அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வெளியுலகில் இருந்து தனிமை படுத்தப்பட்டிருந்த பண்ணை நிலத்தினுள் புதிய வாசகர்களில் ஒருவனாக உள்ளே நுழையும் போது நினைக்கவில்லை வெளியேறும்போது மனதில் இத்தனை தெளிவு ஏற்பட்டிருக்கும் என்று.
இலக்கியத்தின் முதன்மை ஆளுமை அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது உண்மையில் வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்துக்கொள்ளும் அரிய அனுபவம் தான். சிறுகதையாக உருவாகாத படைப்பை இயற்றிய என் சுமார் சித்தத்திற்க்கு அவ்வாய்ப்பை அளித்ததற்காக நன்றிகள் கோடி தெரிவித்துக் கொள்கிறேன்.
விஷ்ணுபுரம் விழாவில் தங்களை இரண்டு நாட்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது முதல்முறை சந்திக்கும்போது ஏற்படும் தயக்கங்களில் இருந்து முற்றிலும் விடுபட உதவியாக இருந்தது. பொதுவெளியில் அறியமுடியாத ரகசியத்தை சொல்லி நிகழ்வை தொடர்ந்ததில் இருந்து இரண்டு நாட்களும் ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் பயனுள்ள தகவல்களை மட்டுமே தாங்கள் பேசியதில் ஏற்பட்ட தாகம் இன்னும் அடங்கவில்லை. அறிவியக்கம் செயல்படுவதே அந்த தீரா தாகத்தில் தான் என்று சொல்லாமல் உணர வைத்தீர்கள்.
கலையில் ஈடுபடுவது ஒரு மனிதனின் தனிப்பட்ட மனதிற்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் எவ்வகையில் பொருள் அளிக்கும். எத்துறையிலும் ஈடுபடுவதற்கு முன் ஏன் மூலநூல்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். குறைந்த நபர்கள் மட்டுமே வாசிக்கும் இச்சமூகத்தில் இலக்கிய கலந்துரையாடல்களில் பங்கேற்பதின் முக்கியத்துவம். அவ்வுரையாடல்களில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என்று பல எழுத்து வடிவங்கள் என்று மட்டுமல்லாமல். சுருட்டு, கத்திரிக்கா முதல் பௌத்தம், சமணம் என்று எதைப் பற்றிப் பேசினாலும் வரலாறு என்னும் கழுகின் மேல் அமர்ந்து பறந்து கொண்டு முழுப்பார்வையில் நுண்தகவல்களுடன் கருத்துகளை முன்வைக்கும் தங்களை அண்ணாந்து பார்த்து வியந்து கொண்டிருந்தேன்.
ரயில் பயணச்சீட்டுகளை ரத்து செய்வதில் தாங்கள் செய்த லீலைகளை பகிர்ந்து எழுத்தாளர்களும் சாதாரண மனிதர்கள் தான் என்று நிரூபிக்க முயன்றாலும் அவர்கள் அசாதாரணமானவர்கள் என்னும் பிம்பம் களைய கொஞ்சம் சிரமப் படுகிறது. நிகழ்வில் சாம்பார் சமைப்பது எப்படி என்று மட்டும் சொல்லித் தராமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியை சமைப்பது எப்படி என்றும் பல சிந்திக்க வைக்கும் வெடிச் சிரிப்புகளுடன் சொல்லித் தந்தீர்கள்.
மனித வரலாற்றிலேயே தற்போது உள்ளது போல் சிறந்த சூழல் இதற்கு முன் இருந்ததில்லை என்றும். இந்த அற்புதமான வாய்ப்புகள் நிறைந்த சமூக அமைப்பில் பிறந்துவிட்டு அதை குறை சொல்லிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க மறுப்பீர்கள் என்றால் அது யாருடைய பிரச்சனை? என்று கேள்வியுடன் தாங்கள் முன்வைத்த பார்வை மிக முக்கியமானது. இவை எல்லாம் சிறு துளியும் சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் வகையில் சோர்வே அறியாத ஒருவராக கண்முனே திகழவும் செய்தீர்கள் என்பது அதைவிட முக்கியமானது.
புதிய வாசகர்களின் படைப்புகளின் குறைகளை வைத்தே அமைந்த தங்கள் பெரும்பாலான உரையாடலில் வாசிப்பது எழுதுவது பற்றிய போதுமான வெளிச்சத்தை அளித்தீர்கள். அதை கொஞ்சம் கூட யாரையும் துன்புறுத்தாத வகையிலும் வயது வித்தியாசம் எதுவும் பார்க்காமலும் அனைவரையும் ‘ங்க’ உடன் தான் நேர்த்தியாகவும் கையாண்டீர்கள். எடுத்துக்காட்டுக்கு தங்கள் படைப்புகளை ஒன்றை கூட சொல்லாமல் பிற முதன்மை படைப்புகளை மட்டுமே சுட்டிக்காட்டினீர்கள். மேலும் தகவல்களை அறிய சில கட்டுரைகளை சொன்னதே தங்கள் எழுத்தென தாங்கள் சுட்டிக்காட்டியது என்று கண்டிப்பாக பதிவு செய்தே ஆகவேண்டும்.
“ஈஸ்டு தான் பெஸ்ட் வெஸ்டர்ன் பிலாஸஃபி குறைப்பட்டது” என்று ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன் என்று கொஞ்சம் கறாராக சொன்னதும். ஆன்மீகம் தத்துவம் போன்ற தளங்களில் கேட்பவர் மேலோட்டமாக பொதுப் புரிதலோடு கேட்கிறார் என்றால் அதை விரிவாகப் பேசாமல் இவ்வளவு குறைவாக அறிந்துகொண்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்று குறைந்த சொற்களில் கேட்பவருக்கே உணர வைத்துவிட்டு அமைதியாக அதைப் பற்றி மேற்கொண்டு பேசாமல் தவிர்த்ததும். அத்தளங்களில் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த கல்வியும் அதனால் அதற்கு தாங்கள் அளிக்கும் மதிப்பும் வெளிப்பட்ட தருணங்கள் அவை என்று எண்ணுகிறேன்.
இத்தகைய விஷயங்களில் குறைந்தது ஐந்து வருடமாவது கற்பதற்கு ஒதுக்கி ஒரு தகைமையை அடைந்தவர்களே தரமான உரையாடலை தங்களிடம் நிகழ்த்த முடியும் என்றும். ஒன்றை எப்படி அணுக வேண்டும், கிடைக்கும் தகவல்களை வைத்து எப்படி சிந்திக்க வேண்டும் என்பதும் தான் தாங்கள் எங்கள் முன் நடத்திக் காட்டியது என்றும் புரிந்துக் கொண்டேன். இந்த அனைத்து அறிதலும் சிறந்த சூழலில் நல்ல உணவுடன் அமைந்தது கூடுதல் சிறப்பாகும்.
நிகழ்வு முடிந்து மீண்டும் எதார்த்த உலகில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து மூத்த குடிகாரனுக்கும் இளைய கண்டக்டருக்கும் ஏற்பட்ட முக்கிய மூன்று ரூபாய் தகராறால் நிற்க. பேருந்து ஸ்பீக்கரின் ரேடியோ விளம்பரம், சக பயணிகளின் செல்போனின் சினிமாப் பாட்டு, வெளியே கோவிலின் பக்திப் பாட்டு, மற்ற வாகனங்களின் ஹாரனுடன் சேர்ந்து உண்டான ஓசையென அனைத்தும் இணைந்து. அந்த கெட்ட வார்த்தையாலான உன்னத சண்டைக்கும், அதைக் கண்டுக்காத பின் இருக்கையின் பான் வாசனை மணக்கும் இந்தி உரையாடலுக்கும், முன்னிருக்கையின் வெள்ளை சட்டையின் அரசியல் உரையாடலுக்கும் பின்னிசை என ஒலிக்க.
இத்துடன் சேர்ந்து இன்னது என பிரிக்க முடியாத பலமணங்கள் ஒன்றாக கலந்து குமட்டலை உன்டாக்கிய லவ்கீகத்தின் மகத்தான உச்சத் தருணத்தில். ஜன்னலின் வழியே தெரிந்த கான்கிரீட் பெட்டிகளின் குவியலின் மேலே குறுக்காக ஓடிய மின்கம்பிகள் உண்டாக்கிய நீள் சதுரங்களின் நடுவே தெரிந்த நீல வானத்தை நோக்கிக் கொண்டு. இவையாவும் நுழையாத மனவேலிக்குள் மகிழ்வாய்.. தனிமையாய்.. இனிமையாய்..
என்றென்றும் நன்றியுடன்,
விஜய் கிருஷ்ணா.