பிரயாகையின் பெண்

திகட்டத்திகட்ட சூழ்ச்சிகளும், வன்மங்களும், வஞ்சினங்களும் கொண்டு ஒரு நதி இருக்குமானால், ஊற்றெடுக்குமானால் அந்நதியே வெண்முரசின் “பிரயாகை”. எளிய வைதிகர் முதல் இளையயாதவன் ஈறாக கிட்டத்தட்ட பிரயாகையில் நீந்தும் அனைவரும் நாங்கள் யாரும், யாருக்கும் சளைத்தவர்களல்லர் என சூழ்ச்சிகள் மூலம் நிறுவிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குள் உச்சம் தொடுபவன் இளையயாதவன். “நீலம்” நூல், பிரயாகைக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு விட்டதால் மற்றோர் செய்யும் மதிசூழ்கைகள் சூழ்ச்சியாகவும், இளையயாதவன் செய்கையில் அது மாயமாகவும் ஆகிறது.

விளக்கமுடியாத விருப்புகளாலும், புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை என ஊற்றெடுக்கத் தொடங்கும் “பிரயாகை”யின் “பெருநிலை” அக்கூற்றினை நூல் நெடுக பறைசாற்றிக் கொண்டே செல்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதற்குண்டான ருசியையும், நீதியையும் எப்படி அணுக விளைகிறார்கள் என நமக்குச் சொல்கிறது துருவசரிதை.

அர்ஜுனன் மனதில் இருக்கும் துரோணரின் பிம்பம், பாண்டவர்களிடமும், கௌவுரவர்களிடமும் துரோணர் குருதட்சணையாக துருபதனின் முடியை கேட்கும்போதும், அத்தட்சணையை பெறும் போதும் படிப்படியாக வீழ்ந்து, தேர்க்காலில் கட்டி இழுக்கப்பட்ட துருபதன், குருதி தோய்ந்த உடலுடன், விழி தாழ்த்தி துரோணரை “நான் உங்களுக்கு செய்த தவறை, நீங்கள்உங்களுள் தேக்கி அதையே எனக்கும் செய்வீர்களானால், எனக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?” என கேட்கும் கேள்வியில் மண்ணாகிறது. அனுதினமும் தனது பார்வையில் குருவும், குருவின் பார்வையில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணிச் சிரவணம் செய்யும் அர்ஜுனன் அந்நிகழ்வுக்குப்பின் துரோணரை நோக்குவதே இல்லை.

பெருஞ்செல்வத்துடன் நகரதிர அஸ்தினாபுரிக்குள் நுழையும் சகுனி குந்தியின் மதிசூழ்கையால் வீழ்த்தப்பட்டு, பின்னிரவில் யாருக்கும் தெரியாமல், பல்லக்குக்கூட இல்லாமல் குதிரை மீதேறி நகர் நீங்கி காந்தாரத்திற்கு பயணமாகிறார். நூலாசிரியரின் வலிமைகளுள் ஒன்றான கொடுந்தெய்வ விவரணைகளுள் “ஆயிரம் ஆடிகள்” பகுதியில் வரும் ஜடரையும், அவள் சகுனியுடன் செய்யும் உரையாடல்களும் ஓர் உச்சம் எனலாம். சகுனியின் உடலிலும், சிந்தையிலும் ஜடரை குடி கொள்கிறாள். அதன் பின்னர் அவன் எந்தச் சிறுவழி மூலமும் தன் இரை அடையும் கணக்கு கொண்ட ஓநாய் ஆகி அஸ்தினாபுரிக்கு மீள்கிறான்.

உத்திர பாஞ்சாலத்தினை கடக்க அனுமதி கேட்கும் போது துருபதன் உடலைக் கண்டு திகைக்கும் அஸ்வத்தாமன், துரோணரின் பாவத்திற்க்காக கண்ணர் மல்குகிறான். தேவப்பிரயாகையில் நீராடும் போது, வெம்மைகொண்ட பாகீரதியிடமிருந்து இருந்து அளகநந்தையின் ஆழத்திற்கு சென்றடைய முடியாமல், அனல் கொண்ட தன் அகத்தினைக்கண்டு தான் செய்ய வேண்டியவன என்ன என அறிந்து கொண்டு, புது மனிதனாக மீண்டு தீநடம் புரிகிறான். ராகவராமனால் கடக்க முடிந்ததை துருபதனை கடக்க முடியாமல் தோற்று, பின்னர் திரௌபதியை மகளாக வெல்கிறான்.

சூழ்ச்சிகள் ஏதுமின்றி நம்மை வருடிச்செல்லும் தென்றல் “இனியன்” அத்தியாயம் மட்டுமே. பீமனும், இடும்பியும் கடோத்கஜனும் நம்மை அவர்கள் தோளிலேற்றி பறக்கிறார்கள். இப்படியும் சூழ்ச்சி செய்யும் சிறுமை மனிதனுக்கு உள்ளதா? என சூழ்ச்சிகளால் களைப்படையும் நமக்கு பரவசம் கூட்டுகிறார்கள் எளிய மனிதர்களான இடும்பர்கள். பீமனும், பானைமண்டையனும் உருவத்தில் யானையாக இருந்தாலும், உள்ளத்துள் மடிமீதமர்ந்து கொஞ்சும் செல்லப்பிராணி போலவே உணரச்செய்கிறார்கள்.

பிரயாகையில் இருக்கும் மற்றொரு ஈர்க்கக்கூடிய அம்சம் முரண்கள். வண்ணக்கடலில் அக்னிவேசரின் குருகுலத்தினை விட்டு விலகும் போது தன நாட்டையே தரத்துணியும் யக்னசேனன், துருபதனான பின்னர் பசுவைக்கூட ஈக மறுக்கிறான். ஒரு புல் போதும் என வாழும் எளிய துரோணர், உத்திர பாஞ்சாலத்தையே எடுத்துக்கொள்கிறார். குருவின் திருவடி போதும் என்றிருக்கும் அர்ஜுனன், அவரை முற்றிலுமாக தவிர்க்கும் முடிவை எடுக்கிறான். சூதனாக இருக்கும் போது இகழப்படும் கர்ணன், சத்ரியனான பின்னரும் சபிக்கப்படுகிறான். அனைத்தையும் விழையும் சாத்ர குணம் கொண்டாட துரியன், ஒவ்வொரு முறை அரியணை அவனை விட்டு நழுவும் போதும் தந்தைக்காக மட்டுமல்லாமல், உண்மையாகவே அவர் முடிவை தன் முடிவாக ஏற்கிறான். பிரயாகை நெடுக மனித மனத்தின் குரூரங்கள் முரண்பாடுகளாலேயே சமன் செய்யப்படுகின்றன.

ஒரு மனநிகழ்வில், ஆண்களுக்கும் பேரரசுகளுக்கும் என்னெனவோ கணக்குகள் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் திருமணத்தில் விழைவது என்ன என்பதை பலகோணங்கள் கொண்டு நம்மை நோக்குகிறது “அன்னைவிழி” அத்தியாயம். எவையெல்லாம் ஒரு தனிமனிதனின் உச்சமோ அது அனைத்தையும் ஒருசேர துய்க்கத் துடிக்கிறாள் திரௌபதி. பீமன் திரௌபதியின் மகிழ்வுக்காக செய்பவை அனைத்தும் அவனே பெருங்காதலன் என சொல்கிறது.

இதனை சூழ்ச்சிகள் நிரம்பிய மனித நிரையில் துளி சிறுமையும் இல்லாதவர்கள் தார்த்தாஷ்டிரரான துரியோதனனும், திருதிராஷ்டிரரும் மட்டுமே. கர்ணனின் கண்கண்டு திரௌபதியை விட்டுக்கொடுப்பதிலும், மணத்தன்னேர்ப்பு விழாவில் தோற்கும் கர்ணனை ஆரத்தழுவும் போதிலும், பாண்டவர்கள் இறக்க வில்லை என அறியும் போது நெகிழ்வதிலும் சரி துரியன் உச்சம் தொடுகிறான். இளையயாதவன், கணிகர், சகுனி, குந்தி, விதுரர், கௌரவர்கள், பண்டவர்கள் என சூழ்ச்சிமிகு மாந்தரிடையே உணர்ச்சிகளால் எளிதில் அடித்துச்செல்லப்படும் திருதிராஷ்டிரர் வானளாவ உயர்ந்து நிற்கின்றார்.

பி.கு: நேரமிருந்தால் பதிலளிக்கவும். வெண்முரசு தொடர்பாக இது எனது நான்காம் கடிதம். முதல் ஐந்து நூல்களுள், நீலத்தின் வடிவம் மட்டுமே தொக்கி நிற்பது அல்லது ஒழுங்கற்றது (நேர்மறையான தொனியில்) எனலாம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மற்றும் பிரயாகை ஆகிய மற்ற நான்கு நூல்களும் திட்டவட்டமான வடிவு கொண்டவை. வெண்முரசு தொகைநூல்களுள் மிகச்சிறிய நூலான நீலம் மட்டும் என்னால், எனது வாசிப்பு மூலம் திரட்டித் தொகுக்க முடியவில்லை. காரணம் அதிலுள்ள கவித்தன்மையா? அதன் சுவை அத்தன்மையில்தான் உள்ளதா? நீலம் மட்டும் ஏன் ஒழுங்கற்ற வடிவம் கொண்டுள்ளது? அல்லது அந்த ஒழுங்கற்ற வடிவமும் திட்டமிடப்பட்ட ஒன்றா?

லெட்சுமிநாராயணன்

கீழநத்தம், திருநெல்வேலி.

***

முந்தைய கட்டுரைதிருப்பூர் கட்டண உரை- அறிவிப்பு  
அடுத்த கட்டுரைஇலக்கியம் ஆய்வல்ல