கதையும் புனைவும்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

சில வருட இடைவெளியில் அவ்வப்போது கலை இலக்கியக் கோட்பாடுகளின் அதன் வகை பேதங்களின் அடிப்படைகளை, அவற்றின் மேலதிக சமகால வளர்ச்சிகளை மீண்டும் வாசிப்பதில் சில நடைமுறைப் பயன்கள் உண்டு என்பதை அனுபவித்திருக்கிறேன். வாசிப்பின் வழியே நம் அகரீதியாக அருவமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பரிணாமகதியை திட்டவட்டப்படுத்திக்கொள்ள முடியும்.  மெய்காண் முறைகளில் ஒன்றாக விவேக ஞானத்தை அளிக்கும் ஒன்றாக இருக்கும் இலக்கியத்தில் நாம் செல்லும் திசைவழியை அதுவரை வாசித்தும் விவாதித்தும்  நாம் வந்து சேர்ந்திருக்கும் தொலைவை அது இன்னும் துல்லியம் செய்யும். அந்த வரிசையில் நான் அண்மையில் வாசித்த நூல் புனைவாக்கப் பின்புலங்கள் குறித்து த. ராஜன் அவர்களுடன் எழுத்தாளர் பா. வெங்கடேசன் அவர்கள் நிகழ்த்திய உரையாடலின் எழுத்து வடிவான  -கதையும் புனைவும் – எனும் நூல் (எதிர் வெளியீடு).

எது இலக்கியம்?. ஏன் இலக்கியத்தை வாசிக்கவேண்டும்? எது இலக்கியம் அல்லாதது? இந்த அடிப்படைக் கேள்விகள் எல்லாம் எனக்குள் துளிர்த்து வளர்ந்து அலைக்கழித்தது ஜெயகாந்தனும் ஜெயமோகனும் அறிமுகமான பிறகுதான். கற்பனைக்குத் தீனி எனும் வகையில் வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்த நான் பாலகுமாரனை வந்தடைகையில் இதுவரை வாசித்தது எல்லாம் இங்கே வந்து சேரத்தான் என்பதைப்போல உணர்ந்து மிகுந்த பரவசம் கொண்டேன். நீங்கள் கதைகள் வாசித்துப் பொழுது போக்கிக்கொண்டு இருக்கவில்லை, மாறாக என்னிடம் கதைகளின் வடிவில் ‘வாழ்கையைப் பயின்று’ கொண்டிருக்கிறீர்கள் என்று பாலகுமாரன் சொன்னார். நம்பினேன். தீவிரமாக அவரை வாசித்துத்  தள்ளிக்கொண்டிருக்கயில் ஜெயகாந்தன் குறுக்கே வந்தார். பிடரியில் அறைந்து கனவிலிருந்து விழிக்க வைத்தார். அங்கிருந்து விஷ்ணுபுரம். அது தந்த அலைக்கழிப்பு அளப்பப்பரியது. அந்த தத்தளிப்புகள் ஊடே ஒரு வினா துளிர்த்து மெல்ல மெல்ல என்னுள் வளர்ந்து என்னை ஆட்டிப்படைத்தது.

அது இதுதான். அதுவரை வாசித்தவற்றை பாலகுமாரன் வந்து இல்லாமல் செய்தார். அதன் பிறகு வாசித்தவற்றை ஜெயகாந்தன் வந்து இல்லாமல் செய்தார். ஜெயகாந்தனுக்குப் பிறகு வாசிப்பவற்றை என்றேனும் வேறொரு எழுத்தாளர் வந்து இல்லாமல் செய்து விட்டால் உண்மையில் நான் செய்துகொண்டிருக்கும் இந்த வாசிப்பு எனும் செயல்பாட்டுக்கு என்னதான் இயல்பு? இப்போது வாசிப்பில் செல்லும் பாதையேனும் மெய்யானதா அல்லது இதுவும் கனவுதான்  என்று சொல்லும் இன்னொரு எழுத்தாளரின் புனைவை வாசிக்க நேரும் வரை காத்திருக்க வேண்டுமா?

இந்த சூழலில்தான் ஏதோ ஒரு இதழில் விஷ்ணுபுரம் நாவலை ‘கட்டுடைத்து’ ‘கொட்டிக்கவிழ்த்தி’ எம்ஜி சுரேஷ் எழுதிய கட்டுரை ஒன்று வாசிக்கக் கிடைத்தது. கட்டுரை சரியாகப் புரியவில்லை. ஆனால் விஷ்ணுபுரம் வாசித்து ‘தப்பு’ செய்துவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது. எம்ஜி சுரேஷ் அறிமுக நூல்கள் வழியாகவே பின்நவீன கோட்பாடுகள் முதன்முறையாக எனக்கு அறிமுகம் ஆகின. (இன்றும் இக் கோட்பாடுகளை அறிமுகம் கொள்ள நல்ல நூல்கள்தாம் அவை)

மெய்யாகவே அதன் கோட்பாட்டு அலகுகளை  ஒன்று இரண்டு என்று எண்ணிட்டு குறி குறிப்பான் குறிப்பீடு என்றெல்லாம் கையால் எழுதி எடுத்து உள்வாங்கினேன். ஒருமாதிரி சாமாளித்துவிட முடியும் என்று தோன்றிய பிறகு பின்நவீன புனைவுகளுக்குள் இறங்கினேன். அன்றைய தமிழவன் எழுதிய ஜி கே எழுதிய மர்ம நாவல் துவங்கி எம்ஜி சுரேஷ், சாருநிவேதிதா, பிரேம் ரமேஷ், கோணங்கி, போன்றவர்கள் புனைவுகள் தொடர்ந்து, இன்றைய  தூயன் எழுதிய கதீட்ரல் வரை  அந்த பின்நவீன அழகியலுக்குள் இன்றுவரை தொடருகிறது வண்ண பேதங்கள். நவீன தமிழ் இலக்கிய  ஓடைகளில்  இந்த பின்நவீன அழகியல் ஓடையின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான தாண்டவராயன் கதை, வாராணசி போன்ற நாவல்களின் ஆசிரியரான பா.வெங்கடேசன், பொதுவாக புனைவும் அதன் உருவாக்கப் பின்புலங்களும் சார்ந்த அடிப்படைகளை குறித்துப் பேசிய நூலே -கதையும் புனைவும்-.

புனைவும் கற்பனையும், புனைவுச் செயல்பாடு, வாசிப்பும் அரசியலும் என்ற பகுப்புகளின் கீழ் உரையாடல் நிகழும் இந்தச் சிறு நூலை சுவாரஸ்யம் குன்றாத வசிப்பனுபவம் வழங்கும் ஒன்றாக ஆக்கும் அம்சங்ம் இப்பகுப்புகளின் கீழே பேசியது வறட்டுக் கோட்பாட்டாளர் அல்ல ஒரு புனைவாளர் என்பது. நூலுக்குள் பேசப்பட்டவை யாவும் புதியவை அல்ல என்று அவரே இறுதியில் சொன்னாலும் பேசப்பட்டவை அனைத்தையும் புத்தம் புதியதைப்போல உணரச்செய்த வகையில் பா வெ ஒரு சுவாரஸ்யமான உரையாடல்காரர் என்பது இந்நூல் வழி புலனாகிறது.

புனைவுக்கும் கற்பனைக்குமான உறவில் துவங்கி, கற்பனையின் அடித்தளம், கற்பனைக்கும் அனுபவுத்துக்குமான தொடர்பு, மொழியில் அதன் வெளிப்பாடு, மொழி எனும் இருப்பு, கவிதைக்கும் அனுபவுத்துக்குமான தொடர்பு, கதைக்கும் புனைவுக்குமான வேறுபாடு, புனைவுகளுக்குள் தொழிற்படும் தன்னிலை காலம் வெளி, கருத்தியல் அரசியல், பிரச்சார கூறு, அழகியல், புனைவுகள் சித்தரித்துக் காட்டும் கனவு நிலைகள் என புனைவாக்கச் செயல்பாட்டின் பல பின்புலப் புள்ளிகளை தொட்டு விரியும் இந்த முக்கிய உரையாடலை மேலும் சுவாரஸ்யம் கொள்ள வைப்பது தகுந்த இடங்களில் பா வெ தரும்  உதாரணங்கள். கவிதைத் தொழில்நுட்பத்தின் அத்தனை அலகுகளையும் அழகிய கம்பராமாயணக் கவிதைகளின் வழியே விவரிக்கிறார். புனைவுகள் கையாளும் கனவு சித்தரிப்பில் விஷ்ணுபுரம் நாவல் வரை பல நாவல்களின் தருணங்களை உதாரணம் சொல்கிறார். இப்படி சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் முதல் முத்து நகுவின் சுளுந்தீ வரை பல புனைவுகள் கையாண்ட அழகியல் கூறுகளை பொருத்தமான உதாரணங்கள் எனக்கொண்டு உரையாடலை நகர்த்துகிறார் பா வெ.

இந்த நூலின் தனித்துவமான அம்சமாக நான் கருதுவது ஆசிரியர் பா வெ அவர்களின் கூர்மை. கோட்பாடு கொண்டு எந்த எல்லை வரை புனைவுச் செயல்பாட்டு முறைமைக்குள் ஊடுருவ வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். மர்மமழிப்பு போன்ற எல்லை மீறல்கள் இல்லை. அடுத்து பா வெ அவர்களின் நேர்நிலைப் பண்பு . நூல்நெடுக எங்கும் எதிர்நிலைப் பண்பே தொழிற்படவில்லை. மூன்றாவதாக கோட்பாடுகளை இயந்திரத்தனமாக அன்றி இலகுவாக அவர் அணுகும் நிலை. உதாரணமாக அங்கே மேற்கின் இலக்கிய சூழலில்  பார்த் சொன்ன  கோட்பாட்டை,  மறுத்து அது எழுத்தாளனின் மரணம் எனும் நிலை அல்ல, இத்தனைக்குப் பிறகும்  வாசகனால் தொடப்படாமல் எஞ்சும் எழுத்தாளன் எனும் நிலை என்று கிழக்கின் இலக்கிய சூழல் சொல்லக் கூடும் என்று உரையாடலின் ஒரு பகுதியில் சொல்கிறார்.

இப்படி இவற்றை எல்லாம் இந்த நூலின் பலம் என்று கொண்டால், இந்த நூலின் பலவீனம் என்பது முதலாவதாக இந்த உரையாடல் பின்புலமாக அமையும் கோட்பாட்டின் முக்கிய அலகுகளின் பழமை. உதாரணமாக பா.வெ மொழி என்பது சமூக உற்பத்தி என்கிறார். மொழி இன்றி அனுபவம் இல்லை என்கிறார். இவை எல்லாமே மேலை சூழலில் 1990 இல் பேசப்பட்ட நிலை. மொழியியலாளர் கையில் இருந்து மொழி சார்ந்த உரையாடல்கள் மூளை நரம்பியல் கைக்கு சென்று மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகள் எல்லாம் வளர்ந்து 20 வருடம் ஆகிறது. மூளை நரம்பியலில் இருந்து (FOXP2 மூளையில் மொழிக்கான பகுதிக்கான விதையாக அமையும் மரபணு) மரபணு அறிவியல் நோக்கி மொழி சார்ந்த உரையாடல்கள் கைமாறி மேலும் 10 வருடம் ஆகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரம் மேலும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கக் கூடும்.

இன்று இத்தனையோடும் முரண் இயக்கம் நிகழ்த்திய பிறகு மொழி என்பது சமுக உற்பத்திதான் என்று மீண்டும் அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட பிறகே மேற்சொன்ன கூற்றுக்கு மதிப்பு. அதுவரை அது காலாவதியான ஒன்றே. இதன் தொடர்ச்சியே அடுத்த கூற்றும். நமது நியாண்டர்தால் மனிதனுக்கு உள்ளது போல புருவ மேடுகள் இல்லாமல் நமக்கு  தட்டையாக பரிணமித்த காரணம் (ஒளிக்குப் பிறகே கண்கள் என்பதைப்போல) நாம் அடைந்த வியப்புதான் என்கிறது சமீபத்திய உடற்கூறு மானிடவியல் ஊகங்கள். வியப்பால் விரிந்து விரிந்து அசைந்த முகப் புருவத்தசைக்கு இயைபாக பரிணமித்திருக்கிறது நமது மண்டையோட்டின் புருவ மேடுகள். இப்படித் துவங்கி பல ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவற்றை விஞ்சி வரும் வரை அதுவும் காலாவதிக் கூற்றே.

இரண்டாவதாக புனைவாக்க பலவீனங்களை புறந்தள்ளி  இந்தக் கோட்பாடு வாசனை விரல் காட்டும் நிலை. கோணங்கி புனைவுகள் புரியவில்லை என்று ஒரு வாசகன் சொன்னால் அது கோணங்கி எழுத்தின் குறைபாடு அல்ல வாசகன் தனது புரிதல் நிலையில் பின்தங்கி இருப்பதன் குறைபாடு அது என்கிறது.

மூன்றாவதாக இத்தகு கோட்பாடுகள் கொண்டு புனைவுக்குள் ‘இல்லாத ஒன்றை’ இருப்பதாக நிறுவி விட முடிந்த வகைமை. உதாரணமாக உரையாடலில் சீரோ டிகிரி நாவல் குறித்து பா வெ கூறி இருப்பவை. அந்த நாவலின் தன்னிலை என்பது பல்வேறு சிதறுண்ட நான்கள். இறுதியில் நான் என்ற ஒன்றே இல்லை எனும் நிலையை நாவல் தொட்டு விடுகிறது என்கிறார்.இவர் சொல்லும் ஒழுங்கமைவு எதுவும் அந்த நாவலில் கிடையாது. அதில் இருப்பது வெறும் சிதறல் மட்டுமே.

இத்தகைய கோட்ப்பாடுகளின் ஆபத்து என்பது இதுதான் புனைவில் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அந்தப் புனைவை அதன் தகுதிக்கு சம்பந்தமே இல்லாத மேலான உயரத்தில் நிறுத்தி விட இக்கோட்பாடுகளால் இயலும்.

இந்த கோட்பாடுகள் கொண்ட அத்தனை பலவீனங்களுக்கும் அடிப்படை அதன் தாய் நிலத்தில் உள்ளது. எந்தத் ‘தத்துவார்த்த தவிப்பும்’ இன்றி  அறிவு ஜீவிகளால் உருவாக்கப்பட்ட (தத்துவவாதிகள் பீடத்தில் வெறும் கோட்பாட்டுப் புரவாசல் வழியே வந்து அமர்ந்து கொண்டவரகள்)  கோட்பாடுகள். அகடமிக் ஆளுமைகளால் மேஜையில் பேசிப் பேசி வளர்க்கப்பட்ட கோட்பாடுகள். அத்தனை சதுரங்க ஆட்டத் திறமைகளையும் 1996 இல் ஆலன் சோக்காலின் குவாண்டம் இயற்பியல் : அதன் மொழியியல் இருப்பும் சமூகப் பரிணாமமும் எனும் கட்டுரை வந்து முடித்து வைத்தது. பின்நவீன அறிவு ஜீவிகள் அது குறித்து பேசிப் பேசி மாய்ந்த பிறகு, சோகால் அது போலிக் கட்டுரை என்பதை வெளிப்படுத்தினார். இது அறிவுத் துறைக்கு எதிரான மோசடி என்று பின்நவீன அறிவு ஜீவிகள் கொதித்தனர். அப்போதைய நேர்காணல் ஒன்றில் சோகால் புன்னகையுடன் சொன்னார் “நான் யாரையும் மோசடி செய்யவில்லை உண்மையில் அங்கே  ஒரு தீவிரத் தத்துவவாதியோ ஒரு தீவிரப் புனைவாளனோ எளிய வாசகனோ இருந்திருந்தால் அக்கட்டுரையின் தலைப்பைக் கொண்டே அது போலி என்று சொல்லி இருப்பார்.” அத்துடன் அங்கே மேலை சூழலில் வேலை முடிந்து திண்ணையை காலி செய்த கோட்பாடுத்தான் இங்கே தமிழ் நிலத்தில் வந்து குத்த வைக்கிறது.  கோணங்கி முதலாக பலரை களப்பலி கொடுத்துவிட்டோம் அதற்கு. நீங்கள் போன இருள்வ மௌத்திகத்துக்கே நாங்களும் வருகிறோம் என்று பின்னால் சென்றுகொண்டிருக்கிறார்கள் இன்றைய பல இளம் படைப்பாளிகள். உறுதியான அழகான கச்சிதமான புத்தம் புதிய பல ஸ்பானர்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவை எதுவும் நட்டு முடுக்காது.

முடிவாக இவற்றுக்கு வெளியே, இந்த 2020 இல் இலக்கியத்துக்குள் நுழையும் ஒரு அறிமுக வாசகன் புனைவுக்கு வெளியே புனைவுகள் குறித்து ‘மேலதிகமாக’  அறிந்து கொள்ள அவன் தேறும்  பல  நூல்களில் ஒன்றாக இந்த கதையும் புனைவும் நூலையும் அவன் வாசிக்கலாம்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள் -வாசிப்பு
அடுத்த கட்டுரைகரும்பனைமீது காற்று