கோல்டிகா- தங்கபாண்டியன்

புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்

அன்புள்ள ஆசிரியருக்கு,

கோல்டிகாவின் தலை சரியாக தலைக்கும் முதல் கழுத்தெலும்புக்கும் இடையே வெட்டப்பட்டு கீழ்தாடை தரையில் படிய தனியே கிடத்தப்பட்டிருந்தது.  வெறித்த கண்களில் தேங்கியிருந்தது அதன் இறுதி சொற்கள் ” கடைசி வரை நான் சொன்னத நீ கேக்கவே இல்ல” என. அது ஒரு பின் அக்டோபர் மாதம். வெளியே அறையும் மழை. பகல்பொழுதின் மழையின் ரம்மியத்தை உணரும் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. கோல்டிகா என் குதிரை. தங்கத்தை குறிக்கும் ‘கோல்டு’ ல வரும் ‘கோ’ ‘என்னடி’ என்பதில் வரும் ‘டி’. கோல்டிகா, எனக்கும் செந்தில்நாதனுக்குமான தேவதை,  செல்லமாக ‘கோல்டி’.

கல்லூரி வகுப்பறையில் செலவிட்ட நேரங்களுக்கு சற்றும் குறைவில்லாத நேரங்கள் கோல்டியுடன் இருந்தவை. கோல்டிக்கு வெண்ணீலா பிடிக்காது. எனக்குப்பிடிக்கும். கோல்டியின் விருப்பம் எப்போதும் ஸ்ட்ராபெர்ரி. எங்கள் விடுதியில் சனிக்கிழமைகளில் தரப்படும் ஐஸ்கிரீம் கோல்டிக்கே சேரும். சமயங்களில் சிக்கன் 65 கூட. குதிரை சிக்கன் சாப்பிடும் என அதற்குமுன் யாரேனும் சொல்லியிருந்தால் நானும் நம்பிருக்கமாட்டேன். அந்நேரங்களில்   கோல்டியின் எளிய மானுடர் அறியமுடியாத  புன்னகை கொண்ட உதடுகளை என்னால் பார்க்கமுடியும். தெய்வங்கள் மனிதனை நோக்கி புன்னகைப்பது போன்றது அது.

எங்கள் கல்லூரியில் இருந்து புலரிக்கு சற்று முன்பே குதிரைகளுடன் தீவுத்திடலை நோக்கிய பயணம் ஆரம்பித்துவிடும். புரவியேற்ற பயிற்சியின் ஆரம்பகால தடுமாற்றங்களுக்குப்பிறகு கோல்டியை நான் உணர ஆரம்பித்த உடனே அது என் உள்ளென்றாகியது. விலகியணுகும் ஆடல் போல ஒரு மெல்லிய கோடு மட்டுமே தாண்டப்பட வேண்டியிருந்தது. இன்னதென்று சொல்லவியலா ஒரு தருணத்தில் நானே அதுவாக ஆகியிருந்தேன். அதுவரை நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக மாறியிருந்தேன்.

1997 ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை பிற்காலை நேரம். டெல்லியைப் போர்த்தியிருந்த முகிற்பனிகள் லேசாக விலகியிருந்தது. குதிரையேற்றப்போட்டிகள் நடந்து கொண்டிருந்த மைதானம் குதிரைகளின், வீரர்களின் வெப்பத்தால் சற்றே தெளிவாக இருந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் குடியரசுதின விழா முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மாணவர் படையின் குதிரைப்பிரிவு மாணவர்கள் எல்லோரும் அம்மைதானம் முழுக்க பரவி புரவியுடனிருந்தனர். தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் உள்ளடக்கிய பிரிவில் தேர்வான ஆறு பேரில் நானும் செந்தில்நாதனும் இருந்தோம்.

அன்று நான் எனக்கான போட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்தேன். முதலில் show jumping எனப்படும் உயரம் தாண்டுதல். தொண்ணூறு செகண்டில் பத்து உயரத்தடைகளைத் தாவவேண்டும். நான் கோல்டியுடன் நடுவரிடம் முறையாக அறிவித்து ஒப்புதல் பெற்றுக்கொண்டு jumping arena எனப்படும் தாண்டு எல்லைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த அனைவரின் கவனமும் கோல்டியின் மீதே இருந்தது. கோல்டியின் அழகும் அசைவுகளும் அப்படி. முதல் நான்கு தடைகள் வரை உயரம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.  லைசன்ஸ் வாங்கும்போது போடும் எட்டு போல இருக்கும் அந்த ஜம்ப்பிங் வரிசை. நான்காவது முடித்து ஐந்தாவது போகும்போது சிறிது தூரம் நேராக சென்று வலது திரும்பவேண்டும். நான் பதட்டத்தில் தேவையான தொலைவுக்கு முன்னமே திரும்புவதற்கு கோல்டியை கட்டாயப்படுத்தினேன். கணநேரம் மறுத்தாலும் திரும்பிவிட்டது. உயரம் சரியாக தாண்டமுடியாமல் கட்டை கீழே விழுந்தது. ஒன்பதாவது ஜம்ப்பில் ஒரு அடி பின்னதாக எகிருவதற்கான சிக்னல் கொடுக்க கோல்டி மறுக்க, தவறான கணிப்பில் நான் மீண்டும் காலால் ஊக்கினேன். தாண்டிவிட்டது. ஆனால் கட்டை கீழே விழுந்துவிட்டது. அறுபது செகன்டில் முடித்து விட்டேன். சீக்கிரம் முடித்தது நல்லது எனினும்  இரண்டு கட்டைகள் விழுந்ததில் வெற்றி பறிபோனது. நாங்கள் கட்டைச்சுவரில்.

ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுவிட வேண்டியதுதான் என்றிருப்பவனை எப்புள்ளியிலும் தோற்கடித்துவிடமுடியும் என ஜெயமோகன் சொன்னது ஞாபகத்தில் வந்து போனது. அவ்வாறெனில் நான் விழைந்திருக்கிறேன். எங்கோ சுஷூப்தத்தில்.

மைதானத்தைச் சுற்றியிருந்த கட்டைச்சுவரின்மீது இடதுகாலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தோம் நானும் செந்தில்நாதனும். வேட்டை முடித்துவந்த அய்யானார் போல. அருகமர்ந்து பீடி இழுத்துக்கொண்டிருந்தார் ஓம்பிரகாஷ். நானிருந்த மனநிலையில் அவரது எண்ண ஓட்டத்தை கணிக்கவில்லை. ஓம்பிரகாஷ் அந்த காலகட்டத்தில் இந்தியாவின் சிறந்த குதிரையேற்றப் பயிற்றுநர்களில் ஒருவர். எனக்கு குதிரையேற்றத்தைக் கற்றுக்கொடுத்த ஆசான். அவர் ஏதும் பேசிவிடக்கூடாது என விரும்பினேன். நான்கு பீடிகளை முடித்தபின் சற்றே தலையை மட்டும் திருப்பி “ச்சோடோ மேரா பையா” னு சொல்லிவிட்டு போய்விட்டார். நானும் செந்தில்நாதனும் ஒருவரையொருவர் கூட பார்த்துக்கொள்ளாமல் தன்னிரக்கத்தில், கோல்டியின்,  ஆசானின் பேச்சை மறந்த அல்லது அதீத ஆணவத்தவறிழைத்த குற்ற உணர்ச்சியில் அமர்ந்திருந்தோம். செந்தில்நாதன் எதுவும் பேசிவிடக்கூடாது என்று எண்ணிமுடித்த கணத்தில் சொன்னான் ” கோல்டி சொன்னமாதிரி கேட்டிருக்கலாம்ணே”.

மேலும் பேசவிரும்பாமல் அமர்ந்திருந்தோம். புரவிக் கலையறிந்தவர்கள் சொல்வார்கள், புரவி அறிந்ததை ஒருபோதும் மானுடன் அறியமுடியாது என்று. புரவி திரும்பாத திசைக்கு அதைச் செலுத்துவது இறப்புநோக்கி செல்வது என ஆசான் ஜெயமோகன் அடிக்கடி சொல்வார்.

“…. விளக்கத் தொடங்கினால் அது சொல்லொழுங்காகும், எண்ணக்கட்டமைப்பாகும். சொல்லென்றும் எண்ணமென்றும் ஆன எதுவும் இணையான மறுப்பையும் கொண்டிருக்கும். ஓயாத அலைவுறுதலும் தொடங்கும். ஆகவே அடைந்ததை எங்களுக்குள் செலுத்துங்கள உங்கள் உயிர் என மூச்சென அது உங்களுக்குள் மட்டும் இருக்கட்டும்” என வசிட்டர் சொன்னது ஊடாக ஓடியது.

மூன்று வருட கடுமையான இடைவிடாதப் பயிற்சி. பதக்கம் வென்றாகவேண்டுமென்ற வெறி. ஆம் வெறி, நீநாள் கழித்தே உணர்ந்த நிதானம் தவறிப்போன வெறி. அல்லது எங்கோ நான் தோல்வியை விரும்பிருக்கிறேன். தோற்றால் எப்படியிருக்கும் என கற்பனையில் கழிவிரக்கமும் தன்னிரக்கமும் அக்கற்பனையினூடாக எழும் நகலின்பத்தையும் ரசித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

பெண்களுக்கான போட்டி முடிவுகள் மைக்கில் அறிவிக்கப்பட்டன.

“அது அவள்தானா?” என்றேன். அந்த அறிவிப்பை ஒருகணம் கேட்டதுமே உடல் அதிர்ந்து விழிமங்கலடைந்தேன். அஞ்சி பின்னடைந்தேன். அவள் நானறிந்தவள் அல்ல என விழியும் செவியும் சொல்லிக்கொண்டிருந்தன. அவளே என உள்ளம் தவித்தது. கால்கள் நடுங்கி நிலம் கவ்வாமலாயின. மூச்சைக் குவித்து சொல்லென்றாகி “ஆம்” என்றான் செந்தில்நாதன். மூன்று வருடங்களுக்கு மேலாக அவள் என் அணுக்கமான தோழி. மிச்சமின்றி பகிர்ந்திருக்கிறாள் அனைத்தையும்.

உச்சவெறுப்பென்பது புறக்கணிக்கப்பட்ட அன்பின் மாற்றுரு. வெற்றிக்குப் பின் என் தோழி அன்று காட்டிய சிறு அவமதிப்பை இதுவரை கடக்க இயலவில்லை. சொன்னாலும் பிறர் நம்ப மாட்டார்கள். நச்சுநா கொண்டு கடிக்கும்வரை விழிகளுக்குத் தெரியாத நாகம் அவள். மற்றபடி தேவதை. கோல்டி மாதிரியே. அதன்பின்னான அவளின் வெற்றி அறிவிப்பு என்னை நிலைகுலைய வைத்தது. இயல்பான தன்னுணர்வால் அவ்வெண்ணத்தை அடக்கியதுமே ஏன் அடக்கவேண்டும் இனி என்ற எண்ணம் வந்தது. இனி எத்தளையும் இல்லை. எந்தப் பார்வைக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை என்ற எண்ணமும். இப்புவியில் நான் செல்லும் பயணங்களெல்லாம் என்னுள் நுழைந்து செல்பவை என்றே உணர்கிறேன். நான் காணும் ஒவ்வொரு எல்லையிலும் பாம்பு தன் உறையை என என்னை கழற்றிவிட்டு கடந்துசெல்கிறேன்.

அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உருவாகியிருந்தது. எங்கள் அணியினர் வாழ்த்திக்கொண்டிருந்தனர். ஜெயித்தவர்கள் சுயததும்பலால் நிறைந்திருந்தார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’ஜெயிச்சிட்டேன்ல’ என்ற பாவனை. எனக்கும் மகிழ்வே. ஆனால் அதன் பின்னான கல்லூரி வாழ்விலும், இன்று வரையிலும் கூட அந்த உதாசீனத்தை மறக்க இயலவில்லை.

சில வருடங்களுக்குப்பின் எங்களிடம் இருந்த பதினான்கு குதிரைகளுக்கும் அளிக்கப்பட்ட பச்சைப்புல்லில் அதிக அளவில் நைட்ரைட் இருந்த காரணத்தால் ஒவ்வொன்றாக நோய்வாய்ப்பட்டது. நாங்கள் காரணமறிவதற்குள் ஆறு இறந்துவிட்டன. கோல்டி ஏழாவது மற்றும் கடைசி. வழக்கமாக நிறைய சாப்பிடும் கோல்டி அன்று ஏனோ சாப்பிடாமல் இருந்தது. நான்தான் கட்டாயப்படுத்தி சாப்பிடவைத்தேன்.  இரண்டு நாட்களில் எல்லாமும் முடிந்துவிட்டது. என் குதிரையை நானே போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டிய நிலை. எங்கள் இறப்பறி பரிசோதனைக்கூடம் முழுக்க வெட்டி பரப்பப்பட்ட குதிரைகளின் உடல்பாகங்கள். கோல்டியின் கண்களில் தேங்கியிருந்த சொல்லென்றாகாத அந்த ஒன்றை எண்ணியபடி எஞ்சிய வாழ்நாள் முழுக்க அதை சுமந்தலையப் போகிறேனோ?.

செல்லச்செல்லப் பெருகும் என்னுள் பெருகாதிருப்பது ஒரு வினா மட்டுமே. என்னை முற்றிலும் கழற்றிவிட்டு அவ்வினா மட்டுமாக நான் எஞ்சும் ஒரு தருணம் வரும். அதுவரை எங்கும் அமர்ந்திருக்க என்னால் இயலாது.

 

பேரன்புடன்

தங்கபாண்டியன்

[பி.கு: இதிலுள்ள பெரும்பாலான வரிகள் வெண்முரசில் இருந்து எடுக்கப்பட்டவை]

 

முந்தைய கட்டுரைஜடம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகம் , கோவை -திறப்பு