தங்கப்புத்தகத்தின் கதைகள் எனக்கு நிறைவான வாசிப்பைக் கொடுத்தது. திபெத் எனும் உலகின் பீட பூமியை நம் கண் முன் விரித்து பெரிதாக்கிக் கொண்டே செல்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இந்த நூல் ஆறு கதைகளைக் கொண்டுள்ளது. 4 சிறுகதைகள் மற்றும் 2 குறுநாவல்கள். இக்கதைகள் யோகிகளின் மெய்ஞான தேடலைப் பேசுகின்றன. அவர்களின் வழியாகவே இக்கதைகள் சொல்லப்படுகின்றன.
சீனாவில் வசித்த ஆண்டுகளில் திபெத் செல்ல தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தேன். தூதரகத்தில் வேலை செய்வோர் கண்டிப்பாக திபெத் உள் நுழைய முடியாது எனத் திண்ணமாக மறுப்பு கூறிவிட்டார்கள். முதல் காரணம் கடப்பிதழ் தான். திபெத் சீனாவின் தன்னாட்சி பிரதேசமாக விளங்குகிறது. சீனாவில் நுழைந்த பிறகு தான் திபெத் செல்ல முடியும். முதலில் சீனாவிற்கான நுழை விசைவை (Visa) எடுக்க வேண்டும். அடுத்ததாகத் திபெத்துக்குத் தனியாக ஒரு நுழைவு சான்றிதழை (Entry Permit) பெற வேண்டும். சீனா சென்றடைந்த பிறகு தான் அதைப் பெற முடியும். தனி நபராகப் பயணிக்க முடியாது. நிச்சயமாக ஒரு சீன சுற்றுலா முகவரை அமர்த்திக் கொள்ள வேண்டும். கொண்டு செல்லும் பணம் உட்பட திபெத்தில் தங்கும் நாட்களுக்கான நிகழ்ச்சி நிரலைப் பட்டியல் போட்டுக் கொடுக்க வேண்டும். போதாக் குறைக்குக் காற்றழுத்தம் குறைவாக இருப்பதால் பயணத்தின் போது ஆக்சிஜன் பிரச்சனையையும் சந்திக்க வேண்டும்.
இவ்வளவு சிக்கல்களையும் கலைந்து சென்று காண வேண்டிய இடம் தானா என்றால்? நிச்சயம் காண வேண்டிய இடம் தான். செங்-டூ வில் இருந்து லாசா செல்லும் 48 மணி நேர இரயில் பயணம் மிகப் பிரசித்தி பெற்றது. அதன் காட்சிகள் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அழகைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் இந்த பாதையில் விரைவு இரயில் சேவையின் தொடக்க பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 48 மணி நேரப் பயணத்தை 13 மணி நேரமாகக் குறைக்க முடியுமெனக் கூறுகிறார்கள்.
இப்போது கதைகளைப் பார்க்கலாம். இந்நூலின் முதல் இரு கதைகள் காகம் தொடர்பானவை. முதல் கதை நிழல் காகம். காகங்களின் தொடர் எதிர்ப்பு ஒருவரைத் துறவு வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதும் அதன் வழி ஞானம் அடைவதுமாக இக்கதை அமைந்துள்ளது. காகங்கள் புத்திக் கூர்மை மிக்க பறவைகள். கூட்டத்தில் வாழ்பவை. நம் நாட்டில் வருடத்தில் சில முறையேனும் காகங்களைச் சுட்டுவிடுகிறார்கள். அது மிக விரவில் இனவிருத்தி செய்வது மட்டுமல்லாமல் அசுத்தப் பறவையாகவும் பார்க்கப்படுகிறது. புறாக்கள் இந்த உயிர் பழியில் தப்பி விடுகின்றன. ஒரு சமயம் நீலச் சட்டை போட்டிருப்பவர்களை என் குடியிருப்பு பகுதி காகம் ஒன்று தொடர்ந்து தாக்கி வந்தது. அதன் பின்னணி காரணம் நீலச் சட்டை போட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர் அதன் கூட்டையும் முட்டைகளையும் அகற்றி இருக்கிறார். காகங்கள் மனிதர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டே மனிதர்களோடு வாழ்கின்றன. இக்கதையைக் கூறும் நித்தியா, வாழ்க்கையை நடித்துக் கொண்டிருக்கிறோம், காகத்தோடு நான் நடிக்கிறேன், இதில் நாடகத்தைப் பார்த்தால் பிக்குகளின் புனிதம் கொடும் என்பது எவ்வகையில் ஏற்புடையது எனும் கேள்வியை முன் வைக்கிறார். இக்கதை வெறுப்பு மற்றும் பழி தீர்த்தலில் கண்டடையும் ஞானத்தைப் பேசுகிறது. காகத்தை நாம் இந்த அளவிற்கு அவதானித்திருப்போமா என்பது கேள்விதான்.
நிழல் காகம் வெறுப்பின் அடைவைப் பேசும் கதை. அடுத்ததாக இருக்கும் காக்காய்ப்பொன் மனிதர்கள் மீதான காகத்தின் காதலைப் பேசுகிறது. ஒரு யோகியின் இறுமாப்பை உடைக்கும் காதல். இந்த இரு கதைகளை வாசித்த பிறகு காகங்கள் மீதான எனது பார்வை அல்லது எண்ணங்கள் மாறின. காகங்கள் பற்றிய பல துள்ளிய தகவல்களை அபுனைவாக வாசித்திருப்பின் நினைவில் நிறுத்தி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
சிவம் கதையும் யோகி நித்தியாவால் சொல்லப்படுகிறது. அதில் காசியில் பிணங்களை எரியூட்டும் செயல்முறையை ஆசிரியர் விவரித்திருப்பார். அதை நினைத்துப் பார்க்கவே திகைப்பாக உள்ளது. நான்கடி சிதையில் பிணத்தின் நடுப்பகுதியை முதலில் எரித்து பின் காலையும் தலையையும் மடித்து ஒன்றின் மீது ஒன்றாகப் பிணங்களை எரிப்பதைக் கற்பனையில் நினைக்கவே பதைக்கிறது. அந்த சிதையில் குளிர்காயும் சாமியார் அதில் ரொட்டியைச் சுட்டு மற்றவர்கள் சாப்பிடப் பகிர்ந்து கொடுக்கிறார். அன்பு மற்றும் மரணத்தைக் கடந்த நிலையில் யோகிகள் அச்சூழல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள் என்பதாக இக்கதை அமைந்துள்ளது. சிவம் கதை நெடுக்கினும் அன்பும் மரணமும் ஒரே சம அளவுகோலில் உள்ள உணர்வுகளாகவே பார்க்கப்படுகின்றன.
தங்கப்புத்தகம் எனும் கதை முக்தானந்தாவால் சொல்லப்படுகிறது. திபெத் மீதான உலக நாடுகளின் அரசியல், திபெத்தியப் புத்தத்தின் தத்துவார்த்த கோட்பாடுகள், அதன் கலாச்சாரம், கண்களை வலிக்கச் செய்யும் வெண்பனி பரப்பு, Grottoes எனப்படும் கற்குகை கோயில்கள் என இக்கதை பேசும் தளங்கள் மிக விரிவானவை. முக்தா 1950-ல் திபெத்தில் நுழைகிறார். அவருடைய ஞானத் தேடல் தங்கப்புத்தகத்தை நோக்கிச் செல்கிறது. இக்கதை பல இடங்களில் மாய யதார்த்தமாகவும் புதிர் நிறைந்ததாகவும் நகர்கிறது. எதையும் அடையாத நிலையில் அங்கே இழப்புக்கான சூழல் இல்லாமல் இருப்பதை இக்கதை சொல்கிறது.
சீன மொழியில் திபெத்தை சீ-ஷாங் என அழைப்பார்கள். அதை ’a piece of broken mirror from the heaven’ என வர்ணிக்கிறார்கள்.
திபெத்தியப் புத்த மடாலயங்களை ‘லாமா டெம்பில்’ எனக் குறிப்பிடுவார்கள். சீனாவில் அமைந்துள்ள பெரும்பான்மையான லாமா கோவில்கள் சுற்றுலா மயமாகிவிட்டன. இக்கதையைச் சொல்லும் முக்தா அதை முன்பே குறிப்பிடுகிறார். சின்-ஜியாங் போலவே திபெத்திலும் ஹன் இன சீனர்கள் அதிகப்படியாகக் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். பல அரசியல் சிக்கல் பின்புலங்கள் இச்செயல்பாடுகளில் உள்ளன. சீன அரசியல் நிலைப்பாட்டில் மதம் என்பது கொடும் விஷம்.
குப்லாய் கான் மங்கோலியராக இருந்தாலும் அவர் அனுசரித்த மதம் திபெத்தியப் புத்தமாகும். சுமார் 97 ஆண்டுகள் சீனா மங்கோலியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. கான்களின் ஆட்சியில் அவர்கள் சீனர்கள் மீது மொழி, மத திணிப்புகளைச் செய்யவில்லை. வெளியுலகிற்கு அந்நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டனர். தங்கப்புத்தகத்தில் திபெத் வெளிநாட்டு உளவாளிகளை விடுவிப்பதும் பின் அது அவர்களுக்குப் பாதகமாக விளைவதும் சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றுத் திரும்பலாகவே இதைப் பார்க்கிறேன்.
கூடு மாபெரும் பிரமாண்டாத்தை உருவாக்கும் துறவி துளைக்குள் உயிரை அடக்கிக் கொள்ளும் கதையைப் பேசுகிறது. இக்கதையில் 1949-ஆம் ஆண்டில் லடக், லே போன்ற பகுதிகளிலிருந்த, கைவிடப்பட்ட பல புத்த மடாலயங்களை முக்தா நமக்கு அறிமுகம் செய்கிறார். அதன் ஆக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், செயல்பாடுகளும் விளக்கப்படுகிறது. முக்தா மற்றும் ராப்டனுக்குமான உரையாடல் மிகச் சுவாரசியமாகவும் வேகமாகவும் வாசகனைக் கதையினுள் நகர்த்திக் கொண்டு செல்கிறது.
கரு கதையை வாசிக்கும் போது, இக்காய் காவாகுச்சி எழுதிய ‘Three Years in Tibet’ எனும் நூல் வாசிப்பு என் ஞாபகத்தைத் தட்டிச் சென்றது. வெளிநாட்டினர் அதிகமாக திபெத் சென்றிருக்காத காலத்தில் திபெத் சென்றவர்கள் மிகச் சிலரே. பலருக்கு அது தோல்வியிலும் மரணத்திலும் முடிந்திருக்கிறது. மதத்தைப் பரப்பும் பொருட்டு பல கிருத்துவ மிஷனரிகள் அந்த கடும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. இக்காய் காவாகுச்சி எனும் ஜப்பானியப் பிக்கு அங்குப் புத்த சூத்திரங்களைத் திரட்ட சென்றார். இவருடைய நூலிலும் சரத் சந்திர தாஸ் முக்கிய அங்கமாக எழுதப்பட்டுள்ளார்.
கரு திபெத்தை சென்றடையும் கதை. இதில் லாப்சங் ரம்ப்பா-வை (Lobsang Rampa) முக்தா பின்வருமாறு அறிமுகம் செய்கிறார். அடுத்த கனத்தில் அந்த பிம்பம் உடைக்கவும் படுகிறது.
”லாப்சங் ராம்பா-வை பற்றிய அறிதல் திபெத் பற்றி ஒரு புரிதலை உருவாக்கும். நாம் அவரிலிருந்து தொடங்கி அவரை கொஞ்சம் கொஞ்சமாக ரத்துசெய்துகொண்டே சென்று திபெத்தைச் சென்றடையலாம்.”
“1972-ல் கனடா சென்றபோது கால்கரில் அவரைச் சென்று சந்தித்தேன். நம்மூர் பூசாரிகளைப்போல ஒரு வகையான பித்து நிலையும் கூடவே பாவனைகளும் அற்பமான திருட்டுத்தனமும் கலந்தவராக இருந்தார். இருபது நிமிடத்தில் சலித்துவிட்டார்”.
கரு கதையில் திபெத் சென்றடைந்த இரு சூசன்னா, அன்னி எனும் பெண்களைப் பற்றிய கதை செல்லப்படுகிறது. இக்கதை ஆடம் என்பவரால் முக்தாவிடம் விளக்கப்படுகிறது. அது போக இக்கதையின் முக்கிய தேடலாக அமைவது திபெத்தில் இருப்பதாகக் கூறப்படும் யாரும் பார்த்திடாத ஷம்பாலவை நோக்கியதாக அமைகிறது. அதன் வழி பல நிகழ்வுகளும், நம்பிக்கைகளும், தத்துவங்களும் வாசகனுக்குக் கடத்தப்படுகிறது.
விக்னேஷ்வரன்
***
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307