ஜெயமோகனின் நாவல் – கோட்பாடு [திறனாய்வு நூல்] வாசிப்பு விமர்சனம்
மனம் ஒரு வடிவமைப்புக்குள் பொருத்திக்கொள்ள விரும்புவதில்லை. அதன் இயல்பும் விரிவடையும் வெளியும் எல்லையற்றது. ஆனால் மன எல்லையின் விரிவடையும் சாத்தியத்தை வாசகன் தனது செளகரியத்தன்மைக்கு பங்கம் வராத விருப்பத்தால் முடமாக்கி விடுகிறான். தனக்கு அசெளகரியமான படைப்புகளின் தரிசனங்களை தவற விடுவதற்கு கூர்மையான வாசிப்பு திறன் போதாமையே காரணம். இதனால் தொடர்ந்து தனது விருப்பத்தை சொறிந்துவிடும் படைப்புகளை மட்டுமே நாடுகிறான்.
தமிழ் வாசகப்பரப்பு இதய பலவீனம் கொண்டதாகவும் எவ்வகையிலும் அதிர்ச்சியளிக்கும் நாவல்களை விரும்பாது ஒதுக்கி வைத்த காலங்கள் சற்று மாறி விட்டதாகவே கருதுகிறேன். இதன் விகிதச்சாரம் குறைவாக இருப்பினும் மாற்றம் நிகழ்ந்துள்ளதை உறுதியாக கூற முடியும்
முன்னெப்பதையும் விட தமிழ் வாசகப்பரப்பில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அதிகளவில் வரவேற்கப்படுகின்றன. மொழிபெயர்ப்புகள் சொல்லப்படும் விஷயத்தில் மட்டுமல்லாது சொல்லும் விதத்திலும் வாசகனை கவர்வதோடு அவனது அட்ரினலின் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது. ஒரு ஜெயிண்ட் வீலில் அமர்ந்து சுழலும் போதும் அட்ரினலின் அதிகம் சுரக்கவே செய்கிறது. எந்த மொழி வேண்டுமானாலும் இருக்கட்டும், நாவல் வாசிப்பு என்பது வாசகனின் சுரப்பு தூண்டியாக மட்டும் செயல்படுவதென்பது வளர்ச்சியாக கருத முடியாது. ஒரு நாவலை தரிசனத்தின் மூலமாக செயல்பட வைப்பது அசாத்தியமானது என்றாலும் அதற்கான ஒளிக்கீற்றுகளை அது தன்னகத்தே கொண்டதாக திகழ வேண்டும்.
உண்மையில் தற்கால தீவிர வாசகர்களின் ஒரு பகுதியினர் தரிசனங்களுக்கான ஒளிக்கீற்றுகளை மறைத்து வைத்திருக்கும் நாவல்களை தேடுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஜெயமோகன் சொல்கிறார் “விரிந்த தளத்தில் உலகமெங்கும் நடைபெறும் பெளதிக வாழ்வின் அலைகளும் புயல்களும் தமிழ் வாழ்வைத் தாக்கும் விதம் எழுதப்படவில்லை. அதற்கு தேவையான தகவலறிவு தமிழ்ப் படைப்பாளிகளிடம் குறைவு.”
இன்னொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “மன விரிவு இல்லாதவன் நாவலாசிரியனல்ல. அவன் தன் மன உலகை நாவல் கோரும் அளவு விரிவுபடுத்தவது இல்லை. அதை அவன், தன் மனத்தை உருவாக்கியுள்ள பற்பல கூறுகளுடன் மோதவிடவில்லை என்பதுதான் அதற்குப் பொருள். அவன் அது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருக்கிறான் அல்லது தனக்கு வசதியானபடி அவற்றைப் புறகணித்துவிடும் சோம்பல் கொண்டவனாக இருக்கிறான். இரண்டுமே நாவலாசிரியனுக்கு இருக்கக்கூடாத பண்புகள்.”
பெளதிக வாழ்வு மனிதனின் அகவெளியிலிருந்து முற்றிலும் அவனை அந்நியப்படுத்தி வைத்துள்ளதே தற்காலத்தின் வாழ்க்கைமுறை. ஆனால் தமிழ் எழுத்துலகில் பெளதிக விளிம்பிலிருந்து அகத்தின் மையம் நோக்கிய பயணத்திற்கான பரிசோதனைகள் விரிவடைவதற்கு பதிலாக அது திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கு வந்துள்ளதாக கருதுகிறேன்.
அமைப்புவாதத்தின் அடையாளம் கொண்டு இயங்கி வரும் பல எழுத்தாளர்கள் தங்கள் பிரக்ஞை உணர்வின் மீது எப்பொழுதோ சமாதி எழுப்பி விட்டார்கள். எல்லைக்குட்பட்ட பெளதிக தன்மையின் சுதந்திரம் என்பது நகைப்புக்குரியது. அது இலக்கியத்தில் பல ஆண்டுகளாக உறைந்து போன அருங்காட்சியகத்தின் கொண்டாட்டம். பிரக்ஞை உணர்வில்லாத எழுத்தாளர்கள் இருண்ட மூலையில் உழல்கிறார்கள். நாம் நகர வேண்டியது அகவிடுதலைக்கான மையம் நோக்கி. கண்ணாம்மூச்சை போல் வாசகனை சுழலவிடும் விளையாட்டுத் தனமான படைப்புகளை விட விளிம்பிலிருந்து மையம் நோக்கிய பயணத்திற்கான வரைபடங்களை ஒரு நாவல் உருவாக்க வேண்டும். அது சிக்கலானதாக இருந்தாலும் சரி.
மிலோராத் பாவிச் 1988-ல் எழுதிய கசார்களின் அகராதி தமிழில் 2019-ல் மொழியாக்கம் (ஸ்ரீதர் ரங்கராஜ்) செய்யப்பட்டுள்ளது. ஆண் பிரதி , பெண் பிரதி என்கிற இருதலைப்பில் மாறுதலின்றி ஒரே உள்ளடக்கத்துடன் இரண்டு புத்தகம். வெளிவந்த இந்த இரண்டு பிரதியில் சிறுவித்தியாசம் இரண்டு பத்திகள் மட்டுமே. அகராதி வடிவில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இந்நாவல் பல்வேறு வகையிலான ஒளிக்கீற்றுகளை கசிய விடுகிறது. இது போன்றதொரு சிக்கலான அதே சமயம் ஆழமான வாசிப்புக்கு வித்திடும் மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கிய பரப்பில் துணிச்சலாக கொண்டு வருவதற்கு காரணம் மேம்பட்ட வாசகப்பார்வையின் தேடல் தீவிரமாகி விட்டதாகவே கருதுகிறேன்.
இந்நூலை இளம் எழுத்தாளர் ஒருவருக்கு பரிந்துரை செய்தேன். ஆனால் அவருக்கு பா.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோனி வாசிப்பே சிரமம் என்று தெரிவிக்கிறார். மேலும் கடினமானதை சிரமப்பட்டு ஏன் வாசிக்க வேண்டும் அதன் அவசியம் என்ன என்று மறுத்து விடுகிறார். இப்படி தீவிர வாசிப்பு தன்மையிலிருந்து தங்களை விலகிக்கொண்டவர்கள் இன்று நிறைய எழுதுகிறார்கள். அவை கரையில் நிற்கும் வாசகனுக்கு கடல் அலையின் சுகத்தை மட்டும் தருகின்றன. ஆழ்கடலின் தரிசனங்களை புலப்படுத்துவதில்லை. கரையிலிருந்த வாசகன் ஆழ் கடலின் மீது என்றோ தனது பயணத்தை துவக்கி விட்டான் என்பதை நாவல் எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நூல் நாம் வாசித்து பெரிதும் கொண்டாடிய தமிழ் நாவல்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. புதிய நாவல்கள் மீதான வாசகர்களின் பார்வை புலத்தை கூர்மைப்படுத்துகிறது. நாவல் கலையின் துவக்கத்தையும் அது சென்றடைய வேண்டிய இலக்கையும் அதற்கிடையே உள்ள இடைவெளிகளையும் ஆய்வு செய்கிறது.
ஜெயமோகனின் வாசிப்பு எல்லை விசாலாமானது. வியப்பானது. நாவல்- கோட்பாடு என்கிற இந்நூல் இவரது முதல் திறனாய்வு நூல். 1992-ல் சமரசம் செய்து கொள்ளாத ஆழ்த்த இலக்கிய தேடலில் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகள். இது வெளிவந்தபோது அவருக்கு பலமான எதிர்வினைகளை பெற்று தந்த வகையில் மட்டும் இந்நூல் முக்கியத்துவம் பெறவில்லை. தற்போதைய தமிழ் இலக்கிய வாசக மற்றும் படைப்பு சுழலுடன் இவரது கோட்பாடுகள் நீண்ட விவாதத்துக்கும் ஆய்வுக்கும் பின்பும் பொருந்தி போவதாகவே இருக்கிறது.
தமிழ் நாவல்கள் மீதான ஆழ்ந்த சிந்தனைகளை விதைக் கூடிய இந்த கட்டுரைகள் 2010-ல் நூல் வடிவமாக தொகுக்கப்பட்டது . அதன் முன்னுரையில் ஜெமோ இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“இதில் இருந்து என் பார்வைகள் உருவாகி இப்போது நெடுந்தூரம் வந்திருக்கும் விதம் எனக்கே ஆச்சரியம் அளிக்கிறது. இந்நூலில் நான் பேசியிருக்கும் பல விஷயங்களை பிற்பாடு நான் எழுதிய விமரிசன நூல்களில் பல கோணங்களில் வளர்ந்து எடுத்திருக்கிறேன். பல இடங்களைத் தொட்டு விட்டிருக்கிறேன். பல இடங்களில் தடுமாறியும் இருக்கிறேன். ஆனாலும் அக்கருத்துகளின் விதைக்களம் என்ற முறையில் இந்நூல் பல கோணங்களில் சிந்தனையைத் திறப்பதாகவே உள்ளது எனக்கு. வாசகர்களுக்கும் அப்படியே இருக்கும் என நம்புகிறேன்.”
30 ஆண்டுகளுக்கு பிறகும் வாசகர்களை தேடிச் செல்லும் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விட வாசகன் தேடிச் செல்லும் எழுத்தாளர்கள் குறைவாகவே உள்ளனர். ஒரு எழுத்தாளன் வாசகர்களின் திணவிற்கான நகமாக தனது எழுத்தை பயன்படுத்தும்போது அவன் சிறந்த வியாபாரியாக மட்டுமே ஒளி வீசலாம். ஆனால் இலக்கிய நிழலாகக்கூட அவன் தடம் பதிப்பதில்லை.
விருதுகளுக்காகவும், அதிக பிரதிகள் விற்பனைக்காகவும், குறிப்பிட்ட குழுவினர்களின் திருப்திக்காகவும், அதிர்ச்சிகரமான எழுத்துகளை கொண்டு தங்கள் மீதான நேர் மற்றும் எதிர் கவன ஈர்ப்புக்காகவும் எழுதி வருபவர்களிடம் இயல்பான வகையிலான படைப்பூக்கத்திறனை எதிர்பார்க்க முடியாது. அப்படியானவை இலக்கிய ரகத்தில் நிலைப்பதில்லை.
மேலும் சிங்கப்பூரைப் பார், அமெரிக்காவைப் பார் என்கிற பொருளாதார சித்தாந்தங்கள் மீதான ஒப்பீட்டை போல் விருது வேட்கையோடு எழுதும் அயல் எழுத்தாளர்களின் இலக்கியத்துடன் நமது இலக்கியத்தை சில விமர்சகர்கள் முன் வைப்பது குறுகிய கருத்துரு மட்டுமல்ல அது முதிர்ச்சியற்ற புரிதலின் குறைபாடு. ஒரு மண்ணின் கலாச்சாரம், வரலாறு, பண்பாட்டு விழுமியங்களை தவிர்த்து விட்டு வரும் இலக்கியங்கள் வயிற்றுப்போக்குக்கு ஒப்பான வெறும் மனப்போக்கு மட்டுமே.
இந்நூல் தமிழில் கன்னடத்தில் மலையாளத்தில் வங்கத்தில் வெளியான முக்கிய நாவல்கள் மீதான விவாதங்களை எழுப்புவதுடன் வாசிக்க வேண்டிய தமிழ் நாவல்களின் பட்டியலை அதன் பிரதிமையுடன் வழங்குகிறது. எதிர்காலத்தில் நாவல் எழுதுபவர்களுக்கான மனவிரிவின் முக்கியத்துவத்தை கூர்மையாக பேசுகிறது.
எழுத்தாளனையும் நாம் படைப்பாளி என்றே அழைக்கிறோம். இது அவன் காண விழையும் தரிசனத்தைக் குறிக்கிறது. அத்தகைய எழுத்தாளனின் நாவல்கள் வாழ்வின் கர்மத்தை கரைக்கும் நதியாக பிரவாகமெடுக்கின்றன. நதிகள் குறிப்பிட்ட வாசகனுக்காக காத்திருப்பதில்லை என்றாலும் தேடல் நிறைந்த வாசகனின் பயணம் நதியின் உயிர்ப்பை நோக்கியே நகர்கிறது.
நன்றியும் அன்பும்
மஞ்சுநாத்
***
நூல்:நாவல் கோட்பாடு
[திறனாய்வு நூல்]
கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு:2010
பக்கங்கள்:128