தீயில்லாத வேக்காடு -கடிதங்கள்

மூச்சே நறுமணமானால் வாங்க

அன்பு ஜெயமோகன்,

இன்று காலை அக்கமகாதேவியின் வசனக்கவிதைகள் சிலவற்றைப் பாடல்களாய்க் கேட்கும் வாய்ப்பு. அநேகமாய் பெருந்தேவியின் மூச்சே நறுமணமானால் (அக்கமகாதேவி) நூல்வெளியீட்டு நிகழ்வு என நினைக்கிறேன். பாடியவர் அனுராதா ராமன். எவ்வித நோக்கமும் இன்றி ஒரு பாடலைப் பலமுறை கேட்டபடியே இருந்தேன். ”தீயில்லாத வேக்காட்டில் வெந்தேனம்மா” எனத் துவங்கும் பாடல் அது.

எனக்கு எக்குறையும் இல்லை என நிம்மதி கொள்ளும்போது ஒரு வெறுமை வந்து சூழ்கிறது. அது கொஞ்சம் நிலைகுலையவும் வைக்கிறது. நிம்மதியை எதிர்ப்பார்க்கும் நான் வெறுமையை யோசிப்பது கூட இல்லை. அதுவாகவே வந்துவிடுகிறது. நிம்மதியை நான் உணர்ந்த மறுகணம் அவ்வெறுமையும் என்னருகே வந்து நிற்கிறது. தள்ளிவிட முடியவில்லை. இறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. தீயில்லாத வேக்காட்டில் வெந்தேனம்மா!

என்னைப் பெற்று வளர்த்த அம்மாவுக்கு நான் எதுவும் செய்யவில்லையோ எனும் தாழ்வுணர்ச்சி வரும்போதெல்லாம் மழலையில் அவருக்குக் கொடுத்த சில முத்தங்கள் நினைவுக்கு வரும். அச்சமயம் நெஞ்சத்தில் ஒரு ஆசுவாசம் துளிர்க்கத் தயாராகும். அதற்குள், முத்தங்களைத் தள்ளி விட்டு தாழ்வுணர்ச்சி மிக நெருக்கமாய் முகத்தைக் கொண்டு வந்து விடும். என்னால் ஒன்றும் செய்ய இயல்வதில்லை. வடுவில்லாத காயத்தில் நொந்தேனம்மா!

இவ்வுலகத்தின் நெருக்கடித் துயர்களை யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அப்படி பகிர்ந்து கொள்ள வாய்க்கும் ஒருவரும் கொஞ்ச நாட்களில் நெருக்கடித் துயராகி விடுகிறார். உலகம் நெருக்கடித் துயரா, வாழ்க்கை நெருக்கடித் துயரா, இல்லை நான் சந்திக்கும் மனிதர்கள் நெருக்கடித் துயரா? வரக்கூடாத பிறவிகளில் வந்தேனம்மா!

குறிப்பு: பாவண்ணன் மொழிபெயர்ப்பில் அது “நெருப்பில்லாத சூட்டில் வெந்தேனம்மா” என்று இருக்கும்.

முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்.

அன்புள்ள ஜெ

நீங்கள் பரிந்துரைத்ததனால் பெருந்தேவி மொழியாக்கம் செய்த அக்கமகாதேவியின் வசனங்களை வாங்கினேன். கூர்மையான மொழியாக்கம். ஒரு பெண்கவிஞர்தான் இதை இப்படி சரியாக மொழியாக்கம் செய்ய முடியுமென நினைக்கிறேன். அக்கமகாதேவியுடன் பெருந்தேவி இணையும் தருணங்கள் மொழியில் வெளிப்படுகின்றன. நல்ல மொழியாக்கம் ஒருவகை தனித்த இலக்கியப்படைப்பாகவும் ஆகிவிடும். அப்படி நிகழ்ந்த நல்ல நூல்களில் ஒன்று இது.

ரவிக்குமார் ஆனந்த்

முந்தைய கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை
அடுத்த கட்டுரைமழையீரம் பூக்கும் மலர்