நதி- கடிதம்

அன்புள்ள ஜெ

ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து நதி சிறுகதை வாசித்தேன். உங்களது முதல் சிறுகதை கணையாழி 1987 இல் வெளியானது. எங்கிருந்து நீங்கள் தொடங்கினீர்களோ அந்த புள்ளியை குறித்தது. அம்மாவை பற்றி பலநூறு பக்கங்களும் இன்னும் பல்வேறு கதைகளும் எழுதிவிட்டீர்கள். இன்றும் இக்கதை புதிதாகவே உள்ளது. நீங்கள் யாரென்றே தெரியாமல் வாசித்தாலும் வசீகரமானதே.

தன் அம்மாவின் இழப்பை, பாலெடுக்கும் சடங்கை குறித்ததே கதை. பொதுவாக முன்பு இந்த சடங்குகள் எல்லாம் ஏன் செய்யப்படுகிறது என்ற கேள்வி இங்குள்ள பல இளசுகளை போல எனக்கும் எழும். எல்லாவற்றையும் வெறுமை கொண்டு பார்க்கும் கதைச்சொல்லியின் முன் அவை நடக்கையில் ஒவ்வொன்றும் பொருள் கொண்டு வருகிறது. பெரும் பொருளின்மையை உணர்ந்து மனிதன் ஒன்றுமில்லாதவன் என உணர்கையில் இங்கு தங்கி வாழ அவன் உருவாக்கி கொள்ளும் பொருளே அச்சடங்குகள்.

பெரியப்பாவின் புதைக்குழி மேல் வளர்ந்து சிறகு விரித்தாடும் தென்னங்கன்றை பார்த்து இங்கு இப்படி எத்தனை மரங்கள் வளர்ந்து மறைந்திருக்கும் என உணர்கையில் வாழ்வியற்கையின் மாற பெருநியதியை கண்டு கொள்கிறான். அதுவே அவனை துயரத்துக்கும் இன்பத்துக்கும் அப்பால் எடுத்து செல்கிறது. அங்கிருந்து பார்க்கையில் ஒவ்வொரு செயலும் அந்த இன்மையை எப்படி கரைத்து இருப்பாக்கி கொள்வதை நோக்கியே செல்கிறது.

அப்படி பார்க்கையில் இறந்தவர் மேட்டில் தென்னையை நடுவது. நாம் விரும்பிய வகையில் நமக்குரிய அவர்களின் நினைவுகளை தொகுத்து வேரூன்றி கொள்வது என தோன்றுகிறது. அப்புறம் பானையின் அவள் எலும்புகளை அள்ளி வாய்மூடிக்கட்டி, மாலையிட்டு அலங்காரம் செய்து பூஜை செய்வது அவள் மேல் இருந்தவற்றை அவளாக பாவித்து இறுதியில் ஆற்றில் கரைக்கையில் அறிய முடியாமைக்கு ஒப்புகொடுத்தல் தானே.

இந்த சடங்குகளுக்கிடையில் அம்மாவை பற்றி வரும் அவன் நினைவுகள் அவளது இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமையின் உணர்வுகள் என்றே எண்ண வைக்கின்றன. ஆற்றுக்கும் தனக்கும் உள்ள அணுக்கத்தை கூறி இன்று எவளோ போல அன்னியமாகிவிட்டாள் என்பதும், அனந்தத்தில் பாய்பவள் எனும்போதும் தான் நன்கறிந்த அம்மா எப்படி தனக்கு தெரியாமல் சென்றுவிட்டாள் என்ற சித்தத்தின் வியப்புணர்வை அடைகிறான். நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கை அப்படியான தனித்தனியேயான ஆறுகள் தானே. எவராவது எவரையாவது முழுதறிந்து விட முடியுமா என்ன ? நம் கண்களுக்கு அந்நதி மறைகையில் இங்கு ஒழுகும் காலமெனும் பெருநதியில் கரைத்து விடுகிறோம் அல்லவா!

திரும்பிப் பார்த்தவர்கள் வாழ்வதில்லை. ஏன் ? அதை பார்த்தால் அறிந்து விடுகிறோம். அறிபவன் அறிந்தவற்றை கடந்து செல்கிறான். கடந்தவை ஒவியத்தின் காட்சிகளை போல. அதற்கு மேல் திளைத்தல் எனும் இயல்வாழ்வு இல்லை. நடித்தல் மட்டுமே உள்ளது போலும்.

அழுபவர்கள் தங்களை ஆற்றி கொள்கிறார்கள். எளிதில் மீண்டும் விடுவார்கள். இப்படி பார்ப்பவர்கள் என்ன ஆவார்கள் ? அதை பார்க்க தொடங்கிய அவன் ஆவது முடிவின்மையின் சாத்தியங்களில் ஒன்று.

அன்புடன்

சக்திவேல்   

முந்தைய கட்டுரைஅறம் – மன அச்சாணி
அடுத்த கட்டுரைஉப்புவேலி பற்றி….கடிதம்