இல்லாத நயம் கூறல்

சடம் – கடிதம்

அன்புள்ள ஜெ.,

தங்களுடைய சமீபத்திய ‘போலீஸ் ஸ்டோரீஸ்’  –  ‘வேதாளம்’, ‘சடம்’ கதைகள் குறித்து. இறக்கி வைக்கமுடியாமல் தூக்கிச்சுமக்கிற வேதாளம் அநேகமாக எல்லோருக்கும் ஏதோ ஒன்று உண்டுதான். ‘தலையிலே பேளுகிற’ பெருங்கூட்டமே ஒரு வேதாளம்தான் ஏட்டையாவுக்கு. இங்கு துப்பாக்கி சரியான படிமம். ‘உச்ச வழு’ போல முழுக்க முழுக்க விவரணையிலேயே நகரக்கூடிய கதைகள் ஒரு வகை. இது உரையாடலிலேயே நகர்கிறது. கடைசிவரை ஒரு புன்னகை உறைந்த முகத்தோடேயே படிக்க முடிந்தது. ஆண்டுக்கணக்காக இயக்கப்படாமல் இருந்த துப்பாக்கிக்கு இன்றைக்கு வேலை வந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். சுடப்போவது கள்ளனா? காப்பானா? என்ற சிறு பதைப்பு கடைசிவரை இருந்தது. நான் நினைத்துக் கொள்வேன், ஒரு மிகச் சிறந்த நடிகனுக்கு சவாலைத் தரக்கூடிய பாத்திரம் என்று எதுவும் இருக்க முடியுமா? என்று. அதன் பின் கண்டுகொண்டேன். சுட்டுப்போட்டாலும் நடிப்பு வராத ஒருவனாக நடிப்பதே ஒரு சிறந்த நடிகனால் நடிக்க முடியாத பாத்திரம். (மிர்ச்சி சிவாவை இதில் யாரும் நெருங்க முடியாது. ஆனால் எந்தப் பாத்திரத்திற்கும் அதே நடிப்புதான்). துப்பாக்கி முனையில் கூட மிர்ச்சி சிவாவிடமிருந்து நல்ல நடிப்பையோ உங்களிடமிருந்து மோசமான கதையையோ வாங்கிவிட முடியாதென்றே நினைக்கிறேன்.

‘சடம்’ கதையும் உரையாடலிலேயே நகரும் கதை. ரெண்டு நிமிடத்துக்குள்ளேயே காமமும் குரூரமும் கலந்து கொப்பளிக்கும் சுடலைப்பிள்ளையை உரித்துக்காட்டி விடுகிறீர்கள். ‘நான் இங்கதான் இருக்கணும்’ னு சுடலை ‘பிட்’டப் போடும்போதே அவருடைய திட்டத்தை யூகித்திருந்தேன்.  ‘சிஜ்ஜடம்’ என்ற வார்த்தையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சித் + ஜடம் என்று கதையிலே விளக்கம் வருகிறது. சாமியார் தெரிந்துதான் ‘சிஜ்ஜடம்’ என்றாரா? சித்து ஜடத்தைச் சேர்ந்து தானும் ஜடமானதா அல்லது ஜடம்தான் சிஜ்ஜடம் ஆனதா என்பது கதைக்கு வெளியே உள்ளது. என்னதான் திரைப்படத்தில் உயர்வாகக் காட்டினாலும் காவலர்களைப் பற்றி சிறுவயதிலிருந்தே பெரியவர்களால், பத்திரிகைகளால் நமக்கு மோசமான பிம்பமே அளிக்கப்படுகிறது. குறைவான சம்பளம், பணிச்சுமையால் மனஅழுத்தம், உயரதிகாரிகளின் அளவுக்கு மீறிய கடுமை போன்ற பல காரணங்களால் அடிக்கடி காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதை செய்தித்தாள்களில் படிக்கிறோம். காவலர்களுக்கு வார விடுமுறை கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு சென்ற வருடம் உத்தரவு போட்டபோதுதான், அவர்களுக்கு வார விடுமுறை கூட இல்லை என்று தெரியவந்தது. காவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல சம்பளம் அளிக்கப்படவேண்டும் என்பார் மறைந்த ‘துக்ளக்’ ஆசிரியர் சோ. முதல் கதை ‘கிளைமாக்ஸ்’ சுக்கு முன்வரை ஒரு நகைச்சுவைக் கதையேதான். இரண்டாவது கதை சஞ்சலப்படுத்தியது. சிறப்பாக எழுதப்பட்ட இரண்டிலும் ஒப்புநோக்க எதனாலோ ‘வேதாள’மே சிறந்த கதை என்று தோன்றியது. காவலர்களிடமிருந்து இந்தக் கதைகளுக்கு ஏதாவது எதிர்வினை வந்ததா?

நிற்க. நான் ஆச்சரியப்பட்டது ‘சடம்’ கதைக்கு வந்த கடிதங்களைக்கண்டு. வேதாந்தம், பௌத்தமரபு, சைவசித்தாந்தம்,பிக் பாங் தியரி என்று பல தளங்களையும் தொட்டு,விரிந்து பல கோணங்களில் யோசிக்க வைத்த கடிதங்கள். ‘அவரவர் பூத்தது போல’ என்பார் லா.ச.ரா. தனிப்பட்ட முறையில் ரஞ்ஜனி சுப்ரமணியத்தின் கருத்துதான் என்னுடையதும். எல்லா வாசிப்பும் சரியானவையே என்பீர்கள் நீங்கள். உ.வே.சா. நேர் முகத்தேர்வில் கி.வா.ஜ வைக் கேட்கிறார் ‘நயம் சொல்லுவீரா?’ என்று. ஆனால், கடிதங்களில் சொல்லப்பட்ட நயங்கள் எல்லாம் சரியானவைதானா? அல்லது சரியான நயம் என்ற ஒன்றே இல்லையா? நீங்கள் எதிர்பார்க்கும் நயங்கள் சொல்லப்படாமல் போன படைப்புகளும் உண்டா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

ஏற்கனவே வெவ்வேறு வகையில் இந்தத்தளத்திலேயே நான் சொன்னவைதான். மீண்டும் தொகுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன். அழகியல் சார்ந்த அடிப்படைகளை தொடர்ச்சியாக தொகுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது.

வாசிப்பின் இயல்பான வழியும், வாசிப்பு நிகழ்ந்தாக வேண்டிய முறையும் இதுதான். ஒருவாசகன் தன்னுடைய சொந்தவாழ்க்கையை, தான் அறிந்த வாழ்வுண்மைகளை கருவியாகக் கொண்டுதான் படைப்புகளை வாசிக்கிறான். ஒரு படைப்பு வாழ்க்கையைச் சரியாகச் சொல்கிறதா, உண்மையானதாக இருக்கிறதா, நுட்பமானதா என்று அவன் முடிவுசெய்வது அவனுடைய சொந்த அனுபவங்களைக் கொண்டுதான். உண்மை, நுட்பம், சரியான வெளிப்பாடு ஆகிய மூன்றும்தான் கலைப்படைப்பின் அடிப்படை.

இது ஒருவரிடம் நாம் நேரில் பேசும்போதும் நிகழ்வதுதான். ஒருவர் தன் சொந்த வாழ்க்கையை நம்மிடம் சொல்கிறார், உணர்ச்சிகரமாகவும் தர்க்கபூர்வமாகவும் பேசுகிறார் என்றுகொள்வோம். எப்படியோ அவர் உண்மையைச் சொல்கிறாரா, மிகைப்படுத்துகிறாரா, அவர் சொல்வதில் நுட்பம் உள்ளதா என்றெல்லாம் எப்படி நாம் புரிந்து கொள்கிறோம்? ‘எப்படியோ தோணிச்சு’ என்கிறோம். பொய்யும் உண்மையும் நமக்கு ’எப்படியோ’ தெரிந்துவிடுகின்றன. அதன் அடிப்படை நம் சொந்த அனுபவ உலகம்தான். நாம் உலகை அறிந்துகொண்டிருக்கிறோம். உலகை நாம் எப்படி அறிகிறோம் என நாம் அறிவோம். அந்த அறிதல்முறையின் வழிமுறைகளும் அதிலுள்ள பிழைகளும் பாவனைகளும் நமக்கு தெரியும். அதைக்கொண்டே பிறர் பேசுவதையும் அறிகிறோம். அதுவே இலக்கியவாசிப்புக்கும் அடிப்படை.

இலக்கியப்படைப்பு வாசகன் முற்றிலும் அறியாத எதையும் சொல்லிவிடமுடியாது. விமர்சகர்கள் அதை திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறார்கள். ஒன்றை வாசித்ததுமே ‘ஆம் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது’ என நமக்கு ஏன் தோன்றுகிறது? அதை நாம் ஏற்கனவே ஆழத்தில் அறிந்திருக்கிறோம் என்பதனால்தான். ஆகவே இலக்கியப்படைப்பு ஒன்றை சொன்னால் போதும், முன்வைத்தால் போதும், கோடிகாட்டினால் போதும், குறிப்புணர்த்தினால்போதும், எதையும் நிரூபிக்கவேண்டியதில்லை, வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை. ‘இலக்கிய உண்மை என்பது ஆதாரம் தேவையில்லாத உண்மை’ என்று அதனால்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் காலம் முதல் அகத்தூண்டல் (evocation) என்னும் கலைச்சொல்லால் கூறப்பட்டு வருவது வாசகன் தன்னை கண்டடையும் இந்த தருணம்தான். படைப்பு வாசகனில் வளர்வது இந்தப் புள்ளியில் இருந்துதான். இங்கிருந்து விந்தையான ஒன்று நிகழ்கிறது. வாசகன் படைப்பை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான், படைப்பை விளக்கவும் , வெவ்வேறு விஷயங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளவும் மட்டுமல்ல படைப்பை இன்னொன்றாக மாற்றியமைக்கவும் முயல்கிறான். படைப்பை ‘தன்வயப்படுத்தி’க் கொள்கிறான். அவனிடம் அதன்பின் இருப்பது அவனுடைய படைப்பே ஒழிய ஆசிரியன் எழுதியது அல்ல.

ஆகவே எழுத்தாளன் அவன் எழுதியபடியே வாசகன் வாசிக்கவேண்டும் என எதிர்பார்க்கமுடியாது, எதிர்பார்க்கவும்கூடாது. அப்படி நிகழ்ந்தால் அது மிகமிகக் குறுகிய வாசிப்பு. ‘சார், நீங்க இப்டி எழுதியிருந்தீங்க’ என்றல்ல ‘சார் நான் இப்டி வாசிச்சேன்’ என்றுதான் வாசகன் எழுத்தாளனிடம் சொல்கிறான். இலக்கிய வாசிப்பு என்பது ‘அறிந்துகொள்ளும்’ அனுபவம் அல்ல. வாசகன் ஒரு வாழ்க்கையை கற்பனை செய்துகொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பையே ஆசிரியன் வழங்குகிறான். வாசகன் கற்பனை செய்வது அவனுடைய சொந்த அனுபவங்களைக்கொண்டு, சொந்த கனவுகளைக் கொண்டு.

எந்த மாபெரும் புனைவையும் நாம் அப்படித்தான் படிக்கிறோம். எந்த அயல்படைப்பிலும் நம்மைப் பொருத்திக்கொள்ளும் ஒரு புள்ளியைக் கண்டடைகிறோம். அங்கிருந்து நம்மை விரித்துக்கொண்டு நாம் வாழ்வதை விட பலமடங்கு பிரம்மாண்டமான வாழ்க்கையை வாழ்கிறோம். போரில் இறக்கிறோம், தூந்திரநிலத்தில் வழிதவறுகிறோம். தத்துவச்சிக்கல்களில் அகப்படுகிறோம், ஆன்மிகமான அறிதல்களில் அமிழ்ந்தமைகிறோம்.

ஆகவே நான் இப்படி எழுதவில்லை என எந்த இலக்கியவாதியும் சொல்லமாட்டான். தன்னிடமிருந்து அந்தப்படைப்பு வாசகனிடம் சென்று தன்னிச்சையாக விரிந்து வளர்வதை, ஒரு கதை நூறுகதையாக ஆவதை, அவனே திகைப்புடன் பார்த்துக்கொண்டிருப்பான். நவீன இலக்கிய உரையாடல் என்பது நயம் பாராட்டல் அல்ல. வாசகன் தன்னிடம் படைப்பு வளரும் விதத்தை பகிர்ந்துகொள்வதுதான். பலருடைய பல வாசிப்புகள் பகிரப்படுகையில் அப்படைப்பு வளர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.

இந்த முடிவில்லாத சாத்தியக்கூறுகளைத்தான் பன்முகவாசிப்புத்தன்மை (Multiplicity of Reading) என்கிறோம். ஒரு கலைப்படைப்பின் அடிப்படை இயல்பே வாசகர்களிடம் வளர்வதுதான். தன்னில் இருந்து ஏராளமான கதைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான்.

அப்படியென்றால் வாசிப்பு வாசகனுக்கு ’புதியதாக’ என்ன அளிக்கிறது? இரண்டு நிகழ்கிறது. அவன் உணர்ந்த வாழ்வனுபவங்கள் அவன் வாசிக்கும் படைப்பின் வழியாக மறுதொகுப்பு செய்யப்படுகிறது, மறுஅமைப்பு கொள்கிறது. நம்மை அறியாமலேயே நமக்கு அது மாறிவிடுகிறது. இன்னொன்று, நம்மிடம் துளியளவே இருக்கும் அனுபவம் படைப்பு அளிக்கும் கற்பனைத்தூண்டல் வழியாக பிரம்மாண்டமாக ஆகிவிடுகிறது.

’ஏழாம் உலகம்’ அதை வாசிக்கும் அனேகமாக அனைவருக்குமே முற்றிலும் தெரியாத உலகம். மண்டையில் செங்கல்லால் அடிப்பதுபோன்ற அனுபவம் என ஒரு வாசகர் சொன்னார். ஆனால் முழுமையாக தெரியாததா ? அல்ல. பிச்சைக்காரர்களை பார்க்காதவர்கள் இல்லை. ஒருகணமேனும் அவர்களின் வாழ்க்கையை கற்பனையில் காணாதவர்களும் இல்லை. அவர்கள் அறிந்த அந்தச் சிறுதுளியை பயன்படுத்திக் கொண்டே ஏழாம் உலகம் வாசகனில் நிகழ்கிறது, விரிகிறது. அப்படி ஓர் உலகம் உள்ளது என்பதற்கு அவனுக்கு அது ஏதாவது சான்றை அளிக்கிறதா என்ன? ஆனால் அவன் அதை நம்புகிறான். அவனுக்கு அவனே அறியாத உலகம் ஒன்றை காட்டுகிறது. அவனை ஒவ்வாமையோ கசப்போ கொள்ளச் செய்கிறது. அதன் சாரமான ஆன்மிகத்தை கண்டடையவும் செய்கிறது.

ஆகவே எல்லா வாசிப்புகளும் சரியானவை. இதுதான் சரியான வாசிப்பு என்று சொல்லக் கூடாது, சொல்லவும் முடியாது. ஆனால் அதீத வாசிப்பு என சில உண்டு. அல்லது வழிதவறும் வாசிப்பு. அதை முன்னரும் எழுதியிருக்கிறேன். இப்படிச் சுருக்கிக் கொள்கிறேன்

அ. வாசகனின் அனுபவ உலகம் தீண்டப்பட்டு, அவன் மெய்யான உணர்வெழுச்சிக்கு ஆளாகி வெவ்வேறு வகையில் அவன் கற்பனை விரிவது இயல்பான வாசிப்பு. ஆனால் வெறுமே நினைவுத்தொகுப்புகள் தீண்டப்பட்டு அப்படைப்புடன் தொடர்புள்ளவை அவன் மனதில் எழுவது நல்ல வாசிப்பு அல்ல. Association Fallacy என இலக்கியத்தில் சொல்லப்படுவது அது. அவ்வாறு ‘இத வாசிக்கையிலே எனக்கு அது ஞாபகம் வந்திச்சு’ என்று சொல்வதும் நல்ல வாசிப்பு அல்ல. அது வாசிப்பு நிகழாமல் இருக்கும் நிலை. வாசிப்பை மறைக்கும் அகச்செயல்பாடு

ஆ. ஒரு படைப்பை பகுப்பாய்வு செய்யும் வாசிப்பு என்பது இலக்கிய வாசிப்பு அல்ல. அது கல்வித்துறை சார்ந்த ஒரு செயல்பாடு. அதற்கு முன்கூட்டியே வரையறை செய்யப்பட்ட விதிமுறைகள் உள்ளன. வாசகன் அங்கே மாற்றத்தை அடைவதே இல்லை. அவனுடைய ஆய்வுமுறைகளை அவன் நிலையாக வைத்துக்கொண்டால்தான் அவனால் ஆய்வு செய்ய முடியும். தன்னை மாற்றிக்கொள்ளாதவன், படைப்பு தன்னை குலைய வைக்க அனுமதிக்காதவன், அதன் வாசகன் அல்ல. அத்தகைய வாசிப்பு பெரும்பாலும் இலக்கணம், இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள், அரசியல் நிலைபாடுகள், சமூகவியல் போன்ற பிற அறிவுத்துறைக் கொள்கைகள் சார்ந்து நிகழ்வது. ஓர் அறிவுச்சூழலில் அதெல்லாம் தேவையான செயல்பாடுகள்தான். ஆனால் அவை இலக்கியவாசிப்பு அல்ல.

இ. ஓர் இலக்கியப்படைப்பை அதன் முழுமையுடன் உள்வாங்கியவரே அதன் வாசகன். ஒரு படைப்பின் முழுக்கட்டமைப்பையும், அதில் சொல்லப்பட்ட முழுக்கதையையும், அது முன்வைக்கும் முழுக்குறியீடுகளையும் வாசகன் கருத்தில்கொள்ளவேண்டும். அதற்காக முயலவேண்டும். ஒரு படைப்பின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் கருத்தில்கொண்டு மேலே கற்பனை செய்வதும் சிந்தனைசெய்வதும் இலக்கிய வாசிப்பு அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைதே- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதே- ஒரு இலையின் வரலாறு, அறிமுகவிழா