நதி – சிறுகதை

அன்புள்ள ஜெ

நான்கைந்து மாதங்களுக்கு முன்பு உங்களுடைய ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பை கிண்டிலில் வாங்கி வாசிக்க தொடங்கினேன். முதல் கதை நதியை வாசித்தவுடன் பிடித்திருந்தது. கதை குறித்த எண்ணமென்று ஏதும் திறந்து கொள்ளவில்லை என்றாலும் ஆழமாக மனதில் சென்று தைத்தது. தளத்தில் வந்து இக்கதை இருக்கிறதா என்று தேடி பார்த்தேன். இல்லையென்று தெரிந்ததால் தட்டச்சிட்டு கொடுக்கலாம் என பணியை தொடங்கினேன். சிலநாட்கிளலேயே சோம்பேறித்தனத்தால் நிறுத்திவிட்டேன். இன்று சட்டென்று அதை எடுத்து முடித்து விடலாம் என தோன்றி இம்மாலை இப்பொழுது தான் முடித்தேன். வேர்ட் கோப்பை கீழே இணைக்கிறேன்.

இன்னும் சிலநாட்களில் நானே ஒரு கடிதம் எழுதியும் அனுப்புவேன். இன்று அம்மாவை பற்றி பல கட்டுரைகளை எழுதி உங்கள் கட்டுரைகளில் வந்துவிட்ட பின் இந்த கதைக்கு வரும் வாசிப்புகள் சுவரசியமான, மிக முக்கியமான அதன் வேறு இதுவரை அறியப்படாத கோணங்களை திறக்கலாம்.

அன்புடன்

சக்திவேல்

ஆறு பனியில் நனைந்துபோய்க் கிடந்தது. அசைவற்றிருந்த நீரைப் பார்த்ததும் உடம்பு சிலிர்த்தது. குளிர் என் கட்டித்தழுவி இறுக்கியது. கைகளை மார்ப்புக்குக் குறுக்காகக் கட்டிகொண்டேன்.

‘’நேரமாகுதே’’

வைத்தியர், அண்ணாவிடம் தணிந்த குரலில் சொன்னார். அண்ணா பல் தேய்த்துவிட்டு மீதியிருந்த மாமர இலைத் துணுக்கை வீசினான். குனிந்து வாய் கொப்புளித்துவிட்டு சரேலென்று நீரில் பாய்ந்தான். சட்டென்று மௌனம் கலைந்து, ஆறு குலுங்கி சிரித்தது.

நானும் நாரில் இறங்கினேன்.

தண்ணீரின் குளிர் என் கால் வழியாகக் கொடிவீசிப் படர்ந்து மேலேறியது.

ஒரு வினாடி தயங்கினேன். பிறகு மெதுவாக உறுதியுடன் நாரில் அமர்ந்தேன். மெதுவாக அள்ளி அணைத்து இறுக்கி மூச்சு திணற வைக்கும் குளிர் இடுப்பு, மார்பு, முகம் முழுவதுமாக.

எழுந்து துண்டால் தலை துவட்டிக்கொண்டேன். அதே துண்டை நீரில் அலசிப் பிழிந்து உடுத்திக்கொண்டேன். ஈர உடைதான் சம்பிரதாயம்.

மனமும் உடலும் அறிவும் குளிரில் உறைந்து செயலற்றுப் போயிருந்தது போலத் தோன்றியது. ஆற்றின் நீர்ப்பரப்பில் ஒரு வாழை மட்டை மிதந்துபோனது. காரணமின்றியே அதைக் கண்களால் பின்தொடர்ந்தேன். தேவையில்லாமல் செங்கதலி என்று நினைத்துக் கொண்டேன்.

வைத்தியர், சாமான்கள் அடங்கிய பெட்டியைத் தலையில் எடுத்துகொண்டார். அண்ணா ஈரத் துணிக்கு மேல் சிவப்புத்துண்டைக் கட்டிகொண்டான். அவன் முகத்தைக் கவனித்தபோது எனக்குள் சிலீரிட்டது.

இறுகிய முகம், கண்களில் ஈரப் பளபளப்பு. உதடுகளைக் கடித்திருந்தான்.

மனம் பொங்கியது. அவனருகே போய், தோளில் கை வைத்து. பரிவுடன் ஏதாவது சொல்லவேண்டும் போல இருந்தது.

‘’போலாமா ?’’

பெரியப்பா, சோமன், அண்ணா, ஊர்க்காரர்கள்…டிரீர் ரண்டம், ட்ரம்-ட்ரண்டன்,ட்ரம் என்று விம்மித் துடிக்கும் பறையொலி.

நடந்தோம். மௌனச் சுமை.

ஆற்றங்கரை ஓரமாக பச்சைப் பசேல் என்று துடலி முட்கள் படர்ந்து வேலியிட்டிருந்த மசானம். தாத்தாவும் பெரியப்பாவும் பெய்யர் தெரியாத எத்தனையோ பேரும் சாம்பலான இடம்.

பெரியப்பாவின் சிதை கூட்டிய இடத்தில் அந்தத் தென்னங்கன்று இப்போது சிறுமரமாக சிறகு விரித்திருந்தது. பெரிய அடிமரத்துடன் அடிமரத்துடன் நிறையத் தென்னைகள் சிறகடித்துச் சலசலத்தன. புதிய மரங்களுக்கு இடம்விட்டு இங்கு எத்தனையோ தென்னை மரங்கள் பட்டுப்போயிருக்கும்.

மஞ்சண மரத்தடியில் எரிந்து சாம்பலான சிதை. செவ்வக வடிவக் குழி. கறுப்பாக வாய் திறந்திருந்தது அது. நான்கு புறமும் பச்சை இலைகள் அனல்ப்பட்டு வாடிக் கருகியிருந்தன.

ஆச்சரியமாக, மனம் சாதாரணமாக – மிகவும் சாதாரணமாக – இருந்தது. துயரமும் இல்லாமல், மகிழ்ச்சியும் இல்லாமல், வெறிச்சிட்டு.

எட்டு மாசம் முன்பு லீவு முடிந்து புறப்படும்போது அம்மா பின்னாலேயே வந்தாள். சிரிப்பிருந்தது. எனினும் முகத்தில் ஒரு ஏக்கம். தளும்பப்போகும் கண்கள். எனக்கு மனம் இறுகித் துடித்தது.

நடந்து கொஞ்சதூரம் போய்த் திரும்பி பார்த்தேன். செவேல் என்ற தென்னை மரம் காய்த்துக் குலுங்கி நிற்க, அதன்கீழ் நின்றுகொண்டிருந்தாள் – எழுதி மாட்டிய படம் போல! சிவப்பு ஜாக்கெட்டும், வெள்ளை முண்டும், விரிந்து பளபளக்கும் விழிகளுமாக…

வைத்தியர் சடங்குகளை இருபது வருடத் தொழில் திறமையுடன் செய்து கொண்டிருந்தார்.

நிறம் மங்கிப்போன புராதன ஓவியம்போல அந்தக் காட்சியும் சுற்றுபுறமும் என்னைச் சுற்றி விரிந்தது. பறையொலி எங்கோ கேட்டது.

வைத்தியர் ஓர் ஓட்டுத்துண்டால் குழியின் உள்ளிருந்து எரிந்து வெண்மையான எலும்புகளை லாவகமாக இடுக்கி எடுத்து, தயாராக வைத்திருந்த புதிய மண்பானைக்குள் போடுகிறார்.

சடங்குள். என் கண்களுக்குமுன் அந்தக் கரிய குழியும் அதனுள் குவிந்திருந்த சாம்பலும் மட்டும்தான் மீதியிருந்தன. அடிநாதமாக அந்தப் பறைகளின் விம்மல்.

அம்மாவின் நெற்றி ஓரம் இந்திரா காந்திமாதிரி நரை ஓடியிருக்கும். ஐம்பத்தைந்து வயது என்று அவளைப் பற்றி சொல்ல ஓரே ஆதாரம். மெலிந்தது என்றாலும் உறுதியான உடம்பு. எந்த வேலையும் செய்ய அஞ்சமாட்டாள். ஒரு சமையலறையின் முழு வேலையையும் செய்து முடித்தபிறகு, இரண்டு பசுக்களைப் பராமரித்து, இடைப்பட்ட மணிகளில் சாரா தோமசும் தகழி சிவசங்கரப்பிள்ளையும் வாசித்து, அக்கம் பக்கத்துப் பெண்களுக்கு உருக்கமான கதை சொல்லி…

அம்மாவின் சின்ன வயதுப் படம் இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் அவள் இப்பபடித்தான் இருக்கிறாள் என்று தோன்றுகிறது. அந்த கண்கள்! அவள் பேசுவது, சிரிப்பது எல்லாம் பெரும்பாலும் அவற்றால்தான்.

சின்னப் பாமரேனியன் போலப் பின்தொடர்ந்து வந்த அவள் பார்வைதான் கடைசி நினைவு. தந்தி கிடைத்தது. ரயில் ஏறி வந்தபோது என் வீடு எனக்கு அன்னியமாகியிருந்தது. அம்மா ஒருபிடிச் சாம்பல் ஆகிப்போயிருந்தாள். அவள் நிறைந்திருந்த வீட்டில் உறவினர்களும் மௌனமும்.

எலும்புகளைப் போட்டு முடித்து, சிவப்புத் துண்டால் பானையை மூடிக் கட்டி, வாழை இலையில் சுற்றி வைத்திருந்த மலர் மாலையை அதற்கு அணிவித்து, வைத்தியரின் தேர்ந்த விரல்கள் இயங்குவதை வெறித்த நின்றேன்.

வைத்தியர், அண்ணாவைப் பார்வையால் கூப்பிட்டு மண்வெட்டியைத் தந்தார்.

அதை வாங்கியபோது அவன் கைகள் துடித்தன. முகத்தில் நிழல் விழுந்துவிட்டதுபோல் இருந்தது.

பறையொலி உச்சத்துக்கு வந்தது.

மண்வெட்டியை இழுத்துகொண்டே இடப்புறமாகச் சுற்றி வந்த அண்ணா நின்றான். பிறகு விம்மிய உதடுகளைக் கடித்தபடி, மூன்றுமுறை மண்ணை அள்ளிக் குழிக்குள் போட்டான்.

வைத்தியர் உடனே மண்வெட்டியை வாங்கி பரபரவென்று இயங்க, குழி நிரம்பியது. ஒரு மண்மேடாக உருமாறியது.

சிறிய பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தென்னங்கன்றை வைத்தியர் எடுத்து அண்ணாவிடம் தந்தார். பறை ‘விம் விம்’ என்றது. அண்ணா அதை மண்மேட்டில் நட்டு, குடத்திலிருந்து  நீர் மொண்டு ஊற்றி, இடப்புறமாகச் சுற்றி வந்து வணங்கினான். நானும் சோமன் அண்ணாவும் நமஸ்கரித்தோம்.

சடங்குகள் தொடர்ந்தன. பறையொலி அந்தப் பகுதியையே அமங்கலமாக மாற்றியது. மரக்கிளைகளில் பறவைகள் பயந்து சிறகடித்தன.

அண்ணா வெளிப்படையாகவே விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தான்.

வைத்தியர் பானையை அண்ணா தலைமீது வைக்குமாறு எடுத்துத் தந்தார். மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

பறை தேம்பியது. எங்கள் சுவாசத்தில் அதன் விம்மல்கள் கரைந்தன. பறையொலியே எங்கள் சுவாசமாகியது.

மறுபடி ஆற்றங்கரை வழியாக நடந்து வீட்டுக்கு வந்த போது பகல் வெளிறத்தொடங்கியிருந்தது.

வீட்டுக்குள்ளிருந்து பீய்த்துகொண்டு வருவதுபோலக் கூட்டமாக அலறல்கள் வெளியே வந்தன. என் மனம் குலுங்கிப்போனது. கட்டுப்படாமல் கைகள் நடுங்கின.

முற்றத்தில் மெழுகிக் கோலமிடப்பட்ட வட்டத்தின் நடுவில் அண்ணா பானையை வைத்தான். வாழை இலை, மரக்காலில் நெல், பழம், சர்க்கரை, பூ, செம்பில் துளசி நீர், குத்துவிளக்கு.. குத்துவிளக்கில் ஒருவித அமங்கலம் இருந்தது.

அழுகை ஒரு புயல்போல என்னைச் சுற்றி வீசியடியத்தது. என்ன நடக்கிறது என்றே புரியாமல் ஒருவித பித்துப் பிடித்தாற்போன்ற நிலை…

பெண்கள் வலம் வந்து வணங்கி, தட்சணை போட்டு, பூ போட்டு, பூஜை செய்து..

அம்மா என்று நினைத்தபோது என் மனம் இளகிப் பேயாட்டம் போடவில்லை. உயிருடன் இருந்த போது அவளைப் பிரிந்திருக்கிறோம் என்ற நினைவே என்னை அலைக்கழிப்பது உண்டு. சடங்குகள் முடிந்த போது சூரியன் உச்சிக்குப் போயிருந்தான்.

மறுபடியும் அண்ணா பானையைத் தலையில் ஏற்றிக் கொண்டான். மரத்த மனத்துடன் தொடர்ந்து போகும் போது இதெல்லாம் நிஜந்தானா என்று சட்டென்று ஒரு நினைவு எழுந்தது.

ஆறு ஒளி பெற்றிருந்தது. அலை அடித்தபோது கண்கள் கூசின.

எனக்கு மிகவும் பரிச்சயமான ஆறு இது. என் இளமைபருவத் தோழி. மழையில் அவளுடைய துள்ளல். இரவில் அவளது மௌனம். பனி பெய்யும் காலையில் அவளது நாணம். எத்தனை நெருக்கமானவள் இவள் எனக்கு..

இன்று எனக்கு ஆறு பரிச்சயமேயில்லாத புதிய இடம் போலத் தோன்றியது.

வளைவு திரும்பி இரு முனைகளும் மறைய முதலும் முடிவும் இல்லாமல் அனந்தமான ஒருவழிப் பாதையாகப் பாய்ந்து செல்லும் அவளுக்குள் எனக்குத் தெரியாத ஆயிரமாயிரம் ரகசியங்கள் இருப்பதாகத் தோன்றியது.

இடுப்பளவு ஆழம்கூட இல்லாத ஆற்றுக்குப் பல்லாயிரம் மைல் ஆழம் இருப்பதாக நினைத்தேன். ஒரு நிமிடம் உடம்பு நடுங்கிச் சிலிர்த்தது.

அண்ணா ஆற்றில் இறங்கி இடுப்பளவு நீரில் நின்றுகொண்டான். அம்மா என்று விம்முவதுபோலத் தோன்றியது.

‘பானையைப் பின்பக்க வழியாப் போட்டுட்டுத் திரும்பிப் பாராமல் முங்கறது’ – வைத்தியர் சொன்னார். அண்ணா பானையை நழுவவிட்டான். மூழ்கினான். திரும்பிப் பார்க்கவில்லை.

திரும்பி பார்க்கவேண்டாம். திரும்பிப் பார்த்தவன் வாழ்ந்ததில்லை!

பானை மூழ்கியது. பூக்கள் – ரத்தச்சிவப்பில் செம்பருத்தியும், அரளியும், தெச்சியும் பழுப்புநிறச் செண்பகமும் – மெதுவாக மிதந்து, சுழித்து ஓடி மறைந்தன.

சுடப்படாத மண்பானை. நீரில் நீல நிற ஆழத்திலிருந்து குமிழிகள் வந்தன. பிறகு சுழிப்பு. பின் நீர்பரப்பு மௌனமாகியது.

‘முங்கறது…நாழியாகுதே’, வைத்தியர் சொன்னார். நீரில் இறங்கினேன். மூழ்கினேன். வாய் தடதடத்தது. மறுபடி தலை துவட்டிக் கரை ஏறினேன். சோமன் அண்ணா வைத்திருந்த புதிய வேட்டியை உடுத்திக் கொண்டேன். பசித்தது.

எதுவும் நடக்காததுபோல நதி ஓடிக்கொண்டிருந்தது, மௌனமாக.

– கணையாழி, 1987

முந்தைய கட்டுரைசிம்மத்தின் நடனம்-அருண்மொழி நங்கை
அடுத்த கட்டுரைஅறம் – மன அச்சாணி