சமீபமாக இசையின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன் திளைக்கிறேன் என்றும் கூறலாம். ஒரு கவிதை என்னவெல்லாம் செய்யும்? எல்லாம் செய்யும் என்று தான் தோன்றுகிறது. அன்னையாக செல்லம் கொஞ்சுகிறது, குழந்தையாக சிணுங்குகிறது, காதல் பேசுகிறது காமத்தை உற்று நோக்க சொல்கிறது சமயங்களில் ஆணவத்தை சீண்டுகிறது எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு மண்டியிட சொல்கிறது இன்னும் என்னன்னவோ..
எதை இட்டாலும் நிரம்பாத ஒன்றிடம் எரிச்சல் மேலிட வினவினால் அது இப்படி சொல்கிறது
” உன்னிடம் வரும்போது மட்டும்
ஓட்டைப் பாத்திரத்தோடுதான் வருவேன்“.
அனைவரிடமும் இதைப் போல் ஒரு ஓட்டை பாத்திரம் இருக்க கூடும்.
காலைக்கும் மாலைக்கும், திங்களுக்கும் வெள்ளிக்கும், காரின் ஹாரனுக்கும் மேலாதிகாரியின் குரலுக்கும் வேறுபாடு அற்றப்போகும், நகரும் வெயிலை வெறுமனே பார்க்கும் நேரத்தில் இது காண கிடைத்தது
“எல்லாவற்றின் மீதும் தூசியெனப்
படிந்து கிடக்கிறது ஒரு சலிப்பு.”
என தொடங்கி சிக்கன் பெப்பர்ப்ரை, கத்திரிக்காய் தொக்கு வரை நீளும் வரிசையில் கடைசி இரண்டு வரியில் உபாயமும் உண்டு
“வேறு வழியே இல்லை
நெஞ்சில் கிறுக்கு
ஒரு கிறுக்குக் காதலை.”
ஆஹா என்ன ஒரு இனிய தீர்வு. அந்த கிறுக்கு காதலும் முற்றிப் போய் ஓரிடத்தில் சொல்கிறது
“பித்தின்புற்று
முற்றி வெடித்துவிட்டது.
நீ
யாருக்கும் யாராகவும்
இராதே.
நம் பிள்ளைக்கு
அன்னையாகக் கூட.”
அதே பைத்தியம் பரிதவித்து இப்படியும் புலம்புகிறது
“காதல்
கூட இல்லை
நீ
என் பதட்டம்“
என்று. படட்டும் பாதகமில்லை.
இவை எவற்றுக்கும் தான் பெறுப்பு இல்லை என்று கூப்பாடு போடுகிறது அது சொல்கிறது
“அன்று
நீ கொஞ்சம் நேராக நின்றிருக்கலாம்.
அதுதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
சற்றே சரிந்து
கைகளை மார்பில் கூட்டி
சுவரோடு தோளணைந்து நின்ற
உன் கோணித்த சுந்தரம்
என் சத்தியத்தை
கிடுகிடுவென ஆட்டிவிட்டது.”
அப்படியா ..நான் கூட தப்பா நினைத்துவிட்டேன் உன்னை என்று நம்மையே சொல்ல வைத்துவிடும் இந்த பொல்லா கவிதை..
பொதுவாக பெரிதாக நியதிக்களுக்குள்ளும் வரையரைக்குள்ளும் செல்வதில்லை போதனைகளோ தர்ம பரிபாலமோ செய்வதில்லை தலையில் ஒளிவட்டத்துடன் வருவதில்லை. போகட்டுமே மனுஷ பயதானே என்கிறது. இங்கு இவ்வண்ணம் இருக்க நேர்கிறதா இருந்து விட்டு போகட்டும் சாரமில்லை என்று கருணை கொள்கிறது. இப்போ என்ன விடு..பார்த்துக்கலாம் வா..என்று உரிமையோடு தோளில் கைப்போடுகிறது.
எதன்பொருட்டோ மனம் தித்திப்பா தித்திக்கிறது காரணத்தை கண் கொண்டு நோக்க அச்சமாக இருக்கிறது பதட்டம் கூடி அழுகை வருகிறது இருந்தாலும் இனிக்கிறது. அப்போது வந்து விழுகிறது முதுகில் ஒரு கரம்..
“காரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்ந்தால்
அதனை அப்படி உற்றுப் பாராதே!
துவக்கி விடாதே
ஆராய்ச்சிகள் எதையும்
சந்தேகித்துக் கடந்து விடாதே!
அதுவே கதியென்று
அழுது கொண்டே அமர்ந்துவிடாதே!
காரணமற்று இனிக்கும் கணத்தை
பேப்பரில் பிடிக்க முயலாதே!
அப்போது வந்து விடுகிறது பார்
ஒரு காரணம்
ஒழுகி விடுகிறது பார்
அந்த இனிப்பு
காரணமற்று இனிக்கும் கணத்தை
காண நேர்கையில்
அப்படிப் பதறிப் பதறித் துடிக்காதே!
இனிப்பு தானே அது?”
எல்லோருக்குமே பொறாமை கணங்கள் வாய்த்திருக்கும் யார் மீதோ அல்லது எதன் மீதோ. சிலருக்கு சில மணித்துளிகள் சிலருக்கு வாழ்நாள் முழுக்க கனன்றுக் கொண்டே இருக்கும். அதை கவனிப்பதால் அது அன்பாக மாறிவிடாது ஆடாமல் அசையாமல் இருந்துக்கொண்டே இருக்கிறது என்னதான் உனக்கு என்று அதட்டினால் தாரை தாரையாக கண்ணீர் விடுகிறது அழும் பொறாமைக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் “சள்ளை பிடிச்சது …இருந்து தொலை” என்று விட்டுவிடுகிறது
“……திடீரென்று
அதன் கண்களிலிருந்து தாரைகள் வழிந்து வழிந்து வந்தன.
நிற்காமல் அழுதாலும்
அது அன்பாக மாறியது போல் தெரியவில்லை.
அழுகிற பொறாமைக்கு
என்ன பெயர் வைப்பதென்று
எனக்கும் தெரியவில்லை.”
இப்போது எல்லாம் எனக்கு பிரியமான ஒன்றை அதன் இணை பற்றி செல்லும் போது “ப்ச்..விடு பரவாயில்லை ” என்று தேற்றுகிறேன் விசும்பும் பொறாமையை..
நல்ல வசை சொற்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வெறியோடு இருந்து இருக்கிறேன் ஆனாலும் தைரியம் கூடவில்லை எனக்கு தெரிந்த ஒரே வசையை வைத்து விதவிதமான பாவனைகளால் இக்கட்டானச் சூழல்களை சமாளித்துள்ளேன் அதில் உள்ள சிக்கல் ஒருவரை நோக்கி அதை வீசும் போது முற்றிலும் அந்நியர் ஒருவர் குறுக்கே வந்துவிட்டால் “மியாவ்” ஆகிவிடும். இங்கேயும் ஒருத்தி அவ்விதம் மாட்டிக் கொண்டாள்
” மூடு…”
ஜன்னலில் தெரிந்தாள் ஒரு பதுமை
உண்மையில்
அவள் அதை அவ்வளவு சத்தமாகச் சொல்ல விரும்பவில்லை.
………….
அவளின் சங்கடங்களை எல்லாம் சொல்லி எப்படி ஆற்றுபடுத்துகிறது தெரியுமா
செல்லமே!
“மூடு” கூட இல்லாமலா
வீட்டில் இருக்க முடியும்?
” மூடு” கூட இல்லாமலா
குடும்பத்தில் இருக்க முடியும்?
” மூடு” கூட இல்லாமலா
உறவில் இருக்க முடியும்?
“மூடு” கூட இல்லாமலா
உயிரோடிருக்க முடியும்.
மூடாதே திற!
இனி மூடி ஓட வேண்டியதில்லை என எண்ணிக்கொண்டேன்.
எல்லோருக்கும் எல்லாமும் அமைவதில்லை பலருக்கு வாழ்வு கண்ணாமூச்சி ஆட்டம் தான். மேடை ஏறியாகி விட்டது கிடைக்கும் வேடத்தை போட்டுக் கொண்டு சிறப்பாக ஆடிட வேண்டியது தானே இதிலே என்ன குறை? பார் உனக்கு கிடைத்து இருக்கும் வேடத்தை..
“ராஜகிரீடம்
உன் சிரசில் பொருந்தாதற்கு
யார் என்ன செய்ய முடியும் நண்பா
இந்த வாயிற்காப்போன் உடையில்
நீ எவ்வளவு மிடுக்குத் தெரியுமா“
என்று யார் பெருமைப்படுத்த முடியும் கவிதையை தவிர..
நாம் பெரிதாக ஒன்றும் ஆற்ற தேவையில்லை அவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என் வாழ்வு என் இன்பம். வாழ்த்தோ வசையோ தன்னை தானே அணைத்து கொள்ளுபவர்க்கு பொருட்டில்லை போலும். மேடை இல்லை என்றால் என்ன பாத்ரூமில் பாடிக் கொள்கிறேன் என்கிறது
பாடகனற்ற பாடகனுக்கு
” பாடகன் ” என்கிற இரும்புக் குண்டால்
மூச்சிரைப்பதில்லை.”
சபைகளும் வேண்டாம் செவிகளும் தேவையில்லை என்று சொல்லி இவ்வாறு முடிகிறது
“பாடகனற்ற பாடகனின் பாத்ரூமில்
ஒரு நெளிந்து வளைந்த சில்வர் பக்கெட் …
ஆயினும், அதனுள்ளே செழுமலைச் சுனைநீர்.
அவன் ஹெல்மெட்டுக்குள் தால் அன்றி வேறு ஒன்றுமேயில்லை.”
பாத்ரூம் பக்கெட்டில் செழுமலைச் சுனைநீர் வராதா என்ன? வரும் தன்னைத் தான் நிறைத்து வாழ தெரிந்தவர்களுக்கு.
மிக்க அன்புடன்
தேவி. க
ஆவடி