பேரன்புக்குரிய ஜெ அவர்களுக்கு,
ஒரு ஆகச்சிறந்த பயணத்தை நிறைவு செய்த பேருவகையுடன் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வெண்முரசை நான் வாசிக்க முடிவுசெய்த பல காரணங்களை கண்டறிந்தேன், அதில் மிக முக்கியமான ஒன்றாக என் நினைவுக்கு வந்தது “மகாபாரதம் நாவல் வடிவில்” என்ற இணைத்தலைப்பு வரி.
அவ்வரியில் முற்றிலும் ஈர்க்கப்பட்டு வெண்முரசு பற்றிய சில தகவல்களை தேடிப் பார்க்க ஒரு நாள் உங்கள் தளத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது என்னால் இவ்வளவு பெரிய தொலைவை எட்ட முடியுமா என்ற ஐயமும் எனக்கு இதில் இருந்து என்ன கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.
சரி வாசித்துதான் பார்க்கலாமே என்று முதற்கனலை கின்டிலில் வாங்கி வாசிக்க தொடங்கினேன். என்னால் நூறு பக்கங்களுக்கு மேல் வாசிக்க இயலவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டு வேறு எதையும் வாசிக்கலாம் என்று எண்ணத் தொடங்க மனம் மட்டும் திரும்ப திரும்ப வெண்முரசையே பிடித்துக் கொண்டிருந்தது. வெண்முரசு முழுவதும் வாசித்தால் எப்படி இருக்கும் என்ற உள்ளுணர்வு உருவானது.
அருண்மொழி நங்கை அம்மாவின் “வெண்முரசு ஒரு நுழைவாயில்” எனும் காணொளித் தொகுப்பு நான் வெண்முரசு வாசிப்பதை தொடங்க மேலும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. முதற்கனல் அதற்கு முன்பே சில அத்தியாயங்கள் வாசிக்க தொடங்கியிருந்தாலும் அக்காணொளியை கண்டு முடித்த போதுதான் நிச்சயம் வெண்முரசை ஒரு பயணமாக மேற்கொள்வது என்ற உறுதிபாட்டை எடுத்து மீண்டும் முதற்கனலை ஆதியில் இருந்து ஆரம்பித்து அந்தப் பயணத்தை தொடங்கி முதலாவினில் நிறைவு செய்தேன். நிறைவாக.
வெண்முரசு பயணத்தைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தியது நண்பர் குக்கூ ஸ்டாலின் தான். ஒரு வேளை நான் அவரை சந்திக்காமல் இருந்திருந்தால் எங்களுக்குள் நட்பு உருவாகாமல் இருந்திருந்தால் இந்த கடிதம் ஒரு போதும் நான் எழுதியிருக்க மாட்டேன் என்றே நம்புகிறேன்.
எங்களின் நட்பு உறுதி அடைந்ததற்கான முதற்காரணம் தங்களைப் பற்றிய ஒர் உரையாடலின் தொடக்கம் தான், அதுவும் முதல் சந்திப்பிலேயே. அவரின் உந்துதலின் பெயராலேயே நான் உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதினேன். அக்கடிதம் நான் முதன் முறையாக உங்களை பார்த்த அனுபவத்தை பற்றி எழுதியிருந்தேன்.
அச்சந்திப்பில் நான் வெண்முரசு வாசிப்பதை பற்றியும் உங்களை முதன் முதலில் நேரில் பார்த்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்ட போது அவர் மிகவும் உற்சாகமாக அவ்வனுபவத்தை பற்றி உங்களுக்கு ஒரு கடிதம் எழுத என்னை ஊக்கப்படுத்தினார். இன்றும் அவர் என்னை எழுத ஊக்கப்படுத்திய அத்தருணம் என் நெஞ்சின் ஆழத்தில் வேரூன்றியுள்ளது.
(எழுதுங்கள், ஜெ அதனை மிகவும் விரும்புவார். அதை விட அவர் நேசிக்கும் ஒன்றில்லை. நிச்சயம் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்).
நான் வெண்முரசில் தீவிரமாக பயணிக்கவும் ஆழமாக வாசிக்கவும் பேருதவியாக இருந்தது ஸ்டாலினுடனான அன்றைய உரையாடல்.
உங்களுக்கு ஏன் திடீரென மகாபாரதம் வாசிக்க தோன்றியது என்று என் மனைவி நான் களிற்றுயானை நிரை நிறைவு செய்யும் தருவாயில் என்னை கேட்டார். என் பதிலாக, முதலில் வெண்முரசு வாசித்தேன் என்பதை விட பயணித்தேன் என்றே நான் கருதுகிறேன்.
வெண்முரசு எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அனைத்தையும் என்றால் அனைத்தையும் தான். இது மிகைப்படுத்தி சொல்வதற்காக அல்ல எனக்கு நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அபரிமிதமான அனுபவம் வெண்முரசில் கிடைத்தது என்பதனை சொல்ல விழைகிறேன். அதேபோல் மகாபாரதம் பற்றிய என் புரிதல் முற்றிலும் மாறுபட்டு தெளிவான பார்வையை அடைந்த பேரானந்தம்.
பயணம் என்பது ஒரு இடத்தை இலக்காக வைத்துக் கொண்டு பயணிப்பது ஒரு சாராரின் ரகம். அனுபவம் என்ற ஒற்றை இலக்கை மட்டுமே அடைய பயணம் மேற்கொண்டு நிறைவடைவது மற்றொரு ரகம். என் இலக்காக நான் திட்டமிட்டு முடிவு செய்து பயணத்தை தொடங்கி நிறைவை அடைந்தது அனுபவத்தை நோக்கமாகக் கொண்ட முறையை தான்.
ஒரு பயணம் கொடுக்கும் அனுபவம் எப்போதும் நம்முள் ஆழப்பதிந்திருக்கும், நம்மை வடிவமைக்கும், நம்மை வளர்க்கும், உரிய நேரத்தில் இன்னல்களிருந்தும், குழப்பங்களிருந்தும் ஒருவரை மீட்டெடுக்க அப்பயண அனுபவங்கள் உதவும் என்பது என் நம்பிக்கை.
வெவ்வேறு வகையான மனக் குழப்பங்களில் இருந்தும், உளச்சிக்கல்களிருந்தும் விடுபட எனக்கு பேருதவியாக இருந்தது வெண்முரசு.
அழுத்தமான தத்துவங்கள், மிக நுண்ணிய வாழ்க்கை முறைகள், நெறிகள் பல உரையாடல்களில், கதாபாத்திரங்களில் கண்டடைந்து, கரைந்து, கடந்து பல இடங்களில் நான் பயணித்தேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் ஏதோ ஒரு இடத்தில் நானும் என்னை உடன் உணர்ந்துள்ளேன்.
சுயத்தை உணர்ந்து நம்மை நாமே முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் தருணத்தை போன்ற அனுபவம் அனைத்திலிருந்தும் விலகி நமக்கு ஓர் விடுதலை உணர்வை அளிக்கிறது. அப்படி பல தருணங்களை இப்பயணத்தினூடாக நான் அடைந்துள்ளேன்.
வெண்முரசு பயண அனுபவம் வெற்றிமுரசு கொட்டி கொண்டாடக் கூடிய பேரனுபவமாக அதை வாசிக்க எண்ணக் கூடிய அனைவருக்கும் அமையும் என்று நம்புகிறேன். வெண்முரசால் நான் என்னை அளவுகடந்து மீட்டெடுத்துள்ளேன், மேம்படுத்திக் கொண்டுள்ளேன் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்பெரும் படைப்பில் நான் உங்களுடன் பயணித்தேன், பயணத்தின் இடையே தங்களை நான்கு முறை நேரிலும் சந்தித்தது என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்கள். நன்றி என்ற ஒற்றைச் சொல் நிச்சயம் தங்களின் படைப்பிற்கு ஈடானதாக இருக்கும் என தோன்றவில்லை. ஆனாலும் ஆத்மார்த்தமான மிக நிறைவான பேரன்புடன் பிணைந்த நன்றிகளை தங்கள் கரங்களில் குவிக்கின்றேன்.
நிறைவும் நன்றியும் கலந்த
பேரன்புடன்
இரா.மகேஷ்