கொரானா பேரிடரின் முதல் அலை (அவ்வாறான சுட்டு பெயரை காலம் பிற்பாடுதான் உருவாக்கிக் கொள்கிறது) எல்லோரையும் பாதிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் பெருந்தொற்று குறித்து தாங்கள் எழுதிய முதல் கதை, படிப்படியாக ஒவ்வொன்றாக என நூறு சிறு கதைகளாக நிறைவடைந்தன. அதன் பிறகு (இரண்டாம் அலையின்போது, அல்லது பொதுமுடக்கம் கடந்த ஆண்டு அறிவிக்கப்படுவதற்கு சற்று) முன்பு ‘இரு நோயாளிகள்’ சிறுகதை வெளியான போது படித்திருந்தேன்.
மீண்டும் 05-02-22 அன்று சுக்கிரி வாட்ஸப் குழுமத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததையொட்டி அன்று மாலை இந்த கதை விவாதத்துக்கும், உரையாடலுக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. Zoom meeting-ல் நானும் கொஞ்சம் நேரம் இருந்தேன். ஒரு கதையைக் குறித்து இரண்டு மூன்று மணிநேரங்கள் பேசமுடியுமா என்றால் பேசக்கூடிய விஷயமாக இக்கதையில் தொடர்புடைய இருவரின் வாழ்க்கை இருந்திருக்கிறது.
இந்த ஆண்டில் இதே நோயச்ச மூன்றாம் அலை வந்து சென்ற பின் மீண்டும் இதே கதையை மீள்வாசிப்பு செய்ய நேர்ந்தது. உள்ளபடியே Changampuzha Krishna Pillai (17-June 48) திருச்சூர் புதுமைப்பித்தன் (30-June 48) ஆகிய இருவரின் மரணம் ஒரே மாதத்தில் இறந்து போன ஒற்றுமையும், காசநோய் என்கிற பொதுமையும் புனைவா, வரலாறா என தோற்றம் மயக்கத்தை தருகிறது. ஜும் மீட்டிங்கில் கேட்டதைப் போல இருவரும் ஒரே மருத்துவமனையில் இருந்தனரா, அந்த மரணங்களை கண்ணால் பார்த்த நேர்சாட்சி என்கிற முறையில் இணைத்துப் பேசி வரலாற்றை இட்டு நிரப்பக்கூடிய கேரியர் வேலையை எட்டு வயது சிறுவனாக இருந்த கிருஷ்ணன் நாயர் செய்தாரா என்கிற கேள்வியை மறுக்க நம்மிடம் வேறு காரணங்களில்லை.
அன்று மாலை ஈரோடு நவீனுடைய திருமண வரவேற்பு, நேரில் மதுரைக்கு சென்று அபி சாருக்கு பத்திரிகை வைத்த கையோடு என்னை அலைபேசியில் அழைத்துவிட்டு முடிந்தால் நேர் சந்திப்பில் அழைப்பிதழ் தருவதாக கூறிவிட்டு வாட்ஸப்-பில் அனுப்பியிருந்தார். எப்படியும் தாங்களும் வந்துவிடுவீர்கள் என்று நினைத்து ஞாயிறு காலை செண்ட்ரல் வந்திறங்கி லோக்கல் ட்ரெயினில் பழவந்தாங்கல் ஸ்டேஷனிலிருந்து மடிப்பாக்கம் ஷேர் ஆட்டோ பிடித்து மண்டபம் வந்து சேர்ந்த போது தை மாதம் முடிவடைய இருக்கும் இந்த கடைசி நாள் முகூர்த்த நாளாக இருந்தது போல் தெரிகிறது, வந்த பஸ்ஸிலும், ட்ரெயினிலும் அந்த அதிகாலை நேரத்திலேயே கல்யாண வீட்டிற்குச் செல்லும் ஏராளமான பயணிகளைப் பார்த்தேன். வழியில் தென்பட்ட திருமண மண்டபகங்களும் நிரம்பி வழிய லேசான பனியை, இதமான பனிக்காற்றை சென்னை மாநகர மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
செல்லம்மாள் சக்தி திருமண மண்டப கூடத்தில் தாங்கள் குடும்பத்துடன் இருந்தீர்கள், சற்று நேரம் செல்லச் செல்ல சுனில் கிருஷ்ணன், சுபஸ்ரீ ஆகியோருடன் எனக்கு அறிமுகமில்லாத (விஷ்ணுபுர நண்பர்களில்) சிலரும் சேர்ந்து கொண்டது இலக்கிய விழாவைப் போல மாற்றிவிட்டது. நாதஸ்வரம் முழங்க, மணமேடையீருந்த பெண்கள் மங்கல ஒலியெழுப்பி குலவை இட்ட போது என் சிறு வயதில் எங்களூர் வகையறாவிலும் இதுபோன்ற திருமணத்திலும், பூப்பெய்தும் சிறுமிகளுக்கான சடங்குகளின்போதும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் இன்று அருகத் தொடங்கிவிட்டன. மற்றபடி செல்வேந்திரன் சென்னைவாசியாகி பத்து, பதினைந்து ஆண்டுகளாகி இருந்தாலும் இன்னும் தன் ஊர் நினைவாக சாத்தான்குளம் பற்றிப் பேச்சைத் தொடங்கினார்.சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஒரு லெஜெண்ட் என்று சட்டென்று கூறினீர்கள். கிரிக்கெட் தமிழ் வர்ணனையில் அவருடைய இடத்தை சரியாக மதிப்பிட்டீர்கள். அதே ஊர்க்காரரான தாமரைமணாளனைப் பற்றி சிறியதொரு உரையையே ஆற்றினீர்கள். விகடனில் இருந்தது, தொடர்ச்சியாக வணிக எழுத்திலும், பத்திரிகையிலும் அவர் ஈடுபட்டிருந்தது என பலவற்றை நினைவு கூர்ந்தீர்கள்.
இதெல்லாம் திட்டமிட்டு தயாரித்து வந்தவையல்ல, ஏற்கனவே முன்பு எப்பொழுதோ கேட்டது, படித்தது எப்படி இவ்வளவு கோர்வையாக தங்களால் சொல்ல, பேச முடிகிறது என்று தெரியவில்லை. முன்பு நானும்கூட தாமரைமணாளனை படித்திருக்கிறேன், ஆனால் இப்பொழுதெல்லாம் வணிக எழுத்து என்று என்னைப் போன்றவர்களே வளர்த்துக் கொண்ட ஒவ்வாமை அனாவசியமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு படைப்பிலக்கியத்துக்கும் அதற்குரிய இடமுண்டு, எதற்கு பாலகுமாரனை, ராஜேந்திரகுமாரை தீவிர இலக்கியத்துக்கு எதிரானவர்களாக நிறுத்திக் கொள்ள வேண்டும்? பெரிய எண்ணிக்கையிலான வாசகர்களை எழுத்தின் பக்கம் அழைத்து வந்தவர்களல்லவா, அவர்கள்.
நிற்க, தாலி கட்டும் நேரத்தில் நவீன் தங்களை மணமேடைக்கு அழைத்து அருகில் நிற்கச் செய்தது, முடிந்த சிறிது நேரத்தில் மணமகள் சகிதமாக சாஷ்டங்கமாக தங்களின் காலில் விழுந்தது, மேடையேறும் போது, அவர் இப்படி சட்டென செய்யப் போவதை உணர்ந்து காலில் இருந்த செருப்பைக் கழட்டிக் கொண்டது, மாப்பிள்ளை கோலத்தில் ‘குமரித்துறைவி’ நாவல்கட்டை தாம்பூலப் பையாக எல்லோருக்கும் கொடுத்த நேரத்தில் இலக்கியவாதி என்பது பகுதி நேர வேலையல்ல, நவீன் அதை முழு நேரமாக செய்தார் என்பதை உணர்த்தியது.
நவீன் வல்லினத்தில் எழுதிக் கொண்டிருக்கும் சிறுகதைகள் நாட்டார் மரபுகளை எப்படி இவ்வளவு கூர்மையாக எழுதிவிட முடிகிறது என்று மலைக்கச் செய்தவர். அவருக்கு எது குலசாமி என்பது எனக்குத் தெரியாது, பெற்றோர் இருவரின் பெயரையுமே இனிஷியலாக கொண்டிருக்கும் நவீனுக்கு சுந்தரேசரும், மீனாட்சியும் ஆசிர்வதிப்பார்களாக! லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் முஸ்லிம் முறைப்படி கையேந்தி ‘துஆ’ கேட்டபடி உருகிநிற்க, உடனிருந்த (அவருடைய மனைவி) கௌரி கான் தன் மரபுப்படி கைகூப்பி கண்ணீர் அஞ்சலி செலுத்தியதைப் போல – திருவல்லிக்கேணி வாலாஜா நவாபு பள்ளிவாசலில் நவீனுக்காக ஒரு சிறிய பிரார்த்தனை செய்திருந்தேன். அல்லாசாமியின் ஆசிர்வாதம் புதிய வாழ்க்கையை தொடங்க இருக்கு நவீன் – கிருபா தம்பதிகளுக்கும் தேவைப்படும்தானே?
கொள்ளு நதீம், ஆம்பூர்.