எழுத்துக்களும் இணையச்சல்லிகளும்- கடிதங்கள்

நிமிர்பவர்களின் உலகம்

எதற்கு இத்தனை நூல்கள்?

அன்புள்ள ஜெ

இணைய ஊடகம் தொடக்க காலத்தில் கொஞ்சம் வாசிப்பவர்கள், வாசிக்க ஆசைப்படுபவர்கள் நிரம்பியதாக இருந்தது. ஏனென்றால் ஆரம்பத்தில் இதற்குள் வந்தவர்கள் இளைஞர்கள். பெரும்பாலும் ஐடி துறைகளில் வேலைபார்ப்பவர்கள். அப்போது புத்தகங்கள் பற்றியும் புதிய செய்திகள் பற்றியும் பேசமுடிந்தது

ஜியோ இணைய இணைப்பு, ஆண்டிர்ராய்ட் செல்பேசி இரண்டும் வந்தபோது ‘பொதுமக்கள்’ வெள்ளம் போல உள்ளே வந்தனர். அவர்களில் 99 விழுக்காடுபேர் சாப்பாடு, சினிமா, வம்பு என்று போனார்கள். ஆனால் கொஞ்சபேர் சமூக வலைத்தளங்களுக்குள் வந்தனர். அவர்கள் உருவாக்கும் சீரழிவையே இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.

அவர்கள் சும்மா ஆங்காங்கே அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கும் கும்பல். ஒன்றுமே தெரியாது. ஆகவே ஒரு தன்னம்பிக்கையுடன் எதைப்பற்றியும் பேசுவார்கள். எதையும் நக்கலடிப்பார்கள். எந்த விவாதத்திலும் புகுந்து சீரழிப்பார்கள். இவர்கள்தான் புத்தகம், எழுத்து ஆகியவற்றுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருப்பவர்கள்.

‘எழுத்தாளன்லாம் அயோக்கியன், நான்லாம் ரொம்ப யோக்கியன்’ என்று பேசுபவன், வாசிப்பை கிண்டலடிப்பவன் எல்லாம் இந்த வகையில் வருபவர்கள்தான். ‘நான்லாம் வாசிக்கவே மாட்டேன். ஞானம் எனக்கு பீ மூத்திரம்போல ஊறிக்கொண்டே இருக்கும்’ என்று சொல்லும் கும்பல். கிரிஞ்ச் ஜென்மங்கள். முகநூலில் தினசரி ஐம்பதுபேரை பிளாக் செய்யாமல் வாழவே முடியாது.

இன்னொரு கும்பல் அரசியல் வெறியர்கள். பெரிய செயல்பாட்டாளர்களோ நம்பிக்கையாளர்களோ இல்லை. ஒரு அரசியல்நிலைபாட்டை எடுத்துவிட்டு அதை எங்கே சென்றாலும் போய் கத்திக்கொண்டே இருப்பவர்கள். அரசியலில் எதையும் வாசிக்கவேண்டியதில்லை. ஒரு நிலைபாடு எடுத்தாலே போதும். இவர்களில் பலர் ரிட்டயர்ட் ஆசாமிகள். வேலைமெனக்கெட்டு அமர்ந்து எல்லாவற்றையும் கசந்து, வம்புகளை எழுதி எல்லா மனநிலைகளையும் சீரழிக்கிறார்கள்.

இந்த முதியவர்களின் தொல்லையாலேயே முகநூல் போன்றவற்றை விட்டு இளைஞர்கள் ஓடிப்போகிரார்கள்.

ஸ்ரீதர்

***

அன்பு ஜெயமோகன்,

எழுத்தாளர்கள் பற்றிய வாட்சப் தகவல் ஒன்றைப் பற்றிய வாசகர் பகிர்தலுக்கு நீங்கள் அளித்த பதில் நிமிர்பவர்களின் உலகம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது.

எழுத்தாளர்கள் பற்றிய அக்குறிப்பு 2016 புத்தகக் கண்காட்சியை ஒட்டி புதியவன் என்பவர் எழுதிய கட்டுரை(https://pudhiavan.blogspot.com/2016/06/blog-post.html) ஒன்றில் இடம்பெற்றிருக்கிறது. அது சமீபமாய் எழுதி பகிரப்படவில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அக்குறிப்பு கட்டுரையின் ஒரு பத்தி. அதைத் தனித்து ஒரு ’பொன்வாசகம்’ போல பரப்புவதும் பகிர்வதும் சில கும்பல்களின் திட்டமிட்ட சித்து வேலை. பாவம், அதற்கு அக்கட்டுரை ஆசிரியர் பலிகடா ஆகிவிட்டார். ஒருவேளை, அக்கட்டுரை ஆசிரியரே அதைச் செய்திருந்தாலும்.. நாம் ஒன்றும் செய்து விட இயலாது. ஏனெனில், அவர்கள் பாணியில் இலக்கியம் என்பது ‘நீதிபோதனை’; எழுத்தாளர் என்பவர் ‘நீதிபோதகர்’. ஆக, அவற்றைப் பொருட்படுத்தாமல் கடப்பதே நல்லது.

புதியவனின் கட்டுரை தலைப்பே புத்தகத் திருவிழா புத்திமதிகள். அதற்கு மேல் கட்டுரையைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? கூட, அவர் குறிப்பிடும் புத்தகங்கள், விபரங்கள் எதுவுமே இலக்கிய வாசிப்பாளனுக்கானது அன்று. தன்னை ஒரு எழுத்தாளர் என்று அவர் சொல்லிக் கொள்வதை நம்மால் ஒன்றும் செய்து விட இயலாது. இங்குதான் ஒரு வாசகன் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது என்கிறேன்.

மின் ஊடகங்கள் பெருகி இருக்கும் நவீனச்சூழலில், எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை விட கவிஞர்கள் மிகுந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான முகநூல் பக்கங்களில் இலட்சக்கணக்கான ‘கவிதைகள்’ தேம்பி அழுது கொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் கவிதைகள் என்றாலே அவைதான் எனும்படியான பொதுப்புத்தியும் உருவாகி விடலாம்.

ஒரு வாசகனுடைய முதல் வேலை வாசிப்பது அல்ல. எது வாசிப்பு என்பதைப் புரிந்து கொள்வதே அவனின் துவக்கமாக இருக்க வேண்டும். இலக்கிய வாசிப்பு, தத்துவ வாசிப்பு, அரசியல் வாசிப்பு என வாசிப்புகளைப் பகுத்தறியவும் பழக வேண்டும். வாசிப்பு, சமூகத்துக்கும் நமக்குமான புதிர் உறவை விடுவிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறது; ஒருபோதும் முடித்து வைக்காது. அதனால்தான் வாழ்நாளின் இறுதிவரை ஒருவன் வாசகனாக இருந்து கொண்டே இருக்கிறான்; வாசித்துக் கொண்டே இருக்கிறான்.

படிக்கும் காலத்தில் எனக்கு இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாது. கதைகள்தான் தெரியும். கல்லூரியில் நான் வாசித்த சில சிறுகதைகளையும் நான் இலக்கியம் என்று அறிந்தேனில்லை. கல்லூரிக் காலத்தில் சுஜாதாவும் பாலகுமாரனும் என்னை ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்களின் நாவல்களை இலக்கியம் எனப் பலர் சொன்னார்கள். நானும் அப்படியே நம்பினேன். பாலகுமாரனைப் படிக்கிறவன் என்றாலே அப்போது தனிமரியாதை. தொடர் வாசிப்பின் ஊடாகவே, இலக்கியத்தின் இலக்கணம் புரிபடத் துவங்கியது. பெரும்பாலான நாவல்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் ஜல்லி அடித்திருக்கிறார்கள் என்றும் விளங்கியது. அதற்காக அவர்களை நான் குறைசொல்லிவிட மாட்டேன். இலக்கியத்தை வந்தடைய அவர்கள்தான் வழிகாட்டிகள். எல்லோருக்கும் அப்படியான பாதையே அமைய வாய்ப்பு இருக்கிறது. மீண்டு வருகிறோமா அல்லது தேங்கி மூழ்குகிறோமா என்பதுதான் டிவிஸ்ட்.

இலக்கியத்தையும் வசதி கருதி பலவாகக் கூறுபோட்டிருக்கிறோம். பயண இலக்கியம், வணிக இலக்கியம், சரித்திர இலக்கியம், சிறுவர் இலக்கியம் என வகைமைகளாக அடுக்கி ஆயிரக்கணக்கான ஆக்கங்களைக் குவித்து வைத்திருக்கிறோம். இவற்றில் எது ‘இலக்கியம்’ என்பதைக் கண்டறிய வாசகன் மெனக்கெட்டே ஆக வேண்டும். தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளும், ஜெயமோகனின் பயண அனுபவங்களும் ஒன்றல்ல என்பது பிடிபட வேண்டும். மேத்தாவின் கவிதையும், விக்ரமாதித்யனின் கவிதையும் வேறுவேறு என்ற தெளிவு அமைய வேண்டும். சோவின் அரசியல் கட்டுரைகளும், ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வுக்கட்டுரைகளும் எப்பின்னணியில் கருகொண்டவை என்ற தெளிவு வேண்டும். கவிஞர் சோதியின் சிறுவர் நாவலும், அந்த்வானின் குட்டி இளவரசன் நாவலும் ஒரே வகைமையில் ஆனவை அல்ல என்ற கவனம் வேண்டும்.

ஒரு நல்ல படைப்பை அடையாளம் கண்டுகொள்ள சில அவதானிப்புகளைச் சொல்கிறேன். முதலில், எது அதிகம் பேரால் பகிரப்படுகிறதோ அது நல்ல படைப்பாக இருக்க வாய்ப்பே இல்லை. இரண்டாவது, ஒரு நல்ல படைப்பு பெரும்பாலும் நம்மைத் தேடி வராது; அதைத்தான் நாம் தேடிச் செல்ல வேண்டும். வேறுவிதமாகச் சொல்வதானால், வாசிக்கச் சுலபமாய் இருக்கும் ஆக்கங்கள் பெரும்பாலும் குப்பைகளாகவே இருக்கும். வாசிக்கச் சிரமம் தருபவையும், பல்துறை ஞானத்தைக் கோருபவையுமே நல்ல படைப்புகளாக இருக்கும். மூன்றாவது, வாசித்து முடிந்தவுடன் மறந்து போவது நல்ல படைப்பாக இருக்க வாய்ப்பில்லை அல்லது தற்காலிக மகிழ்ச்சியைத் தருவதும் நல்ல படைப்பாக இருக்காது.

செயற்கை நுண்ணறிவு கோலோச்ச இருக்கும் எதிர்வரும் ஆண்டுகளின் வாசகர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஏன் என்றால், எங்கள் தலைமுறையோ பாலகுமாரனின் நாவல்களைத்தான் இலக்கியம் என நம்பியது. ராஜேஷ்குமார் போன்றோரின் நாவல்களைக் கூட ஒதுக்கி வைக்கும் காலம் வந்தாலும் வரலாம். அப்படியெல்லாம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என எல்லாம் வல்ல கூகிள் ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்

சுஜாதா அறிமுகம்

முந்தைய கட்டுரைமெய்யியலும் வரலாற்றாய்வும்
அடுத்த கட்டுரைLast Machine