ஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா

அன்புள்ள ஜெ,

“காதுகள்” நாவலை ஒட்டி அந்தியூர் மணி எழுதிய கட்டுரை. அந்த கட்டுரைக்கு அசோகன் எழுதிய பதில். அசோகனின் பதிலுக்கு சத்திவேல் எழுதிய பதில். அந்த பதிலுக்கு அசோகன் மறுபடி எழுதிய விளக்கக் கடிதம். இவை எல்லாவற்றையும் படித்துவிட்டேன்.  அவசியமான விவாதம். மரபுக்கும் நவீனத்துக்கும் இடையிலான உறவு இருவேறு கோணங்களில் முன்வைக்கப்படுகிறது. உலகளாவிய போக்கோடு நம் மரபை எப்படி இணைப்பது என்பது இன்று மிக முக்கியமான கேள்வி. இரண்டு தரப்புகள் எதிர் நிலையில் நின்று அதை பரிசீலிக்கின்றன. மரபின் பேரிலேயே மத அடிப்படைவாதிகள் தேசத்தை ஆட்சி செய்யும் சூழலில் இது தவிர்க்கமுடியாதது.

அசோகன், சத்திவேல் – இரண்டுமே அறிமுகம் இல்லாத பெயர்கள். தளத்தில் புகைப்படங்கள்கூட இல்லை. அது இயல்பாக அவர்களுக்கு ஒரு சுதந்திர உணர்ச்சியை கொடுக்கிறது என நினைக்கிறேன். கேலியும் கிண்டலுமாக எழுதுகிறார்கள். படிக்க ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. நகைச்சுவையான நடையில் ஆழமான கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

பொதுவாக நான் சண்டையில் ஈடுபாடு கொண்டவன் அல்ல. யாராவது சண்டை போட்டால் ஆர்வமாக வேடிக்கை பார்ப்பதோடு சரி. இந்த நிலையில் அசோகன் வலுக்கட்டாயமாக என்னையும் இந்த விவாதத்தில் இழுத்துவிட்டிருக்கிறார். என்னுடைய “ஆழத்தின் விதிகள்” கட்டுரைக்கு அவர் ஆற்றியிருக்கும் எதிர்வினையை படித்தேன்.  மேடையில் நின்று முழங்குவதுப் போல் நான் ஆக்ரோஷமாக அக்கட்டுரையை எழுதியிருப்பதாக அவர் கற்பனை செய்திருக்கிறார். என் கட்டுரையிலேயே அந்த தொனி இருக்கிறதா என்று தெரியவில்லை. அதில் அழகிய சிரிப்பு இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள். அசோகனின் கண்களில் அது படவில்லைப் போல.  மற்றபடி நான் ரொம்ப சாதாரணமாகத்தான் அக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். அவர் நம்பும் அளவுக்கு எனக்கு அதன்மேல் உணர்ச்சி முதலீடு கிடையாது. தாராளமாக அவர் என்னோடு முரண்பட்டு பேசலாம். நிச்சயமாக சாத்தானே அப்பாலே போ என்று சொல்ல மாட்டேன். அசோகன், சாத்தானின் வக்கீலாகவே இருந்தாலும்.

அந்தியூர் மணி

அந்தியூர் மணியின் கட்டுரையை பொருத்தவரையில் அசோகனின் கருத்துதான் என்னுடைய நிலைப்பாடும். நுட்பமான வாசிப்பு. ஆனால் நவீன மொழியில் இல்லை. வாசிப்பில் நுட்பமும் தனித்துவமும் அமைவது எளிய காரியம் கிடையாது. எனவே அந்தியூர் மணியின் கட்டுரையை முக்கியமானதாகவே கருதுகிறேன்.இப்போது என் கட்டுரை சார்ந்து சில விளக்கங்கள். அழகியல் மட்டுமே இலக்கிய விமர்சனத்திற்கான ஒரே அளவுகோல் என்று அந்த கட்டுரையில் எங்குமே சொல்லப்படவில்லை. ஏனோ அசோகன் அப்படி புரிந்து கொண்டிருக்கிறார். இலக்கிய விமர்சனத்தில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. அவரே குறிப்பிடுவதுப் போல் மார்க்சிய விமர்சனம் ஒரு வழிமுறை. நான் அந்த கட்டுரையில் அழகியலை என்னுடைய அளவுகோலாக முன்வைத்திருக்கிறேன். என்னுடைய தேர்வு அது. அதன் அடிப்படையில் சிறுகதையின் வடிவம் பற்றியும் அந்த வடிவத்தை தீர்மாணிக்கும் அழகியலின் தத்துவம் பற்றியும் பேசியிருக்கிறேன்.  இலக்கியத்தின் சமூக பங்கு பற்றியோ இலக்கியத்தை மதிப்பிடும் கருவிகள் பற்றியோ அக்கட்டுரை பேசவில்லை. ரசனையை நான் நம்பும் கருவியாக  சொல்லி அதை கட்டமைக்கும் கூறுகளை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். அந்த சட்டகத்தை தவிர்த்துவிட்டு, ரேடியோவில் ஏன் முகம் தெரியவில்லை என்று கேட்பது மாதிரி அசோகன் விடுபடல்களை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்புறம் அழகியலை அசோகன் புரிந்து வைத்திருக்கும் விதம்கூட கொஞ்சம் விபரீதமானதாய் இருக்கிறது. மொழி பழசானால் கவிதை ஆகிவிடும் என்கிறார் அவர். மொழி அழகுக்காக மட்டும் சங்கப் பாடல்கள் இன்று படிக்கப்படவில்லை. கவித்துவத்திற்காகவே அவை படிக்கப்படுகின்றன. பழைய மொழியில் இருந்து நவீன மொழிக்கு மாற்றி எடுத்து, அதில் இருக்கும் கவிதைக் கூறுகளை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படியான நூலே “சங்கச் சித்திரங்கள்”. இசையின் “பழைய யானைக் கடை” இன்னொரு உதாரணம். கடந்தகாலத்தில் இருந்து கிடைக்கும் மொழியின் அழகு , கூடுதல் பரிசுதானே தவிர அது லட்சியம் அல்ல.  வெறும் ஓசை நயம் தான் கவித்துவம் என்றால் புது கவிதை இயக்கமே தோன்றியிருக்காது. இன்றைக்கும் செந்தமிழிலேயே கவிதை எழுதிக் கொண்டிருக்கலாம்.

கடந்த காலத்தில் இருந்து எல்லாச் செய்யுட்களும் அப்படியே நம்மை வந்து சேர்வதில்லை. அவை ஏதோவோர் அடிப்படையில் வடிகட்டப்பட்டே எதிர்காலத்தை வந்தடைகின்றன. ஒவ்வொரு தலைமுறையும் சிறந்த படைப்புகளை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது. எனவே வெறுமனே மொழி பழசாவதால்  கவிதையாவதில்லை. அது சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். “கரம் சிரம் புறம் நீட்டாதீர்” எனும் பேருந்து வாசகம் நூறு ஆண்டுகள் கழித்து கவிதையாகக்கூடும் என்கிறார் அசோகன். சுஜாதாவுக்கு ஒரு வழக்கம் உண்டு. பேருந்து வாசகம், சுவரொட்டி அறிவிப்புகள், விளம்பரங்கள் முதலியவற்றை எல்லாம்  சுட்டிக் காட்டி கவிதை எல்லா இடங்களிலும் இருக்கிறது என்பார். கவிதை என்பது எதுகை மோனை மட்டுமே எனும் அந்த தப்பபிப்ராயத்தை தீவிர இலக்கியத்தில் யாரும் பொருட்படுத்தியதில்லை. அது ஏன் என்று யோசித்தால் அசோகனின் கூற்றில் உள்ள இடைவெளி புலப்படும்.  மேலும் இன்றைக்கு சாதாரணமானதாய் தெரியும் ஒரு வரி நூறு வருஷங்களில் கவிதையாகி விடும் என்றால், அப்படி எத்தனை சாதாரண வரிகள் நூறு வருஷங்களை கடந்து இன்று கவிதையாய் நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன என்கிற கேள்வியையும் கேட்க வேண்டும்.

பரவலாக வாசிக்கப்படுவதாலோ, பொது சமூகத்தின் ஏற்பினாலோ இலக்கியப் படைப்புகள் நிலைப்பதில்லை. அவை மிகச் சிறிய வட்டத்தின் அங்கீகாரத்தினாலேயே நிலை பெறுகின்றன. அந்த அங்கீகாரத்தின் தேவை எப்போதுமே இருந்து வந்துள்ளது. அதனால்தான் குட்டுவதற்கு பிள்ளைப் பாண்டியனும், மட்டறுப்பதற்கு வில்லிபுத்தூர் ஆழ்வாரும், வெட்டுவதற்கு ஒட்டக்கூத்தனும் வேண்டும் என்று பாடப்பட்டுள்ளது. அப்படியல்லாது, மதிப்பீடுகளே தேவை இல்லை. எந்த வரியையும் சும்மா பிளாஸ்டிக் கவர் போட்டு பத்திரமாக பெட்டியில் மூடி வைத்தால், அது நூறு வருஷங்களில் கவிதையாகிவிடும் என்று சொல்வது ஏற்புடையதல்ல.  அந்த வரி வருங்காலத்தில் ஆராய்ச்சிக்கு பயன்படலாம். ஆனால் கவிதை ஆகாது.  இலக்கியத்தை வெறும் ஆவணப்படுத்தும் துறையாக கருதுவதும் அது போல் குறைபாடுள்ள நோக்கே. இலக்கியம் ஆவணம் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அதே சமயம், ஆவணப்படுத்துவதோடு அதன் வேலை முடிந்துவிடவில்லை. பெட்ரோல் போட்டால் தான் பைக் ஓடுகிறது. எனவே பைக் கண்டுபிடிக்கப்பட்டதே பெட்ரோல் போட்டு நிரப்புவதற்குதான் என்று சொன்னால் அது அர்த்தப்பூர்வமானதா? அசோகனின் வாதம் அப்படிதான் இருக்கிறது.

என்னுடைய கட்டுரையில் அழகியலை நான் திட்டவட்டமான இருப்பாக குறிப்பிடவில்லை. அது மாறிக் கொண்டே வருவது என்றுதான் சொல்லியிருக்கிறேன். அதைவிட முக்கியமாக, அழகியல் விதிகளை தத்துவத்தின் விளைபொருட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளேன்.  அசோகன் கருதுவதுப் போல் அழகியலை சொந்த விருப்பு வெறுப்பாக நான் சுட்டவில்லை. அழகியலை, தோராயமாகவேனும், வகுத்துக் கொள்வதே என் எண்ணம். கவனிக்க. அழகியல் அனுபவத்தை வகுப்பதல்ல. படைப்பில் வெளிப்படும் அழகியல் விதிகளை வகுப்பது. (அழகியல் நெறிகள் என்பார் ஜெ).

கட்டுரையை வாசித்த வேறு சில நண்பர்களும் அசோகன் போலவே இந்த குழப்பத்தை அடைந்திருக்கிறார்கள் என்பதை தனிப்பேச்சில் தெரிந்துகொண்டேன். அசோகன் எழுதிவிட்டதால் என் விளக்கத்தையும் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த கட்டுரையின் நோக்கம் அழகியலுக்கு ஆதரவாக வாதாடுவது அல்ல. போலவே, இலக்கியத்தை அறிவுஜீவி செயல்பாடாக மாற்றுவதும் அல்ல. “இந்த படைப்பு என்னை பாதிக்கவில்லை” என்பது இலக்கிய விமர்சனத்தில் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய கூற்று. “கதை நீளமாக இருக்கிறது” “கதை நம்பும்படியாக இல்லை” “கதாபாத்திரம் உயிரோட்டமாய் இல்லை”. இவை எல்லாம் நம் காதுகளில் தொடர்ந்து ஒலித்தாலும் நம் பரிசீலனைக்குள் வருவதே இல்லை. என் கட்டுரை இந்த கூற்றுகளை பரிசீலிக்கும் ஒரு முயற்சி மட்டுமே. அதாவது அடிப்படைகளை பேசி புரிந்துக் கொள்வதற்கான முயற்சி. கட்டுரையை படித்த பலரும் இந்த எளிய விஷயத்தை தவறவிட்டிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இவை அடிப்படைகள் என்பதையே அழுத்தி சொல்ல வேண்டியிருப்பது துரதிருஷ்டமே. நல்ல வாசகராய் தெரியும் அசோகனே கட்டுரைக்கு வெளியே தான் பேசுகிறார்.  அழகியல் விமர்சனத்தை மறுப்பவர் என்பதால் அவர் சிக்கல் ஓரளவுக்கு எனக்கு புரிகிறது.

வெகுஜன இலக்கியம் பற்றியும் இணையத்தில் உருவாகிவரும் புதுவகை வெகுஜன எழுத்து பற்றியும் அசோகன், சுவாரஸ்யமான அவதானிப்பை கூறியுள்ளார். நான் அந்த கோணத்தில் யோசிக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால் நிச்சயம் என் கட்டுரையை அந்த வடிவத்தில் எழுதியிருக்க மாட்டேன். இன்று வெகுஜன கதைகள் எப்படி தீவிர இலக்கியத்தின் பாவனையை சூடிக் கொள்கின்றன என்பதை விரிவாகவே பேச வேண்டும். வெகுஜன கதைகளின் வாசகர்கள் எப்படி தீவிர இலக்கிய வாசகர்களாய் பாவனை செய்கிறார்கள் என்பதை சேர்க்காமல் அதை பேச முடியாது

நம்பிக்கைகளின் வன்முறை பற்றி அசோகன் தன் கடிதத்தில் பேசியிருக்கிறார். நானும் அந்த வன்முறையை ஏற்றுக் கொள்பவன் அல்ல. அதே நேரம் ரொம்ப காலமாய் எதையுமே நம்பாமல் இருக்க நாம் பழகிவிட்டோம். அது இப்போது கடும் சலிப்பை ஏற்படுத்துகிறது. அவநம்பிக்கையே ஆயிரம் ஆயிரம் மீம்களாய் இன்று நம் உலகை நிரப்பிக் கொண்டிருக்கிறது. எனவே நம்பிக்கைக் கொள்வதொன்றும் பாவச் செயல் அல்ல. இலக்கியத்தை நம்புவது. ரசனையை நம்புவது. அழகியலை நம்புவது. அழகியலின் ஆன்மீகத்தை நம்புவது. மீட்சியை நம்புவது. இவை எல்லாம் அவசியமானவையே. நாட்டை ஆளும் நம்பிக்கைப் பேய்களை ஒன்றுமில்லாத வெறுமையில் இருந்து விரட்ட முடியாது.  அடுத்தவரின் உணவையும் உடையையும் மறுக்கும் அவர்கள் நம்பிக்கையை வீழ்த்த, வேறு நம்பிக்கைகள் நம் வசம் வேண்டும்.

ஆழத்தில் விதிகள் இல்லை என்கிறார் அசோகன். ஆழங்களில் எல்லாமே விதியாகிறது எனும் ரில்கேவின் வரியை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

 

அன்புடன்,

விஷால் ராஜா.

முந்தைய கட்டுரைஉணர்வுகள், உன்னதங்கள் கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைமொழியாக்க வாசிப்பு -மூன்றுவிதிகள்