பத்துலட்சம் காலடிகள், வாசிப்பு

விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு

மாறி வரும் காலங்களுக்கு ஏற்ப இங்கே கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும், நியதிகளும், விதிகளும், அமைப்புகளும், மதங்களும், சாதிகளும், எல்லைகளும் என அனைத்துமே சிறு சிறு தளர்வுகளும் அல்லது சிறு சிறு இறுக்கங்களுமாக தொடர்ந்து வந்திருக்கின்றனவேயொழிய, அவை ஒரு பொழுதும் இல்லாமல் இருந்ததில்லை. இனி, அப்படி இருக்கப் போவதுமில்லை. ஏனெனில், மனிதன் தன் வாழ்விற்கான அனைத்து பற்றுகளையும் பிடிப்புகளையும் இவைகளிடமிருந்தே உருவாக்கிக் கொள்கிறான். அது நேர்மறை, எதிர்மறை என இரு நிலைகளிலும் அவனை வழிநடத்திச் செல்கிறது.

அப்படியொரு எதிர்மறையான மனநிலையில் நின்று அனைத்தையும் பகடி செய்யும், நிராகரிக்கும், எதிர்க்கும், சிலாகிக்கும், அலட்சியப்படுத்தும் ஒரு மையக் கதாபாத்திரம் தான் ஔசேப்பச்சன். அவன் ஒரு காவல்துறை அதிகாரி. அவனது பார்வையின் வழி கதை செல்கிறது.

ஔசேப்பச்சன் அவனது நண்பர்களுடன் இணைந்து மதுவின் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில், உருவாகும் உரையாடலின் வழியாகக் காட்சிப்படுத்தப்படுகிறது கதை.

மதுவின் மேன்மையில் ஆரம்பிக்கும் உரையாடல், சாதி, மதங்களின் வரலாற்று பண்பாடுகளைத் தொட்டு, பத்தேமாரி கப்பலின் அமைப்பில் வியந்து, அதன் கட்டுமானக் கலையில் திளைத்து, பெருமண் இரயில் விபத்தில் பயணித்து, ஒரு கொலையில் மையம் கொள்கிறது.

பின், அக்கொலையின் வழி, விரிந்து செல்லும் கதையில், வெளிப்படுவது முழக்க முழுக்க ஔசேப்பச்சனின் ஆளுமையே என்றால், அது மிகையில்லை. அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பால் அவனது மதிப்புகள், அவனது சந்தேகங்கள், அதைத் தொடர்ந்த அவனது செயல்பாடுகள் என அனைத்திலும் அவன் தான் பிரதானமாக நிற்கிறான்.

எதிர்மறை மனநிலை கொண்டவனாக இருந்தாலும் ஔசேப்பச்சன், அடிப்படையில் ஒரு நேர்மையாளன். அதனால் தான், இராதாமணியின் மரபு மீறிய நேர்மையைக் கண்டதில், அவன் திகைத்து நின்று, “சில சமயங்களில் மனித மனதை நேருக்கு நேராகப் பார்த்து நாம் நடுங்கி விடுகிறோம்.” என்கிறான். அப்துல்லா சாகிப்பின் சட்டம் மீறிய நேர்மையை அறிந்ததில், “அவன் ஒரு குழந்தை… என்ன இருந்தாலும்…” என்று பதைபதைக்கிறான்.

சிறந்த இரசனையாளனும் கூட. அழகின் அளவுகோலுக்கான மம்மூட்டியின் உவமையில், சிறு கீற்றுப் புன்னகையாவது, நம்முள் எழாமல் இருக்காது. மேலும், அதே அழகின் தன்மையைப் பற்றிய அவனது விவரணையின் போது, சாதிப்படிநிலைகளின் கலப்புகளைக் குறித்த, அவனது கூற்று, இரசனையின் ஆழமேயானாலும் கூட, அவனை ஒரு யதார்த்தவாதியாகவும் அதுவே சித்தரிக்கிறது.

இதில் குற்றவாளியைப் பிடிக்கும் உத்திகள் மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது. மையவலை, சுற்றுவலை, மடிவலை. அது போலவே தான், இக்கதையும் செல்கிறது. ஆனால், முதலில் மடிவலை, சுற்றுவலை, மையவலை என்று குவிந்து, பின் மையவலை, சுற்றுவலை, மடிவலை என்று விரிந்து செல்லும் கதை, ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேர்கிறது.

மொழி ஆளுமை மிக்க ஜெயமோகன், அவர்களின் எழுத்தின் வன்மையில் மிளிர்ந்த “பத்துலட்சம் காலடிகள்” முழுவதும் ஔசேப்பச்சனே நிறைந்து நிற்கிறான்.

சரளா முருகையன்

***

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைஎஸ்.வி.ராஜதுரை வழக்கு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊடகங்கள், அரசியல், விவாதங்கள்