சுவரில்…

அன்பின் ஜெ!

முன்பெல்லாம் தலைமுறை கடந்த வீடுகளில் காலம் உறைந்த புகைப்படங்களை பார்க்க முடிந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் I.T-யில் வேலைப் பார்க்கிற எளிய முறை தவணையில் பெருந்தொகை கடனாக கிடைத்து விடுவதால் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃப்ளாட்களை வாங்கும் இளம் ஜோடிகள் சுடச்சுட பால் காய்ச்சி குடியேறிவிடுகின்றனர். ஆனால் நிலத்தை விற்று படிக்க வைத்த, வாழ வைத்த தாத்தா ஒரு புகைப்படமாகக் கூட அங்கு கூடத்தில் வைக்கப்படுவதில்லை.

பாரதியாவது கோட்டு அணிந்து, தலைப்பாகை கட்டி ஒரு புகைப்படமாக நிற்கிறான். ஆனால் அவருக்குப் பிற்காலத்தில் வந்த தமிழிலக்கியவாதிகளில் நிறைய பேரின் ஒரேயொரு புகைப்படத்தைக்கூட காலம் விட்டு வைக்கவில்லை. வெண்முரசு வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் அளவிலும், உள்ளடக்கத்திலும், நவீனத்திலும் அதன் பிரமாண்டம் தந்த வியப்பு – ஆசிரியனை, எழுதியவரை நோக்கி திரும்பியது. எங்கேனும், எல்லோர் கண்ணுக்கும் படுகிற விதத்தில் – ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலையாளர், இடது, வலது என கூடுமிடமாக முன்பு இருந்த தேவநேயப்பாவாணர் அரங்கில் ஒரு நீள் வரிசையில் ‘ப’ வடிவில் புகைப்படமாக பலரும் உள்ளனர்.  இன்றைய காலத்தில் சென்னை ரஹ்மத் பதிப்பகம் கவிக்கோ மன்றத்தில் தங்களின் புகைப்படம் சில நாட்களுக்கு வைக்கப்பட்டதை கண்டு அந்த ஏக்கம் சற்று தணிந்தது. நிறைவாக உணர்கிறேன்,

கொள்ளு நதீம், ஆம்பூர்.

முந்தைய கட்டுரைநுகர்வு இன்று -கடிதம்
அடுத்த கட்டுரைவாசிப்பு மொழியின் அவசரத் தேவை- சக்திவேல்