எழுத்தாளனுக்கு எழுதுவது…

கடிதம் புதுமைப்பித்தனின் கதை

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? சமீபத்தில்தான் புதுமைப்பித்தனின் “கடிதம்” என்ற சிறுகதையை வாசித்தேன். அவரது சிறந்த சிறுகதையென்று அதை கருதமுடியுமா? அது சிறுகதையா? போன்ற புறவயமான மதிப்பீடுகளுக்கு அப்பால் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த சிறுகதைகளில் ஒன்று அது.

நான் கடந்த இரண்டு வருடங்களில் வாசித்த இலக்கியத்தின் அளவு நான் அதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக வாசித்திருந்த புத்தகங்களின் அளவைவிடவும் அதிகம். ஆனால் இவற்றில் பெரும்பாலான புத்தகங்களைப் பற்றி நான் ஒரு வரிகூட எழுதவோ பதிவிடவோ இல்லை. எழுதிய குறைந்தபட்ச குறிப்புகளையும் என்னிடமே வைத்துக்கொண்டேன், அந்த புத்தகத்தைப் பற்றிய ஒற்றை வரி குறிப்பையும்கூட நான் எழுத்தாளருக்கு அனுப்பவில்லை.

இத்தனைக்கும் தமிழின் முன்னோடிகளையும், என் தலைமுறை எழுத்தாளர்களையும் ஓரளவுக்கேனும் சமமாக வாசித்துவிட முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் எந்த எழுத்தாளரிடமும் அந்த படைப்புகளைப் பற்றி எழுத்திலோ, பேச்சிலோ ஒரு சொல்லும் நான் சொல்லவில்லை. என் மனதில் ஒவ்வொரு நாளும் உரையாடிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் மிகக் குறைந்த அளவு கடிதங்களையே எழுதி இருக்கிறேன்.

விஷ்ணுபுரம் விழாவில்தான் முதல் முறையாக நீங்கள் அல்லாத பிற எழுத்தாளர்களிடம் உரையாடும் துணிவே எனக்கு வந்தது. ஆனால் அதற்கு பிறகும் மீண்டும் உரையாடல்களை நிறுத்திக்கொண்டேன். “கடிதம்” வாசித்தபொழுது புதுமைப்பித்தன் என்னை நோக்கி பேசுவது போன்ற உணர்வை அடைந்தேன். அது வரையில் என் அமைதியே நான் எழுத்தாளருக்கு அளிக்கும் மரியாதை என்று நினைத்திருந்தேன். என் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது என்றும் அவற்றை எழுத்தாளரோடு பகிர்வது என் அகங்காரத்தின் வெளிப்பாடாகவே அமையும் என்றும் நினைத்திருந்தேன்.

ஆனால் அந்த சிறுகதை என் எண்ணங்களை மாற்றியது. அதில் வெளிப்படுவது புதுமைப்பித்தனின் வலி. என் அமைதி நான் எழுத்தாளருக்கு அளிக்கும் மரியாதை அல்ல அது அவரை நிராகரிப்பதற்கு நிகரான செயல் என்று உணர்ந்தேன்.

“புகழ் இல்லாமல் இலக்கிய கர்த்தா உயிர் வாழ முடியாது. முகஸ்துதி வேண்டாம். இல்லாததை நீங்கள் சொல்லிவிட வேண்டாம். செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது!”

என்ற வரிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அந்த கதையின் பாதிப்பிலேயே இனி என்னை பாதிக்கும் படைப்புகளைப் பற்றிய சிறு குறிப்புகளையேனும் எழுதுவது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

அப்படி எழுதாவிட்டாலும் அந்த படைப்பாளியிடம் ஒரு தொலைபேசி அழைப்பிலாவது உரையாடவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சிறந்த கலைஞனுக்கும் படைப்பாளிக்கும் இப்படியான எதுவுமே தேவையில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அதைச் செய்வது என் கடமை என்றே நினைக்கிறேன்

என் பெயர் வேண்டாம்.

ஏ.

அன்புள்ள ஏ

உங்கள் பெயரை தவிர்ப்பது நல்லதே. நீங்கள் ‘கருணையால்’ எழுதியதாக புதுமைப்பித்தன் கதையில் வரும் ஆசிரியர் எண்ணியதுபோல எழுத்தாளர்கள் எண்ணிக்கொள்ளக்கூடும்.

நீங்கள் இதுவரை பேசாமலிருந்தது நீங்கள் பேசுவதற்குத் தயாராகவில்லை என்பதனால்தான். உங்கள் தயக்கம் நீங்கள் சொற்களை, கருத்துக்களைக் கோத்துக் கொள்ளவில்லை என்பதனால் மட்டுமே. உங்கள் தன்னிலையாக ஒரு விளக்கத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.மற்றபடி அந்த விளக்கத்தில் எப்பொருளும் இல்லை.

நீங்கள் எழுத்தாளர்களிடம் உரையாடுவதென்பது இரண்டு காரணங்களுக்காகவே தேவையானது.

ஒன்று, இங்கே ஓர் அறிவியக்கம் நிகழவேண்டும் என்றால் அதற்குரிய பொது உரையாடல் நடந்துகொண்டிருக்கவேண்டும். நீங்கள் அதில் பங்கெடுக்கையில் அது உயிருடன் இருக்க தேவையான ஒன்றைச் செய்கிறீர்கள்.

இரண்டு, உங்கள் அகவுலகை செம்மை செய்துகொள்ள நீங்கள் வெளிப்பட்டும் ஆகவேண்டும். உள்ளே செல்லும் சொற்கள் திரும்பி வருகையிலேயே அவை நம்முடையவை. இலக்கியம் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் இலக்கியத்தை ஆழமாக அறியும் வழி.

மூன்றாவதுதான் எழுத்தாளர் அடையும் ஊக்கம். அது தேவைதான், ஆனால் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல. எழுத்தாளர்கள் எதிர்வினையே இல்லை என்றாலும் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எதிர்வினைகளால் எழுத்து மேம்படுவதுமில்லை.

ஆனால் எதிர்வினைகள், உரையாடல்கள் ஒரு தனிமனிதனாக எழுத்தாளனை ஊக்கமும் மகிழ்வும் கொண்டவனாக ஆக்கும்.

சிலவற்றை கவனிக்கவேண்டும்

அ.பொய்யாகவோ சம்பிரதாயமாகவோ புகழாதீர்கள். அது ஊக்கமூட்டல் அல்ல. பலசமயம் எழுத்தாளனை எரிச்சலடையச் செய்வது.

ஆ. கடுமையாகக் கருத்து சொல்கிறேன் என தடாலடியான, தர்க்கமற்ற மறுப்புகளைச் சொல்லாதீர்கள். உங்கள் கருத்தை நிதானமாக தர்க்கபூர்வமாகச் சொன்னாலொழிய அதனால் பயனில்லை.

இ. ஒரு படைப்பின் நுட்பம் எதுவோ அதை தொட்டுணராதவன் சொல்லும் எதிர்மறைக் கருத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆகவே எதிர்கருத்து சொல்வதென்றால் அந்த நூலின் அதிகபட்சத்தை நீங்கள் உள்வாங்கிவிட்டதாக வெளிப்படுத்துங்கள்.

ஈ. எழுத்தாளன் என்ன வகையாக எடுத்துக்கொண்டாலும் நீங்கள் எழுதுவது ஓர் அடிப்படையான அறிவியக்கச் செயல்பாடு, ஓர் உரையாடலின் ஒரு தரப்பு என்னும் உணர்வுடன் இருங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஇந்தப்பக்கம் நோபல்!
அடுத்த கட்டுரைசுடலைப்பொடியின் பசுந்தழை நறுமணம் – அகரமுதல்வனின் மாபெரும் தாய்