பெருங்கனவுகள் சிதைதல்

இப்போதெல்லாம் 600 + பக்கப் புத்தகங்களைப் பார்த்தால் ஒரு பெருமூச்சுடன் கடந்து விடுகிறதுதான். இந்த மனநிலை யில் ‘பி.தொ. நிழலின் குரல்’ (723 பக்கம்) நாவலை ஆர்வத்துடன் இரண்டே நாளில் படித்து முடித்தது ஓர் ஆச்சரியம். அப்படியொரு ஈர்ப்புவிசை எழுத்தில்.

கம்யூனிச கொள்கையென்பது மானுடத் தின் ஒருபெரும் லட்சியக் கனவு. ஆனால்,பெருங்கனவுகள் சிதையுமென்பது விதி. இயக்கத்தின் வளர்ச்சிப்பாதையில் சித்தாந்தத்தை விட கட்சியும் தலைமையும் முக்கியமாகி சர்வாதிகாரப்போக்கு தலை காட்டுகிறது. தலைமைக்குப் பிடிக்காத திறமைசாலி கள் மெல்ல ஓரம் கட்டப்படு கிறார்கள்; அல்லது களையெடுக்கப்படுகி றார்கள். ரஷியாவில் நிகலாய் புகாரின் என்றால், இங்கே உள்ளூரில் வீரபத்ர பிள்ளை ! அப்படி இயக்கத்தால் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டவர்களின் கதைகளை, அந்தரங்கங்களை நாவல் பேசுகிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றி எவ்வளவோ எழுதப்பட்டு விட்டாலும் அது கம்யூனிச சகாப்தத்தின் முடிவல்ல என்பதை சீனாவும் ரஷ்யாவும் இன்று உலகுக்கு உரக்கச் சொல்லிக்கொண்டு தானே இருக்கின்றன.

விரிவான அரசியல் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் நாவல், தனி மனிதர்களின் வாழ்க்கை போராட்ட ங்களை ஆழமாக பேசுகிறது. தான் கொண்ட லட்சியத்தோடு போராட்டம்; பசியோடு போராட்டம்; உடலிச்சையோடு போராட்டம்; முடிவாக தன் மனதோடும்..

முடிவில்லாத போராட்டங்களினால் அருணாசலம் மனப் பிறழ்வுக்கு ஆளாகி றான். அதிலிருந்து மீண்டு வர அவன் மனைவி நாகம்மையின் பாசமும் ஆதரவும் துணை நிற்கின்றன. ஆனால், உள்மனப் போராட்டங்களில் நிலை குலைந்துபோகும் வீரபத்ரபிள்ளைக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. அவர் மனைவி இசக்கிதான் அவருடைய ஆளுமை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிறாள்.

கதையின் மொழிநடை தீராத போதை. வீரபத்ரபிள்ளையின் கடிதங்கள், சுய குறிப்புகள், கதைகள், நாடகங்கள்.. இவற்றில் ஜெயமோகனின் எழுத்து, மொழியின் உச்சத்தை தொடும் தருணங் கள் நிறைய. ரஷியாவின் உறைபனிக் காலங்களில் நகரவீதிகளில் நீங்கள் அலைகிறீர்கள். அதிகாரத்தின் வன்பிடியில் சிக்கி மரித்தவர்களின் பிணவாடையும், தேங்கல்களின் நாற்றமும் உங்களைச் சுற்றிப்பரவுகிறது. தப்பிக்க வழிஇல்லை. உங்களைத் தொடர்வது உங்கள் நிழல் மட்டுமல்ல; உங்கள் அந்தராத்மாவில் நுழைந்துவிட்ட தோற்றுப்போனவர்களின் நிழலும் தான்..

கதையின் ஆன்மா அருணாசலத்தின் மனைவி நாகம்மையிடம் நிலைகொண்டி ருப்பதாக ஓர் எண்ணம். தன் கணவன் மீதும், குடும்பத்தின் மீதும் முடிவில்லாப் பாசம் கொண்ட சாதாரண குடும்பத் தலைவி. அருணாசலத்தின் மனஅவசங் களிலிருந்து அவனை மீட்டெடுப்பதற்கும், அழுத்தங்களை குறைப்பதற்கும் அவனு டைய உடல் வேட்கையையே மருந்தாகப் பயன்படுத்துகிறாள். கணவனின் மனதை ஆற்றுப்படுத்த சாமானியப் பெண்ணான அவளுக்குத் தெரிந்த ஒரே வழி.

கதிருக்கு அருணாசலம் கடைசியில் எழுதுகிற அந்தரங்கமான கடிதத்தில் தன் மனப்போராட்டங்களை ஒளிவுமறை வின்றி வெளிப்படுத்துகிறான். நாகம்மை மூலமே தான் மீண்டத்தை குறிப்பிடு கிறான். அப்பொழுது, ‘அவள் யோனி தான் என்னை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தியது’ என்று எழுதுகிறான். படிக்கையில் மனதில் ஒருவித ஏமாற்றம் பரவியது. நாகம்மையின் தன்னலமில்லா அன்பின் தாக்கத்தை அவன் சொல்லி யிருக்க வேண்டும். யோனிக்கு போதுமான மாற்று இருப்பதைத்தான் கதையில் அழுத்தமாக பதிவு செய்தாகி விட்டதே. அன்பு ஊற்றெடுக்கும் மனசுத்தான் எங்கு தேடினாலும் மாற்று இல்லை.

நாவலின் சில பகுதிகளையாவது நாகம்மையின் பார்வையில் எழுதியிரு க்கலாம். இந்த நாவல் அதற்கான வாய்ப்பை நிச்சயம் கொடுத்திருக்கிறது.

நாகம்மை, நாகம்மை, நாகம்மை..என்று மந்திரம் போல சொல்லிக்கொண்டிருக்க
தோன்றுகிறது.

நாவலின் தனித்த சுவைக்கு ஆதாரமாக இருக்கும் தற்குறிப்புகள், நாடகங்கள், கதைகவிதைகள் சில இடங்களில் அதிகம் நீண்டுவிடுகின்றன. அதில் கொஞ்சம் கறாராக இருந்திருந்தால், இன்னும் கச்சிதமாக வந்திருக்கும்.

சாதி தொடர்பான சொல்லாடல்களில், பகடிகளில் ஆசிரியருக்கு இருக்கும் ஈடு பாடு வியப்பளிக்கிறது, அவருடைய எல்லா படைப்புகளிலும் அதைப் பார்க்க நேரும்போது.

எந்த நாவலையும் படித்து முடித்த கையோடு மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றாது; இந்த நாவலை படித்தபின் அப்படியொரு எண்ணம் வந்தது.

தமிழின் சிறந்த நாவல்களின் வரிசையில் பின் தொடரும் நிழலின் குரலுக்கு தவிர்க்க முடியாத ஓர் இடமுண்டோ

பொன். குமார்

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைவேதங்களை வாசிப்பது-கடிதங்கள்
அடுத்த கட்டுரைபத்துலட்சம் காலடிகள் வாசிப்பு