எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

எஸ்.வி.ராஜதுரை கடிதம்

எஸ்.வி.ராஜதுரையின் கடிதமும் பதிலும்

எஸ்.வி.ராஜதுரை கடிதம்

எஸ்.வி.ராஜதுரை வழக்கு

எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….

எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு…

பழைய கதைகள் சிலவற்றைச் சொல்லிவிட்டு தொடங்கவேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டுகளில் முற்றிலும் புதிய ஒரு தலைமுறை வாசிப்புக்கு வந்துவிட்டது. என் புதுவாசகர் சந்திப்புகளுக்கும் விஷ்ணுபுரம் விழாவுக்கும் வருபவர்கள் பலர் அப்போது ஆரம்பப்பள்ளியில் இருந்திருப்பார்கள்.

2012 ல் நான் இந்தியச் சிந்தனையில் ஆய்வுக்கு என வந்தமையும் நிதியுதவிகள் அளிக்கும் பங்கைப் பற்றி நீண்ட கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதினேன். இன்று அதைப்பற்றிய என் கருத்து மேலும் கூர்மையடைந்துள்ளது. மேலைநாடுகளின் ஆதிக்க ஆற்றல் இருப்பது அவர்களின் பல்கலைக் கழகங்களில்தான். அவை கீழைநாடுகளால் இன்னும் ஒருநூறாண்டுக்காவது வெல்லப்பட இயலாதவை. அவை கீழைநாடுகள் எப்படி, எதைச் சிந்திக்கவேண்டும் என வடிவமைக்கின்றன.

உடனே அவை இங்குள்ள வலதுசாரிகளை கட்டுப்படுத்துகின்றன, இடதுசாரிகள் அவற்றை எதிர்க்கிறார்கள் என ஓர் எளிய ‘டெம்ப்ளேட்’ புரிதலை தொடக்கநிலை வாசகர்கள் அடைவார்கள். அது பொய். இங்குள்ள இடதுசாரிகளின் சிந்தனைகளிலேயே முக்கியமான பகுதிகளை அவைதான் வடிவமைக்கின்றன. மறுபக்கம் க்ரியா போன்ற பதிப்பகங்களே அந்நிதியில் நடந்தவைதான்.

அதற்கு அவை கல்வியாளர்கள், சமூகச்செயல்பாட்டாளர்கள் இருசாராரையும் பயன்படுத்திக் கொள்கின்றன. அவ்விரு தரப்பையும் கவர அவை நிதிக்கொடைகளை கருவியாக்கிக் கொள்கின்றன. உடனே, இங்கே பேசுபவர்கள் ,செயல்படுபவர்கள் அனைவரும் பணம் பெற்றுக்கொண்டு பேசுபவர்கள் என நான் சொல்கிறேன் என்று பொருள் வரவில்லை. இதெல்லாம் செயல்படும் விதங்கள் மிகச்சிக்கலானவை.

இந்தியக் கல்வியாளர்கள் எண்ணி ஏங்கும் வாய்ப்புகள் என்பவை மேலைநாட்டு கல்விநிலையங்களில் ஆசிரியர் பணிதான். துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்ல அதுவே நம்பகமான எளிய வழி. இங்குள்ள பல்கலைகள், தனியார் ஆய்வுநிறுவனங்கள் ஆகியவற்றுக்கு  மேலைநாட்டுப் பல்கலைகள் நிதியளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் ஆய்வாளர்களுக்கும், ஆய்வு அமைப்புகளுக்கும் நிதி வருகிறது. உள்ளூர் நிறுவனங்களுக்கு வரும் நிதி பல்கலைகழகங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிதியால் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கூட்டங்களும் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. மேலைநாட்டில் பயின்றவர்கள் அவற்றை வழிநடத்துகிறார்கள். அவற்றினூடாக நாம் சிந்திக்கவேண்டிய கோணம், அடிப்படையான ‘டெம்ப்ளேட்’டுகள் நம் சிந்தனைக்குள் நம்மையறியாமலேயே பதிக்கப்படுகின்றன. இச்செயல்களிலுள்ள மாபெரும் வலையை உணர்ந்தவர் சிலர். மிகப்பெரும்பாலானவர்கள் அதை ‘நவீனப் பார்வை’ என எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குரிய எல்லா அரசியல் தர்க்கங்களும், சமூகத்தர்க்கங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மிகமிக விரிவாக. தனிப்பட்ட நபர்கள் அதை கடப்பது கடினம்.

நான் சொல்லவந்தது நாம் சிந்திக்கவேண்டிய வகை, வழி எல்லாம் வெளியே இருந்து வரும் நிதியால் வடிவமைக்கப் படுகின்றன என்பது மட்டும்தான். பொதுசூழலில் புழங்கும் பல அடிப்படை சிந்தனைப்போக்குகள் இப்படி உருவானவை. அவற்றை எதிர்த்து நிற்பது கடினம்.ஓர் இடதுசாரிக்கு அவருடைய அரசியலுக்கு உதவும் ஒரு சிந்தனைப்போக்கு கையில் கிடைத்தால் அவர் அதை நம்பி சொல்லிக்கொண்டிருப்பார். அது அமெரிக்காவால், ஐரோப்பாவால் உருவாக்கப்பட்டது என்பதை அவர் அறியமாட்டார், அறிந்தாலும் பொருட்படுத்த மாட்டார்.

இன்றும் நம் கல்வித்துறையில் மேலைநாட்டுச் சிந்தனைப்போக்கின் பேராற்றலுக்கு எதிராக எதைப்பற்றிப் பேசுவதும் ஆபத்தானதே. அப்படிப்பேசுபவர்கள் எங்கும் எந்நிலையிலும் கவனம் பெறாமல் அப்படியே மறைந்துவிடுவார்கள்.

இடதுசாரிகளை மட்டும் சொல்லவில்லை. சென்ற பத்தாண்டுகளாகக் கண்டு வருவதென்ன என்றால் வலதுசாரி- இந்துத்துவ அரசியலைச் சார்ந்தவர்களும் அதே நிதியுதவி வலைக்குள், அதே கருத்தியல் வளையத்திற்குள் சென்றிருக்கிறார்கள் என்பதைத்தான். இன்றைய டெம்ப்ளேட்டுகள் பல. இரண்டு முக்கியமானவை

ஒன்று, அதீத வைதிகப் பார்வை. எந்த பன்முகத்தன்மையையையும் ஏற்காத மூர்க்கமான பழமைவாதம். இரண்டு, வட்டாரவாதம். அதாவது, இந்தியாவிலுள்ள இந்து மதமே வட்டாரத்துக்கு ஒன்று,மையமே இல்லை என்னும் பார்வை. தமிழ்ச்சைவம் வேறு கன்னட சைவம் வேறு,அத்வைதம் வேறு நாராயணகுருவின் அத்வைதம் வேறு, தாந்த்ரீகம் வேறு வங்காள தாந்த்ரீகம் வேறு என்கிறார்கள். இந்தியவியல் ஆய்வாளர்களின் பார்வைகள் சுவிட்ச் போட்டதுபோல இந்தியா முழுக்க ஒரேபோல வெறும் பத்தாண்டுகளுக்குள் மாறிவிட்டன. இரண்டு எல்லைகள், ஆனால் ஒரே டெம்ப்ளேட். ஒரேவகையான சொற்கள், ஒரேவகை உணர்ச்சிகள். இரண்டுக்குமே ஒரே வகை நிதித்தொடர்பு.

ஒரு சிந்தனைச்சூழலில் இந்த கூறை நாம் கவனிக்கவேண்டும் என்று நான் சொன்னேன். சுதந்திரசிந்தனைக்கு இந்த கவனிப்பு அவசியமானது. இதை இன்றைய சூழலில் முற்றிலும் சுதந்திரமாக, முழுக்கமுழுக்க வாசகர் பலத்தால்  நின்றிருக்கும் என்னைப்போன்ற ஒருவனே சொல்லமுடியும். ஒற்றைச்சொல்லில் ‘காசுவாங்கிட்டு பேசுறான்’ என்பதல்ல என் தரப்பு. இந்த வலையின் மேலாதிக்கத்தையே சுட்டிக்காட்டினேன். ( கட்டுரைகள் அன்னியநிதி ஒரு வரைபடம்.)

அதை நான் எழுதியபோது எஸ்.வி.ராஜதுரையின் பெயரை சுட்டியிருந்தேன். ஏனென்றால் ராஜதுரையும் வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார் பற்றிய நூலில் நிதிக்கொடை பற்றிய நன்றிக் குறிப்பு இருந்தது. அவர் பெரியாரியம் நோக்கித் திரும்பிய போது அவருடைய பழைய தீவிரஇடதுசாரித் தோழர்கள் அதைச் சுட்டிக்காட்டி எழுதிய பல கட்டுரைகள் வெளியாயின.அவற்றை எல்லாம் நானே விரிவாக பின்னர் வந்த கட்டுரைகளில் சுட்டி கொடுத்திருக்கிறேன்.

(இன்று பெரியாரியம் என்று புழங்கும் மொத்த பார்வையையும் உருவாக்கியது எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா எழுதிய அந்நூல்தான். அது ஆயிரம் குட்டி போட்டிருப்பதை புத்தகக் கண்காட்சிகளில் காணலாம். அதை எதிர்த்த தோழர்களே பின்னர் பெரியாரியம் பேச ஆரம்பித்தனர் என்பது ஊகிக்கக்கூடிய நகர்வே.)

என் அக்கருத்துக்கு எதிராக எஸ்.வி.ராஜதுரை வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பினார். அது ஒரு ஆபாச வசை அறிவிக்கை. அதை ஒட்டி என் மேல் அவர் அவதூறு வழக்கு தொடுத்தார். ஊட்டி நீதிமன்றத்தில் அவ்வழக்கு சென்ற பத்து ஆண்டுகளாக நடைபெற்றது. அவ்வழக்கை எஸ்.வி.ராஜதுரை திரும்பப்பெற்றிருக்கிறார். என்மேல் குற்றம் பதியப்படாமலேயே, அதாவது வழக்கு தொடங்காமலேயே வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது.

என்ன நடந்தது? நானறிந்தது இதுவே. முதலில் எஸ்.வி.ராஜதுரை இவ்வழக்கை தொடுத்து நடத்த எண்ணவில்லை. அதற்கான நிதியோ நேரமோ உடல்நலமோ அவருக்கு இல்லை. அந்த வழக்கறிஞர் ஓர் ஆரம்பகட்ட வழக்கறிஞர். அவருடைய வற்புறுத்தலால் வக்காலத்தில் எஸ்.வி.ராஜதுரை கையெழுத்து போட்டிருக்கிறார். அப்போது ஒரு நீதிமன்ற வழக்கு எப்படி நடக்கும் என்றெல்லாம் அவருக்குச் சொல்லப்படவில்லை, வழக்கு தொடுத்த செய்தியை அந்த வழக்கறிஞர் ஜூனியர் விகடனுக்கு செய்திகொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டார். அவருடைய நோக்கம் அதுதான்.

2012ல் வழக்கு தொடங்கியதுமே நான் நீதிமன்றம் சென்று வழக்கை நான் நடத்துவதாகச் சொன்னேன். உடனே எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் என்னை குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என சொன்னார். என் வழக்கறிஞர் அதை எதிர்த்தார். எஸ்.வி.ராஜதுரை நேரில் நீதிமன்றம் வந்து என்மேல் குற்றச்சாட்டை பதிவுசெய்யவேண்டும், அதன்பின்னரே வழக்கு ஆரம்பிக்கும் என்றார் எனக்காக ஆஜரான நண்பர் கிருஷ்ணன். ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை என்ற பெயரில் எழுதுபவர்தான் மனோகரன் என்பதே முதலில் நீதிமன்றத்தில் நிறுவப்படவேண்டும்.

எஸ்.வி.ராஜதுரை அதை எதிர்பார்க்கவில்லை .இப்போது வழக்கை வாபஸ் பெறும்வரை அவர் நீதிமன்றம் வருவதை தவிர்த்தே வந்திருக்கிறார். பத்தாண்டுகளில் மாதம்தோறும் நீதிமன்றம் அவருக்கு அழைப்பு அனுப்பியது. கடுமையான நீதிமன்றக் கண்டனம் வந்தபின் ஒரே ஒருமுறை அவர் நீதிமன்றம் வந்தார். ஆனால் போதிய ஆவணங்கள் இல்லை. நீதிமன்ற நடைமுறையை உடல்நலம் குன்றிய அவரால் தாளமுடியவில்லை. அதன்பின் நீதிமன்றமே வரவில்லை. இப்போது வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார். ஆகவே என்மேல் வழக்கு நீதிமன்றத்தில் புனையப்படவே இல்லை. வெறும் குற்றச்சாட்டுடன் வழக்கு அப்படியே நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகியிருக்கிறது

எஸ்.வி.ராஜதுரை மேல் பெருமதிப்பு கொண்டவர் என் நண்பர் நிர்மால்யா (மணி) அவர் எஸ்.வி.ராஜதுரை உடல்நலம் குன்றியிருக்கிறார் என்றும், சமாதானம் பேசி வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதுதான் நல்லது என்றும் என்னிடம் சொன்னார். ”நாம் நேரில் போய் அவரிடம் பேசுவோம். அருகே தான் இருக்கிறார். ஒரு மன்னிப்பு கேட்பதில் நீங்கள் குறைந்துவிட மாட்டீர்கள்” என்றார்

நான் சொன்னேன். ”எஸ்.வி.ராஜதுரை என் ஆசிரியர். அவர் நூல்களை படித்து உருவானவன் நான். அவ்வாறன்றி ஒரு முறைகூட அவரைப்பற்றி நான் எழுதியதில்லை. நான் சொன்னது இங்குள்ள பொதுப்போக்கு பற்றி. அவருடைய பணிகளை ஒட்டுமொத்தமாக நான் அடையாளப்படுத்தவில்லை. அவர் அதை அப்படி தீவிரமாக எடுத்துக்கொள்வார் என்றும் அதைச் சொல்லும்போது எனக்கு தெரியாது. அது ஓரு பொதுவெளி உண்மை என்றே நினைத்தேன். அவரைச் சந்தித்து மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தடையும் இல்லை. அவர் வருந்தும்படி நடந்ததில் எனக்கு வருத்தம்தான்” என்றேன்

நிர்மால்யா எஸ்.வி.ராஜதுரையிடம் பேசிவிட்டு என்னிடம் சொன்னார். ”எஸ்.வி.ராஜதுரை நெகிழ்ந்திட்டார். நான் அவனை சந்திச்சா கட்டிப்புடிச்சுக்குவேன். அவன் நம்ம காலத்தோட பெரிய எழுத்தாளன்ன்னு  சொன்னார்” என்றார்.

நான் கோவை ஞானியை ஃபோனில் அழைத்து எஸ்.வி.ராஜதுரையை சந்திக்கப்போவதைச் சொன்னேன். ”அப்டியே காலைத் தொட்டு கும்பிடுங்க. உங்க மரபிலே அப்டித்தானே செய்வீங்க. எஸ்.வி.ஆரோட வாழ்த்து உங்களுக்கு வேணும்” என்றார் ஞானி. ஏற்கனவே எஸ்.வி.ஆரை நான் புண்படுத்திவிட்டேன் என என்னை ஞானி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். (ஞானி நூல்)

ஆனால் எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நான் எழுத்துபூர்வமாக மன்னிப்புக்கடிதம் தரவேண்டும், அதையும் அந்த வழக்கறிஞரிடம் தரவேண்டும், அதில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று அவர் முடிவெடுப்பார் என்றெல்லாம் நிர்மால்யாவிடம் சொன்னார். அவரே எஸ்.வி.ராஜதுரையிடமும் பேசி விலகச் செய்தார். நான் வழக்கு பற்றிய ‘பயத்தால்’ சமாதானம் பேச வருவதாக எஸ்.வி.ராஜதுரையை நம்பவைத்தார்,.

என் வழக்கறிஞர் விஸ்வநாதன் ஊட்டியின் முதன்மை வழக்கறிஞர். திருமாவளவன் மீது ஊட்டியில் நடந்த அவதூறுவழக்கு போன்றவற்றை திறம்பட நடத்தியவர். அவருக்கு துணையாக வழக்கை கவனித்துக்கொண்டவர் வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்க்ளாகிய நண்பர்களும் அவ்வழக்கை கவனித்துக்கொண்டிருந்தனர். அது அவர்களுக்கு பொருட்படுத்தும்படியான ஒரு வழக்கே அல்ல.

இந்த வழக்கில் ஆவணங்கள் எவையுமே நீதிமன்றம் முன்னால் தாக்கல் செய்யப்படவில்லை. எஸ்.வி.ராஜதுரை சார்பில் தாக்கல்செய்யப்படவேண்டிய ஆவணங்கள் என்னுடைய இணையப்பதிவுகள். அவற்றை நீதிமன்றம் ஆவணங்களாக கொள்ள நிறைய சான்றுகள் வேண்டும். ஆனால் என் சார்பில் எஸ்.வி.ராஜதுரை நிதி வாங்கினார் என வெவ்வேறு நபர்களால் அச்சில் எழுதப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தன. அவரே பதிவு செய்த WAC ஆவணமும் அதில் உண்டு. அவை அனைத்துமே நீதிமன்றத்தில் பதிவாகும். என்றென்றைக்குமான நீதிமன்ற ஆவணமாக இருக்கும். அதை சுட்டி எவர் வேண்டுமென்றாலும் மேலதிக வழக்கை தொடுக்கமுடியும். வ.கீதா நீதிமன்றம் வரவேண்டியிருக்கும். பல்வேறு தொடர்புள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்படுவார்கள்.

மேலும் எஸ்.வி.ராஜதுரை அவர் வாங்கிய நிதியின் கணக்கை, அவற்றை அரசுகளுக்கு தெரியப்படுத்தியமைக்கான சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அனைத்துக்கும் மேலாக அவருடைய வழக்கறிஞர் அறிவிக்கை நீதிமன்றத்தில் பதிவானால் மறுகணமே அது அவமதிப்பு வழக்குக்கு ஆதாரமாக ஆகிவிடும்– அது அப்படிப்பட்ட லட்சணம் கொண்டது. அதில் இந்திய அரசியல்சட்டப்படி சாதி இழிவு படுத்தல் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களே உள்ளன. (பார்க்க எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….)ஆகவே நீதிமன்றத்தில் வழக்கின் முதல் கட்டமான ஆவணப்பதிவே நடைபெறவில்லை. அவரது வழக்கறிஞர் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை.

எஸ்.வி.ராஜதுரைக்கு இந்த வழக்கின் உண்மைச்சூழலைச் சொல்ல அணுக்கமானவர்கள் இல்லை. என்னை சிக்கவைக்கும் நோக்கத்துடன் வயதான அவரை தூண்டிவிடவே அவரது ‘நண்பர்கள்’ முயன்றனர். ஆனால் குறைந்தபட்சம் நீதிமன்றம் வரை காரோட்டி வரக்கூட அவருக்கு எவருமில்லை. நேர்மாறாக என்னிடம் இந்த வழக்கின் உள்ளீடற்ற தன்மையை விளக்கிய என் நண்பர் வழக்கறிஞர்  கிருஷ்ணன் “இது ஒரு கேஸே இல்லை‘சார். ஆனா, அப்பப்ப எஸ்.வி.ராஜதுரை மேற்கோள் சொல்லிட்டே இருக்கீங்க. அப்டி அவர் உங்களுக்கு முக்கியம்னா பேசாம மன்னிப்பு கேட்டுடுங்க” என்றே அறிவுறுத்தினர். ஆனால் எஸ்.வி.ராஜதுரை தரப்பு வழக்கறிஞருக்கு உண்மைச்சூழல் புரியவில்லை.

ஆகவே நான் வழக்கை அதன்போக்கில் விட்டுவிட்டேன். பின்னர் பவா செல்லத்துரை ஒரு முறை சொன்னார்.  “ஜெயமோகன் நீங்க நிபந்தனையில்லாம எஸ்.வி.ஆர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கணும். நீங்க சொல்றது சரியா இல்லியாங்கிறதே பேச்சு இல்ல. அவர் நம் காலகட்டத்தோட நாயகன். நாம அவர் காலடியிலே இருந்து வந்தவங்க.”

நான் சொன்னேன் “அதிலே மாற்றே இல்லை. எனக்கு ஒரு தயக்கமும் இல்லை” பவா சொன்னார் “எஸ்.வி.ராஜதுரை இப்ப இங்கதான் இருக்கார். நான் அவர் கிட்ட சொன்னேன். அவர் உங்கமேலே பெரிய மரியாதை வச்சிருக்கார். நீங்க சந்திக்க நான் ஏற்பாடு பண்றேன்” ஆனால் பின்னர் பவா சொன்னார், “அதெல்லாம் நடக்காது. அந்த வக்கீல் ரொம்ப பிடிவாதமா இருக்கார். அவர் முன்னாடி நீங்க மன்னிப்பு கேக்கணும்னு சொல்றார்…”

நான் அவ்வழக்கை விட்டு மனம்நகர்ந்துவிட்டேன். வெண்முரசு எழுத ஆரம்பித்தபின் இவை எவையுமே என் அகத்தில் இல்லை. வழக்கு இழுத்துக்கொண்டே இருந்தது. எஸ்.வி.ராஜதுரை நீதிமன்றம் வருவதை முற்றாக தவிர்த்தார். பலமுறை நீதிபதிகள் சீற்றத்துடன் அதைச் சுட்டிக்காட்டி  கண்டித்துச் சொல்லியிருக்கிறார்கள். என் வழக்கறிஞர்கள் அவர் நீதிமன்றம் வராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியே வழக்கு தள்ளுபடி செய்யும்படிக் கோரலாம் என்றனர். வேண்டாம் என்று நான் சொன்னேன். அவர் வழக்கை நடத்தட்டும் என்றேன். கடைசிவரை நாங்கள் அப்படிக் கோரவில்லை.

எஸ்.வி.ராஜதுரை தன் வீட்டில் இருந்தே வாக்குமூலம் அளிக்க அனுமதிக்குமாறு கோரினார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்றார். ஆனால் அதே வாரம் அவர் மதுரையில் தீக்கதிர் அலுவலக நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அச்செய்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே நீதிபதி அனுமதி மறுத்துவிட்டார்.

பின்னர் கோவிட் காலத்தில் இணையம் வழியாக வாக்குமூலம் அளிப்பதாகச் சொன்னார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என என் வழக்கறிஞர்கள் சொன்னார்கள். ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை அளிப்பது சாட்சியம் அல்ல, அது முதல் குற்றச்சாட்டு வாக்குமூலம். அதில் அப்படி ஒரு மனிதரை நீதிமன்றம் நேரில் பார்ப்பது அவசியம். ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. கோவிட் சூழலில் அவரை நீதிமன்றம் வரவழைக்கவேண்டாம், அவர் இணையத்திலேயே வாக்குமூலம் வழங்கட்டும் என்றேன்.

அடுத்த கட்டம் ஆவணப்பதிவுதான். இச்சூழலில் எஸ்.வி.ராஜதுரை வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார் என்னும் செய்தியை என் வழக்கறிஞர் எனக்கு தெரிவித்தார். இம்முடிவை அவர்கள் எடுத்ததும், நீதிமன்றத்திற்கு தெரிவித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்ததும் நீதிமன்ற அறிவிப்பின் வழியாகவே 10-3-2022 அன்று எங்களுக்குத் தெரியவந்தது. இதுதான் நிகழ்ந்ததன் சுருக்கம்.

இதில் கவனிக்கவேண்டியது ஒன்றே. பொதுவாக எதற்கெடுத்தாலும் மானநஷ்ட வழக்கு என்று பேசுவது ஒரு வழக்கமாக உள்ளது. எந்த வழக்கிலும் வழக்கு தொடுத்தவரே அலையவேண்டும். அவர்தான் பணம் செலவிடவேண்டும். கடைசியில் தண்டனை சில ஆயிரம் ரூபாய்தான். ஆனால் வழக்கு தொடுப்பவர் சில லட்சங்கள் வரை செலவிடவேண்டியிருக்கும். சில ஆண்டுகளை இழக்கவேண்டியிருக்கும். ஏனென்றால் அவர்தான் குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட நான் இரண்டு முறை ஊட்டி நீதிமன்றம் சென்றேன். அதுவும்கூட என் விருப்பப்படித்தான். ஒரே ஒருமுறை நான் சென்றால் போதுமானது. அதன்பின் என் வழக்கறிஞர்கள் செல்வார்கள். ஆனால் எஸ்.வி.ராஜதுரை அழைக்கும் போதெல்லாம் வந்தாகவேண்டும். விசாரணைக்கு உட்படவேண்டும். சான்றுகளை கொண்டுவரவேண்டும்.

இவ்வகை வழக்குகளில் அலையவைக்கலாம் என்பது மட்டுமே ஒரே லாபம். ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்றை சொன்னார் என நிரூபித்தால் மட்டும் போதாது, அதனால் இழப்பு ஏற்பட்டது என நிரூபிக்கவேண்டும். அதைவிட அவ்விழப்பை உண்டுபண்ணும் நோக்கம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இருந்தது என நிரூபிக்கவேண்டும். வழக்குகள் இல்லாத சிறிய வழக்கறிஞர்களே இவ்வகை வழக்குகளை போட ஊக்குவிப்பார்கள். அல்லது வேண்டுமென்றே தொல்லைகொடுப்பதற்காக அமைப்புகளைக்கொண்டு தனிநபர் மேல் போடுவார்கள். ஒன்றும் அறியாத நண்பர்கள் ‘வழக்குபோடுங்க தோழர்’ என ஊக்குவிப்பார்கள்.

இவ்வகை வழக்குகளில் அனைவரும் உடனே செய்வது இன்னொரு வழக்கை குற்றம்சாட்டியவர் மேல் தொடுப்பதுதான். அதற்கான எல்லா காரணங்களும், ஆதாரங்களும் இருக்கும். எஸ்.வி.ராஜதுரை மேல் நாகர்கோயில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க என்னிடம் ஆலோசனை சொன்னார்கள். அதற்கு சாதகமான மனநிலைக்கும் வந்தேன். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் பின்வாங்கிவிட்டேன். இது எப்படியானாலும் ஒரு வரலாற்று நிகழ்வு. நான் அவர்மேல் வழக்கு தொடுத்தேன் என வரவேண்டாம். ஏனென்றால் அவர் சாமானியர் அல்ல, என் பெருமதிப்புக்குரிய எஸ்.வி.ராஜதுரை. இன்னொருவர் என்றால் விட்டிருக்க மாட்டேன். (இப்போதுகூட  என் மேல் வழக்குபோட்டு இழப்பு ஏற்படுத்தியமைக்காக எஸ்.வி.ராஜதுரைமேல் நான் சிவில் வழக்கு தொடுக்கலாம். உறுதியாக வெல்லும் வழக்கு அது)

எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் எனக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கையை வைத்து வழக்கு தொடுக்கலாம் என பல வழக்கறிஞர்கள் சொன்னார்கள் (படித்துப் பாருங்கள்:எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்) அது ஒரு அப்பட்டமான வசை, மற்றும் அவதூறு. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ஒருவர் அவரே வழக்கை இலவசமாக நடத்துவதாகச் சொன்னார். எனக்குச் சம்பந்தமே இல்லாதவர் அவர். அந்த வழக்கறிஞர் அறிவிக்கையின் மொழிநடை வழக்கறிஞர் சமூகத்துக்கே அவமானம் என்றார்.வெகுவாகச் சீண்டப்பட்டிருந்தார். சாதி,மதச் சீண்டல்கள் கொண்ட நேரடியான எழுத்துவடிவக் குற்றம் அது. மிக எளிதில் வெல்லும் வழக்கு.

நான் விசாரித்தபோது அந்த வழக்கறிஞர் அறிவிக்கையில் கையெழுத்திட்டவர் எஸ்.வி.ராஜதுரை என்பதனால் அவர்தான் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்படவேண்டும் என தெரியவந்தது. அதைச் செய்யவேண்டாம் என உறுதியாகச் சொல்லிவிட்டேன். அற்புதமான நடையுடன் மகத்தான நூல்கள் சிலவற்றை எழுதிய ஒரு பேரறிஞரை அந்த ஆபாசமான வசைக்கடிதம் எழுதியவர் என நீதிமன்றத்தில் நான் பதிவுசெய்யக்கூடாது. அது அநீதி. அது அல்ல அவர் வரலாற்றில் நின்றிருக்கவேண்டிய முகம்.

இப்போது வழக்கு முடிந்துவிட்டது. நான் அஞ்சினேன் என எந்த வழக்கறிஞரும் இனி சொல்ல மாட்டார். ஆகவே இப்போது சொல்கிறேன். எஸ்.வி.ஆர் சார், நான் உங்கள் முன் எளியவன். உங்கள் சொற்களில் இருந்து கற்றுக்கொண்டவன். நான் எழுதியபோது அது உங்களை இப்படி பாதிக்கும் என உணர்ந்திருக்கவில்லை. கருத்தியல் விவாதம் என்றே எண்ணினேன். க.நா.சு உள்ளிட்ட பலபேர் மீது நீங்களும் அதைப்போல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளீர்களே என்றே நினைத்தேன். ஆனால் எதன்பொருட்டென்றாலும் ஆசிரியர் நிலையில் உள்ள ஒருவரின் உளம் வருந்தச் செய்தது பெரும்பிழை. அதன்பொருட்டு மன்னிப்பு கோருகிறேன்.

சுந்தர ராமசாமி உட்பட எல்லா ஆசிரியர்களிடமும் ஏதோ சில  மனவருத்தங்களை ஈட்டியிருக்கிறேன். என் மரபுப்படி என் தலை உங்கள் பாதங்களில் பட நிலம்படிய வணங்குகிறேன். மன்னித்துவிடுங்கள்.

ஜெ

எஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன?

எஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்

எஸ்.வி.ராஜதுரை- கடிதங்கள்

எஸ்.வி.ராஜதுரை-கடிதங்கள்

க.நா.சுப்ரமணியம்

முந்தைய கட்டுரைபத்துலட்சம் காலடிகள் வாசிப்பு
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள்- வாசிப்பு