ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன வாங்க
’எப்பயோ படிச்சது, எப்பவோ படிச்சாச்சு…’.என்று நினைக்கவும், சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. வெறுமே ஒரு வார இதழில் வெளி வந்த தொடர்கதைதான் என்று சொல்லி ஒதுக்கி விடுவதற்கில்லை. ஜனரஞ்சக இதழ்களில் வந்ததெலல்லாம் இலக்கியமாகக் கருத முடியாது என்றும் சொல்வதற்கில்லை. வார இதழில் எழுதுவது யார், எழுதியது யார் என்று ஒரு கேள்வி கம்பீரமாக, அறியும் ஆவலாக முன்னே வந்து நிற்கும். அந்தப் படைப்பாளியைப் பொறுத்து அது மதிப்புப் பெறும் தலை நிமிரும். காலத்திற்கும் நிற்கும்படைப்புக்களைத்தான் தந்தார்கள் அவர்கள். தமிழ் இலக்கியச் சூழலில் எதுதான் காலத்துக்கும் நிற்கிறது? எல்லாம் போகிற போக்கில்தான் என்று சிலவற்றை ஒதுக்கி விடவே முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது. அப்படியான காலத்தால் அழியாத நாவல்களை, வார, மாத இதழ்களில் தொடர்கதைகளாக எழுதி, இன்றும் நினைக்கும் வண்ணம், நினைவூட்டும் வண்ணம் வாசகர்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறார்கள் சில படைப்பாளிகள். அதில் தி.ஜானகிராமன், இந்திரா பாரத்தசாரதி அசோகமித்திரன் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
அழுத்தமும், சிந்தனையாழமும் கலந்த வேகம் அபூர்வமான சேர்க்கை. சிந்தனையாழம் என்றால் படிப்பதற்கு இரும்புக்கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சரளமாக வாசிப்பது கட்டாயமாக கஷ்டமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை என்று இவரது எழுத்தை மனதாரப் புகழ்ந்திருக்கிறார் திரு.ஜானகிராமன். நாமும் அதைப் படிக்கும்போது மனம் கசிய, ஆத்மார்த்தமாய் உணர்ந்து அந்தக் கருத்தை ஏற்பவர்களாகிறோம்.
அவர் திரு.இந்திரா பார்த்தசாரதி. நாவல் – “nஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன” . படிக்கும் வாசகனுக்கு மிகுந்த, ஆழமான ரசனை இருக்குமாயின் இந்த நாவலை ஒரு முறை மட்டும் படித்துவிட்டு ஓதுக்க மாட்டான். ஒதுக்க முடியாது. நாவல் எழுதப்பட்டிருக்கும் விதத்தை எல்லோரும் பிடித்து விடலாம். ஆனால் அதில் விவாதிக்கப்பட்டிருக்கும் விஷயங்களை எல்லோராலும் கொண்டு வந்து விட முடியாது.
உள் மன வியாபகங்களை, அகவடிவங்களை, அதன் ஆழங்களை கலை உருக் கொடுத்து சொல்லும் அழகு இத்தனை அற்புதமாக வேறெவர்க்கும் அமைந்திருக்கிறதா தெரியவில்லை. ஆர்.சூடாமணியும், ராஜம் கிருஷ்ணனும் இந்த வரிசையில் அடுத்தடுத்து என்று சொல்லலாம்.
மனைவியோடு ஒரு தமிழ் நாடகத்திற்குச் செல்லும் கணவன் அதில் நடித்த ஒரு பெண் அவனது பழைய சிநேகிதியைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியமுறுகிறான். அது அவன் அடி மனத்தில் புதைந்து கிடந்த பல உணர்ச்சிகளைச் சிலிர்த்தெழச் செய்கிறது. மனைவியோடு வாழ்ந்து வரும் சமூக தர்மத்துக்கு உட்பட்ட, ஆனால் போலித்தனமான வாழ்க்கையில் எரிச்சல் ஏற்படுகிறது அவனுக்கு. தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் தன் கணவனுக்குச் சிநேகிதம் இருந்திருக்க முடியாது என்று பிடிவாதமாக நம்பி வந்த அவன் மனைவியிடம் அவனுடைய இந்தப் பழைய சிநேகிதத்தைப் பற்றிச் சொல்லி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறான்.
நாடகத்தில் நடித்த அந்தப் பெண்ணை மறுபடியும் சந்திக்க நேர்கிறது. அதுநாள்வரை பொய்யோடு சமரசம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த அவன் அவளைச் சந்தித்ததுபற்றியும் மனைவியிடம் சொல்கிறான். கீறல் விழுகிறது. ஒட்டுப்போட்டு ஒட்டுப் போட்டு ஒன்றும் நடக்கவில்லை என்று ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்ள முயன்று, மனசும் எண்ணங்களும் படிப்படியாகக் கசடாகி, விரிசல் அதிகமாகி, கடைசியில் பிரிந்தே போகிறார்கள். ஒரு கட்டத்தில் மனசு தெளிந்து, சமரசம்மிகுந்த இந்த வாழ்க்கையில் கட்டினவளோடு வாழ்ந்து கழிப்பதுதான் சரி என்கிற முடிவுக்கு வந்து தெளிந்து அவளைத் தேடி வருகையில் அவள் அவனைவிட்டுப் போயிருக்கிறாள்.
குழம்பித் தெளிவதற்கு முன் அவர்களுக்குள் இருக்கும் மனப் போராட்டங்களும், குறுக்கிடும் இன்னொரு பெண்ணி்ன் நடவடிக்கைகளும் சேர்ந்து இவனை அலைக்கழிக்கிறது. கதையின் நாயகன் அமிர்தம் படும்பாடு மிகுந்த குழப்பங்கள் நிறைந்தது.
வாழ்க்கை என்பது மிகவும் எளிமையானது. சராசரியானது. மேலோட்டமாய் வாழ்ந்து கழிக்க வேண்டியது. ஆழப் புகுந்தால் நாறிப் போகும் தன்மையது. இதை சாதாரண சராசரி மனிதன் தனது அன்றாடப் பாடுகளோடு எளிமையாய்க் கடந்து போகிறான். சற்று சிந்திக்க முற்படுபவன் அல்லது மேம்போக்கான வாழ்க்கையைக் கற்பனை செய்து அது கிடைக்காதவன் குழம்பித் தவித்து, தன்னையே தொலைத்து விடுகிறான். தன் கூட இருப்பவர்களையும் இம்சிக்கிறான். அமிர்தம் இதில் இரண்டாவது வகை. தன்னைத்தானே தவிப்புக்குள்ளாக்கிக் கொள்ளும் மனோபாவம் மற்றவர்கள் பார்வையில் சமயங்களில் கேலிக்குள்ளாகவும் நேரிடுகிறது.
நாற்பது வயதைத் தொட்டுக் கடந்த அவன், சொந்த வாழ்க்கையில் திருப்தி காண முடியாமல் தவிக்கிறான். அவனுடைய இளமையை மீண்டும் வாழவேண்டுமென்று விரும்புகிறான். அதே சிந்தனையை, அதே கற்பனையை, அதே செயல் துடிப்பை மீண்டும் நடைமுறையாக்கி வாழ முடியுமா என்பதே அவன் பரிசோதனையாயிருக்கிறது. கடந்து போன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதே அவன் விருப்பமாயிருக்கிறது. அவனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் யயாதி அவனை அப்படி இயங்க வைக்கிறது.
தான் உண்டாக்கிக் கொள்வதைத் தவிர மனிதனுக்கு வேறு பிரச்னைகளே இல்லை. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டத்தில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் எல்லாம் பௌதிகத் தன்மை வாய்ந்தவையாகத்தான் இருக்க முடியும். மனப் போராட்டம் என்ற வார்த்தை மனிதன் தானாக ஏற்படுத்திக் கொண்டது. தன் ஈகோவைச் சீராட்ட…- நண்பர் பானர்ஜியிடம் ஏற்படும் விவாதத்தில் அவனால் தெளிவு பெற முடியவில்லை.
இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே நிகழும் போராட்டத்துக்கு வாழ்க்கை என்று பெயர். மனிதன் வாழந்து கொண்டிருப்பதே அவன் வெற்றி. மரணமே அவன் தோல்வி. ஆகவே போராட்டம் என்பது பௌதீக ரீதியில்தான் இருக்கும். மனம் கற்பித்துக் கொள்ளும் பயங்கரமான சிக்கல்களுக்கு அவன்தான் பொறுப்பே ஒழிய இயற்கையல்ல. நீ பௌதீக மனிதன். ஏன் பௌதீக விதிப்படி வாழக்கூடாது? உனக்குள்ள பிரச்னைகள், அதோ பந்தைத் துரத்திக் கொண்டு ஓடுகிறதே நாய்…அதற்கு இருக்கிறதா? அந்தக் காட்சி உன் மனத்தில் எந்தவிதமான சலனத்தையும் உண்டாக்கவில்லையென்றால் உன்னோடு பேசிப் பயனில்லை. நீ வெறும் இயந்திரம். மனிதனைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்குக் கிடையாது…..
நண்பனின் இந்தப் பேச்சு அவனை திருப்தியடையச் செய்யவில்லை. காட்சி ரசனைக்கெல்லாம் அர்த்தம் கற்பிக்க நான் தயாராயில்லை. இந்த மாதிரியான அசட்டு மனோபாவங்கள்தான் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்குகின்றன. காட்சி இன்பம் தூண்டும் ரசனைக்காக பகுத்தறிவை விலை கொடுக்க நான் தயாரில்லை. அது விவேகமற்ற தன்மை. எனக்கு எது வேண்டும் என்று நிச்சயமாகத் தெரியும் அதை அடைய முயன்று கொண்டிருக்கிறேன்….என்கிறான் அமிர்தம்.
இழந்து போன நித்யாவையும், அவளைப் போலவே இருந்து நினைவுகளைத் தூண்டும் பானுவையும் மனதில் வைத்துக் கொண்டு, மனைவி திலகத்திடமிருந்து விலகியே இருக்கிறான் அமிர்தம். அன்போ அரவணைப்போ இன்றி யந்திரத்தனமாக இருக்கும் அவனின் இருப்பை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அவ்வப்போது அவனை வார்த்தைகளால் சொடுக்குகிறாள் மனைவி திலகம்.
திலகத்துடன் விவாகரத்து என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம். அவள் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டாள். கணவனை மையமாக வைத்து எழுந்த சமூக தர்மத்தை வெறும் சட்டத்தின் மூலமாகச் சீர்திருத்தம் செய்ய முடியுமா? திலகத்துக்கும் அவன் மீது மனப்பூர்வமான ஈடுபாடு இருக்கும் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் நம் சமூகத்தில் கணவனைக் காட்டிலும் கணவன் எனப்படும் ஸ்தானத்திற்குத்தான் மதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண் சுமங்கலியாக இருப்பதற்கு அவள் கணவன் காரணம் என்பதினால்தான் அவனுக்கு மதிப்பு. இந்தச் சமூகத்தை எதிர்த்துப் போராடக் கூடிய துணிவு தன்னிடம் இருக்கிறதா? – பலவாறு சிந்தித்து நிம்மதியின்றி அலைக்கழிகிறான் அமிர்தம்.
ஊருக்கு வெளியே ஒரு ஓட்டலுக்குச் சென்று அறையெடுத்து, உடன் வந்த பானுவோடு ஏற்பட்ட விவாதம் அவனை இன்னும் நிரூபணமாக்குகிறது. இவ்வளவு தள்ளி, தனியா ஒரு ஓட்டலுக்கு நீங்க என்னைக் கூட்டிட்டு வந்திருக்கிறதுலேர்ந்தே தெரியுது…நீங்க ஒரு கோழைன்னு…என்று சாடுகிறாள் அவள்..
நாம இருக்கிறது ஒரு ரெண்டுங்கெட்டான் சமூகம். ஐம்பது வருஷங்களுக்கு முன்னாலே எங்க தாத்தாவுக்கு மூணு பெண்டாட்டிகள். யாரும் புருவத்தை உயர்த்தலை… இந்த சமூகம் பெண்களை மதிக்கிற சமூகம்னு பேரு. ஒருவனுக்கு ஒருத்திங்கிற நியாயம். பெண்களும் விவாகரத்து செய்யலாம்னு சட்டம் சொல்லுது…ஆனா எவ்வளவு பேர் செய்வாங்க…? புது தர்மத்திலேயும் புகுந்துக்க முடியாம, பழசும் அநாகரீகம்னு சொல்லிக்கிட்டு அவஸ்தைப்படறோம்… – இது இவன் பதில்.
உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள பொருத்தமில்லாத தன்மையை ஒரு இலட்சிய வேகத்தோட புரிஞ்சிண்டு நான் அனுதாபப்பட்டது வாஸ்தவந்தான். ஆனா உங்க மாதிரி இருக்கிறவங்களுக்கு, தைரியமில்லாம ஒரு சோக காவியத்தின் கதாநாயகன் மாதிரி ஒடிஞ்சு போனவங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்கிற திறமை கிடையாது. சந்தர்ப்பம் கிடைச்சா அதை சாதகமாப் பயன்படுத்திக்கிறணும்கிற சுயநலந்தான்…சுயநலம் மட்டும்தான்…எல்லா ஆண்களைப் போலத்தான் நீங்களும்…அதனாலதான் எனக்கு ஆண்கள்னாலே வெறுப்பு ஏற்பட்டுப் போச்சு….
ஒருவேளை தான் நித்யாவைப் பற்றி பானுவிடம் சொன்னது தவறோ? என் மாஜிக் காதலி மாதிரியே நீ இருக்கிறாய் என்பதனால்தான் உன் மீது எனக்கு ஈடுபாடு…என்றால் தன் மதிப்புள்ள எந்தப் பெண் இதை விரும்புவாள்? அங்கேயும் சிக்கலையே எதிர்கொள்கிறான் அமிர்தம். பானுவை அணுகும்போதெல்லாம் நித்யா நினைப்பிலேயே பழகுகிறான். அவளது ஒவ்வொரு அசைவும், நடத்தையும், பார்வையும், பேச்சும் அவனுக்கு அவளையே நினைவூட்டுகிறது.
காதலி நித்யாவைத் திருமணம் செய்வதில் இருந்த அவசரத்தை அவள்தான் கெடுத்தாள். இப்போ உடனே முடியாது…கொஞ்சம் பொறுத்திருக்கணும்…என்றவளை…அலட்சியப்படுத்தி, முறைப்பெண்ணான திலகத்தை மணந்தாயிற்று. தான் பிறந்ததே அமிர்தத்தை மணக்கத்தான் என்று நினைத்துக் கொண்டு வாழ்கிறாள் திலகம். அவளிடம் போய் நித்யாவைப் பற்றிச் சொன்னால் கதி என்னாவது? எல்லாம்தான் நினைத்துப் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சொல்லியும் விடுகிறான்.
என்னோட வெளில வரமாட்டேங்கிறீங்க…எப்பவும் ஏதாவது குத்தம் சொல்லிட்டேயிருக்கீங்க…கார்விடக் கத்துக் கொடுக்கச் சொன்னா மறுக்கிறீங்க…எதாச்சும் சாக்குச் சொல்லித் தள்ளிப் போடுறீங்க….உங்களுக்கு என்னைப் பிடிக்கலை…அந்த வெறுப்பை இப்டியெல்லாம் காட்டுறீங்க…நீங்க எங்க போறீங்க…என்ன செய்றீங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு மட்டும் நினைச்சிடாதீங்க…அந்த அளவுக்கு அசடில்லை நான்….
டெல்லியில் தான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் எப்படியோ அவளுக்குத் தெரிந்து விடுகிறது. எல்லா இடத்திலும் உளவு பார்க்க ஆள் வைத்திருப்பாள் போலிருக்கிறது.
அந்த நித்யாவ நினைச்சிட்டு பானுங்கிற இந்த ஓடுகாலியத் தேடி அலையுறீங்களா? என்று புலம்புகிறாள் திலகம். கல்யாணம் ஆகி பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்து ஒரு குழந்தைக்கு வழியில்லை என்பதும் அவளைக் குரோதம் கொள்ளச் செய்து விடுகிறது. அதனால்தான் வீட்டிலுள்ள ஆண் மகன் வெளியில் அலைகிறான் என்று குமுறுகிறாள். உங்களுக்குப் பிடிக்கிறமாதிரி நான் இன்னும் என்னமாத்தான் இருக்கணும்? சொல்லுங்க அதையும் செய்யக் காத்திருக்கேன்… – திலகத்தை நினைக்கையில் நமக்கு அத்தனை பாவமாகத் தோன்றுகிறது. கணவனே கண் கண்ட தெய்வம் அவளுக்கு. அவன்தான் அவள் உலகம்.
அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்திக் கொள்வது விவேகந்தானா? அது சமாதியின் அமைதியோ, எது வேண்டுமானாலும் இருக்கட்டும், பிரச்னைகளை உண்டாக்கிக் கொண்டு அவற்றை எதிர்நோக்கக்கூடிய துணிவு தன்னிடம் இருக்கிறதா? அன்று நித்யா தன்னை கோழை என்றாள். இன்று பானு தன்னைத் தன்னம்பிக்கை இல்லாதவன் என்று ஏசுகிறாள். மனசாட்சி, தன்னைக் கோழையாக்கிவிட்டதா? – மனைவி திலகத்தோடு ஒன்றவும் முடியாமல், பழைய காதலி நித்யாவைப் போல் இருக்கும் பானுவிடம் சேரவும் இயலாமல் குழம்பித் தவிக்கிறான் அமிர்தம்.
உலகத்தையே வீடாகக் கொண்டு ஒரு நிலையிலும், உலகத்தையே வெளியாகக் கொண்டு மற்றொரு நிலையிலும் மனிதன் வாழ்கிறான் என்பது எவ்வளவு உண்மை! மானிடஇயல் கற்பிக்கும் சமூகப் பொறுப்புக்களைச் சுமந்து கொண்டு முதல் நிலையில் வாழ வேண்டும்.இரண்டாவது நிலையில் மனிதன் தன் சுதந்திரத்தின் எல்லையை உணர்கிறான். ஆனால் இச்சுதந்திரம் தனக்கு இப்போது சந்தோஷத்தைத் தருகின்றதா? – –
கடைசியாய் திலகம் அவனை விட்டுப் போய் விடுகிறாள். வீட்டின் நிசப்தம் இம்மாதிரிச் சிந்தனையைத் தூண்டி அவனைப் பயமுறுத்துகிறது.
உலகத்தையே வெளியாகக் கொண்டு நிற்கும் நிலையில் அவன் ஒரு சின்னஞ்சிறு புள்ளி. இந்தப் புள்ளிக்குத்தான் சிந்தனை, தன் வயமான தர்மம் எல்லாம்.மந்தையிலிருந்து விலகிச் செல்ல முயன்ற புரட்சி ஆடு், பொறியில் அகப்பட்ட எலி, விடுதலையைக் கண்டு பயப்படுகிறது. சமூகம் என்பது தவிர்க்க முடியாத சிறை. ஒன்று ஞானியாக இருக்க வேண்டும். அல்லது பைத்தியமாக இருக்க வேண்டும். தன்வயமான தர்மம் என்பது அப்பொழுதுதான் சாத்தியம்.
பொறிதான் சொர்க்கம்… நினைத்துக் கொண்டே படுக்கையில் விழுகிறான் அமிர்தம். அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு வாழ்வதுதான் விவேகம். உலகம் வீடாக இருந்துவிட்டுப் போகட்டும். திலகத்தைத் தேடியாக வேண்டும். அவளால்தான் அவனை அவனிடமிருந்து காப்பாற்ற முடியும். திலகம் எங்கே? மனம் தவிக்க ஆரம்பிக்கிறது. அப்போது டெலிபோன் மணி ஒலிக்கிறது. நாவல் முடிவடைகிறது.
அமிர்தம் நிதானத்துக்கு வந்த அந்தக் கணம்தான் nஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிய தருணம். சப்தர்ஜங் சாலையில் காரில் வந்து கொண்டிருக்கும்போதே மனசு நிதானப்பட்டு விடுகிறது அவனுக்கு. அப்போது அந்தப் பகுதியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் nஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிக் கொண்டிருக்கின்றன. அவன் மனமும் அதோடு சேர்ந்து இறங்கி நிதானத்தை அடைகிறது.
உள் மனப்போராட்டங்களை தத்துவார்த்த ரீதியில், ஒரு அறிவு ஜீவியின் நிலையிலிருந்து இத்தனை அருமையாக விவாதித்து அகவடிவங்களுக்கும் அதன் ஆழங்களுக்கும் கலை உருக்கொடுத்து ஸ்வாரஸ்யப்படுத்தி எழுதப்பட்ட வேறு நாவல் ஏதேனும் உண்டா? தேடிக் கொண்டிருக்கிறேன்.