உக்ரேன், உண்மை உருக்கப்படுவது பற்றி…

உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?

அன்புள்ள ஜெ

உக்ரேன் – ருஷ்ய பூசல் உருவாகி வலுப்பெற்று வரும் சூழலில் தமிழில் அந்த வரலாற்று முரண்பாடு பற்றி ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று தேடினேன். வழக்கமாக இதெல்லாம் எப்படி நடக்குமென்றால், இப்படி ஒரு பூசல் உருவாகும்போது அதையொட்டி ஆங்கில இதழ்களில் வரும் கட்டுரைகளை வாசித்து, அவற்றில் நம் அரசியலுக்கு உகந்ததை தேர்வுசெய்து, அவற்றையொட்டி நிலைபாடு எடுத்து எழுதுவோம், பேசுவோம். உக்ரேன் விஷயத்திலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

பொதுவான ஆர்வத்தால் எவராவது எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தேன். ஆச்சரியமாக, நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டிருக்கிறது என்னும் கட்டுரை உக்ரேன் -ரஷ்யா பூசலின் உண்மையை ஆழமாக சொல்லும் முக்கியமான கட்டுரை. வழக்கம்போல அதையும் இலக்கியம் வழியாகவே அணுகியிருக்கிறீர்கள். ஆனால் மிக ஆழமாக அந்த கலாச்சார அரசியல், அடக்குமுறை, பிரச்சாரம் ஆகிய அனைத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் அதில் ஆச்சரியமேதுமில்லை. நீங்கள் எழுதாமலிருந்தால்தான் ஆச்சரியம்.

நான் இப்போது நிகழும் இந்த பேச்சுக்களைப் பார்க்கிறேன். அவற்றில் இருக்கும் சார்புநிலை ஆச்சரியமளிக்கிறது. இடதுசாரிகள் கிட்டத்தட்ட மதநம்பிக்கையாளர்கள். மதவெறிபோலவே ’எங்காளு எதுசெஞ்சாலும் ரைட்டு‘ என்னும் நம்பிக்கைதான். புடின் கம்யூனிஸ்ட் இல்லை. கம்யூனிச எதிரி. ஆனாலும் அவர் பழைய சோவியத் ருஷ்யாவின் சாயம் உடையவர் என நினைக்கிறார்கள். நான் பலபேரிடம் பேசினேன். அவர்கள் எல்லாருமே அமெரிக்க எதிர்ப்புநிலைபாட்டை முன்வைத்தனர். எவருக்குமே எந்த அடிப்படைப்புரிதலும் இல்லை.

இச்சூழலில் உங்கள் கட்டுரை மிக முக்கியமானது. ருஷ்யா உக்ரேன் மேல் கொண்டிருப்பது ஆதிக்க உறவு. ஆதிக்கம் செலுத்திய வரலாறு இருப்பதனாலேயே அது உரிமையும் கொண்டாடுகிறது. உக்ரேனிய கலாச்சாரத்தை எப்படி ருஷ்யா அழித்தது, எப்படி மேலாதிக்கம் செலுத்தியது, உக்ரேனிய தேசியத்தை எப்படி ஒடுக்கியது என்பது திகைப்பூட்டுகிறது. சிமோன் பெட்லியூராவுக்கு என் அஞ்சலி. உக்ரேன் மக்களுக்கு என் ஆதரவு.

ஜே.ஆர்.சசிகுமார்

அன்புள்ள சசிகுமார்,

சென்ற முப்பதாண்டுகளிலில் உலகை அச்சுறுத்தும் ஆதிக்கசக்தி என்பது சீனா. ஆப்ரிக்க ஆசிய நாடுகளில் பலவற்றை அது கடன் வலைக்குள் சிக்கவைத்துள்ளது. எந்த மறைவும் இல்லாமல் அந்நாடுகளின் விமானநிலையங்கள், துறைமுகங்களை கைப்பற்றிக் கொள்கிறது. அந்நாடுகளை வறுமையில் ஆழ்த்தி, அந்நாடுகளில் போலி அரசுகளை உருவாக்கிச் சுரண்டுகிறது. வரலாறுகள் வந்துகொண்டே இருந்தன. கடைசியாக இலங்கை ஆக்ரமிக்கப்பட்டபோது நம் முகத்தில் அறைந்தன உண்மைகள். ஐ.எம்.எஃப் போலவோ ஆசிய வளர்ச்சி வங்கி போலவோ அல்ல சீனா, அப்பட்டமான நேரடியான சுரண்டல், ஆதிக்கம் கொண்டது.

ஆனால் அப்போதுகூட இங்குள்ள இடதுசாரிகள் அதை ஆதரித்தனர். எனக்குத் தெரிந்து சீன ஆக்ரமிப்பு பற்றி ஒரு வார்த்தை எழுதிய ஒரு இடதுசாரியை நான் எங்கும் பார்க்கவில்லை. இத்தனைக்கும் சீனாவில் கம்யூனிசமில்லை என தெரியாத ஒரு இடதுசாரிகூட இல்லை. அங்கிருப்பது அரசு முதலாளித்துவம். தொழில்நுட்ப ஆதிக்கம். ஆனால் அங்கிருந்து சிலருக்கு மறைமுக நிதி வருகிறது. பலர் வெறும் மதநம்பிக்கைபோல அடையாளங்களை நம்பி பின்னால் செல்லும் வெற்று மந்தைகள். சீனச் சூழியல் அழிவு அவர்களுக்கு பொருட்டல்ல. உய்குர் முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவது பொருட்டல்ல. சீனாவின் பெருமுதலாளித்துவமும் பொருட்டல்ல.

அதே நிலைபாடுதான் இங்கும். அமெரிக்கா ரஷ்யா என்றால் நாம் ரஷ்யாவை ஆதரிக்கவேண்டும், இவ்வளவுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல். உக்ரேன் ரஷ்யாவின் உடைந்த துண்டு அல்ல. அது ஆக்ரமிக்கப்பட்ட தேசியம். அதற்கும் ஐரோப்பிய ரஷ்யாவுக்கும் எந்த கலாச்சார ஒருமையும் இல்லை. அந்தப் பண்பாடு இழிவுசெய்யப்பட்டது. சிதைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டது. அது தன் விடுதலைக்காகப் போராடுகிறது. மீண்டும் மீண்டும் போலி அரசை அங்கே உருவாக்கி மறைமுக ஆதிக்கம் செலுத்துகிறது ரஷ்யா. அதற்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்குகிறது.

இங்கே உக்ரேனின் மாபெரும் கலாச்சார ஆளுமை, மக்கள் தலைவர், உக்ரேனின் தேசிய முகம் சைமன் பெட்லியூரா ஒரு போலி இலக்கிய நூல் வழியாக எப்படி இழிவுசெய்யப்பட்டார் என்பதை வீரம் விளைந்தது என்னும் நாவல் காட்டுகிறது. முழுக்கமுழுக்க பொய்யாக உருவாக்கப்பட்ட நாவல். அந்த ஆசிரியனுக்குக் கூட அதில் பெரிய பங்கில்லை. ஆனால் 220 மொழிகளில் பல லட்சம் பிரதிகள் வினியோகம் செய்யப்பட்டு உக்ரேனின் தேசியத்தலைவர் ஒரு கோழையாக, அற்பனாக கட்டமைக்கப்பட்டார். மறுகேள்வியே இல்லாமல் நாம் அதை விழுங்கினோம். எண்ணிப்பாருங்கள் நம் தலைவர்கள் அப்படிச் சித்தரிக்கப்பட்டிருந்தால் நாம் எப்படி அதை எடுத்துக் கொண்டிருப்போம்?

இடதுசாரிகளின் பற்று ஆச்சரியமளிக்கவில்லை. நேற்று கமிசார்கள் உற்பத்தி செய்த வீரம் விளைந்தது போன்ற போலி நாவல்களால் கட்டமைக்கப்பட்ட போலி நம்பிக்கை அவர்களுடையது.

ஜெ

முந்தைய கட்டுரைதே- ஓர் இலையின் வரலாறு- வெளியீடு
அடுத்த கட்டுரைநிமிர்தல் – கடிதங்கள்