உங்களது வெள்ளை யானை நாவலுக்கு அடுத்து வாசித்த நாவல் குமரித்துறைவி. வெள்ளை யானை தந்த பிரம்மிப்பே, மனம் உங்களுக்க எந்த கடிதமும் எழுதச் சொல்லவில்லை. எனக்கு வெள்ளை யானை பற்றி கேட்கவோ அபிப்பிராயம் கூறவோ தெரியவில்லை. என் வயதும் அனுபவமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் குமரித்துறைவி வாசித்த பிறகு, நான் இப்போது அனுபவித்து கொண்டு இருக்கும் உணர்வு நிலை என்பது சொல்லாலாகாதது.
வேணாட்டில் பிறந்து வளர்ந்து கொண்டு இருக்கும் எனக்கு குமரித்துறைவி எப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கி இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே. வாசிக்கும் தருணமே ஒரு பேரதிர்ச்சியை தான் அளித்தது. காரணம் இது அனைத்தும் உண்மை சம்பவம் என்றே மனம் அடுக்கிக்கொண்டு இருந்தது. அதற்கு அடுத்து ஏதோ ஒரு தருணத்தில் இது புனைவு என்று மனம் எழுதல். இது வழக்கம் தான் என்று தெரியும். புனைவு விரிக்கும் மந்திர வலை. அதுவும் உங்கள் புனைவு சொல்லவே வேண்டாம். ‘என்ன டா இது இந்த ஆளு எழுதுறது புனைவா இல்லை நிஜமா ‘ என்று குழம்பிய தருணங்கள் நிறைய. உங்களிடமே கேட்டு தெளிவும் பெற்றிருக்கிறேன்.
இந்நாவலை நான் Subconscious நிலையில் எப்படி கற்பனை (அதாவது மனதில் பதிய வைப்பது, படிமம்மாக) செய்திருப்பேன் என்று என்னால் விளக்க முடியாது. விளக்கவும் முயலமாட்டேன். அது எனக்கு மட்டுமே உரிய படிமம் என்று நினைக்கிறேன். ஆனால் transparent ஆக பார்க்கும் போது Pieter Bruegel ன் ஓவியங்கள் போல் தான் நான் குமரிதுறைவியை மனதில் நினைத்துக் கொண்டேன். நாவலின் கடைசி பக்கம், அதாவது மழை வந்து வேணாட்டை குளிர்விக்கும் தருணம், நான் Dante Alighieri யின் நரகம் போன்று நான் இந்நாவலை Dante Alighieri வேணாட்டை ஒரு சொர்க்கமாக பாவித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் என் மனதில் ஓட்டிப் பார்தேன். அற்புதம்! யாராவது கண்டிப்பாக குமரித்துறைவி நாவலை ஓவியமாக தீட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு வேண்டுகோளாகவும் வைக்கிறேன். மிகப் பெரிய பணி என்று தெரியும் . இருந்தும் குமரித்துறைவியை ஒரு image ஆகவோ இல்லை Visual ஆகவோ பார்கக அவ்வளவு ஆசை. எனக்கு குமரித்துறைவி நாவலை ஒட்டி இரண்டு சந்தேகங்கள் உள்ளன. இது இந்நாவலை மட்டும் சம்பந்தப்ட்ட சந்தேகம் இல்லை எல்லா படைப்புக்கும் உரிய கேள்வியாகவே பார்க்கிறேன்.
இசை – இந்நாவலை வாசிக்கும் என்னால் நீங்கள் விவரிக்கும் அனைத்தையும் கற்பனையில் ஓட்டி பாரத்து அதை அனுபவிக்க முடிகிறது. உதாரணத்திற்கு Landscape , Characters, Costumes, Dialogues, Conversations even Sound also. ஆனால் என்னால் இசையை கேட்கவே முடியவில்லையே? அதுவும் குமரித்துறைவி நாவல் என்பது இசை நிறைந்த படைப்பு. நீங்கள் இசையை விவரிக்கிறீர்கள் என்னால் அதன் வாத்தியங்களை மட்டுமே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இசையை கேட்கவோ இல்லை உணரவோ முடியவில்லை. ஒருவனால் ஒரு இலக்கிய படைப்பில் இருக்கும் இசையை உணரவோ கேட்கவோ முடியுமா? இல்லை கற்பனையில் ஓட்டி பார்க்க முடியுமா? இல்லை இது நான் மட்டும் அனுபவிக்கும் கோளாறா? இலக்கியத்தால் இசையை ஒரு மனிதனுக்குள் கடத்த முடியுமா?
மீனாக்ஷி அன்னை ஒரு மீனவ குலத்தில் பிறந்த தெய்வம் என்று சொல்லப்படுகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கூட மீனவ குலத்தில் பிறந்த தெய்வம் என்றும் , முன்னர் மீனவர்களே மண்டைக்காடு பகவதி அம்மனை வழிப்பட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் இங்கு மீனவ இனத்திற்கும் இங்குள்ள தெய்வங்களும் உள்ள தொடர்பு என்ன? ஏன் அவர்கள் கையிலிருந்த தெய்வங்கள் இன்று அவர்களை மீறி சென்றது? இந்தியா மீனவர்கள் அடிப்படையில் இந்துக்கள் என்பது தெரிந்த தகவல் தான், அதையும் மீறி அவர்களுக்கும் இங்குள்ள தெய்வங்களும் உள்ள தொடர்பு என்ன?
நன்றி ஜெ. இதற்கான உங்கள் பதில் எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் உதவும் என்ற நினைக்கிறேன்.
தருண் வாசுதேவ்.
குமரித்துறைவி வாசிப்புக்கு மகிழ்ச்சி.
இரண்டு ஐயங்களுக்கும் பொதுப்படையான பதிலையே அளிக்கமுடியும். இசை, ஓவியம் போன்றவை நம்முள் அனுபவங்களாக தேங்கி நின்றிருக்கின்றன. இலக்கியம் வழியாகச் சொற்கள் வந்து அந்த அனுபவத்தை தொடும்போது அவ்வனுபவம் மீள நிகழ்வதையே நீங்கள் இசையை உணர்தல் என்கிறீர்க்ள். அதாவது அது ஒரு நினைவூட்டல் மட்டுமே. என்ன வேறுபாடு என்றால் அந்த நினைவுகளை இந்த கதைக்களத்தின் உணர்வுகள், அழகியலுக்கு ஏற்ப படைப்பு மாற்றி அளிக்கிறது. உங்கள் நினைவுகளில் எதையும் குமரித்துறைவி தொடவில்லை என நினைக்கிறேன்
குமரிமாவட்டத்தில் என்றல்ல. கல்கத்தா முதல் இந்தப்பக்கம் கட்ச் வரை கடலோரமாக ஏராளமான பெண் தெய்வங்கள் உள்ளன. அவை கடலோர மக்களின் தொல்தெய்வங்கள். சும்மா கூகிள் மேப் வைத்து பார்த்தாலே தெரியும். ஆனால் மண்டைக்காட்டம்மன் கடல்மக்களின் தெய்வம் அல்ல. அது மிகப்பிற்காலத்தைய தெய்வம். 1700களில்தான் அது தெய்வமாகியது. அது தெளிவாகவே வரலாற்றில் வாழ்ந்த ஒரு நாடார் குடும்பத்து அன்னை பின்னாளில் தெய்வமாக ஆன கோயில். (தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் நூலில் அந்த வரலாறு உள்ளது)
ஜெ