சந்திப்பிற்கான அழைப்பு வந்ததிலிருந்தே இனம்புரியாத பரவசம் அடிவயிற்றில் எழும்பியது, ஜெமோவுடன் இரண்டு நாள் இருக்கப்போகிறோம் என்பதை யாரிடம் நான் பகிர்வது எனக்குள்ள பெரும்பான்மை நண்பர் கூட்டம் இலக்கியத்தை அறியாத எளியர்களல்லவா, ஆனாலும் பகிர்வதற்கு ஜெமோவின் அறமுண்ட சில வாசகர்களின் வாட்ஸப் எண் கைவசமிருந்தது என்னதிர்ஷ்டம். முதல் நாள் சந்திப்பிற்கு முன்பு இரண்டு நண்பர்களின் திருமண விழாவில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது, விழாவும் விருந்தும் மதுவருந்திய நண்பர்களுடனான இரவும் எனக்கு துளிகூட நினைவில்லை மனமெங்கும் எப்போது ஜெமோவை சந்திப்போம் எனும் எண்ணமே நிறைந்திருந்தது.
நாள் முழுவதும் மூன்று பேருந்துகளில் பயணம் செய்து கூடலூரிலிருந்து தேனி, திண்டுக்கல் வழியாக ஈரோட்டிற்கு வந்திறங்கினேன். இரவு துவங்கி நள்ளிரவிற்குள் புகுந்த தருணம் பரோட்டாக்கடைகள் பாதிமூடிய கதவுகளுக்கு பின்னிருந்து தங்கள் இருப்பை அறிவித்துக்கொண்டிருந்தன, இரண்டு பரோட்டாவை தின்றுவிட்டு ஈரோடு பேருந்து நிலையத்தை நான்கு முறை சுற்றிச்சுற்றி கால்களை அழைத்துச்சென்றேன், கண்கள் எரிச்சலை உணரத்துவங்கியவுடன் மூடிய டீக்கடையின் மரப்பெட்டிகளின் மீது எப்போது கைவசமிருக்கும் ந்யூஸ்பேப்பரை விரித்துபடுத்துக்கொண்டேன். வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு இரவை எந்த அடிப்படை வசதியுமில்லாத ஓரிடத்தில் கழிப்பதை எண்ணி சிலிர்த்துக்கொண்டேன், நேரம் சரியாக ஒன்றரையிருக்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் நீலத்தின் பாலாழி பகுதியை வாசித்துக்கொண்டே உறங்கிவிட்டேன், இடைக்கிடையே நாய்களின் குரைப்பொலி கேட்டுக்கொண்டிருந்தது ஆனாலும் உறக்கம் கண்களிலிருந்து கசிந்தபடியிருந்தது. நான்கரை மணிக்கு உறக்கம் தொடர்ச்சியான தும்மல்களால் கலைந்துவிட்டபின் கண்களை கழுவிக்கொண்டு நண்பர்கள் யாரேனும் அருகிவிட்டார்களா என்று காத்திருக்கத்துவங்கினேன். விடிகையில் பூவன்னாவின் குறுஞ்செய்தியை கண்டு அவருடன் இணைந்துகொண்டேன்,
ஆறரை மணியளவில் சீரா, ஸ்ரீராம், பூவன்னா என சந்திப்பிற்கு வந்த நண்பர்களுடன் பண்ணைவீட்டிற்கு வந்துவிட்டோம். கண்கள் உங்களைத்தேடிக்கொண்டிருந்தது, சரியாக ஆறே முக்காலளவில் கண்களில் கண்ணாடியணியாமல் நீங்கள் வெளியே புன்முறுவலுடன் எங்களை எதிர்கொண்டகணங்களை பிரமிப்புடன் நினைவிலிருந்து எழுப்பிக்கொள்கிறேன், ஏனென்றே தெரியாமல் சட்டென விஷ்ணுபுர பிங்கலனும் வயோதிகத்தால் மெலிந்த வியாசரும் நினைவிலிருந்து வெளிப்பட்டார்கள். லாப்ரடார் நாயைக்கொஞ்சியபடி நீங்கள் அதன் மூன்றுலட்சம் ந்யூரான்களைப்பற்றி பேசத்துவங்கியதிலிருந்து மறுநாள் மரபுக்கவிதைக்கும் நவீனக்கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி நீங்கள் பேசியதுவரை எதுவும் நான் இதுவரை அறிந்திராத புதுவிடயங்களே, நான் சந்திக்க வந்தது மனிதனை அல்ல யட்சனை என்று நினைத்துகொண்டேன்.
எழுத்தினால் ஆட்கொள்ளப்பட்ட ஒவ்வொரு வாசகனும் தன்னை பாதிக்கும் எழுத்தாளர்களுடன் அந்தரங்கமான ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான், ஆட்கொண்ட எழுத்து வாசகனின் வாழ்வையே வடிவமைக்கிறது. வாசகர் சந்திப்பில் நீங்கள் உதிர்த்த ஒவ்வொரு சொல்லையும் ஆயிரம் முறை அகத்தினுள் ஓட்டிப்பார்த்துக்கொள்கிறேன், ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு விதையாக எனக்குள் விழுந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். இரண்டு நாட்களும் ஒரு சொல்கூட வீணாக நீங்கள் வெளியிடவில்லை என்பதும் (வாழ்வில் துளிகூட கவனச்சிதறல் இல்லாத மனிதனை அன்று தான் முதன்முதலில் பார்க்கிறேன்), கூறிய ஒவ்வொரு விடயத்திற்கு பின்னும் உங்களுடைய பல வருட ஆராய்ச்சியும் உழைப்பும் இருப்பது வியப்பளிக்கிறது. ஜெவுடைய காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதும் ஜெவுக்கருகில் அமர்ந்து பாடம் கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதும் எனது நல்லூழ் ஆகும்.
புதிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் /சிறுகதைகள் எழுதுவது எப்படி?, கதைக்கட்டுமானம் எவ்வாறு அமையவேண்டும்?, நவீன, பின்நவீன சிறுகதையுலகம் உருவாகிவந்தது எப்படி? மரபுக்கவிதை, புதுக்கவிதையின் தளங்கள்?, எழுத்தாளனுக்கும் அறிவுஜீவிக்கும் உள்ள வேறுபாடு? இலட்சியவாதம் அளிக்கும் ஐயங்கள்?, விவாதத்திற்கான நெறிமுறைகள், வாசகன் அவசியம் கொண்டிருக்கவேண்டிய ஒழுக்க விதிகள் என தங்களால் எடுக்கப்பட்ட இந்த இரண்டு நாள் வகுப்புகள் எனது இலக்கிய ஆர்வத்தை புதிய திசைகளுக்கு அழைத்துச்சென்றுள்ளது என்பது மறுக்கவியலாதது.
இலக்கியத்தனிமை என்பது ஒரு வாசகனுக்கு மிகுந்த மனச்சோர்வையளிக்கும், தன்னுடைய வாசிப்பை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையில்லையே என தன்னைச்சுற்றியுள்ள வெற்று மனிதர்களை பார்த்து அவன் ஏங்கிக்கொண்டிருக்கிறான். இத்தகைய இலக்கியச்சந்திப்புகளில் பங்குகொள்வதன்மூலம் அவனுக்கு தன்னையொத்த வேட்கைகொண்ட வாசகர்களின் அணுக்கம் கிடைப்பதென்பது தன்னைத்தானே கண்டு புன்னகைப்பது போல மகிழ்வூட்டும். இரண்டு நாட்கள் தங்கி உரையாடி உண்டு பகிர்ந்து சிரித்து விடைபெறும்பொழுது தொலைபேசி எண்ணை பெற்றும் பிரிவதென்பது ஒரு வகையான கனவாகவே காட்சியளிக்கிறது.
நான் கட்டுரையும் கதையும் எழுத முயன்றுகொண்டிருப்பவன்தான் ஆனால் நான் குறிப்பிடும்படியான எதையும் இயற்றாமலே போகலாம், எனக்கென்று ஓரிடம் இலக்கியத்தில் அமையாமல் போகலாம், அருண்மொழிநங்கையவர்கள் குறிப்பிட்டதைப்போல ”நான் எழுத்தில் சாதனைகள் நிகழ்த்த இயலாமல் கூடப் போகலாம். ஆனால் தன்னந்தனியாக அமர்ந்து தன் யாழை தானே மீட்டும் ஒரு கண்ணில்லாத பாணன் போல இலக்கியத்திலேயே மூழ்க விழைகிறேன்”, இத்தகைய சந்திப்பால் என்னுடைய இலக்கிய ரசனையும் வாசிப்பும் புதிய தளத்தினுள் நுழைந்துள்ளதை உணர்கிறேன். இதுவரை வாசித்துவந்த முறைமைகளை அழித்துவிட்டு புதிய முறைமையை இந்த கூடுகை எனக்களித்துள்ளது. இத்தகைய கூடுகையை நிகழ்த்திய விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் தங்களுக்கும் நன்றி என்ற சொல் போதாதது, எனது அன்பு.
இப்படிக்கு,
சூர்யப்ரகாஷ் பிச்சுமணி
மதுரை.