ஆசிரியருக்கு,
நீங்கள் கடந்த மாதம் ஈரோடு வந்தபோது நாம் நேரில் பேசியது தான். இதோ குறித்த நேரத்தில் இந்த இதழ் வெளியாகிவிட்டது.
இது “அளவை” என்ற பெயரில் மாதம் இருமுறை வெளியாகும் அரசியல் சார்பற்ற இணைய சட்ட இதழ். எங்களுக்கு வந்து சேரும் தீர்ப்புகள் அதன் எண்ணிக்கை குவியலால் கவனம் இழந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க இதில் இடம்பெறும் தீர்ப்புகள் கவனத்துடன் தேர்வு செய்து அதை சுருக்கமாக தமிழில் விளக்கி பின் அந்த தீர்ப்பை படிக்கத் தருகிறோம்.
இணைப்பு :
அளவை இணையப்பக்கம்
கிருஷ்ணன்,
வழக்கறிஞர், ஈரோடு.
அன்புள்ள கிருஷ்ணன்,
நல்ல முயற்சி. இன்று ஒவ்வொரு துறையிலுமுள்ள சிக்கல் என்னவென்றால் அத்துறை சார்ந்த தேர்ந்த உரையாடல் இல்லை என்பது. தொழில்நுட்ப மொழியில் அல்லாமல் இயல்பான உரையாடலாக ஒவ்வொரு துறையிலும் இவ்வாறு நிகழும்போது தனிநபர் திறன்கள் ஓங்கும். உண்மையில் வாழ்க்கையே கொஞ்சம் சுவாரசியமாக ஆகும்.
இங்கே எதையுமே வேலை என மட்டுமே கொள்ளும் மனநிலை உண்டு. வேலையை கூடுமானவரை தள்ளிப்போடும், சமாளிக்கும் மனநிலையும் உண்டு. அம்மனநிலையை எதிர்கொண்டுதான் இதைச் செய்யவேண்டியிருக்கும்.
சில ஆலோசனைகள்
அ. முழுக்கமுழுக்க சட்டம் சார்ந்தே நடத்துங்கள். பொதுவாசகர்கள் சட்டம் பற்றிய ஆர்வமிருந்தால் படிக்கட்டும். வேறு எதை உள்ளே கொண்டுவந்தாலும் எங்கும் நீக்கமற நிரம்பியிருக்கும் அரசியல் உள்ளே வரும். இங்கே அரசியல் என்பதே சாதி,சமயப்பூசல்தான்.
ஆ. எதிர்வினைகள் தெளிவாகவும் விரிவாகவும் இருக்குமென்றால் தனியாக வெளியிடுங்கள். விவாதங்கள் எந்த ஒரு நல்ல இதழுக்கும் அவசியமானவை
இ. ஈரோட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். ஆனால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் வெளியிடலாம்
ஈ.சட்டம் சம்பந்தமான கட்டுரைகளின் மொழியாக்கங்களை வெளியிடலாம். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யும்போது சுருக்கி, தெளிவாக மொழியாக்கம் செய்யலாம். ஏனென்றால் சட்டமொழி ஏற்கனவே சிக்கலானது. அதை தமிழில் மேலும் சிக்கலாக ஆக்கினால் பயனில்லை. கட்டுரைகளின் சாராம்சச் சுருக்கம் இன்னும் நல்லது (மூலச் சுட்டியுடன்) என்பது என் கருத்து.
உ.சட்டத்துறையின் முக்கியமான ஆளுமைகளை அறிமுகம் செய்யலாம். பேட்டிகள் வெளியிடலாம். பேட்டிகளை மொழியாக்கம் செய்யலாம்
ஊ. சட்டத்துறையின் சென்றகால வரலாறு குறித்தும் எழுதலாம். உதாரணமாக கோமல் அன்பரசன் எழுதிய ‘தமிழகத்து நீதிமான்கள்’ ஒரு நல்ல நூல். தமிழகத்தின் புகழ்பெற்ற நீதியரசர்களைப் பற்றியது. அத்தகைய நூல்களை அறிமுகம் செய்யலாம். அதைப்போல முக்கியமானவர்களைப் பற்றி எழுதலாம்
எ.தமிழகத்தின் எல்லா பகுதியினரும் பங்களிக்கலாம்.
எந்த முயற்சியும் உண்மையானது என்றால் மெல்லமெல்ல அதற்கான வாசகர்கள் வருவார்கள்
ஜெ