அருண்மொழியின் நூல் வெளியீடு

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை- வாங்க

அருண்மொழியின் ‘பனி உருகுவதில்லை’ நூலின் வெளியீட்டுவிழா சென்னையில். விழா முடிவில் ஒரு போர் முடிந்த பேரமைதி செவியை குத்துவதுபோல உணர்ந்தேன். விடைபெறல்கள், கட்டித்தழுவல்கள். வழக்கமாக எல்லா இலக்கியவிழாக்களும் அளிப்பது ஒரே மனநிலையைத்தான். ’என்னதான் இருந்தாலும் நாமெல்லாம் ஒண்ணு.’

விழா முடிந்து வரும்போது அருண்மொழியிடம் கேட்டேன். “சாருவோட மியூசிக் டேஸ்ட் பற்றி என்னமோ சொன்னியே, என்னது அது?”

“இல்ல, சாரு மியூசிக்ல எந்த மாஸ்டர்கிட்டயும் நின்னுட மாட்டார்னு…”

“அதான், அது என்னது?”

“பொதுவா சங்கீதத்துக்கு அப்டி ஒரு குணம் உண்டு. ஒரு வகையான சங்கீதத்தை கேக்கிறப்ப அதான் பெஸ்ட்னு தோணிடும். ஒரு மாஸ்டரை கேட்கிறப்ப அவர்தான் அல்டிமேட்னு தோணிடும். அப்டியே கேட்டுக்கிட்டே இருந்தா கொஞ்சநாளிலேயே நம்ம மனசு டியூன் ஆயிடும். வெளியே போக முடியாது. இன்னொண்ண கேக்க முடியாது. ரொம்ப பெரிய சங்கீத ரசிகர்கள்கூட எங்கியாம் அப்டி நின்னுட்டவங்கதான்…அப்டி நின்னுக்கிடறது ஒருவகையிலே நல்லது. அங்க ரொம்ப ஆழமா போய்ட முடியும். ஆனா வெளியேறி இன்னொரு ஏரியாவுக்குள்ள இன்னொரு மாஸ்டர்கிட்ட போறது இன்னொரு சிறப்பு…அது அவ்ளவு ஈஸி இல்ல”

“அதில என்ன அவ்ளவு கஷ்டம்? லிட்டரேச்சர்லயும் மாஸ்டர்ஸ் இருக்காங்களே”

“ஆமா, ஆனா லிட்டரேச்சர்ல மண்டை இருக்கே. சங்கீதத்லே மண்டையே இல்ல. நாம எப்டியெல்லாம் டியூன் ஆகிறோம்னு நமக்கே தெரியாது. மந்திரம் மாதிரி. என்னாச்சுன்னு தெரியறதுக்குள்ள ஸ்லேவ் ஆயிடுவோம்…சிமிழ்ல அடைச்சிருவாங்க மாஸ்டர்ஸ்”

“ஓகோ”

“ஒண்ணை நிராகரிக்காம இன்னொண்ணுக்கு போறது பெரிய தாவல். படே குலாம் அலி கான் கேட்டுட்டு வெஸ்டர்ன் ஜாஸ் கேக்கணும்னா அதுக்கு பெரிய டிராவல் வேணும். அதாவது…”

’புரியுது’ என்றேன். ஆனால் புரியவில்லை

‘அது லாவா இருக்கில்ல அது இறுகி கல்லாகி அப்றம் மறுபடி உருகி லாவா ஆகிறது மாதிரி…ஏன்னா…”

மேற்கொண்டு அதை நான் புரிந்துகொள்ள முயலவில்லை. நாமுண்டு நம்முடைய இரும்புக் காதுண்டு என இருந்துவிடுவது நாட்டுக்கும்கூட நல்லது.

அருண்மொழியின் இந்த நூல்வெளியீட்டு விழா ஒரு வேடிக்கை. என் சொந்தத்தில் ஒரு பெண்ணுக்கு வளைக்காப்பை பிள்ளை பிறந்து காதுகுத்துடன் சேர்த்து வைத்தார்கள், பெண் அவ்வளவு பெரிய அடம். அப்போது பெற்றோரால் சில சிக்கல்களால் வளைக்காப்பு வைக்க முடியவில்லை. இந்த நூல் வெளியீட்டு சென்ற ஜனவரியில் ஏற்பாடானது.அப்போது கொரோனா நெருக்கடி, புத்தகக் கண்காட்சி தள்ளிப்போனது, ஆகியவற்றால் நடத்த முடியவில்லை.

ஆகவே மறுமுறை புத்தகக் கண்காட்சி ஏற்பாடான பத்தாம் நிமிடத்தில் விழா ஏற்பாடாகி விட்டது. அன்புத்தம்பிகளுக்கு ஆணைகள் நாலாபக்கமும் பறந்தன. எள் என்றால் எண்ணையாக தம்பிகள் முன்னின்றனர்.

“காளி கிட்ட இதச் சொல்லியிருக்கேன்.சண்முகம் கிட்டேயும் சொல்லியாச்சு. நீங்க இத மறுபடியும் காளிகிட்டயும் சண்முகம் கிட்டயும் சொல்லி ராஜகோபால் கிட்ட சொல்லச் சொல்லுங்க” ராஜகோபாலிடம் ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட செய்திதான். “அகரன் கிட்ட சொல்லிட்டேன்னு இவங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன் ஜெயன்.அத இப்பதான் சௌந்தர் கிட்ட சொல்லிட்டு…”

நள்ளிரவிலும் பதற்றங்கள். ’ஜெயன் வளசரவாக்கம் பக்கமா, இல்ல டி நகரா?” நான் சென்னையைப் பற்றிய இனிய அறியாமையை கொண்டவன். ‘டி நகர்னா இந்த தாம்பரம் பக்கம் இருக்கே…”

’நீ ஒண்ணும் சொல்லவேணாம், நானே பாத்துக்கறேன். ஹலோ, சண்முகம் அதாவது டி நகர்லே…”

ஒரு துல்லியத் தாக்குதலுக்கான மயிரிழை பிசகா திட்டமிடல்கள். நிகழ்ச்சியின்போது யார் எங்கே நிற்கவேண்டும் ,எவர் என்ன சட்டைபோடவேண்டும்…(இந்த காஞ்சி சிவா ஏன் கறுப்புச்சட்டை போட்டுட்டு வர்ரார்? பிடிக்கவே இல்லை). நான் நாலைந்து நாள் மாடியை விட்டு இறங்கவே இல்லை.எப்போது வந்தாலும் அதிதீவிர திட்டங்கள். உண்மையில் வேளச்சேரியை படைகொண்டு சென்று கைப்பற்றத்தான் முயற்சியா என குழப்பம் வந்தது.

விழாவுக்கு முதல்நாள், பிப் 13 அன்று மலேசியா வல்லினம் சார்பாக எழுத்தாளர் அம்மாவுக்கு ஒரு சூம் உரையாடல் ஆகவே 11 ஆம் தேதியே கிளம்பி சென்னை சென்றோம். விடுதியில் உரிய கணிப்பொறி அமைத்தல், ஒலி சோதனை செய்தல் ஆகியவற்றில் இளவல்கள் ஈடுபட அந்தப் பகுதியிலேயே என் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. உரையாடல் முடிந்த பின்னர் விரிவான மொத்த உரையாடலையும் மேலும் விரிவாக என்னிடம் சொன்னாள். அதன்பின் எவர் எங்கே எப்படி எதைக் கேட்டார்கள் என்று தனியாகக் கணக்கெடுப்பு.

13 ஆம் தேதி விழாவன்று நான் ஒரு சினிமாச் சந்திப்புக்காகச் செல்லவேண்டியிருந்தது. ‘நீ எப்ப வருவே?’ என்று கேட்ட கேள்வியில் நான் வந்தாகவேண்டுமென அப்படியொன்றும் கட்டாயமில்லை என்னும் தொனி இருந்தது. விழாவில் நான் பேசக்கூடாது, மேடைக்கு வரக்கூடாது, முன்னிருக்கையில் அமரக்கூடாது, முகத்தோடு முகம் பார்க்கக்கூடாது, எதன் பொருட்டும் சிரிக்கக்கூடாது என பல நிபந்தனைகள்.

உண்மையில் அரங்கில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தபோது அருண்மொழி மேடையில் பேசுவதுபோலவே தோன்றவில்லை. மேடைப்பேச்சுக்குரிய தனி மொழி இன்னமும் உருவாகவில்லை. நேரில் அல்லது ஃபோனில் பேசுவதுபோல இருந்தது

அகரமுதல்வன் ஏற்பாட்டில் நல்ல கூடம். நல்ல ஒலி, ஒளி அமைப்பு. யுவன் அருண்மொழிகூடவே வந்தான். தாத்தா ஆன பிறகு இன்னும் இளமையாக தெரிந்தான். அங்கே ஏற்கனவே தெரிந்த முகங்கள் தென்பட ஆரம்பித்திருந்தன. ஃப்ரண்ட்ஸ் பார்க் தொடக்கத்திலேயே அருண்மொழிக்கு ஒரு பேனர். அம்மாவின் வண்டி திரும்பும்போது துல்லியமாகக் கண்ணில்படும்படியாக.

எம்.கோபாலகிருஷ்ணன் முன்னரே வந்திருந்தார்.  கொஞ்சம் பிந்தி சாரு வந்தார். விழா தொடங்கியது.சுவாரசியமான கச்சிதமான உரைகள். யுவன் சந்திரசேகரின் வெடிச்சிரிப்புகள் பெரும்பாலும் என்னை மையம் கொண்டிருந்தன. மூத்த எழுத்தாளராகவே தமிழுக்கு அறிமுகமாகும் அருண்மொழியை வாழ்த்தினான்.

நடுவே ஒரு வார்த்தை. எனக்கு இரும்புக் காது என்பது மூன்று நல்லெண்ணமற்றவர்களால் உருவாக்கப்பட்ட தொன்மம். சுந்தர ராமசாமி, யுவன் சந்திரசேகர் மற்றும் சுகா. நானும் இசை கேட்பவன்தான். திருவையாறுக்கெல்லாம் பலமுறை போயிருக்கிறேன் (சரி, போகப்பட்டிருக்கிறேன்). சுதா ரகுநாதனின் ஜிமிக்கியின் நிழல் வெவ்வேறு ஒளிமாறுபாடுகளில் என்னென்ன ஆனது என்றெல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறேன்.

கடைசியாக அருண்மொழியின் அதிவேக உரை. அவளை அறிந்தவர்களுக்கு அவள் கொஞ்சம் மெதுவாகப் பேசினாள் என்றுகூட தோன்றியிருக்கலாம். தஞ்சாவூர் பகுதியில் அப்படித்தான் பேசுகிறார்கள். ஜானகிராமன் அவருடைய கதாபாத்திரங்கள் அப்படி பேசுவதைப் பற்றி பலவகையாக வர்ணித்திருக்கிறார்.

விழா முடிந்து திரும்பும்போது ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து மீண்டும் உரையாடல். இதெல்லாம் ஒரு கல்யாணம் போல. யாரெல்லாம் வந்து என்னவெல்லாம் மொய் செய்தார்கள், என்ன சட்டை அணிந்திருந்தார்கள் என்றெல்லாம் துல்லியமான கணக்கு இருக்கும்.

‘ஹமீதை கூப்பிட்டிருக்கலாம், அவர் இல்லாம கொறையா இருந்துச்சு’ ஆரம்பித்து ‘சுகா வந்துட்டு ஒரு ஹாய் கூட சொல்லாம போய்ட்டார். கூப்பிடணும்’  ‘இந்த செல்வேந்திரனை எங்க காணும்?’ ‘ஷாகுல் வந்திருக்கலாம்’ என விரிவான அட்டவணைப்படுத்தல். ஒரு நாலைந்து நாள் அது போகும்.

சரிதான், 1990ல் என் ரப்பர் நாவலுக்கு கோவையில் விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஒரு விழா எடுத்தார். முல்லை ஆதவன் அதில் பேசினார். அன்றும் மறுநாளும் எனக்கு உடம்பில் காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தது. விழா முடிந்த மறுநாள் தினதந்தியில் செய்தி வந்திருந்தது. நான் கோவை நகரமே பரபரப்படைந்துவிட்டிருந்ததை அன்று கண்ணால் பார்த்தேன்.

முந்தைய கட்டுரைஅருண்மொழி நங்கை விழா- உரைகள்
அடுத்த கட்டுரைபூர்த்தியூ- விவேக்