பின்தொடரும் நிழலின் குரலின் முன்னுரை

பின் தொடரும் நிழலின் குரல் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அது முதன்முதலில் தமிழினி வெளியீடாக 1999ல் வெளிவந்தபோது எழுதிய முன்னுரை இது

வணக்கங்களும் நன்றிகளும்

ஒரு படைப்பிலக்கியம் கண்ணுக்குத் தெரியாத நதியொன்றின் கண்ணுக்குத் தெரியும் சிறு பகுதி. வணக்கங்களும் நன்றிகளும் உண்மையில் அந்தப் பிரவாகத்தை அடையாளம் செய்யும் முயற்சியே.

என் அம்மாவின் அண்ணா மறைந்த கேசவபிள்ளை அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். கட்சி உடைந்தபோது வலது கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போனார். சிறு பெண்ணாக என் அம்மாவுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பழக்கமும் சித்தாந்த அறிமுகமும் இருந்தது. அது அவளை ஒரு முதல்தர வாசகியாக்கியது. அவர்களைப் பற்றிய பற்பல சித்திரங்களை அம்மாவிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அவற்றில் ஒன்று கட்சியால் வெளியேற்றப்பட்டு மார்த்தாண்டம் சந்தையில் அனாதைப் பிச்சைக்காரனாக இறந்த இளம் கவிஞனின் கதை.

என் அரசியல் ஈடுபாட்டின் இரண்டாம் கட்டமாக 1984 முதல் 1986 வரை கேரளாவில் காசர்கோடு நகரில் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் மிகப்பெரிய கம்யூனில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. சித்தாந்த வகுப்புகளில் பங்கு பெறவும் பல மூத்த தோழர்களுடன் உரையாடவும் சந்தர்ப்பம் அமைந்தது. கம்யூனில் இருந்த சிறந்த நூலகத்தின் கம்யூனிச இலக்கிய சித்தாந்த நூல்களில் கணிசமானவற்றைப் பயிலவும் முடிந்தது. அதைவிட முக்கியமானது கம்யூனில் இரவுதோறும் நிகழும் நீண்ட விவாதங்கள். விடியும்வரை பேசிவிட்டு கறுப்பு டீ சாப்பிட சந்தைக்குப் போவோம். கூட்டமாக விவாதம் செய்தபடி தெருக்களில் நாங்கள் நடக்கும் சித்திரம் மனதில் எழுகிறது. நம்பிக்கையும் ஆர்வமும் போதையேற்றியிருந்த நாட்கள். தோழர்கள் நந்தகுமார். பரதன், கெ.ஜி.ஜான், நாராயண நாயக், கெ.வி.சந்திரன், கெ.கெ.வி.நாராயணன் ஆகியோரை நட்புடன் நினைவு கூர்கிறேன். முற்போக்கு எழுத்தை அறிமுகம் செய்த நண்பர் அப்துல் ரசாக்கையும் (ரசாக் குற்றிக்ககம்). குறைந்த காலம் கட்சியின் முதல்நிலை உறுப்பினராக இருந்தேன் எனினும் அது எனக்கு உவப்பூட்டும் அனுபவமாக இருக்கவில்லை.

இடதுசாரி அறிவுலகில் இத்தனை பரிச்சயம் இருந்தும் ஸ்டாலினிச அழிவுகள் பற்றிய எளிய தகவல்கள்கூட எனக்கு சுந்தர ராமசாமியின் அறிமுகம் மூலமே கிடைத்தன. பிற்பாடு அவர் மகன் கண்ணனுடனான உரையாடல்கள் உதவின. பிறகு நூல்கள். நூற்பட்டியலை இங்கு தர விரும்பவில்லையென்றாலும் சேரன் தொகுத்த ‘ரெஜிசிரிவர்த்தனே’யின் சோவியத் ருஷ்யாவின் உடைவு என்ற கட்டுரை நூல் இந்நாவலுக்கு நேரடியான தூண்டுதலாக அமைந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.

சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா. ஞானி ஆகியோருடனான நட்புக்கு இந்நாவலின் ஆக்கத்தில் மறைமுகமான பெரும் பங்கு உண்டு. மூவருமே கம்யூனிச இயக்கத்தில் பங்காற்றி மீண்டவர்கள் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனது எல்லா படைப்புகளும் அவர்களுடனான உறவின் விளைவுகளே.

டாக்டர் எம்.கங்காதரன், பி.கெ.பாலகிருஷ்ணன், கே.சச்சிதானந்தன் முதலிய மலையாளச் சிந்தனையாளர்களுடனான உரையாடல்களும் கடிதங்களும் எனக்கு பல திறப்புகளை அளித்துள்ளன. எம்.கோவிந்தனின் ஆளுமை எனது அரசியல் பிரக்ஞையில் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. குறைந்த தருணங்களிலேயே அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரது எழுத்துக்கள் என்னை அதிகம் கவர்ந்ததுமில்லை, எனினும் எப்படி இது நிகழ்ந்தது என்பது புரியவில்லை. படைப்பாளியின் அரசியல் வேறு வகையானது என்ற செய்தி அவரிடமிருந்து அவரது தொடர்ச்சிகளான சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா ஆகியோர் வழியாக எனக்கு வந்திருக்கலாம். தர்க்கத்தை உதறி உள்ளுணர்வைச் சார்ந்து நிற்கும் அரசியல் அது. அதிகாரத்திற்குப் பதிலாக கருணையை இலக்காகக் கொண்டது.

இலங்கைக் கவிஞர்கள் பலருடைய வரிகள் – பல சமயம் எளிய வரிகள்கூட – எனக்கு மிகுந்த மன உத்வேகத்தை அளித்துள்ளன. இந்நாவலின் பல பகுதிகளைப் படிக்கையில் அவர்களுடைய உணர்வுநிலைகளின் நீட்சியைக் காணமுடிகிறது.

இந்நாவலின் பிரதியைச் சரிபார்த்த நண்பர் எம் எஸ். அவர்களுக்கு நன்றி.

எழுதத் தொடங்கினால் தடைகளின்றி எழுதுவது என் பாணி. ஒரு கட்டுப்படுத்தும் முன்னிலையாக எப்போதும் அருண்மொழி நங்கை இருந்து வந்திருக்கிறார். இந்நாவலில் நண்பர் வசந்தகுமார் ஒரு தூண்டும் முன்னிலையாக விளங்கினார். அவர் இல்லையேல் இந்நாவல் இவ்வாறு விரிவு கொண்டிருக்காது. இருவருக்கும் என் மனம் நிறைந்த அன்பு.

இதன் கரு விரிவடையத் தொடங்கும் நேரத்தில் இயல்பாக என் மனதில் விரிந்த இரு குறள்கள் மெல்ல மெல்ல என் தியான மந்திரங்களாக மாறின. மீண்டும் மீண்டும் அவற்றை மனதில் ஓடவிட்டபடி தக்கலை பத்மநாபபுரம் சாலையில் வேகமாக நடக்கும் தருணங்களில் அறச்சீற்றத்துடன் என் மனம் பொங்கும். அல்லது குற்றவுணர்வுடன் சரியும், அபூர்வமாக ஆழ்ந்த துயரத்தில் தன்னை இழக்கும். எழுதி முடித்தபின்பு இப்போதுகூட அவ்வரிகள் அதேயளவு தீவிரத்துடன் என்னை அதிர வைக்கின்றன. இன்னும் ஒரு நாவலை அவற்றிலிருந்து படைத்துவிடலாம் என்று மனம் தாவுகிறது. நமது அறவுணர்வின் சாரமாக என்றுமிருப்பவை வள்ளுவ மாமுனியின் சொற்கள்.

ஆளற்ற தேவாலயங்களின் சாளரங்களில் காற்று பீறிடும் ஓங்காரமாக கிறிஸ்துவை இளவயதில் அறிந்ததுண்டு. எனது கிறிஸ்துவிற்கு முகம் தந்தவர் தல்ஸ்தோய். என் அகங்காரம் மண்டியிடும் ஒரே இலக்கிய ஆளுமையும் அவர்தான். இந்நூல் அவருக்கும் அன்னா புகாரினினாவுக்கும் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. தல்ஸ்தோய் எழுதாத அவருடைய மாபெரும் கதாபாத்திரம் அன்னா புகாரினினா. பெரும் படைப்புகள்தான் வாழ்வை உருவாக்குகின்றன.

புதிய விஷ்ணுபுரம் பதிப்பு

அவர்களிருவருக்கும் சமர்ப்பணம் செய்யத் தகுதி படைத்ததே இந்நாவல் என்று இதை முடித்த கணம் தோன்றியது. இத்தகைய நிறைவின் தருணங்களே படைப்பாளியைத் தன் வாழ்வு குறித்து திருப்தி கொள்ள வைக்கின்றன. தன் பலவீனங்களையும். சிறுமைகளையும், கர்வத்தையும், மூர்க்கத்தையும் சமநிலையின்மையையும் மன்னித்துக்கொள்ள வைக்கின்றன. அவனை நம்பிக்கையின் உச்சியில் சில கணங்களுக்கேனும் நிறுத்துகின்றன. அப்படிப்பட்ட தருணம் இது.

வணக்கத்துடன்

ஜெயமோகன்

பத்மநாபுரம்

26-08-1999

பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீட்டின் முன்னுரை

பழைய சுழல்

முந்தைய கட்டுரைபுனைவுக்களியாட்டு- தொகுப்புகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன -உஷாதீபன்