தாடி,காவி- கடிதம்

அந்த தாடியும் காவியும்…

அன்புள்ள ஜெ

வழக்கம் போல காலையில் தளத்தை திறந்தால் இன்று வாசகர் கடிதங்கள் மட்டுமே பிரசுமாகியிருந்தன. உங்கள் சொற்கள் நிறைந்த பதிவு இல்லாதது மெல்லிய ஏமாற்றத்தை தந்தது. பின்னர் பத்து மணிக்கு மேல் திறக்கையில் அந்த தாடியும் காவியும் பதிவை மீள் பிரசுரம் செய்திருக்கிறீர்கள். இப்பதிவை வாசிப்பது இதுவே முதல்முறை.

இந்த பதிவின் இறுதியில் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்றும் “எழுதி எழுதி தீரும் அகங்காரம் ஒன்று உண்டு. அது நிகழ்கிறதா என்று பார்ப்போம். உங்கள் அழைப்புக்கு நன்றி விசித்திரமான பூதாகரமான சட்டை போல இருக்கிறது அது.” என்று கூறியிருக்கிறீர்கள்.

பத்தாண்டுகள் மிக நீண்ட காலம். தங்கள் வாழ்க்கையின் உச்சமான வெண்முரசு நிகழ்ந்தேறிவிட்டது. உங்கள் பதிவுகளை காலவரிசையில் வாசிக்கையிலேயே மிகப்பெரும் தொலைவை கடந்துள்ளீர்கள் என்ற மாற்றத்தை உணர முடிகிறது. வெண்முரசை வாசிக்கையில் மேலும் துலக்கமாகிறது. இந்த தவத்தை இயற்றி முடித்து இதிலிருந்தும் உங்களை மானசீகமாக அகற்றி கடந்து செல்கிறீர்கள்.

வாசக நண்பர்களின் கேள்விகளுக்கு முன்னமே எல்லாவற்றில் இருந்து விலகி செல்ல வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே இப்போது உள்ளது. வலுக்கட்டாயமாக எனக்கு நானே சொல்லி இங்கு என்னை நிறுத்தி கொள்கிறேன் என்று கூறுகிறீர்கள்.

புனைவை எளிய மானுட விளையாட்டென பார்க்கும் தொலைவுக்கு அகன்றுள்ளேன் என்று கூறும் போது இனி நீங்கள் அடையும் நிலை அன்று வாசகர் சிவா கேட்ட குரு ஜெயா என்பதாக இருக்குமா ? நம் மரபின் பெரும்குருமார்கள் அத்தனை பேரும் ஏறி வந்த கலையை கடந்து சென்றவர்கள் தானே ? நீங்களும் அப்படி ஆவீர்களா ?

இவ்வளவு தொலைவு அப்பால் சென்றபின் ஒரு எழுத்தாளனுக்கு பெருங்கலைஞன் என்னும் நிலையிலியிருந்து சொல்ல வேண்டுமென தங்களிடம் ஏதேனும் உள்ளதா ? உடன் வாசகனுக்கும்.

இந்த கேள்விக்கு வெவ்வேறு நேரத்தில் பதில்களை வழங்கியுள்ளீர்கள் தான். ஒட்டுமொத்தமாக சாரம்சப்படுத்தி இங்கே கூறுவீர்களா ?

இறுதியாக, இப்போது நித்யா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் மேலும் நெருக்கமாக உள்ளார் அல்லவா ?

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைஜி.எஸ்.எஸ்.வி.நவீன் திருமண நிகழ்வில்…கடிதம்
அடுத்த கட்டுரைNew Flood