இலக்கியம் ஆய்வல்ல

https://www.vishnupurampublications.com/

அன்பு ஜெயமோகன்,

பத்து லட்சம் காலடிகள் சிறுகதை சமீபமாய் அதிகம் விமர்சிக்கப்படுவதை ஒரு நல்ல சகுனமாகவே பார்க்கிறேன். ஆனாலும், அது அதன் ‘இலக்கியத் தரத்தை’க் கொண்டு விமர்சிக்கப்படுவதில்லை. ஒரு ‘அரசியல் தரப்பை’ நிறுவுவதற்கான காரணிகளில் ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. ”பார்த்தீர்களா, ஜெ., பிராமணர்களைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்” என அக்கதையின் சில பகுதிகளைக் குறிப்பிட்டு உங்களைக் காலி செய்யும் நோக்கமே அவர்களின் ‘வாசிப்புக்கான’ நோக்கம்.

ஒரு இலக்கியப் பிரதியில் அரசியல் தொழிற்படுகிறதா எனக் கவனிப்பதை நான் வரவேற்கிறேன். அது நல்வாசிப்புக்கு அவசியமானது. ஆனால், அப்பிரதியே ’அரசியலுக்கானது’ என்பதான மிகைகற்பனையைக் கண்டுதான் நான் மிரள்கிறேன். ஒரு மார்க்சியரான சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், ஒரு நல்ல இலக்கியப் பிரதி. அவர் மார்க்சியர் என்பதற்காக அதை ‘மார்க்சியப்பிரதி’ எனக்குறுக்கி அவரை நிலைகுலைய வைத்துவிடலாமா? அவரின் வேள்பாரி நாவலை பலர் கொண்டாடுகின்றனர். எனக்கு அது உவப்பாய் இல்லை. ஏனென்றால், அது முழுக்க முழுக்க முன்முடிவோடான அரசியல் சரித்தன்மையில் இருந்து எழுதப்பட்டது. குறுநில மன்னர்கள் எதிர் பேரரசர்கள் என்பதான இருமையில் முழுக்க குறுநிலமன்னர்களின் மீதான சார்பு கொண்ட பிரதி. மேற்கொண்டு, அதில் வாசிக்க என்ன இருக்கிறது, அதற்காக அப்பிரதியை மட்டும் குறிப்பிட்டு சு.வெங்கடேசனை முழுக்க நிராகரித்து விடுவது அறிவார்ந்த செயலா?

இன்றைக்கு அரசியல் தளத்திற்குப் பல எழுத்தாளர்கள் வந்து விட்டதால் எழுத்தாளர்கள் என்றாலே அரசியல்சார்பு கொண்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதாய் பொதுப்புத்தி நம்புகிறது. அத்தரப்பே இலக்கியப் பிரதியை வாசிக்கும் ஒருவனையும் அதிகம் தொந்தரவு செய்கிறது.

இப்படி வைத்துக் கொள்ளலாம். அச்சிறுகதையில் பிராமணர்களை நீங்கள் மோசமானவராகச் சித்திரித்திருந்தால்.. அதைச் சுட்டி உங்களின் படைப்பை சமூக வலைதளங்களில் விமர்சித்திருப்பார்களா? நிச்சயம் செய்யமாட்டார்கள். நீங்கள் எத்தகையவர் என்பதைப் பற்றி ஆராய்ந்து தெளிவதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களின் நோக்கம், உங்களை வலதுசாரி என்று முத்திரை குத்தி நிலைநிறுத்துவது. இத்தனைக்கும் கட்சி அரசியல் ஆர்வம் கொண்டவரும் அல்ல நீங்கள். பிறகேன் பயப்படுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

இலக்கியத்தைச் செயற்கையாய் உருவாக்கி அளிக்கும் ‘தயாரிப்புப்பணியாய்’ நம்புபவர்களோடு உரையாடுவது சாத்தியம் அற்றது. இன்று படைப்பு என்பது பிரச்சாரம்தான். கதையில் ஒரு நல்ல பிராமணர் வந்தால் வலதுசாரி. மோசமான பிராமணர் வந்தால் இடதுசாரி. நல்ல முதலாளி வந்தால் ஆதிக்கவாதி. கெட்ட முதலாளி வந்தால் புரட்சிக்காரர். நல்ல தலித் வந்தால் சீர்திருத்தவாதி. மோசமான தலித் வந்தால் பழமைவாதி. சமூகவலைதளச் சூழலில் அகப்பட்டுக் கொண்டு இலக்கியமும் வாசிப்பும் படும் பாட்டைச் சகிக்க முடியவில்லை.

நம் வாசகர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஒரு நல்ல இலக்கியம் என்பது, வாழ்வின் சகல விதமான அறியாத இடுக்குகளின் முன்னேயும் நம்மை நிற்க வைப்பது. இடுக்குகளுக்குப் பின்னிருக்கும் சமூகச்சூழலை ஆராய்வது ஆய்வாளனின் வேலையே தவிர, இலக்கிய ஆசிரியனுடையது அன்று. தயவு செய்து, இலக்கிய ஆசிரியனை ஆய்வாளனாகப் புரிந்து கொண்டு விமர்சனம் செய்யாதீர்கள்.

 முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்

***

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைபிரயாகையின் பெண்
அடுத்த கட்டுரைOVER THE FIRE