நினைவுகளை அசைபோடுதல்

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை- வாங்க

அன்பு ஜெயமோகன்,

முதலில் ஒரு அவசியக் குறிப்பு. சக்திவேல், சத்திவேல் போன்ற பெயர்களால் நேரும் குழப்பங்களைத் தவிர்க்க விரும்புகிறேன். அதனால் இனி முருகவேலன் எனும் பெயரிலேயே எழுத முடிவு செய்திருக்கிறேன்(வரலாற்றுத் திருப்பம்?).

அருண்மொழி அக்காவின் நூல் வெளியீட்டு விழாவில் அவரது உரையைத்தான் முதலில் கேட்டேன். சாரு, யுவன் சந்திரசேகர் மற்றும் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகளைக் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து விட்டுப் பேசத் தொடங்கினார். தான் ஏன் அபுனைவைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணத்தையும் கோடிட்டுக் காட்டினார். தொடர்ந்து, தனது முன்னோடிகளை அழுத்தமாய்க் குறிப்பிட்டுப் பேசினார். நினைவுகளைத் தான் எழுத உந்திய ஆக்கங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

சொற்பொழிவாளர் என்றாலே முகம் சிடுசிடுத்தே இருக்கும். குரலில் வலிய வரவழைத்த செயற்கைத்தனம் இருக்கும். அதனால் சொற்பொழிவுகள் என்றாலே காத தூரம் நகர்ந்து விடுவேன். இலக்கியச் சொற்பொழிவாளர்கள் பலரிடமும் எனக்கு அதே அனுபவம்தான். அருண்மொழி அக்கா சொற்பொழிவாளர் இல்லை என்பதோடு தன்னைத் தனித்துவமாய்க் காட்ட எத்தனிக்கும் பேச்சாளரும் இல்லை. அதனால் பயமின்றிக் கேட்க முடிந்தது.

அக்காவின் முகமும் குரலும் இளங்கல்லூரி மாணவியின் தொடர் கூச்சத்துக்கு இணையானதாக இருந்தது. யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை என்பதைப்போல அவர் பேசிக்கொண்டே சென்றதுதான்  எனக்குப் பிடித்திருந்தது.  நாட்டியமாடுகிறாரோ எனும் அளவுக்கு சில கணங்களில் அவரின் முகச்சுழிப்புகளும், கர அசைவுகளும்.

உங்களுக்கு நேர்மாறான உற்சாக உடல்மொழி. அதுதான் அக்கா என நினைத்துக் கொண்டேன். அப்படி இருக்கவே விருப்பமும் கொள்கிறேன்.

குமரகுருபரரின் மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் பற்றிப் போகிற போக்கில்தான் அக்கா குறிப்பிட்டார். ஆனால், அது அவரை எவ்விதம் பாதித்திருக்கிறது எனும் உணர்வை நிச்சயம் தனி உரையாகச் சொல்லுமளவுக்குத் தகவல்களை வைத்திருப்பதாக நினைக்கிறேன். அதை அவரின் விழிப்பரவசத்தில் என்னால் உணர முடிந்தது.

அக்கா பேசிக்கொண்டிருந்த போது என் தங்கை(சித்தியின் பெண்) இயல்பாய் நினைவுக்கு வந்தாள். இருமுறை அவளை அடித்திருக்கிறேன். சிறுவயதில் அவள் முதுகில் ஓங்கிக் கடுமையாய்க் குத்தியும், பெரியவளான பின் முகத்தில் வேகமாய் அறைந்தும் இருக்கிறேன். அடிக்கும் முன் எனக்கு எவ்விதக் குழப்பமும் இருக்காது. ஆனால், அடித்த பின்பு ஒருவித குற்றவுணர்வு என்னில் கவியத் துவங்கும். சென்றவாரம் ஒரு மத்திம வயதுடையவர் தனது பெண்ணை ஓங்கி அறைந்த இடத்தில் நான் இருக்க வேண்டியதாயிற்று. திடும்மென குழப்பமும் குற்ற உணர்வும் என்னைச் சூழந்து கொண்டது. நினைவுகள் மனதைக் குறித்த ‘அறிவியல் கணக்குகளையும்’ மீறி நம்மில் கிளைத்து விடுபவை. அவற்றோடு வாழ்வதும் சிரமம்; அவை இல்லாமல் வாழ்வதும் கொடுமை.

நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதன் ஊடாக ஒருவன் அவனையே குறுக்கு வெட்டாகப் பார்க்கிறான். சிலநேரங்களில் அவனே எதிர்பாராத ’அவன்களை’ அவன் கண்டுகொள்ளவும் நேரிடுகிறது. சிரிக்கும் அவன், வெறுக்கும் அவன், கனிந்த அவன், சினந்த அவன், வன்மம் மிகுந்த அவன், அமைதி மிளிரும் அவன், அழும் அவன், ஆனந்தப்படும் அவன், வாழத்துடிக்கும் அவன், மரணத்தை நேசிக்கும் அவன், ஒன்றுமே புரியாத அவன், மாய அவன், நிஜ அவன், காதலிக்கும் அவன், கொல்லத்துடிக்கும் அவன், அவனைப் போன்ற அவன், அவனல்லாத அவன் என எத்தனையோ ’அவன்களை’க் கொஞ்சம் நிதானித்துக் கவனிக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் கண்டுகொள்ள இயலும்.

நினைவுகளை அசைபோடுதல், புனைவுக்கான களம். அபுனைவுத்தளத்தில் நினைவுகள் கண்ணாடியில் முகம் பார்ப்பது போன்றது. புனைவிலோ, உள்ளங்கையில் முகம் பார்ப்பது போன்றது. எனக்கு உள்ளங்கையில் முகம் பார்ப்பதே விருப்பமானது. கண்ணாடியில் முகம் பார்த்த அக்காவின் பேச்சில் எனக்கு உள்ளங்கை முகமே ஒளிர்ந்தபடி இருந்தது.

 

முருகவேலன்

கோபிசெட்டிபாளையம்.

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி 

முந்தைய கட்டுரைசுவரில் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநதி – கடிதம்