கதைகள், மனிதர்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

வணக்கம். தங்களின் எண்ண எண்ண குறைவது கதை வாசித்தேன்.. எங்களின் வாசிப்பு அப்டேட் குழுவில் பகிர்ந்துக் கொண்டேன். ஒரு சிறுகதை வாசித்தேன்.. தலைப்பு எண்ண எண்ண குறைவது  …தலைப்பே கவித்துவமும் தத்துவமும் நிறைந்துள்ளது.. தனது பணியை  முழுமையாக முடித்து விட்டதாக எண்ணும் ஒரு ஆளுமை தற்கொலைச் செய்து கொண்டதைப் பேசும் படைப்பு..  தற்கொலையை இழிவாகப் பேசும் அதே நேரம் நம்மிடம்  இருந்த வடக்கிருத்தல், ஜல சமாதி போன்றவைகளைப் பெருமை பேசும் நமது பழக்கத்தை கதை ஓரிடத்தில் சுட்டுகிறது.

மரண வீட்டில் அதிகபட்சமாக நாம் பேசும்  இறப்பு பற்றிய பேச்சு இறந்த மனிதனின் பெருமைகளைச் சிறிது நேரம் பேசுவதுதான். இறக்கும் முன் ஒருவரின் மனம் எப்படி செயல்பட்டது, என்ன பேசினார், அவரை மரணம் எப்படி தன்னை நோக்கி வர தயாரித்தது  என்பது பேசப்படல் முக்கியமல்லவா… ஏன்… மரணம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு எப்படி முக்கியமோ அவ்வளவு முக்கியமாச்சே.. இது போன்ற இறப்பு சிந்தனைகளை இந்த கதை நுட்பமாக விவரிக்கிறது.. ஜே கே குறிப்பிட்ட காலத்திற்குப் பின் எழுதுவதை நிறுத்தினார்.. தெளிவான முழுமையான வாழ்வு பார்த்தவர் எடுக்கும் முடிவுகள் மிக கறாரானவை… இதுவரை தான் வாழ்ந்தது போதும் என ஒருவர் முடிவு எடுக்கிறார் எனில் அவரிடம் எத்தனைத் தூரம் தெளிவும் முழுமையும் உறவாடி இருக்கும்..தானே தனக்கொன்றை நிகழ்த்திக் கொள்ளல்.. அல்லது நிகழத் தயாராதல்… குரூட்ஜிப்  தனக்கொரு மோசமான வாகன விபத்தை நிகழ்த்திக் கொண்டது  எண்ணத்தக்கது.

என்னதான் முயற்சித்தாலும் முதுமை நெருங்க நெருங்க நாம் காலத்தால் பின்தங்கி போவோம் என்பதை பேசுகிறது… காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்தாலும் அதில் அவரின் முதுமை நிழலாடும்… ஒரு மனிதனின் ஆயுளை விட அவரது சிந்தனையின் ஆயுள் குறைவு.. அதனால் அவர் இருக்கும் போதே தனது சிந்தனை அழிவதைக் காண்பார்.. இவைகளைக் கதை பேசிச் செல்கிறது…இந்த கதை ஜெயமோகன் அவர்களுடையது..

முத்தரசு

வேதாரண்யம்

 

அன்புள்ள ஜெ

நூறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நூலாக வரும் என நினைத்து காத்திருந்தேன். இப்போது ஒவ்வொன்றாக இணையத்திலேயே வாசிக்கிறேன்

இந்தக்கதைகளிலுள்ள நிஜ ஆளுமைகள் பற்றிய கதைகள்தான் என் ஆர்வத்தை தூண்டுகின்றன

ஜெயகாந்தன்

எம்.கோவிந்தன்

ஓ.வி.விஜயன்

புதுமைப்பித்தன்

சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளை

மதுரை சோமு

ஜான் ஆபிரகாம்

என பல முகங்கள். எந்தக்கதையில் எவர் என ஊகிப்பதே ஓர் அரிய அனுபவமாக இருந்தது

செந்தில்நாதன்

முந்தைய கட்டுரைநதி – கடிதம்
அடுத்த கட்டுரைபழைய சுழல்