யாதெனின் -கடிதம்

யாதெனின் யாதெனின்…

அன்பு ஜெ,

‘மெய்மைக்கும் அப்பால் உள்ளது முழுமை. அதற்கு முதலில் தேவையானது துறத்தல். ஒவ்வொரு விழைவையாக தொட்டு இதுவன்று இதுவன்று என்று அகன்று செல்லுங்கள். யாதெனின் யாதெனின் என்று நீங்கி அதனின் அதனில் இலனாகுங்கள்’

என்ற குறள் ததும்பிய வரிகளை நேற்று வெண்முரசில் வாசித்தபோதே அணுக்கமாகிவிட்டது. ஆனால் அந்த நேரம் எதனுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் கடந்திருந்தேன். இன்று ஏனோ எங்கிருந்தோ மீண்டும் “யாதெனின் யாதெனின்..” என்ற வரி வந்து முன் நின்றது. குறளை மீட்டெடுத்து படித்துப் பார்த்தேன்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின்
அதனின் இலன்

2016இல் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்று தேடல் முடிவில் வந்தது (https://www.jeyamohan.in/389/) வாசித்து முடித்துவிட்டு “இது தான்.. இது தான்.. இதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்” என மனம் அரற்றிக் கொண்டிருந்தது. எழுந்து என்னை யாரென்று அறிந்திராத நெரிசல் மிகு சாலையொன்றில் அழுதுகொண்டே சென்றிருந்தேன். ஒரு வாரமாக அவ்வபோது நானும் தம்பி வீரபத்திரனும் உரையாடிக் கொண்டிருந்த கருத்துக்களுக்கான ஒரு விடையாக இந்தக் குறள் வந்தமைந்தது. நீங்கள் பணத்தைப் பற்றிய துறப்பில் ஆரம்பித்து மெய்மையைப் பற்றிய புள்ளியைச் சொல்லியிருந்தீர்கள்.

நாங்கள் பொதுவாக மனிதர்கள், உறவுகள், உணர்வுச் சிக்கலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். எத்தனை மாஸ்டர்ஸ் அதை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறோம். உண்மையில் மனிதனில் அவர்கள் செல்லும் அகப்பயணம் வியப்பைத்தான் அளிக்கிறது. “யாதெனின் யாதெனின்” என்று அவர்கள் வாழ்க்கையை நோக்கி கேட்டுக் கொண்டே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தாங்கள் சந்தித்த மனிதர்களை, உணர்வுகளை, தருணங்களை எத்துனை ஆழமாக பயணித்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. வெண்முரசின் மாந்தர்களில் செல்லும் அகப்பயணம் அத்தகையதாக இருக்கிறது. என் வாழ்க்கையோடே அது இணைந்து வருகிறது. ஒவ்வொரு மானுடருக்குள்ளும் சென்று மீளும் அந்தப் பயணம் நீண்ட வாழ்க்கையை வாழச் செய்த பிரமையை அளிக்கிறது.

நாஸ்டாலஜியா பற்றிய உரையாடலை தம்பி வீரபத்ரன் இவ்வாறு ஆரம்பித்தான். “Nostalgiaவை நினைவேக்கம்னு தமிழ்ல மொழிபெயர்க்குறாங்க. மனதின் ஒருதுளி முன்னால் பாய தவித்து சதா எம்பிக்குதித்து கொண்டே இருக்கிறது. மறுதுளி பின்னோக்கி திரும்பி காலத்தின் கரத்தால் உரிக்கப்படும் அனைத்தையும் குப்பைகளை பைகளில் அடைத்து சுமந்து திரியும் பித்தனைப்போல ஆசையோடு பற்றி அணைத்து அழுது ஏங்குகிறது. இரண்டாவது துளி Nostalgia வகையை சார்ந்தது. நாஸ்டால்ஜியா என்பதை மனம் தன் தோற்றுவாயை தேடும் தவிப்பு எனலாம். நேற்று முழுக்க தேவதேவனின் ஒரு கவிதையில் வருகிற வரியை மந்திரம் போல சொல்லிக் கொண்டிருந்தேன். //பிறந்தகம் நோக்கும் பிணியோ உன் துக்கம்// நாஸ்டால்ஜியாவை பிறந்தகம் நோக்கும் பிணினு சொல்லலாம்ல இனி. எனக்கு சிலநாட்களாக  நாஸ்டால்ஜியா மனித மனதில் வகிக்கும் இடம் பற்றி அறிவதிலே நேரம் போகிறது. தார்க்கோவ்ஸ்கிக்கு Nostalgia மீது ஏன் கவனம் போனது? அந்த தலைப்பில் ஒரு உன்னத கலைபடைப்பையே ஏன் படைத்தார் என.. மகிழ்வை விட மகிழ்வு குறித்த நினைவேக்கம் இன்பமானதா இதமானதா இருக்குதோ மனசுக்கு…

கவிஞர் ஆனந்த் தன் ஒரு நூலில் காதல் உறவை பற்றி சொல்லும்போது …நாம் ஒருபெண்ணையோ ஆணையை சந்திக்கும் குறிப்பிட்ட ஒருபுள்ளியில், சில கணங்களில் நம் பிரக்ஞையில் உணர்வெழுச்சி ஒன்று நிகழ்ந்துவிடுகிறது. பின் அது நின்று விடுகிறது.எந்த உச்சவுணர்வுமே நீண்டகாலம் நீடிக்காது. காதல் என்பது அந்த சிறியகால உணர்வெழுச்சியை மீண்டும் அடைந்து தக்கவைப்பதற்காக ஏக்கம் தான் என்கிறார். அதாவது காமம் இன்பம்… காதல் இன்பம் பற்றின நினைவேக்கம் எனலாம். (இங்கு நான் ஏக்கம், தவிப்பு போன்ற சொற்களை இன்ப-துன்ப இடைவெளியற்ற தகிப்பான ஒன்றை சுட்டவே பயன்படுத்துகிறேன்.) நீட்சே கூட ‘நாம் ஆசைப்படும் ஒன்றையல்ல, நம் ஆசையையே உண்மையில் நாம் விரும்புகிறோம்’ என்கிறார். (அதாவது பயணிப்பதை விட இலக்கடைதல் கொஞ்சம் சுவாரசியம் குறைவானதுதான் என்பது போல சொல்வார்.)”

நான் இதனோடு தொடர்புடைய வெண்முரசின் சில வரிகளை அவனிடம் பகிர்ந்து விரித்துக் கொள்ள முற்பட்டேன்.

“மானுடர் மறக்கவிரும்புவது எதை? ஒவ்வொரு கணமும் உள்ளத்தில் பொத்தி அணைத்திருக்கும் அனைத்தையும்தானா? மானுடர் வெறுப்பது பொழுதென்று சுருண்டு எழுந்து நாள் என்று நெளிந்து காலமென்று படமெடுக்கும் நச்சை. காலத்தை வெல்வதே அமுது. (வெய்யோன்)”

உண்மையில் இந்த நாஸ்டால்ஜியா காலத்தை தன் இருப்பாக வைத்திருப்பது. துக்கங்களை ஏக்கங்களைக் கடப்பதற்கு காலமே சிறந்த மருந்தெனக் கூறுகின்றனர். தீற்றலாக எஞ்சுவது என்பது அது தான். ஒரு தருணம், அந்த தருணத்தில் காட்டப்படும் மனிதனின் பிம்பம், உணர்வு. இந்த மனிதர்களே நினைத்தால் கூட அந்த உச்ச சாத்தியமான தருணத்தை மீண்டும் நம்மிடம் காட்டவியலாது. அந்த தருணத்தின் ஏக்கத்திலேயே பித்தாகிவிடுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளன் இதை கூர்ந்து நோக்குகிறான். அங்கு அவன் கேட்பது “யாதெனின் யாதெனின்” என்பது தான் என்று தோன்றுகிறது. பிறிதொரு வெண்முரசு வரி நினைவில் எழுந்தது.

“தெய்வங்களை மனிதரால் அறிந்து கொள்ள முடியாது. மனிதர்களில் உள்ளுறையும் தெய்வம் பல்லாயிரம் காதம் அப்பால் நின்று விழி ஒளிர நோக்கிக் கொண்டிருந்திருக்கலாம். பற்கள் மின்ன புன்னகைத்திருக்கலாம்”. (வெய்யோன்)

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உச்ச சாத்தியம் (தெய்வம்) ஒன்றுள்ளது. ஒருவகையில் அவன் அகப்பயணம் செய்வானாயின் சென்று கண்டடைவது அதுவாகத்தானிருக்கும். ஆனால் அந்தத் தெய்வம் தனக்கு முன் இருக்கும் ஒருவரையும் கூட பார்த்துக் கொண்டிருக்கும் என்று நீங்கள் காட்டிய சித்திரம் திகைப்பை அளிக்கிறது ஜெ. இளைய யாதவன் கர்ணனை அவனின் அகத்தை நோக்கி புன்னகைத்த அந்த தருணம் எனக்கு சிலிர்ப்பானது. அது இளைய யாதவனால் மட்டுமே முடியும் என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தெய்வம் இருக்கிறது என்ற அறிதல் எனக்கு மிகவும் திறப்பாக உள்ளது. அப்படியானால் உறவுகளுக்காக, உணர்வுகளுக்காக, தருணங்களுக்காக நாம் நிற்பது காலத்தின் முன் மட்டுமல்ல. அந்த மனிதரகளுள் உறையும் தெய்வத்தின் முன்பும் தான் என்று தோன்றுகிறது. நான் முதல் முறை ஒரு நபரை சந்திக்கும்போது அவர்களின் சிறுவயது முகம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து கொள்வதுண்டு. யாவருக்குள்ளும் இருக்கும் ஒரு குழந்தைமை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று அவற்றை தெய்வமென நான் நிறைத்துக் கொள்கிறேன். நாம் மிகவும் விரும்பிய ஒரு தருணம், ஒரு மனிதன், ஒரு உணர்வு என்பது உண்மையில் பின்னெப்போதும் வெளிப்படாது காலத்தில் உறைந்திருக்கும் தெய்வம் என்பதையே உணர்கிறேன் இன்று உங்கள் வரிகளின் வழி.

“யாதெனின் யாதெனின்” என்று இந்த அறிதல் பயணத்தில் சென்று கொண்டிருக்கிறோம் ஜெ. இந்த உணர்வுகளைப் பொறுத்த வரையில் மட்டும் “அதனின் அதனின் இல்” -ஐ மிக விரைவில் அடைந்துவிட விருப்பமில்லை. இத்தனை அறிந்தும் ஏக்கங்களை, துக்கங்களை, மதுரங்களை உண்மையில் அவ்வளவு எளிதாகக் கடக்க முடிவதில்லை ஜெ.

“வெறுப்பின் வழி யாரையும் பிரிந்துவிட முடியாதுனு நினைக்கிறேன் அன்பினால் கருணையினால் மட்டுமே ஒருவரை விலக முடியும்னு நினைக்கிறேன்…” என்று வீரபத்ரனிடம் சொன்னபோது. “உண்மைல விலகுறதுக்கும் விலக்குறதுக்கும் வேறுபாடு பெருசு. வெறுப்பினால அவங்கள நம்ம கிட்ட இருந்து விலக்குறோம். அன்பினால நாம அவங்க கிட்ட இருந்து விலகுறோம். முதலாவது உரித்தல். இரண்டாவது உதிர்தல். உரிப்பது இரண்டு தரப்புக்கும் வலி. ‘கனியை பிளந்த கல் தானும் உடையும். அது தன் இதயத்தை சூரியனிடம் காட்டநேரிடும்’ என்று கலீல் ஜிப்ரான் தீர்க்கதரிசில சொல்வாரு.” என்று பதில் வந்தது.

உதிர்வது தான் நிறைவை அளிக்கிறது. தன்னிறைவை நோக்கிய பயணத்தின் பாதை அது. தன்னை நோக்கிய அகப்பயணம் தான் இந்த உதிர்தல். உலகியல் சார்ந்த விருப்பம், துக்கம், ஏக்கம், உணர்வுகள் யாவற்றையும் உதிர்த்துக் கொள்ளும் இப்பயணத்தில் எதை நிறைத்துக் கொள்வது என்ற கேள்வி எஞ்சியது ஜெ. அதற்கான விடையாக கட்டுரையின் வரிகளை நிறைத்துக் கொள்கிறேன்.

“எது நம் ஆற்றலின் ஆகச்சிறந்த வெளிப்பாடோ அது நமக்கு வேண்டும்தான். நமது கடமைகள் நமக்கு வேண்டும்தான். குடும்ப உறுப்பினராக, சமூக உறுப்பினராக நமது பொறுப்புகள் வேண்டும். ஏன், நமது அடிப்படை இன்பங்கள் கூட நமக்கு வேண்டும்தான்.”

“ஆனாலும் நமக்கு வேண்டும் என்பனவற்றை நாம் அடைவதற்கே கூட வேண்டாமென்று சொல்லும் திடம் தேவையாக ஆகிறது. வேண்டும் வேண்டும் என்ற விசை நம்மை இயக்கும் என்றால் நாம் இழந்து கொண்டேதான் செல்கிறோம். வேண்டாம் என்று சொல்வதற்கான மனநிலையே சுதந்திரத்தின் அடிப்படை. அதுவே நம்மை நாமாக நிலைநாட்டும் வல்லமை.”

யாதெனின் யாதெனின் என்று கேட்டுக் கொண்டே செல்கிறேன். அதனின் நீங்குதல் என்பது பெரும்பயணம் என்பதை உணர்கிறேன். வலியா இன்பமா என்று பிரித்தறியவியலாத பயணப்பாதையை அனுபவமாக அன்றி வேறெதுவாகவும் கருதவில்லை. இந்த பயணத்தில் வழிகாட்டும் உங்கள் சொற்களுக்காக நன்றி ஜெ.

பிரேமையுடன்

இரம்யா.

***

முந்தைய கட்டுரைபிரயாகை, வாசிப்பு
அடுத்த கட்டுரைமுதுநாவல்- கடிதம்