
ஓணத்தில் புட்டு வியாபாரம்
அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரை படித்தேன். இந்த புட்டு வியாபாரத்தை ஏதோ பெரிய இலக்கிய கசரத் எடுப்பதுபோலச் செய்துகொண்டிருக்கிறார்கள். பரவலுக்கு எதிராக நிலைகொள்ளும் இணையதளங்களை இணைய இதழ்களை முழுமையாகவே புறக்கணிக்க வேண்டும். அவற்றைப் படிக்க வேண்டியதில்லை என்பதே என் எண்ணம்
ஓர் இணையதளம் வலப்பக்கச் சொடுக்கை தடை செய்திருந்தால் அந்த இணையதளத்தை உடனடியாக பிளாக் செய்யவேண்டும் என்றே நான் சொல்வேன். (அல்லது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அது வெளியிட்டிருக்கும் அத்தனை செய்திகளையும், தகவல்களையும் பொதுவெளியில் பகிருங்கள். சனியன்கள் ஒழிந்தால் எந்த தீங்கும் இல்லை). நான் அதைச் செய்கிறேன். எந்த வகையிலும் இணையத்தில் வெளியானவற்றை பிளாக் செய்ய முடியாது. ஒன்றும் செய்ய முடியாதென்றால் ஸ்க்ரீனில் இருந்து பிரிண்ட் அவுட் எடுத்து அல்லது பிடிஎஃப் ஆக்கி திரும்ப வேர்ட் ஃபைல் ஆக்கலாம். அவற்றை வேறு இணையப்பக்கங்களில் இலவசமாக பகிர்ந்து நிறைய குறிச்சொற்கள் கொடுத்தால் இரண்டாவதாக இந்த இலவசக்கட்டுரையைக் காட்டும். அவற்றை தேவையானவர்கள் பயன்படுத்தலாம்.
இங்கே ஒவ்வொருவரும் இன்னொருவரின் அறிவுச்செயல்பாட்டை அழிப்பதுதான் நோக்கம் என்று இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் மனநிலை எவருக்கும் இல்லை. ஆனால் இணையதளங்களில் வெளியிட இலவசமாக படைப்பு கேட்கிறார்கள்.
ராஜன் முருகேஷ்
அன்புள்ள ஜெ
அறிவுப்பரவலின் அறம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். சிற்றிதழ்களின் மனநிலை அது. சுந்தர ராமசாமி சொல்லிக்கொண்டிருந்தார். நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் காலத்துடன் அதெல்லாம் முடிந்தது. உங்களுக்கே தெரியும். பெருமாள் முருகன் கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்கு ஒரு கால அட்டவணை போட்டார். அதற்கு நிதியும் பெற்றிருப்பார். அந்த அட்டவணைக்குமேல் இன்னும் சில படைப்புகளை வெளியிட்டதற்காக அழிசி சீனிவாசன் மேல் புகார் செய்து அவர் வலையேற்றம் செய்து வைத்திருந்த 500க்கும் மேல் புத்தகங்களை அழிக்கவைத்தார். அவருக்கு அப்படி புகார் செய்ய உரிமையே இல்லை. நாட்டுடைமை ஆக்கப்பட்ட புத்தகம் அது. ஆனால் அமேசான் போன்ற நிறுவனங்கள் அதையெல்லாம் விசாரிப்பதில்லை. புகார் வந்தாலே உடனே பிளாக் செய்துவிடுகின்றன. அதை பயன்படுத்திக்கொண்டு பெருமாள் முருகன் போன்றவர்கள் பணவெறி கொண்டு செயல்படுகிறார்கள். இந்தச் சூழலில் நீங்கள் பேசும் வெளியீட்டு முறை, அறிவுலக அறம் என்பதற்கெல்லாம் என்ன மதிப்பு?
அ.ராமகிருஷ்ணன்