மாபெரும் தாய் வாங்க
எழுத்தாளர் அகரமுதல்வனின் ‘மாபெரும் தாய்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதல் மூன்று கதைகளையும் முடித்ததும் இந்தக் குறிப்பை உடனே எழுதிவிடத் தோன்றியது.
ஒரு போரின் முடிவில் உயிரிழந்தவர்களின் கணக்கெடுப்பைவிட வலி மிகுந்தது துரோகிகளின் கணக்கெடுப்பு. சடலங்களைப்போல இறுக்கம் இல்லாதவை துரோகிகளைக் குறித்த வரையரைகள்.
நண்பனின் துரோகம், போராளிக்குச் சமூகம் செய்யும் துரோகம், கடவுள் மக்களினத்துக்குச் செய்த துரோகம் என முதல் மூன்று கதைகளும் வெவ்வேறு பரிமாணங்களை முன்வைப்பவை. துரோகம் இலக்கியத்தில் அதிகம் சொல்லப்பட்ட ஒரு உணர்ச்சி என்றாலும் அது அதிக துல்லியமாக வெளிப்படும் காலம் என்று (ஈழப்) போரின் காலத்தையும் அதன் பிந்திய காலகட்டத்தையும் உணர முடிகிறது.
துரோகம் நாம் நின்றுகொண்டிருக்கும் திடமான பூமி நெகிழ்ந்து நம்மை மண்ணுக்குள் இழுத்துப் போடும் அனுபவத்தைப் போன்றது. அது நம்பிக்கைகள் மீது கட்டப்படும் எதிர்காலத்தை மட்டுமல்ல, நாம் நம்பிக்கொண்டிருக்கும் கடந்தகாலத்தையும் புரட்டிப்போடுவதுமாகும்.
அகரமுதல்வன் எழுதியிருந்த சில முகநூல் கவிதைகளில் வெளிப்பட்டதைவிட சிறந்த கவி நயம் இக்கதைகளில் வெளிப்பட்டுள்ளது. ஒரு கவிஞன் எழுதிய கதைகள் இவை என்பது இன்னும் அவற்றைச் சிறப்பாக்கியுள்ளது. வெவ்வேறு களங்கள், வெவ்வேறு கூறுமுறைகள் இதை ஒரு ஒற்றைப்படையான தொகுப்பை வாசிக்கும் சோர்வான அனுபவத்திலிருந்து விடுவிக்கின்றன. கடவுளின் துரோகத்தை முறையிடுவதுவும் ஒரு பிரார்த்தனையாகவே எஞ்சிவிடுகிற பாலன் கதை எழுதப்பட்டிருக்கிற விதம் புதுமையானது. ஏரோதுக்குத் தப்பிய பாலன் பதுங்குகுழிக்கு வந்து சேர்வதும், ஏதேனின் தொன்மத்தைப் பின்னி ஒரு நவீன தொன்மைத்தை உருவாக்கியதிலும் ‘பாலன்’ கதை சிறப்பாக வந்துள்ளது.
சுதந்திரத்திற்கும் முன்னிருந்தே துவங்கிவிட்ட தமிழ் சிறுகதை மரபில் பெரிய பெரிய சாதனையாளர்களையும் தாண்டி, ஜெயமோகன் ஒரே மூச்சில் நூறு கதைகளை எழுதிக்கொண்டிருக்கும் இந்த ‘மீம்ஸ்’ காலத்திலும் இளம் படைப்பாளிகள் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கி கதை சொல்லும் மரபை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொண்டிருப்பதை நான் அண்மையில் குறிப்பிட்டுப் பேசியிருந்தேன். அகரமுதல்வன் அவ்விளைஞர் வரிசையில் முன்னணியில் நிற்பவர்களில் ஒருவர்
சிறில் அலெக்ஸ்