விஷ்ணுபுரமும் வெண்முரசும்

அன்பின் ஆசிரியருக்கு,

திசம்பர் மாதம் நடைபெற்ற விஷ்ணுபுர விழாவில் என் பெற்றோரும் வந்திருந்தனர். கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இலக்கியம் பற்றிய பெரிய அறிமுகமோ தொடர் வாசிப்போ இல்லாதவர்கள். ஆனால் நான் வாசிக்கத் தொடங்கியதற்கு அவர்களே காரணம். என் அம்மா இம்முறை கிழக்கு பதிப்பாக வந்திருக்கும் விஷ்ணுபுரம் நாவலை நண்பர் செந்திலின் உதவியுடன் வாங்கினார். இதை எப்படியாவது படிச்சிடனும்’ என்று வழக்கம்போல உறுதிபூண்டார்.

விழா முடிந்த சில தினங்களிலேயே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கோவை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். இதன் இடையே மேகாலயாவில் மாநிலம் முழுவதும் அவசர கால ஆம்புலன்ஸ் ஓட்டும் சங்கத்தினர் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடைந்த தொண்டையைக் கொண்டு ஒருவழியாக கோவையில் இருந்தே பேசி தீர்த்துவைத்தேன். அவசர கால சேவை என்பதனாலும் கோவிட் மூன்றாம் அலை காரணமாகவும் சேவை தடைபடாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்தோம். இல்லை என்றால் சங்கத்தின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்க நேர்ந்திருக்கும்.

தனிமைப்பட்டிருந்த காலத்தில் நிறைய வாசிக்க எண்ணினேன். அப்போதுதான் உணவு எடுத்து வந்த அம்மா ‘விஷ்ணுபுரம் படிக்கிறியா’ என்று கேட்டார். பார்ப்போம் என்று எண்ணி வாங்கிக்கொண்டேன். புதிய பதிப்பு, தெளிவான எழுத்துக்கள் சீரான இடைவெளி என்று நன்றாக இருந்தது. நாவலை அப்போது வாசிக்கத் தொடங்கினேன். விடுமுறையின் இடையிலேயே சில்லாங்க் வர நேர்ந்தது. பல வேலைகள், மூன்றாம் அலையால் தலைமைச் செயலகத்தில் பலருக்கும் தொற்று. எனக்கு ஒரு வாரம் முன்னரே வந்து குணமாகிவிட்டிருந்ததால் உடனே கிளம்பினேன். இருநூறு பக்கங்களுடன் நின்றிருந்தது.  இரண்டு வாரங்கள் வேலைகளில் மூழ்கி வாசிக்க நேரமில்லாமல் இருந்தது. பின்னர் தினமும் காலையில் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன்.

ஒரு புத்தகத்தை முன்னரே வாசித்திருந்தாலும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வாசிக்கும்போது நம் அகப் பயணம் நமக்கே கூர்மையாக தெரிகிறது. கோவையில் மோகமுள் நாவலை வாசித்தேன். அதுவும் கிட்டத்தட்ட 700 பக்க நாவல் என்பதை மறந்திருந்தேன். இப்போது வாசிக்கும்போது மிகவும் சுமாரான படைப்பு என்றுதான் தோன்றுகிறது. ரங்கண்ணா முதல் முறை தம்பூராவை மீட்டி இசை இன்னது என்று பாபுவிடம் சொல்லும் இடம் தவிர நாவல் உச்சம் தொட்ட இடங்கள் என்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஒரு வாரத்திற்கு முன் விஷ்ணுபுரம் நூலை வாசித்து முடித்தேன். என்னுடைய பணிக்கு இடையில் தீவிரமான நாவல்களை வாசிப்பதில் எனக்கு சிக்கல் உண்டு. அது பணிக்கிடையே வரும் சில மனக்கணக்குகளை குழைக்கும். எனவே வேகமாக வாசித்து அதை நண்பர்களிடம் பேசி அசைபோட்டு முடிக்க வேண்டும். பிங்கலன், சங்கர்ஷணன், அஜிதன், அக்னிதத்தர், பவதத்தர், நீலி, ததாகதர் கூட வந்து அலைக்கழித்தார்கள். உங்களை தெரிந்திருந்ததால் இதில் உங்களை அங்கங்கு கண்டுகொண்டேன். மொத்த பாரத தேசத்தையும் ஒரே ஊரில் கொண்டு சுருக்கி அதே சமயம் தத்துவங்களின் மோதல்களுக்கிடையே அதே ஊரை பாரதவர்ஷத்திற்கு இணையாக பெரிதாக்கி இறுதியில் அனைத்தும் மீண்டும் தொடங்கும் அந்த அமைதி அற்புதமான இலக்கிய சமச்சீர் நிலை.

விஷ்ணுபுரத்தில் எதுவும் புதிதில்லை எல்லாம் நிகழ்ந்தவைதான் என்று காலத்தைப் பற்றிய அந்த தத்துவத்திற்கு இணையாக இந்த நாவலும் முழுமை பெற்றுள்ளது. 1997ம் ஆண்டில் இதை வாசித்தோருக்கு இது எந்த வகையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று உணர முடிகிறது. பின்நவீனத்துவ படைப்பான இது அதே பின்நவீனத்துவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் படைப்பாக இருந்திருக்ககூடும்.  முற்றிலும் காணக்கிடைக்காத ஒரு பெரும் கலை வடிவமாகவும், அதே காரணத்தால் வெறுப்புக்கும் உள்ளாகியிருக்கும். இந்தப் படைப்பு வெண்முரசாக மாறி இன்று அதே மைய கோபுரம் போல் வளர்ந்திருப்பது பெரும் நிறைவைத் தருகிறது.

நாவலின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் விரிவாக எழுத எண்ணம். ஆனால் அஜிதன் தர்க்கத்தால் வென்று வெறுமையை உணர்வது போல இதைப் பற்றி தர்க்க புத்தி கொண்டு எழுதி அதன் உன்னதம் போய்விடுமோ என்று கூட எனக்கு தோன்றுகிறது. வாசித்து முடித்ததும் விஷ்ணுபுரத்தின் மையக் கோபுரத்தை பார்ப்பது போல் தான் இதை உணர்கிறேன். அத்தனை உயரம். ஒவ்வொரு அடுக்கும் ஒரு உச்சம் போல இந்த நாவலில் சென்றடைந்திருக்கிறீர்கள், வாசகர்களையும் சென்றடைய செய்கிறீர்கள்.

இந்த நாவல் எழுதி 25 வருடங்கள் இருக்கும் என்று மனக்கணக்கில் இருந்தது. நாவலை முடித்தவுடன் தான் முன்னுரையைப் பார்த்தேன். சமீபத்தில்தான் விஷ்ணுபுரம் விழா முடிந்தது, பிப்ரவரி 11ம் தேதி 1997ம் வருடம் முதல் முன்னுரையை எழுதியிருக்கிறீர்கள். இன்றோடு அது 25 வருடங்கள். உங்கள் 35வது அகவையில் இதை எழுதியிருக்கிறீர்கள். எனக்கு இப்போது அதே வயது. பணிகிறேன். இந்த தற்செயல்கள் ஆச்சரியமாக இருக்கிறதே என்று எண்ணும்போது சில்லாங்கில் நான் வசிக்கும் பகுதிக்கு பெயர் பிஷ்ணுபூர்! விஷ்ணுபுரத்தில் எல்லாம் ஏற்கனவே நிகழந்தவைதானே

விஷ்ணுபுரத்தின் முதல் 25 வருடங்களுக்காக உங்களுக்கு என்னுடைய அன்பும் வணக்கங்களும்.

அன்புடன்,

சா.ராம்குமார்.

அன்புள்ள ராம்

நலம்தானே?

உங்கள் கடிதம் விஷ்ணுபுரம் நினைவுகளை மீட்டியது. ஒரு இலக்கியப் படைப்பு என்பது அதற்குப்பின்னாலுள்ள ஆசிரியனின் அகவாழ்க்கையின் வெளிப்பாடு. அது எந்த அளவுக்கு பெரியதோ, எந்த அளவுக்குத் தீவிரமானதோ அந்த அளவுக்கு அந்நாவல் முழுமையடைகிறது. விஷ்ணுபுரம் என் 1972 ல் என் பத்து வயதில் தொடங்கி 1992ல் நித்ய சைதன்ய யதியை கண்டடைவது வரையிலான இருபதாண்டுக் கால அகவாழ்க்கையின் விளைகனி

1972ல் நான் அ.லெ.நடராஜன் எழுதிய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். எனக்கு பேச்சுப்போட்டிக்கு பரிசாக கிடைத்த நூல் அது. நான் வைத்து வைத்து வாசித்து அதிலேயே வாழ்ந்தேன். அவ்வயதில் என்னை விவேகானந்தராக கற்பனை செய்துகொண்டேன். என்னுடைய வாழ்க்கையை ‘அர்த்தப்படுத்திக் கொள்ள’ வேண்டும் என்னும் அவா அப்படித்தான் உருவானது என நினைக்கிறேன். அடைந்தும் துறந்தும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என அப்போது கண்டடைந்தேன்.

அந்த தீவிரம் என்னை எங்கெங்கோ கொண்டுசென்றது. என்னை அரசியலியக்கங்களின் தற்கொலைப் போராளியாக கற்பனைசெய்து கொண்டிருக்கிறேன். பலமுறை சாவின் விளிம்பு வரை சென்றேன். ஒருமுறை கொலையை நேரில் கண்டேன். அடிவாங்கினேன். வீட்டை விட்டு ஓடினேன். பின்னர் துறவியாக ஆக முயன்றேன். நாடோடியாக பிச்சைக்காரனாக அலைந்தேன். தெருக்களின் தூங்கினேன். வாசித்தேன், எழுதினேன்.

அந்த அலைச்சலின் முழுச்சித்திரமும் விஷ்ணுபுரம் நாவலில் உள்ளது. வெவ்வேறு கதாபாத்திரங்களாக. மெய்மை நாடிய அலைச்சல் என்பது ஒரே சமயம் ஒரு தவமாகவும் நடிப்பாகவும் மாறும் விந்தை விஷ்ணுபுரம் நாவலில் நிகழ்ந்துள்ளது. அவ்வகையில் அறிவனாகிய பிங்கலனும் கவிஞனாகிய சங்கர்ஷணனும் பித்தனாகிய திருவடியும் அலைபவனாகிய பாவகனும் நானே என உணர்கிறேன்.

இந்த தேசம் இங்கே வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு சவாலை அளிக்கிறது. இது மரபென மாறி நமக்குள் வந்துவிடுகிறது.விதைக்குவியலாக நமக்குள் கிடக்கிறது. நாம் ஊற்றும் எந்த நீரும் அதையே முளைக்கச் செய்கிறது. மீண்டும் மீண்டும். காடுகளில் வேளாண்மை செய்ய நிலத்தை சுட்டெரித்து வேகவைத்து விதைகள் இல்லாமலாக்கவேண்டும். அதைப்போல நம்முள் வாழும் இந்த மாபெரும் தேசத்தை புரிந்துகொண்டு, வகுத்துக்கொண்டு, கடந்தபின்னரே நாம் நம் சொந்த மெய்யியல் தேடலை நோக்கிச் செல்லமுடியும்,

இருபதாண்டுக்காலம் நான் வெறிகொண்டு வரலாற்றையும் தத்துவத்தையும் மெய்யியலையும் வாசித்திருக்கிறேன். இந்த அறுபதாண்டுகளில் அந்த வரலாற்றுநூல்கள் என் அறைகளெங்கும் பழுப்பேறி நிறைந்துள்ளன. இந்தியப்பெருநிலத்தில் அலைந்திருக்கிறேன். அவ்வனுபவங்கள் கனவுகளாக என்னுள் நிறைந்திருந்தன. விஷ்ணுபுரம் வழியாக அவற்றை சுருக்கி தொகுத்து ஒரு அடையாளம் போல ஆக்கிக்கொண்டேன். சிவலிங்கம் என்பது மகேந்திரமலைதான் என்பார்கள். மலையை சிறு லிங்கம் என கழுத்தில் கட்டித்தொங்கவிடுவதுபோல.

1996ல் விஷ்ணுபுரம் எழுதிமுடித்த பின்னரே உண்மையில் என்னால் நித்ய சைதன்ய யதியை ஆழமாக அணுகமுடிந்தது. 1997ல் நாவலின் பிரதியை நித்யாவுக்கு அளித்தபோது சிரித்தபடி “So Big” என்றார். அது என்ன பொருள் கொண்ட சொல் என பின்னர் புரிந்துகொண்டேன். அவ்வளவு இருந்திருக்கிறது எனக்குள்.

வெண்முரசு எழுத மீண்டும் ஒரு இருபதாண்டுக்கால வாழ்க்கை தேவைப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் ஒரு குவிதலை நோக்கிச் சென்ற ஆக்கம். அக்குவிதலின் கூர்முனை என நான் அறிந்த ஒரு துளி விரிந்ததே வெண்முரசு.

ஜெ

https://www.vishnupurampublications.com/
முந்தைய கட்டுரைஅளவை – ஒரு சட்ட இதழ்
அடுத்த கட்டுரைவண்ணக்கடல் வழியே