அன்புள்ள ஜெமோ,
கடந்த பத்து வருடமாக உங்கள் வாசகனாக இருந்தும், உங்களை பல விழாக்களில் கூட்டத்தில் ஒருவனாக சந்தித்து இருந்தாலும், உங்களை தனியே சந்தித்து பேச வேண்டும் என்ற ஆவலும் பேச முடியும் என்ற நம்பிக்கையும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் வந்தது. பெருந்தொற்று காலத்தில் zoom வழி சந்திப்பில் உங்களிடம் தனியே அரை மணிநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. வெண்முரசு கதாபாத்திரங்கள் குறித்தும் ,குறிப்பாக பூரிசிரவஸ் ,மற்றும் வெண்முரசில் வரும் உணவு,மற்றும் நிலங்கள் குறித்து ,மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் உங்களுடன் பேசியது மிகவும் இனிமையான நினைவு. ஆனால் அந்த சந்திப்பு முடிந்த பிறகே ,என் பதட்டத்தாலும் , மிகை உற்சாகத்தாலும் ,அந்த சந்திப்பின் பெரும்பாலான நேரம் நானே பேசியிருப்பது எனக்கே புரிந்தது. அடுத்த வாசகர் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொண்டு உங்கள பேச்சை கேட்க வேண்டும் என்று அன்றே முடிவுசெய்து விட்டேன். அதன் படி கடந்த பிப்ரவரி 19,20 வாசகர் சந்திப்பிற்கு விண்ணப்பித்தேன் .சற்று தாமதமாக விண்பித்ததால் மார்ச் 5,6 நடந்த சந்திப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
சந்திப்பின் இரண்டு நாட்கள் முழுவதும் நீங்கள் பேசி கொண்டே இருந்தீர்கள். நிற்கையில் ,நடக்கையில்,அமர்வில்,உணவு இடைவேளையில்,தூங்குவதுற்கு முன்,பின். இனிப்பை சுற்றி வரும் எறும்புகள் போல உங்களை சுற்றி கொண்டிருந்தோம் .பல தலைப்புகள்,குறித்து நீங்கள் பேசி கொண்டிருந்தாலும் முறையான அமர்வில் பேசிய முக்கியமான இரண்டு விஷயம் ,ஒரு கருத்தை எப்படி விவாதிப்பது மற்றும் சிறுகதைக்கான அடிப்படை கூறுகள்.என் புரிதலுக்கேற்ப அவையிரண்டையும் கீழ்கண்டவாறு தொகுத்து கொண்டேன்.பிழை இருந்தால் மன்னிக்கவும் .
ஒரு கருத்தை பொதுவெளியில் முன்வைக்கும் பொழுது முதலில் நாம் சொல்ல வேண்டியது நம் கருத்தின் முடிவு,சாராம்சம் அல்லது நம் thesisஇன் conclusionஐ .அதன் பிறகே இந்த முடிவை நாம் ஏன் அடைந்தோம் என்பதற்கான காரணங்களை சொல்லவேண்டும் .நாம் கருத்தை முன்வைக்கும் பொழுது மற்றவர் அந்த கருத்தை மறுப்பதற்கான வழிகளுடனே ஒரு கருத்து முன்வைக்க படவேண்டும். Subjective ஆக முன்வைக்க படும் கருத்துகள் மேல் எந்த விவாதமும் நடத்த முடியாது.அது ஒரு வகை நம்பிக்கை மட்டுமே.நம் கருத்து ஒரு தரப்பின் கருத்தையோ விவாதத்தையோ மறுத்து வைக்க படும் பொழுது , நாம் மறுக்கும் தரப்பின் கருத்தை சுருக்கமாக கூறி[பரபக்கம் ] அதை உறுதி செய்தபின்னே,அதற்க்கு மேல் நம் கருத்தை முன்வைக்க வேண்டும்.
ஒரு கருத்தை ஒருவர் சொல்லும் பொழுது எக்காரணம் கொண்டும் அதை இடை மறித்து, ஐயங்களையோ மாற்று கருத்துக்களையோ சொல்ல கூடாது. சொல்பவர் தன் கருத்தை முழுவதுவாக சொல்லி முடித்த பின்தான் நாம் பேச வேண்டும்.ஒரு கருத்தை நாம் கேட்கும் பொழுது நம் மனதிற்குள் அதற்கு எதிர் விவாதங்களை செய்யாமல் சொல்லப்படும் கருத்தை முழுவதும் முழு மனதோடும் பெற்று கொள்ள வேண்டும் .அதன் பிறகே அது குறித்தான தர்க்கங்களை கேள்விகளை மனதிற்குள் எழுப்ப வேண்டும்.ஒருவர் ஒரு கருத்தையோ அதன் காரணங்களையோ எந்த முறையில் முன்வைக்கிறாரோ அதே முறையில் தான் அந்த காரணங்களையோ கருத்தையோ நிராகரிக்க வேண்டும். Association fallacy போன்றவற்றை விவாதங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
இவற்றின் அடிப்படையில் ஒருவர் இன்றைய சூழலில் எவ்வாறு வரலாறு,அரசியல் கருத்துக்கள்,பொய்கள் ஆகிய வற்றை எதிர் கொள்ளவேண்டும், அதற்கான சமூக தேவை என்ன என்று தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.உங்கள் மொழியில் “மண்டைக்குள்ள காத்தோட்டம் இருக்க ஆளுங்க கொஞ்சம் பேராவது இருக்கனும்ல “…
இன்றுவரை எனக்கு எழுதும் எண்ணம் தோன்றியதில்லை. அதே போல் ஒரு வாசிப்பை என்னளவில் பிடித்திருக்கிறது இல்லை என்பதற்கு மேல் எதுவும் சொல்ல தெரியாது .ஆனால் அங்கு வந்த நண்பர்கள் எழுதிய கதையின் மீது நடந்த விவாதங்களை கொண்டு என்னால் இனி ஒரு சிறுகதை குறித்த தேவையான பின்னூட்டங்களை அளிக்க முடியும் என்று நம்புகிறேன் .மேலும் என்றேனும் எழுத தோன்றினால் இந்த விவாதங்களை கொண்டு ஒரு நல்ல சிறுகதையை எழுத முடியும் என்று நம்புகிறேன்..
ஒரு சிறுகதை முடிவில் தான் தொடங்குகிறது அல்லது வேறொன்று ஆகிறது ….அங்கு அது ஒரு புது உணர்வின் உச்சத்தையோ அல்லது கவித்துவ உச்சத்தையோ அடைய வேண்டும்..ஒரு சிறுகதை அதன் முடிவின் மிக அருகில் தொடங்குவது நல்லது..சிறுகதையின் தொடக்கம் மிக முக்கியமானது.தன் மைய கருவில் தொடங்கி மைய கருவின் ஊடே அது பயணிக்க வேண்டும்… தேவையற்ற வர்ணனைகள் உரையாடல்கள் தவிர்க்க பட வேண்டும்..வாசகன் தன்னளவில் கண்டடைவதற்கான விஷயங்கள் இருக்க வேண்டும் .
இந்த இரண்டு நாட்களில் எங்களுக்கு, O.Henryயில் ஆரம்பித்து ஜெயகாந்தன் ,அசோகமித்திரன் என பல சிறுகதைகளை கூறி அவற்றின் நுட்பங்களை உணரவைத்தீர்கள் . மேலும் எழுதுவதற்கு எந்தனை தளங்கள் உள்ளது,வரும் காலகட்டம் எத்தனை புதிய மனித உணர்வுகளை ,உருவாக்க இருக்கிறது என்பதை wachowski sisters மற்றும் பல தனிப்பட்ட அனுபவங்கள்,உதாரணங்கள் மூலம் விளக்கினீர்கள்.
அமர்வுகளை தவிர்த்து வள்ளலார், தேவதாசி ஒழிப்பு,போலி வரலாறுகள், கல்வி ,திரைப்பட அனுபவங்கள்,ஆளுமைகள் என பல தளங்களை உரையாடல் தொட்டு சென்றது.நானும் சீராவும் இரவு உங்களுடன் கிளம்பியதால் உங்களுடன் தனியாக சில மணி நேரம் செலவிட கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. அந்நேரத்தில் நீங்கள் உங்கள் பால்ய கால நினைவுகள் ,பயண நினைவுகள் ஆகியவற்றை மிகவும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொண்டீர்கள் .
இரவு மாடியில் உள்ள குடிலில் ,நண்பர்களுடன் , மிதமான குளிரில் ,பறவைகளின் ஒளியுடன் ,இயற்கை சூழலில் நிறைவாக தூங்கினேன் .அதிகாலையில் பின்தொடரும் பிரம்மதின் குரல்கள் கேட்டு கண் விழித்தது ஒரு பிரகாசமான நட்சத்திரத்தில் .அது என்ன நட்சத்திரம்,என்ன திசை என்றெல்லாம் தெரியவில்லை . ஆனால் “துருவன்” என்று சொல்லிக்கொண்டு மீண்டும் என் தூக்கத்தில் நிலை கொண்டேன்.இது ஒரு புகைப்படம் போல என்றும் என் நினைவில் இருக்கும் . நீச்சல் தெரியாததால் கிணற்றில் குளிக்க முடியவில்லை என்பது தான் ஒரே வருத்தம்.
தற்பொழுது “எழுதழல்” படித்து கொண்டிருக்கிறேன் .அதில் ஆசிரியரின் “அருகமைதல்” குறித்து அழகான விளக்கங்கள் உண்டு. இந்த சந்திப்பிற்கு நான் வர முடிவாகிய நாளில் இருந்து எனக்குள் ஓடிய ஒரு வார்த்தை “அருகமைதல்”. இந்த இரண்டு நாட்களில் முடிந்தவரை உங்கள் “அருகமைந்தேன்”. விடை பெருகையில் புகை படம் எடுத்து கொண்ட பிறகு உங்களை தழுவி விடைகொடுக்க ஆசை என்றாலும், ஏனோ முடியாததால், அரை குறையாக ஒரு கையால் தழுவி நன்றி என்று கூறி விடை பெற்றேன் . அனைத்திற்கும் நன்றி ஜெமோ.
நிகழ்வு நடந்த இடம்,பயண திட்டம் ,ஈரோடு வந்து இறங்கியது முதல் திரும்பி செல்வது வரை அனைத்து ஏற்பாடுகளும் மிகவும் நேர்த்தியாக செய்ய பட்டிருந்தது . இந்நிகழ்வை மிக சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
பின்குறிப்பு: நிகழ்வின் ஒரே குறை என்றால் உணவு. மூன்று வேலையும் இவ்வளவு சுவையான உணவு வழங்கி அமர்வில் உட்காரவைப்பது, சிறந்த வாசகனை கண்டுபிடிக்க வைக்கும் சோதனை என்றே நம்புகிறேன் . முதல் நாள் இரவு முழுவதும் பேருந்தில் தூங்காமல் பயணம் செய்து வந்து காலை சுவையான பொங்கலும் ,வெங்காய ஊதப்பமும் உண்டுவிட்டு உங்கள் அருகமையை முடியாமல், முதல் அமர்வில் நின்று கொண்டே இருக்க வேண்டியதாயிற்று . என்னை போல் உணவே பிரம்மம் என்று நம்பும் சிலரும், நின்று கொண்டே முதல் அமர்வை கேட்டது சிறு ஆறுதல். சுதாரித்து கொண்டு அடுத்த வேலையில் இருந்து உணவை குறைத்து அருகமைந்தேன்.
அனைத்திற்கும் நன்றி,
பிரதீப்
***