வெண்முரசின் வரைபடம்

ஓர் இலக்கியப்படைப்பை எழுதியவனுக்கு அவற்றின்மீது வாசகர்கள், விமர்சகர்கள் வைக்கும் எதிர்வினைகளின் மதிப்பென்ன? அவற்றால் அவன் பெறும் நலன் ஏதாவது உண்டா?

இவ்வினாவுக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்றிலும் எதிர்மறையாகவே பதில் அளித்திருக்கிறார்கள். வணிக எழுத்துக்கு அந்த எதிர்வினைகள் பெரிய மதிப்புள்ளவை. வணிக எழுத்துக்களைப் பற்றிய பேச்சுக்களில் அவற்றி எவை ‘வெற்றி’ பெற்றன என்ற பேச்சு இருப்பதைக் காணலாம். வாசகர்கள் எதை விரும்பினார்களோ அதைநோக்கி வணிக எழுத்தாளர்கள் திரும்பிவிடுவார்கள். பார்த்திபன் கனவு நாவலின் வெற்றி கல்கியை வரலாற்று புனைவுகளை நோக்கி கொண்டுசென்றது. நைலான் கயிறு அடைந்த வெற்றி சுஜாதாவை துப்பறியும்கதை எழுதச்செய்தது.

ஆனால் ஒரு புளிய மரத்தின் கதை அடைந்த வெற்றி சுந்தர ராமசாமியை இன்னொரு புளிய மரத்தின்கதையை எழுதச்செய்யவில்லை. விஷ்ணுபுரம் அடைந்த வெற்றி இன்னொரு விஷ்ணுபுரம் நோக்கி என்னைச் செலுத்தவில்லை. மாறாக அந்தவகையான படைப்பை மீண்டும் எழுதாமலாக்கியது. ஏனென்றால் இது வணிக வெற்றி அல்ல, வாசக ஏற்பு, விமர்சகர்களின் ஏற்பு மட்டுமே. வணிக எழுத்தாளர்களின் நடையே அவர்களின் வாசகர்களால் தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு வாசகர்கள் தங்களை தீர்மானிக்கலாகாது என்னும் உறுதி இலக்கியவாதிகளுக்கு உண்டு.

ஆகவே வாசக எதிர்வினையை இலக்கியவாதிகள் ஒரு ஊக்கமூட்டலாக, மறுமுனையில் இருந்து வரும் ஏற்பொலியாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அவை இலக்கிய ஆக்கத்தை தீர்மானிக்க விடுவதில்லை. எழுதும்போது எதிர்வினைகளை பலர் படிப்பதே இல்லை. எழுதியபின்னர் மிகத்தேர்ந்த தொகுப்பாளர் என தாங்கள் நம்பும் சிலரின் கருத்துக்களை மட்டும் கணக்கில் கொள்கிறார்கள். விஷ்ணுபுரம் எழுதும்போது அருண்மொழியின் எதிர்வினை மிக உதவியாக இருந்தது. எழுதிய பின் எம்.எஸ் பிழைநோக்கி, மொழியை தீட்டி உதவினார்.

வெண்முரசு நான் தொடராக எழுதிய நாவல். சொல்லப்போனால் நான் தொடரென்று வெளியிட்டபடியே எழுதிய முதல் நாவல், (முந்தைய சில நாவல்களை தொடராக வெளியிட்டிருக்கிறேன். ஆனால் அவை முன்னரே நாவல் வடிவில் எழுதி முழுமையாக்கப்பட்டவை) ஆகவே எதிர்வினைகளை எவ்வண்ணம் கவனிப்பது என்னும் குழப்பம் எனக்கு இருந்தது.

அதற்கேற்ப எதிர்வினையாற்றியவர்களில் சிலரின் அணுகுமுறை எதிர்மறையாகவும் இருந்தது. ஒரு படைப்பை முற்றிலும் எதிர்மறையான மனநிலையுடன் அணுகுவதென்பது அதை வாசிக்க மறுப்பதுதான் – மிகக்கூர்ந்து வாசித்தாலும்கூட. ஏனென்றால் கலை என்பது அதற்குரிய ஏற்பு மனநிலையில் மட்டுமே தொடர்புறுத்தக்கூடியது. அதேபோல படைப்பை நோக்கி நகர மறுத்து எல்லா படைப்புக்களையும் தன்னை நோக்கி இழுக்கும் வாசகனும் படைப்பை நோக்கி வாசலை மூடிக்கொள்பவன்தான். தன் அறியாமையை அவன் படைப்பை வாசிப்பதற்கான கருவியாகக் கொள்கிறான்.

அத்ததைய எதிர்வினைகள் படைப்பின் நேரடியான தரவுகளைக்கூட அறியமுடியாதவையாக, படைப்பின் சிறிய நுட்பங்களைக்கூட தவறவிடுவனவாக இருந்தன. எழுதும்போது அவற்றை எதிர்கொள்வது ஒரு வகை எரிச்சலை உருவாக்கியது. ஆனால் வியப்பூட்டும் ஒன்றை கண்டுகொண்டேன். அவற்றுக்கும் நான் எழுதும் மனநிலைக்கும் தொடர்பே இல்லை. எழுதும்போது அவை நினைவில், ஆழுள்ளத்தில் எங்கும் ஊடுருவவில்லை. எழுதுவது ஒரு விழிப்புநிலை கனவு. அங்கே  எவையெவையோ எவ்வெவ்வகையிலோ ஊடுருவுகின்றன அவற்றின் மேல் எந்த கட்டுப்பாடும் எனக்கில்லை. ஆனால் அங்கே வாசகர்களே இல்லை. அது எனக்கு மட்டுமான கனவு.

வெண்முரசு எழுதும்போது அக்கனவுக்குள் வந்து உடனிருந்தவர்கள் சேர்ந்து எழுதிய சிலர். முதன்மையாக ஸ்ரீனிவாசன் -சுதா இணையர். நாவல் முடிந்ததும் அவர்களும் கனவிலிருந்து விழிப்பது போல வெண்முரசிலிருந்து வெளியே சென்றுவிட்டனர். நாவலில் வாசிப்பு, விமர்சனம் எவ்வகையிலும் ஊடுருவவில்லை என்று கண்டபின் நான் கடிதங்களையும் விவாதங்களையும் வாசிப்பதை இயல்பாக்கி கொண்டேன்

வாசக எதிர்வினையின் பயன் என்ன என்று பின்னர் தெரிந்தது. வாசகர்களின் எதிர்வினை என் படைப்பை திருப்பி எனக்கு காட்டியது. அவற்றின் வழியாக என் படைப்பில் உள்ள பல நுட்பங்களை நானே அறிந்துகொண்டேன். குறிப்பாக பல உளவியல்தருணங்கள், வாழ்க்கைநிலைகள் வாசகர்கள் தங்கள் வாழ்க்கையைக் கொண்டு உணர்ந்து என்னிடம் உறுதிசெய்தனர்.

வெண்முரசு பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளே அந்நாவலின் கட்டமைப்பு பற்றிய புரிதலை எனக்கு அளித்தன. வெண்முரசு நாள்தோறும் எழுதப்பட்டு அவ்வப்போதே வெளியானது. மறுதொகுப்பே செய்யப்படவில்லை. ஆனாலும் பெரும்பாலும் அனைத்து நாவல்களுக்கும் கச்சிதமான ஒருமை கைகூடியிருக்கும். அது கனவுகளின் ஒருமை. கனவுகளிலுள்ள சிக்கலும் பின்னலும் அவற்றிலும் உண்டு. கனவில் இருப்பது போலவே அவற்றின் வடிவமென்ன, மையமென்ன என்னும் திகைப்பு அவை நிகழும்போதே இருக்கும். ஆனால் நிகழ்ந்தபின் அது ஒரு உயிருள்ள உடல்போல முழுமையானது என்னும் உணர்வை அடைவேன்.

வெண்முரசின் மீதான விமர்சக எதிர்வினைகளில் ப.சரவணனின் இந்த கட்டுரைகள் முக்கியமானவை. அவை வெண்முரசின் அனைத்து நாவல்களையும் வடிவம் சார்ந்தும் உள்ளடக்கம் சார்ந்தும் சுருக்கித் தொகுத்துக் கொள்கின்றன. அவற்றின் மையச்சரடு என்ன, பொதுவடிவம் என்ன, வெளிப்பாட்டு முறை என்ன என்று வகுத்துக் கொள்கின்றன.

25000 பக்கங்களில் 26 பகுதிகளாக பெருகிவிரிந்திருக்கும் வெண்முரசு போன்ற நாவல் அளிக்கும் பெரும் சவால் என்னவென்றால் அதை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது கடினம் என்பதுதான். ஒரு நகரில் வாழ்வதுபோலத்தான். நாம் அதில்தான் இருப்போம். அதன் பல பகுதிகள் நம் வாழ்க்கையின் புறவடிவங்களென ஆகியிருக்கும். அதன் சந்துபொந்துகள் என்னவென்று தெளிவாக அறிந்திருப்போம். ஆனால் முழுமையாக அந்நகரை நம் கற்பனையில் கொண்டுவர முடியாது.நகரத்தை நாம் வரைபடங்களிலேயே முழுமையாகக் காணமுடியும். இந்நூல் சரவணன் வெண்முரசு நாவல்களுக்கு உருவாக்கிய வரைபடம்.

ஒட்டுமொத்தமாக வெண்முரசு நாவல் தொடரை தொகுத்துக்கொள்ள, அதன் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன உள்ளது என்று விரித்துக்கொள்ள உதவும் நூல் இது. கூகிள் எர்த் வரைபடம்போல. அதை பார்க்கும்போது சலிக்காமல் நாம் செய்வது சுருக்கிச் சுருக்கி ஓர் உருளையாக ஆக்குவதும் பின் விரித்து விரித்து நம் வீட்டை அடையாளம் காணமுயல்வதும்தான்.

ஜெ

(ப.சரவணன் வெண்முரசு நூல்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘புனைவுலகில் ஜெயமோகன்’ நூலுக்கு எழுதிய முன்னுரை)

முந்தைய கட்டுரைவாசிப்பு மொழியின் அவசரத் தேவை- சக்திவேல்
அடுத்த கட்டுரைஅறிவியலும், புனைவியலும் – கடிதங்கள்