சடம் [சிறுகதை] ஜெயமோகன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்…” என்று தொடங்கும் பாந்தனின் வரிகளில் வருகிறது, இக்கதையின் ஆதாரமான முடிச்சு. தத்துவார்த்தமான உருவகமாக பார்த்தால், சுடலைப் பிள்ளை பிணத்தை புணரும் பொழுது, அது உயிர் கொள்வதாக வரும் அக்கடைசி காட்சி ( உயிரற்ற ஒரு உலகு விழைவினால் உயிர்கொள்ளல் ) ஆதி உயிர் ஜனித்த நொடியின் மறுச்சொல்லல் தான் என்று எனக்குத் தோன்றியது.
‘சிஜ்ஜடம்’, ‘சிஜ்ஜடம்’ என்று அனத்திக் கொண்டு அரைக்கிறுக்கன் போல் அக்காட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஒருவன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணத்தில் எனக்குத் தோன்றுகிறது, அவனின் கடந்த கால வாழ்க்கை தான் சுடலைப் பிள்ளையின் வாழ்க்கையாக கதையில் விரிகிறது என்று. அவனே அந்த நிகழ்வை மீள மீள நினைத்துக் கொள்கிறான் என்றும்.
தத்துவார்த்தமான பல கேள்விகளை எழுப்புகிறது இக்கதை. இக்கதையை வாசித்ததும் எனக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தன.
- அன்னைக்கு, ‘சிதக்னி குண்ட ஸம்பூதா..’ என்ற ஒரு நாமம் இருக்கிறது. சித் என்னும் அக்னியிலிருந்து தோன்றியவள்’ என்று பொருள்.
- கண்ணன் கீதையில், ‘எல்லா உயிர்களும் தோன்றும் இந்த பிரகிருதியே கருப்பை, அதற்கு பீஜம் அளிக்கும் நானே, தந்தை — மஹத் ப்ரஹ்ம யோனி:, தஸ்மின் கர்ப்பம் ததாமி அஹம் ; அஹம் பீஜபிரத: பிதா’ என்கிறான் .
அக்கடைசிக் காட்சி இவ்விரண்டிற்கும் மிக அருகில் இருப்பதாகப் பட்டது எனக்கு.
உலகியல் தளத்தில் வைத்துப் பார்த்தால்:
மிருகக் காமம் மிகத் தூயது. புணர்ந்து கொண்டிருக்கும் எவ்வுயிரையும் கொல்லாதிருப்பது நம் வாழ்வியல். காமன் கடவுளே தான் நமக்கு.
ஆனால் இக்கதையில் வரும் சுடலை பிள்ளையின் காமம் தூயதா. அதில் சிறுமை செய்யும் எண்ணம் இல்லையா? கீழ்மை இல்லையா? அதிகார வெறியில்லையா? வக்கிரம் இல்லையா?
காமத்தை ஆராய்வதல்ல கதையின் நோக்கம் என்று புரிகிறது. மிகப் பெரிய தத்துவத்தை ஒரு உலகியல் நிகழ்வாகக் காட்டுவது தான் இக்கதையின் நோக்கம். பிணத்தை புணரும் அளவு அவன் நோய் கொள்ள வேண்டுமானால் , அவன் எத்தனை கீழ்மை கொண்டிருக்க வேண்டும், என்று சொல்ல கதை ‘வல்லுறவு’ என்பதை கையாள்கிறது.
80களில் வந்த சினிமாக்களில் பலவந்தப் படுத்தப் படுவதற்காகவே படைக்கப்பட்டனர் தங்கை கதாபாத்திரங்கள். அக்காட்சிகள் ‘கிளர்ச்சிக்காக’ பயன்பட்டன. இது போன்று பிணத்தை புணரும் கதைகள் தமிழிலக்கியத்தில் இரண்டு மூன்று வந்திருக்கின்றன. அவை காமத்தை ஆராய்கின்றன. அவற்றில் மனிதனின் கீழ்மையைச் சொல்ல ‘வல்லுறவுக்’ காட்சிகள் பயன்பட்டிருக்கின்றன. இக்கதையில் தான் முதன்முறையாக, உயர் தத்துவத்தைச் சொல்ல ‘வல்லுறவு’ கையாளப் பட்டிருக்கிறது.
ஆனால் , ‘சித்’ என்று சொல்லப்படுவது இந்த ‘lust’ அல்ல. அது ‘pure consciousness’. ஐந்து இந்திரியங்களுக்கும் மேலாக வைக்கப்படும் ‘மனஸ்’ என்பதற்கும் மேலாக வைக்கப்படுவது . ஏழு சக்கரங்களில் ஸஹஸ்ராரத்தோடு சம்பந்தப் பட்டது. இந்திரியக் காமத்திற்கு பல படிகள் மேலானது. ‘சித்’ என்னும் பிரம்மத்தின் முதல் சலனத்தை , அதிகார வெறி கொண்ட, வக்கிரத்தோடு சமன்படுத்துவது கொஞ்சம் far-fetched ஆகத் தோன்றுகிறது. கண்ணனின் கீதை வரிகளில் வருவதும் தத்துவ உருவகம் தான் என்றும் தோன்றுகிறது.
இக்கதையில் desire-lust ஆகி, lust-fetish ஆகி, fetish-necrophilia வரை சென்றிருக்கிறது.
‘Rape’ என்பது காமம் கூட அல்ல. அது ஒரு அதிகார வெறிச் செயல்பாடு, ஒரு assault, அது ‘உடலுக்கு’ எதிராக செய்யப்படும் வன்முறை மட்டும் அல்ல. அதை normalize செய்வதும், பேசிப் பேசி அதிலுள்ள அதிர்ச்சியை desensitize செய்வதும் கூடாது என்பது என் தரப்பு. இவை, ஒரு சமூகமாக இவ்விஷயத்தில் நாம் அடைந்துள்ள ஒரு awareness-ஐ பின்னடையச் செய்கிறது என்பது என் எண்ணம்.
பிணமென்றும் பாராமல் அவள் உடலை violate செய்யும் சுடலைப் பிள்ளையை, அவள் அணைத்துக் கொண்டதும், அவளுக்கு Rigor Mortis set ஆகியிருக்க வேண்டும் என்று மிக விரும்புகிறேன்.
அன்புடன்,
கல்பனா ஜெயகாந்த்.