தேவியும் சில கதைகளும் -கடிதங்கள்

புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள்

புனைவுக் களியாட்டு நூல்கள் புத்தகக் கண்காட்சியில்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டு சிறுகதைகளில் அச்சுவடிவில் வந்தவற்றை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். தேவி தொகுதி இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். மின்னூலாக என்னிடம் அது உள்ளது. அதை நண்பருக்கு அனுப்பவேண்டும். அதற்கு அச்சுப்பிரதி தேவை.சீக்கிரம் வருமென நினைக்கிறேன்

தேவி ஓர் அருமையான தொகுதி. அந்த மையக்கதை உட்பட எல்லாமே அழகு. அது பெண்மையின் ஜாலத்தை. சூழ்ச்சியை, கருணையை எல்லாம் சொல்லும் கதைகள் அடங்கியது. தேவி என்ற தலைப்பு அவ்வகையில் மிகப்பொருத்தமானது

முதுநாவல் தொகுதியிலுள்ள நற்றுணை கதையையும் அதில் சேர்த்திருக்கலாமோ என நினைப்பேன்

எம்.ஆர்.கணேஷ்

 

வணக்கம். தேவி சிறுகதை வாசித்தேன். ஒரு பெண் கதாபாத்திரம் போதும் என துவங்கும் கதை, ஒரே பெண் மூன்று கேரக்டர் செய்கிறாள்  என விரிந்து, உண்மை அவள் மட்டும் என்பதால் மீண்டும் ஒரு பெண் ஆகிறாள்.. ஆரம்பத்தில் எல்லாம் ஒன்று.. இடையில் ஆசைகள் எதிர்பார்ப்புகளால் பலவாகி மீண்டும் அந்த ஒன்றே ஆகும் என்ற  ஆன்மீக தத்துவத்திற்கு செல்ல வைக்கிறது தேவியின் மூன்று முகங்கள்.

ஆரம்பத்தில் நகைச்சுவைகளைத் தெளித்து நகரும் கதை, தேவியே மூன்று நடிகைகளாக மாறும் கணத்தில் பரபரப்பாகி விடுகிறது… கிருஷ்ணரே தம் பக்கம் இருந்தும் தோற்போமோ எனும் அச்சம் ,தடுமாற்றம் பாண்டவர்களுக்கு இருந்தது போல, நடிப்பு ராட்சசி அருகில் உள்ளோம் என்பது அறியாது அனந்தன் வில்லி பாத்திரம் தொலைந்து விட்டதே என கலங்குகிறான்… ஆனால் இன்னும் இரண்டு கேரக்டர் கொடுத்தாலும் அவள் நடிப்பாள் என்பது வாசகனுக்குத் தெரியும் .

தேவி எனும் அந்த மாபெரும் நடிகை எதிர்பாராத அந்த வட்டி ராஜம்மையாகவும் வாழ வேண்டும் என்றதும் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் நிகழ்வுகள் இருக்கை நுனிக்கு நகர்த்துகின்றன.. தொழில் அனுபவம் மேக்கப் மேனிடமும் அநாயசமாக வெளிப்படுகிறது… ஒரு கிளிப் இருக்கு.. வாய்க் குள் வைத்திட்டால் தாடை இழுபட்டு ஆளே வேறாகிடும் என சொல்லி மூன்று பெண்களை ரசிகர்களுக்குக் காட்சியாக்குகிறார் மேக்கப்.

அனந்தனில் என்னைக் கண்டேன்… பள்ளி, பயிற்சிக் காலம், தற்போது ஆசிரியர் என சில நாடகங்களை உருவாக்கி இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு.. நாடகம் நெருங்க நெருங்க எங்கு ஏன் போகிறோம் என தெரியாது அலைந்து கால் வலித்து அனந்தன் போல நானும் உட்காந்தெல்லாம் உள்ளேன்.

லாரன்ஸ் கடைசியாக தேவியின் காலில் விம்மலோடு விழும் போது நானும் விழுந்தேன்…. தொடர் பயிற்சியை ஒரு தொழிலில் பெற்றவர்கள் தன் தொழிலையாற்றும் போது நமக்கு அது கடினமாகத் தெரியும்.. அவர்களுக்கு அது சாதாரணம்.. காரணம் தொடர்பு பயிற்சி அனுபவமே.. ஒரு நெருக்கடியை தேவி தன் தொழிலில் சந்திக்கிறாள்… அவ்வளவே என பிறகு தர்க்க மனம் விழிக்காமலும் இல்லை.

மூன்று பொம்பள கேரக்டர்  அவசியம் வேணும் என ஆரம்பத்தில்  வாதாடும் பெட்டி சாய்பு ரசிக நாடி உணர்ந்த கலைஞன்.எலே.. நீ நாடகத்தில் நடிக்கியால… இல்ல …நான் தான் எழுதினேன்… நாடகத்த யாராவது எழுதுவானா… நடிக்கனும்ல… தெரியாம எழுதிட்டேன் இனி எழுதல… என்ற அம்மச்சி அனந்தன் பேச்சு குபீர் சிரிப்பை வர வைத்தது. குன்னக்குடியை, காருக்குறிச்சியாக ரசித்து பாராட்டி செல்லும்  பெரியவர் சிரிப்பிற்கு உத்தரவாதம்.

ஆன்மீகம், லௌகீகம், எனது அனுபவம் என நல்லதொரு  வாசிப்பாக அமைந்தது தேவி

முத்தரசு

வேதாரண்யம்

முந்தைய கட்டுரைஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன -உஷாதீபன்
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல்- மறுபதிப்பு