அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று வெண்முரசு நாவலை இரண்டாம் முறையாக முழுவதும் படித்து முடித்தேன். முதலா விண் நாவலின் இறுதி அத்தியாயத்தில் வரும் பிள்ளைத் தமிழ் வரிகளை வாசித்த போது நீலம் வாசித்தபோது ஏற்பட்ட அதே உணர்வு நிலையில் இருந்தேன்.
வெண்முரசு உலகின் மகத்தான நாவல்களில் ஒன்று. சந்தேகமின்றி தமிழின் முதன்மையான நாவல். இந்நாவல் தமிழுக்கு அளித்த கொடைகள் பல. வரும் தலைமுறைகள் கொண்டாடப்போகும் பெரும் படைப்பு.
இந்த பெரு நாவலை முடித்த கணம் தங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? நிறைவாக இருந்ததாக சில கட்டுரைகளில் எழுதியிருந்தீர்கள். நான் கேட்பது அந்த கணத்தில் தோன்றிய உணர்வு.
இம்மாதிரி பெரும் படைப்புகளை முடிக்கும் போது படைப்பாளிகளின் மன நிலை குறித்த பதிவுகள் அதிகம் இல்லை.
திருவாசகம் சிம்பொனி வெளியீட்டு விழாவில் மேடையில் அமர்ந்திருந்த இளையராஜா பக்கத்தில் அமர்ந்து இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொன்னாராம் “என்னை விட்டா இன்னும் நூறு இடத்தில் correction பண்ணுவேன்”. இதை ரஹ்மான் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
கல்கி தனது வரலாற்று நாவல்களை முடித்ததை தனது பாணியில் பதிவு செய்து இருக்கிறார். கடற்கரையில் அமர்ந்து இருந்ததாகவும் தனது கதாபாத்திரங்கள் விடை பெற்று சென்றதாகவும் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். Hallucination ஏற்பட்டிருக்கலாம்.
பாலகுமாரன் தனது உடையார் நாவலை முடித்த விதத்தை பதிவு செய்து இருக்கிறார். ராஜ ராஜ சோழனை நினைத்து கதறி அழுததாக எழுதி இருக்கிறார். ஒரு சுமாரான நாவலுக்கு இவ்வளவு பில்ட்அப்பா என்று தோன்றியது. கம்பன், வால்மீகி, வியாசருக்கு என்ன தோன்றியிருக்கும்? டால்ஸ்டாய் போரும் அமைதியும் நாவலை பல முறை திருத்தி எழுதி பிறகே நிறைவு செய்ததாக படித்திருக்கிறேன்.
இப்போது திரும்பிப் பார்க்கையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அல்லது இந்த உணர்வுகள் படைப்பாளிக்கும் படைப்புக்குமான தனிப்பட்ட உணர்வா? இவற்றை வாசகன் அறியலாகாதா?
அன்புடன்
தண்டபாணி.
***
அன்புள்ள தண்டபாணி,
இத்தகைய உணர்வுகளை எளிதில் வரையறை செய்து கூறிவிட முடியாது. வெண்முரசு நிறைவை சட்டென்று அடையவில்லை. உண்மையில் போர் முடிந்ததுமே நாவல் நிறைவுற்ற உணர்வு வந்தது. அதன்பின் நீர்ச்சுடர் முடிவில் நீர்க்கடன்கள் செய்து முடிக்கப்படுகையில் இன்னொருவகையில் நாவல் முடிந்த உணர்வு. மீண்டும் களிற்றியானைநிரையில் நாவல் எழுந்தது. மீண்டும் கல்பொருசிறுநுரையில் முடிவின் உணர்வு.
மீண்டும் ஒரு நிறைவு இறுதி நாவல் முதலாவிண். அதிலேயே மூன்று முடிவுகள் உண்டு. பாண்டவர்கள் விண்புகுதல் ஒரு முடிவு. வியாசன் பாடி முடித்தலும் தென்குமரியின் சித்திரமும் இன்னொரு முடிவு. மீண்டும் ஒரு முடிவு, கண்ணன் பிள்ளைத்தமிழ்.
ஒவ்வொரு முடிவும் ஒரு குட்டிச் சாவுபோல. ஆனால் மேலைச் சிம்பனியில் கொந்தளிக்கும் இசை முடிந்து ஆழ்ந்த அமைதியில் ஒரு கித்தார் சுண்டப்படும் ஒலியுடன் மீண்டும் இசை தொடங்குவது போல அடுத்தது எழும்போது விசை கூடிவிடும்.
நாவல் முடிய முடிய ஆழ்ந்த தனிமையும் அகக்கொந்தளிப்பும் கொண்டவன் ஆனேன். ஏனென்றால் நான் கட்டி உருவாக்கி, நான் முழுமையாக வாழ்ந்த ஓர் உலகம் என்னைவிட்டு விலகிச் செல்கிறது. அதை இழக்கிறேன். ஒரு கனவிலிருந்து விழித்தெழுகிறேன்.
அப்போது நானறிந்த ஒரு பெரியவர் மகாபாரதத்தை மீண்டும் கிருஷ்ணனில் கொண்டுவந்து மங்கலமாக முடிக்கும்படிச் சொன்னார். அவ்வண்ணம் கண்ணன் பிள்ளைத்தமிழில் முடித்தேன். எல்லா கொந்தளிப்பும் அகன்றது. இழப்புணர்வு இல்லை. அதைவிட முக்கியம் சாதனையுணர்வும் அறவே இல்லை. நான் அதில் இருந்து ஒரு மலர்வை மட்டுமே பெற்றுக்கொண்டேன். ஒரு மலரை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த காட்டில் இருந்து திரும்பி வந்தேன்.
அது என்னிடம் இல்லை, மானசீகமாக எந்த சாதனையுணர்வும் இல்லை, நிறைவேற்றிய தன்னுணர்வு கூட இல்லை என்றால் இலக்கியவாதிகள் நம்ப மாட்டார்கள். ஆன்மிகத்தில் சற்றேனும் சென்றவர்களுக்கு நான் சொல்வதென்ன என்று புரியும்.
ஜெ