எம்.வேதசகாயகுமார் பற்றிய என் நினைவுகளில் முக்கியமானது அவரால் எழுத முடியாதென்பது. பல இதழாசிரியர்களுக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இப்பிரச்சினை வந்துவிடுகிறது. இதழாசிரியர்கள் பிறர் எழுதியதை வெட்டிச்சுருக்கி தொகுத்து சொந்த மொழியை இழந்துவிடுவார்கள். சொற்கள் அகத்தே தோன்றாமலாகிவிடுவார்கள். உண்மையில் பிறர் படைப்புகளில் அவர்களும் வெளிப்படுகிறார்கள். அந்த வெளிப்பாடே அவர்களை நிறைவடையச் செய்துவிடுகிறது. அதேபோல கல்லூரி ஆசிரியர்கள் பேசிப்பேசி பேச்சே அவர்களின் வெளிப்பாட்டுமுறையாக ஆகிவிடுகிறது.
வேதசகாய குமார் கறாரான அழகியல் விமர்சகர் . மூலநூலை விரிவாக, ஐயமற கற்பது அவர் வழி. அது நவீனத்தமிழிலக்கியமானாலும் சரி, மரபிலக்கியமானாலும் சரி, பிரதிசார் விமர்சனம் அவருடைய மரபு. அமெரிக்க புதுத்திறனாய்வாளர்கள் (New Critics) அவருடைய முன்னோடிகள். அவர்களின் முன்னோடியான ஐ.ஏ.ரிச்சர்ஸை பேராசிரியர் ஜேசுதாசன் வேதசகாய குமார்ரின் மண்டைக்குள் ஏற்றிவிட்டிருந்தார். சி.சு.செல்லப்பாவுக்குபின் வேதசகாயகுமார்தான் தமிழின் முக்கியமான அலசல்விமர்சகர்.
வேதசகாயகுமாரின் வகுப்புகள் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பெரும் சுரங்கங்கள் ஆனால் அதெல்லாம் வகுப்புகளில். அவற்றை எழுதுவதென்றால் அவரால் முடிவுகளையே எழுத முடியும். அவற்றால் பெரிய பயன் இல்லை. அம்முடிவுக்கு அவர் படிப்படியாக வந்த முறையே அலசல் விமர்சனங்களில் முக்கியமானது. அதை அவர் எழுதமுடியாது. சோம்பல் அல்ல. அவருடைய வழிமுறை அது அல்ல. நாளெல்லாம் பேசிவிட்டு அதைப்பற்றி எழுத அமர்ந்தால் பத்து வரி எழுதுவார். சொல்புதிது இதழில் அவர் எழுதிய நீண்ட கட்டுரைகள் எல்லாம் அவரை நான் தூண்டி தூண்டி எழுதவைத்தவை
ஆகவே வேதசகாய குமார் மைய அரசின் பல்கலைக்கழக நிதிக் குழுவின் நிதியுதவி பெற்று தமிழ் விமர்சனத்துக்காக ஒரு கலைக்களஞ்சியத்தை தயாரிக்க முனைவதாக என்னிடம் சொன்னபோது அவர் அதை முடிப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால் அபூர்வமான செயலூக்கத்துடன் வேதசகாய குமார் அப்பணியைச் செய்து முடித்தார். அதன் கைப்பிரதியை எம்.எஸ். செம்மைநோக்கியபோது நானும் படித்தேன். திகைப்பாக இருந்தது.
இந்நூலை எழுத வேதசகாய குமார் விரிவான ஆராய்ச்சி செய்யவேண்டிய தேவையே இல்லை. முப்பதாண்டுகள் அவர் ஒவ்வொருநாளும் பலமணிநேரம் படித்து, விவாதித்த களம் இது. ஆனால் அவர் தன் இயல்புப்படி ஒவ்வொன்றையும் மீண்டும் உறுதிசெய்துகொண்டார். ஒவ்வொரு செய்திக்கும் பின்னணி ஆதாரம் தேடினார். எழுதி முடிப்பது வரை ஒருநாளில் ஐந்தாறு மணிநேரம் இதற்காகச் செலவிட்டார். ஒருவகையில் அது நன்று. அவர் செயலூக்கம் கொண்ட மனிதர். அவரைப்போன்ற ஒருவருக்கு 55 வயதில் பணி ஓய்வென்பது ஒரு தண்டனை. வேதசகாய குமார் இந்த அகராதிப்பணியி தன்னை மூழ்கடித்து அந்த விடுபடலைக் கடந்தார்.
வேதசகாய குமார்ரின் இந்த தொகுப்புநூலை குறுங்கலைக்களஞ்சியம் என்று சொல்லலாம். கோசம் என்று இதை சம்ஸ்கிருத மரபு சொல்கிறது.ஆ.சிங்கார வேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி ஒரு கோசம்தான். ஒரு குறிப்பிட்ட கலை,சிந்தனை, அறிவியல் களம் பற்றிய செய்திகளின் தொகுதியே கோசம். இந்தக் குறுங்கலைக்களஞ்சியம் தமிழ் நவீன இலக்கிய விமர்சன மரபைப் பற்றியது. அதிலுள்ள மைய ஆளுமைகளை தொகுத்துப்பார்ப்பது. தமிழில் இவ்வகையில் இதுவே முதல்முயற்சி. ஒட்டுமொத்தமாக என்ன நிகழ்ந்திருக்கிறது, என்ன எஞ்சுகிறது என வேதசகாய குமார் ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
கலைக்களஞ்சியம் என்பது செய்திகளின் தொகுதி மட்டுமல்ல. அதில் கூரிய மதிப்பீடும் இருந்தாகவேண்டும். கலைக்களஞ்சியத்தில் யார் இடம்பெறவேண்டும் என்று முடிவுசெய்வதிலேயே அந்த மதிப்பீடு வந்துவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தை அளிப்பது, பங்களிப்பைத் தொகுத்துச் சொல்வது, ஒருவரை இன்னொருவருடன் தொடர்புபடுத்துவது, பகுப்புகளை நிகழ்த்துவது ஆகியவற்றில் அந்த மதிப்பீடே தொழிற்படுகிறது.
அத்தகைய மதிப்பீடு கொண்ட கலைக்களஞ்சியங்களுக்கே கல்விமதிப்பு உண்டு, எஞ்சியவை வெறும் தகவல்திரட்டுகள் (journals, Annals) மட்டுமே. மதிப்பீடுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியம் என்பது தகவல்களுடன் மாணவர்களுக்கு அதுவரையிலான சிந்தனையையும் தொகுத்தளித்துவிடுகிறது. அதனுடன் விவாதித்தும், முன்னகர்ந்தும் அவர்கள் சிந்திக்கமுடியும்.
மதிப்பீடுகளுடன் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவது அனைவராலும் இயல்வதல்ல. அதற்கு ஓர் அறிவுத்துறையில் முழுவாழ்க்கையையும் செலவிட்டிருக்கவேண்டும். அதில் பல்லாண்டுகள் விவாதித்திருக்கவேண்டும். ஏராளமாக எழுதி பேசி தெளிவடைந்திருக்கவேண்டும். வேதசகாய குமார் இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு ஆகியவற்றிலே வாழ்க்கையை முழுமைசெய்தவர்
அத்துடன் இது ஓர் ஆசிரியர், ஒரு வாழ்நாள் அறிவைக்கொண்டு செய்யும் பணி அல்ல. அவர் ஓர் ஆசிரியமரபின் தொடர்ச்சியாக இருக்கவேண்டும். அந்த ஆசிரிய மரபு பல்லாண்டுக்காலமாகத் திரட்டிய ஞானத்தின் வெளிப்பாடாக அந்த நூலாசிரியர் திகழவேண்டும். தொல்காப்பியர் காலம் முதல் இலக்கணநூல்கள், பாட்டியல்நூல்கள், நிகண்டுகள், கோசங்களின் ஆசிரியர்கள் தெளிவான ஆசிரிய மரபு கொண்டவர்கள்.
வேதசகாய குமார் எஸ்.வையாபுரிப் பிள்ளை மரபைச் சேர்ந்தவர். வையாபுரிப் பிள்ளையின் மாணவரின் மாணவரான பேரா.ஜேசுதாசனின் மாணவர் அவர். பேராசிரியரிடமிருந்து வையாபுரிப்பிள்ளையின் புறவயமான முறைமை, ஒட்டுமொத்தப்பார்வை, பற்றின்மை ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டவர். இன்னொரு வகையில் அவர் க.நா.சுப்ரமணியம் மரபைச் சேர்ந்தவர். புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி என அவருக்கு அழகியல் சார்ந்த ஓர் இலக்கியப்பார்வை உண்டு.
இந்த இரு மரபுகளின் வெளிப்பாடாக அமையும் பெருநூல் இது. பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் அறிந்தவை அனைத்தையும் ஒற்றைநூல் என ஆக்கிவிட்டுச் செல்வதுண்டு. அப்படி வேதசகாய குமார் உருவாக்கிய படைப்பு. தமிழ் இலக்கியவிமர்சனத் தளத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. இதுவரையிலான விமர்சன சிந்தனைகளை திரட்டி,மதிப்பீடுகளுடன் தொகுத்து, வரையறை செய்து முன்வைக்கும் இந்நூல் இனி என்ன என்னும் வினாவை முன்வைப்பதும்கூட
ஜெ
(அடையாளம் இதழ் வெளியிடவிருக்கும் எம்.வேதசகாய குமாரின் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் நூலுக்கான முன்னுரை)