அருண்மொழி உரை -கடிதம்

 

அருண்மொழி நங்கை விழா- உரைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

அருணாவின் ’’பனி உருகுவதில்லை’’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர விரும்பினேன் எனினும் சென்னைக்கு வருவதென்பது இன்னுமே வேற்று கிரகத்துக்கு பயணம் செய்வதை போலவே சாத்தியமில்லாததாக இருக்கிறது. ஆனால் விழாவின் காணொளிகளை பார்த்தேன். யுவன், சாரு மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் உரைகளும் சிறப்பாக இருந்தன.

அருணாவின் ஏற்புரையை தேர்தல் பணியின் போது வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வர காத்திருக்கையில் அந்த குக்கிராமத்து பள்ளியின் ஏராளமான வேப்பமரங்களினடியில் அமர்ந்து கேட்டேன். அருணாவின் முந்தைய பேய்ச்சி உரைக்கும் இதற்கும் வித்தியாசம் இருந்தது.பேய்ச்சி உரை மரபான மேடை உரை அதையும் தனது இயல்பினால் அழகிய பாவனைகளுடன் பேசினார்கள்.

பனி உருகுவதில்லை ஏற்புரையில்  அருணா முதலில் சிறப்பு விருந்தாளிகள் பற்றி சொல்ல போகையில் எதற்கு அதை சொல்கிறார்கள் என்று முதலில் நினைத்தேன்.  ஏனெனில் வழக்கமான ஏற்புரைகள், தான் அதை எழுத காரணமாயிருந்தவைகள், இருந்தவர்கள், எழுதுகையில் நிகழ்ந்தவை, உணர்ந்தவை உண்டான தடங்கல்கள், நிகழ்வுகள் என்றிருதானிருந்தது அதுநாள் வரைக்கும்.

ஆனால் அருணா மிக அழகாக முகம் கொள்ளா சிரிப்பும் தோழமையுமாக சாருவை குறித்தும் யுவனை கோபாலகிருஷ்ண சாரை குறித்தும் சொல்லிக்கொண்டிருகையிலேயே தான் அந்த பதிவுகளை எழுதுகையில் அவர்களுடன் விவாதித்ததையும்  கலந்து சொல்லி அந்த துவக்க பகுதியை மிக அழகாக்கி விட்டார்கள்.

வழக்கம் போல அபிநயங்களுடன்  ரசிக்கும்படியான பேச்சுத்தான் எனினும் இந்த முறை சீரான பலவரிசை தெரியும்படி பலத்த சிரிப்பும் புன்னகையுமாக அருணா பேசியது மிக அருமையாக இருந்தது. மேடை உரையை போலவே இல்லாமல் வீட்டு கூடத்தில் அமர்ந்து அருணாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும் உணர்வுதான் இருந்தது முழு உரையை கேட்கையிலும்

அருணாவின் உடல் மொழியிலும், பேச்சிலும் மகிழ்விலும் தெரிந்தது தன்னம்பிக்கை தான். அதுவே அவரின் உரையை மிக சிறப்பாகவும் அழகாகவும் ஆக்கிவிட்டிருந்தது. அவரின் சொந்த படைப்பு, அவரின் சொந்த வாழ்க்கை, அவரின் பால்யம் என்பதால் அதை உளமாற பேசினார். ஒரு எழுத்தாளரின் மனைவி என்னும் அடையாளத்தை வைத்துக் கொண்டு அருணா இதை எழுதியிருக்கிறார் என்று யாரேனும் நினைதிருந்தாலும் இந்த உரை அவர்களுக்கான பதிலாக இருந்திருக்கும்.

தயக்கமே இல்லாமல் அருணா பேசியவற்றில் அவரது நினைவாற்றல், அவரது வாசிப்பு பின்புலம், அவர் எவ்வாறு உரையாடல்களை கட்டமைத்தார், எப்படியான  படைப்புக்களை தன் எழுத்துக்கு முன்னுதாரணங்களாக கொண்டார்,  தன் கட்டுரைகளை எப்படி வடிவமைத்தார், ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர் எத்தனை கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதையெல்லாம் கேட்கையில் ஆச்சர்யமாக இருந்தது ஏதோ தனக்கு நிகழ்ந்தவற்றை அப்படியே எழுத்தில் கொண்டு வந்ததல்ல இந்த பதிவுகள். அருணாவின் உழைப்பையும் ரசனையும் அவருக்குள்ளிருக்கும் எழுத்தாளரையும் அவரது கலை மனதையும்  அடையாளம் காட்டும் பதிவுகள் அவை.

தவழ்ந்து வரும் குழந்தையை சற்று  தொலைவில் இருந்து பார்க்கும் சிறுமி அருணாவை எழுத்தாளர் அருணா பிரிதொரு புலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததையும், காலத்தின் சாராம்சத்தை செறிவாக்கியதையும் அவர் சொன்னபோது ஆச்சர்யமாக  இருந்தது.

அதைபோலவே குடும்ப உறுப்பினர்களின் பிரத்யேக ’’ஆளுமைகளை கணக்கிட்டு அவற்றிற்கு தக்கவாறு நான் என் எழுத்தை நிகழ்த்தினேன்’’ அன்று சொன்னதும்தான்.

அருணா விவரித்த அழகுக்காகவே நான் மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் வாசிச்கவிருக்கிறேன்.

மரபான மேடைப்பேச்சுக்களின் பிடியில் அகப்படாமல் அவருக்கெ உரித்தான விரைவும் இயல்பும் கலந்த இயலபான உரையை அருணா அன்றளித்தார். அவரது உடையும் மிக பொருத்தமாகவும் கண்ணியமாகவும் இருந்தது.பனி உருகுவதில்லை வெளியீட்டு விழாவை  இனி எப்போது நினைத்துக் கொண்டாலும் அருணாவின்  புன்னைகையில் பூரித்திருந்த அந்த அழகிய முகம் நினைவுக்கு வரும்.

இந்த பதிவுகளை தொடந்து அன்றன்றைக்கு வாசித்தவள் என்னும் வகையில் அருணாவின் எழுத்துக்களோடு நானும் பயணித்துக்கொண்டிருந்தேன்.  அவற்றை வாசிக்கையிலும், மேடையில் அருணா பேச கேட்கையிலும் அவரின் இளமைப்பருவத்தில் நிகழ்ந்தவை எல்லாம் எனக்கே நிகழ்ந்தவைகள் போல் ஒரு மயக்கம்.  அஜி பள்ளிக்கு போய் வந்து சொல்லும் கதைகளெல்லாம் தனக்கும் நடந்ததாக, சைது சொல்வதைப்போல):

வீட்டில் புத்தக அலமாரியில் அருணாவிற்கென்று தனியே ஒரு புதிய பகுதியை ஒதுக்கி வைத்திருக்கிறேன். இனி வரப்போகும் அவரின் படைப்புக்களுக்காக அந்த இடம் காத்துக்கொண்டிருக்கிறது

அருணாவுக்கு அன்பு

லோகமாதேவி

அருண்மொழியின் நூல் வெளியீடு

அருண்மொழி விழா -கடிதம்

அருண்மொழி நூல் வெளியீடு -கடிதங்கள்

அருண்மொழி விழா, யோகேஸ்வரன் ராமநாதன்

முந்தைய கட்டுரைதந்தை மகன் உறவு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமெய்யியலும் வரலாற்றாய்வும்