், இம்மன்னனின் ஆட்சி குடகு வரலாற்றின் முக்கியத் திருப்புமுனை. மேலும் இவரே குடகு நாட்டின் இறுதி அரசர். 200 ஆண்டு காலம் தொடர்ந்த ஹலேரி மன்னர் பரம்பரையை முடித்து வைத்தவர். முடிவின் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசியலின் சூழ்ச்சி விளையாட்டில் குடகு நாடு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிர்வாகத்திற்கு மாறியது.
21 முறை தொடர்ச்சியான படையெடுப்புகளுக்கு பிறகு 1790 -ல் திப்பு சுல்தானின் படைகள் குடகு பிரதேசத்தை ஆக்கிரமித்தன. பாகமண்டலேஸ்வரர் கோவில் சிதைலமாக்கப்பட்டது ஆயிரக்கணக்கான குடகு பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் லட்சக்கணக்கான குடகர்கள் கத்திமுனையில் மதம் மாற்றப்பட்டனர். இன்றளவும் குடகர்கள் திப்புவை வெறுப்பதற்கு முக்கிய காரணமாக இதுவே முன் வைக்கப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனியின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க திப்பு எப்படி நெப்போலியனின் படை உதவியை நாடினானோ அப்போதைய குடகின் மன்னன் தெப்ப வீர ராஜேந்திரனும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் படை உதவியை நாடினான். திப்புவிடமிருந்து குடகினை மீட்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டான்.
பிரிட்டிஷ் படைகளிடம் தொடர்ந்து தோல்வியடைந்த திப்பு குடகர்களிடம் சமாதானம் பேசி கூட்டணி வைத்துக்கொள்வதற்கு முயன்றான்.ஆனால்
“ஆங்கிலேயர்கள் என்னுடைய நன்பர்களாக உதவினார்கள், நீ என் நாட்டை சூறையாடி துன்புறுத்தியவன்” என்று அவன் அழைப்பை குடகர்கள் நிராகரித்தனர்.
மைசூர் இராஜ்ஜியத்தின் பொம்மை (உடையார்கள் ஆட்சி) மன்னராட்சியை போல் குடகின் ஆட்சி தொடராமல் பல ஆண்டுகள் அதாவது சிக்க வீர ராஜேந்திரன் ஆட்சி வரை குடகு சுதந்திர நாடகவே இருந்தது. பின்பு பிரிட்டிஷ் வசம் சென்ற போதும் அதன் கலாச்சாரத்தின் மீதான அத்துமீறலுக்கு குடகர்கள் இணங்கவில்லை.
மன்னாராட்சியை பொறுத்தவரை சுதந்திரம் என்பது தனிநபர் விருப்பத்திலிருந்து கிளை விடும் குருத்துப் போன்றது. சில சமயம் அது துளிர்க்காமலும் போகும், துளிர்த்த பின் தழைக்காமலும் போகும். அத்தகைய தொடர் நிகழ்வுகளால் ஒடுக்கப்படும் உணர்ச்சியுள்ள மக்கள் போராட்டத்தின் பாதைக்கு நகர்கின்றனர்.
சிக்க வீர ராஜேந்திரன் அடிப்படையில் கச்சிதமான வீரன் என்றாலும் அதைவிட பெருமளவு அகம்பாவமும் கர்வமும் கொண்டவன். கட்டுக்கடங்காத பெண் பித்தன். மொடாக்குடியன். தனது சொல் ஒன்றை மட்டும் கட்டளையாக புகுத்துவதில் பிடிவாதம் கொண்டவன். இந்நூல் ஆசிரியர் அவன் அரசன் என்பதற்காக நாவலில் எந்தவொரு இடத்திலும் மாயப்பூச்சு புனைவைக் காட்டவில்லை. மாயப்பூச்சு கொண்ட வரலாற்று நாவல்கள் எதிர்மறை நிகழ்கவுளை மூடி மறைத்து விடுகின்றன. மாய எதார்த்தவாதத்தை கட்டமைப்பதில் தான் அவை கவனம் செலுத்துகின்றன. இந்நாவல் நிகழ்வுகளின் தகவல்களை மட்டும் கச்சிதமான நடையில் நாவலுக்குரிய பாங்குடன் சொல்வதில் தனி கவனம் செலுத்துகிறது.
சிக்க வீர ராஜேந்திரன் ஆட்சி கட்டிலில் முறையாக அமர்த்தவன் என்று சொல்லிவிட முடியாது. நிலைப்புத் தன்மைக்கு அப்பாற்பட்ட அவனது அரசாட்சியை தங்கை(தேவம்மாஜி ) சாதகமாக்கிக் கொள்ளக்கூடும் என்கிற வகையில் அவளது கணவனிடமிருந்து ( சென்ன பசவய்யா) அவளைப் பிரித்து கைது செய்து சிறை வைக்கிறான். தனிமை சிறையில் அவளது தங்கை கர்பவதியானது அவனைக் கொதிப்புறச் செய்கிறது. மர்மத்தின் பின்புலமாக அவளது கனவனுடனான சந்திப்பிற்கு உதவியாக மகாராணியும் (கெளரம்மாஜி) ராஜகுமாரியும் (புட்டம்மாஜி) நல்லெண்ணம் கொண்ட வழிமுறையே காரணமாகும். மகாராணி தர்மத்தின் வழியை பின்பற்றுபவள். சிறந்த பக்தியும் உதவும் தன்மையும் நிரம்பியவள். அரசனின் குணம் அவளுக்கு முற்றிலும் மாறானது.
ராணியின் கம்பீரம் மற்றும் நேர்மையைக் கருத்தில் கொண்டு மந்திரிகள் போபண்ணாவும் லக்ஷ்மி நாரயணய்யாவும் அரசரின் அத்துமீறல்களை பொறுத்துக் கொள்கின்றனர். அதே சமயம் அரசனின் வலது கையாக செயல்படும் பசவன் மீது நிராகரிப்பின் வன்மம் எழுகிறது. பசவன் தனது பிறப்பின் ரகசியம் அறியாதவன் , கால் ஊனமானவன் அரசரின் தீய நெருப்பு கங்குகளை அணையாது வளர்ப்பவன், அரசனின் துர்குணப் பிரதிபலிபாக செயல்படுபவன் அதற்கு மூலமாகவும் இருப்பவன் இதனால் மந்திரிகளின் கோபத்திற்கும் மக்களின் வெறுப்பிற்கும் ஆட்படுகிறான்.
இராஜகுமாரியின் மீது மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருக்கும் அரசன் அவளது கோரிக்கைக்கு ( ராணியின் தூண்டுதல்) செவி சாய்த்து தங்கையையும் குழந்தையையும் வெறுப்புடன் மைத்துனனிடம் சேர்க்க சம்மதிக்கிறான். மைத்துனனுக்கு அரசன் மீது வெறுப்பும் கோபமும் ஆட்சி அதிகாரத்தின் மீது ஆசையும் உண்டு. அதனால் அவ்வப்போது மங்களூரில் இருக்கும் பிரிட்டிஷ் கலெக்டெருக்கும், மைசூரில் இருக்கும் பிரிட்டிஷ் ரெஸிடெண்டுக்கும் புகார்கள் அனுப்பிய வண்ணம் இருக்கிறான். குறிப்பாக தங்களது ஆட்சி பகுதியிலிருந்து சிக்க வீர ராஜேந்திரன் பெண்களை கடத்திச் செல்வதை கம்பெனி ஆட்சியினர் விரும்புவதிவில்லை.
பெண் பித்து கொண்ட அரசன் மடிக்கேரியின் செட்டியார்கள் வீட்டு இளம் பெண்கள் மீதும் கண் வைக்கிறான். இதனால் அமைச்சர்கள், வணிகர்கள் மத்தியில் அதிருப்தி நீட்சியடைகிறது. கலகங்களும் முகிழ்கின்றன. பசவனின் அதிகாரத்தாலும் துஷ்டத்தாலும் காவேரி தாய் போன்ற ரகசியப் புரட்சி படைகள் தோன்றுகின்றன.
ஒருபுறம் நட்பு, மறுபுறம் அண்ணன் எப்பொழுது எழுந்து திண்ணையை தருவான் என்கிற எதிர்பார்ப்பு பிரிட்டிஷ் குணம் அதன்படியே அவர்களது அணுகுமுறையும் இருக்கும்.
மீண்டும் தன்னை சிறைப்படுத்த போகிறான் என்கிற எச்சரிக்கை உணர்வில் ராஜேந்திரனின் தங்கை தேவாம்மாஜி தனது கணவன் சென்னபசவனை அழைத்துக் கொண்டு பிறந்த குழந்தையுடன் குடகு நாட்டைவிட்டு மங்களூர் தப்பிச் செல்லும் ரகசிய முயற்சியின் போது குழந்தையை தொலைத்து விடுகிறாள். தம்பதிகள் பிரிட்டிஷ் உதவியை நாடுகின்றனர். துரதிஷ்டவசமாக அரசன் வீர ராஜனின் கையில் குழந்தை சென்று சேர்கிறது. தப்பிக்க உதவிய சென்ன பசவனின் உதவியாள் கொடூரமாக கழுவேற்றப் படுகிறான். ஒரு நள்ளிரவில் குழந்தையை இரக்கமின்றி கொன்று விடுகிறான்.
பிரிட்டிஷ் அதிகாரிகளின் கோரிக்கைகள், எச்சரிக்கைகள் மீறப்படுகின்றன. சென்னை கவர்னர் அனுப்பிய தூதுக் குழுவை வீரராஜன் உதாசீனப்படுத்தியதோடு அவர்களை சிறை பிடித்தும் வைக்கிறான். ஏற்கனவே வெறுப்பில் இருக்கும் அமைச்சர் போபண்ணா ஆங்கிலேயர்களின் படையோடு சேர்ந்து கொள்கிறார். இதனால் குடகு முற்றுகைக்கு உள்ளாகிறது. இருப்பினும் அமைச்சர் முயற்சியால் போர் தவிர்க்கப்பட்டு பிரேசர் துரையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த ஒப்பந்தம் (1834) மூலம் மன்னர் பதவி பறிக்கப்பட்டு சிக்க வீர ராஜேந்திரன் பிரிட்டிஷ் கைதியாக்கப்படுகிறான். கைதி என்ற போதிலும் அரசனுக்கான மானியத்துடன் சில நாட்கள் வேலூரில் இருக்கிறான். உட்பூசல் எழாமல் இருப்பதன் முன்னெச்சரிக்காக பிரிட்டிஷ் அரசின் தூண்டுதலால் அவனது இருப்பிடம் காசிக்கும் மாற்றப்பட்டு இறுதியாக லண்டனுக்கு கொண்டு செல்லப்படுகின்றான். அரசன் நல்லவனோ கெட்டவனோ அவனால் எந்தவகையிலும் புரட்சி வந்துவிடக் கூடாது என்பதில் ஆங்கியேர்கள் கவனமாக இருந்தார்கள்
காசியில் வசிக்கும் போது மகாராணி மரணமடைந்து விடுகிறாள். வழக்கம் போல் பிரிட்டிஷ் தனது ஒப்பந்த உறுதிமொழியை மறந்துவிடுகிறது. ராஜகுமாரி வளர்ந்த பின்பும் குடகு ஆட்சி திருப்பி அளிக்கப்படவில்லை. விக்டோரியா கௌரம்மா என்ற பெயரில் கிறித்துவ மதத்திற்கு மாறிய பின்பும் வீரராஜனின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகிறது. இந்த எதிர்பார்ப்பின் ஒரு பகுதியாக ஆங்கில அதிகாரியுடன் (காப்டன் காம்பெல்) ராஜகுமாரியை திருமணம் செய்து வைக்கிறான். ஒப்பந்தம் உயிர் பெறவில்லை. குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் அவளும் இறந்தும் போகிறாள்.
பேத்தியுடன் லண்டனில் வாழ்ந்த சிக்க வீர ராஜேந்திரனின் இறப்பு (1959) மர்மம் நிறைந்ததாக உள்ளது. பின்னாட்களில் அவனது பேத்தி
எடித் சாது இந்த நாவலுக்கான சாரத்திற்கு உதவுகிறாள். (இங்கிலாந்து வட்ட மேசை மாநாட்டுக்கு சென்றிருந்த கதையாசிரியரின் நண்பர் உடனான தற்செயல் சந்திப்பு)
எடித் சாது தனது இருபதாவது வயதில் திருமணம் செய்து கொள்கிறாள். 1910-ல் அவளது கணவன் இறந்து போகிறான். அவளது ஒரே மகனும் 1918 – ல் ஆஸ்திரேலியாவில் நடந்த போரில் இறந்து போகிறான்.
குடகு மன்னராட்சி பரம்பரையின் இறுதி வித்து எடித் சாது மட்டுமே. ராஜ வம்சத்தின் மிச்சமும இறுதியில் ஒன்றுமில்லாமல் காலத்தில் கரைந்து விடுகிறது.
காலம் பல வண்ணங்களை கொண்டது. ஒவ்வொரு படிநிலையிலும் அது வர்ணஜாலங்களை நிகழ்த்திய வண்ணம் நகர்வதோடு ஒருத்துளி வண்ணம் கூட அதன் பிடியிலிருந்து நழுவ விடுவதில்லை .
சிக்க வீர ராஜேந்திரன் நாவல் குடகின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் நிறங்களை காட்சிப்படுத்துகிறது. அது காட்சிப்படுத்த மட்டுமே செய்கிறது என்பது தான் அதற்கான அர்த்தம்.
ஒரு நாட்டை அபகரிப்பது என்பது பல வகையில் திட்டமிடப்படுவது. வியாபாரம் என்பது மட்டும் நோக்கமல்ல. ஆங்கிலேயர்கள் ஆட்சி நிலைப்புத் தன்மையின் அஸ்திவாரம் அரசியல் நுணுக்கம் வாய்ந்தது. பிரிட்டன் பாதிரிகள் விவிலியத்தோடு மருத்துவத்தையும் கற்றிருந்ததன் நோக்கம். மருந்துகள் வழியே தங்கள் மத விசுவாசத்தையும் நோயாளிக்கு புகட்டுவதன் பொருட்டே. அரசர்களுக்கு சிகிச்சையளிக்கும் போதும் இவர்களது மதமாற்ற போதனைகளை புகுத்துவதில் தயங்கவில்லை. குடகு பிரதேசத்தின் ராஜவம்சம் அந்த நிலத்திலிருந்து பிடுங்கப்பட்டு அதன் நிறம் மாற்றப்பட்டது என்றாலும் குடகர்கள் இன்று வரை குடகர்களாக இருப்பதில் மட்டுமே பெருமை கொள்கின்றனர்.
அரசர்கள் வைத்தியத்திற்கு கட்டுபடாத தங்கள் நோய்களை மாந்திரீகத்தின் வழியே தீர்த்துக்கொள்ளவும் விரும்பினர். ஜோதிடத்தை நம்புவது அவர்கள் மரபாக இருந்தது. ஜோதிடத்திற்கு எந்தவொரு தட்சணையும் பெறக்கூடாது என்பது விதி. ஜோதிடர்கள் கூறும் குறிப்புகளை வாழ்வின் ஆதியந்தமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மனிதனுக்கு விதியை வெல்வதற்கான கூர்மையான மதி உள்ளது. இருப்பினும் அதை பயன்படுத்தும் உபயத்தை தான் யாரும் அறிவதில்லை.
இந்நாவலின் பெரும்பாலான வரலாற்று தரவுகள் உறுதி செய்யப்பட்டவை. ஆனால் நாவலில் விடலை பருவத்து பெண் மட்டுமே சிக்க வீர ராஜேந்திரனின் ஒரே மகளாக வருகிறாள். குடகு பிரிட்டிஷ் வசம் சென்ற பின்பு காசியில் தங்கியிருந்த சிக்க வீரராஜேந்திரன் தனது மூன்றாவது மகளான முத்தம்மா என்கிற கங்காவை நேபாள் ராணா வம்சவத்தவரான நேபாள பிரதம அமைச்சர் ஜங்பகதூர் ராணாவுடன் 1850-ல் திருமணம் நிகழ்ந்த தரவுகளை நான் அறிந்துள்ளேன்.
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கதை சொல்லும் விதம் புத்தகத்தை மூட விடுவதில்லை. வீரராஜனின் சாதாரண மனித உணர்வுகளையும் மிதமிஞ்சிய அவனது உணர்ச்சிகளையும் அருமையாக விவரிக்கிறார். மேலும் குறுநில ஆட்சி பகுதியான குடகின் நிதி நிர்வாகம் அரசரின் கட்டுபாட்டில் இல்லாமல் அமைச்சர்கள் மேற்பார்வையில் இயங்கியதும் அரண்மனையின் செலவினங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் அமைச்சர் குழுவுக்கு இருந்தது என்பதையும் அறிகிறோம். மந்திரிகள் – மக்கள், அரசனின் நண்பனான பசவன்-பகவதி இவர்களின் தொடர்புகள் வேறுவிதமான இனைப்புகளை சர்வ சாதரணமாக காட்சிப்படுத்துவது எழுத்தாளரின் திறமையை காட்டுகிறது . கர்நாடகத்தின் பிரபலமான யக்க்ஷகானம் என்கிற பாரம்பரியமான கலை வடிவங்கள் மக்களின் எண்ணங்களை ஆட்சியாளர்களுக்கு பிரதிபலிக்கும் ஊடகமாக விளங்கின.
கர்நாடக அரசில் சார்பதிவாளராக பணியாற்றிய வெங்கடேச அய்யங்கார் ஸ்ரீரங்கத்து தமிழர். தனது 96 வயதில் அவர் மறையும் வரை கன்னட இலக்கியங்களில் தளர்வில்லாமல் இயங்கினார். 1985-ல் சிக்க வீர ராஜேந்திரன் நாவலுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. 90-வது வயதில் அவ்விருது நிகழ்ச்சியில் தமது தீவிர மதநம்பிக்கையிலிருந்து விலகி விட்டதாகவும் மனிதனின் வாழ்வு முழுவதும் விஞ்ஞாணத்தின் புறவயத்தை சார்ந்தே இயங்குவதாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தினார். இந்த வெளிப்பாடையான எதார்த்த நிலைப்பாட்டியலின் பிரதிபலிக்கும் விதமாக இவரது நாவல் எந்தவித கற்பனை மற்றும் உணர்ச்சி சாத்தியங்களுக்கு ஆட்படாமல் நகர்கிறது. இவரது எழுத்து வன்மை மாஸ்தி எங்கள் ஆஸ்தி(எங்கள் சொத்து) என்று கன்னட வாசக உலகை கொண்டாட வைக்கிறது.
நேஷ்னல் புக் டிரெஸ்ட் இந்த சிறப்பான வரலாற்று நாவலை மீண்டும் மறுபதிப்பு செய்திட வேண்டும்.
மஞ்சுநாத்
புதுச்சேரி
***
கன்னட மூலம்:
மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் (1891-1986)
தமிழாக்கம்:
ஹேமா ஆனந்ததீர்த்தன்
வெளியீடு :
நேஷ்னல் புக் டிரஸ்ட் , இந்தியா
முதற்பதிப்பு : 1974
2 -ம் பதிப்பு : 1990
பக்கம்: 524+18
விலை 35 ரூ
சிக்கவீர ராஜேந்திரன் ஜெயமோகன்