முத்தங்கள் – கடிதம்

முத்தங்கள் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

முத்தங்கள் சிறுகதையை வாசித்தேன். புனைவுக் களியாட்டு சிறுகதைகளில் இது மாயத்தனம் கொண்ட கதை அல்லது ஒரு கிறுக்குத்தனம் கொண்ட கதை. ஒரு திசையில் பயணிக்கும் கதை அப்படியே செங்குத்தாக வேறொரு திசைக்கு செல்கிறது. கனவு அப்படியே நினைவில் நின்று எழுத்தாக மாறியது போலுள்ளது. கதை எதையோ உரக்கச் சொல்கிறது.

  1. நாய் காட்டும் வாழ்க்கைப்பாடமா?
  2. அவன் வாழ விரும்பியவாழ்க்கையா?

உங்கள் தளத்தில் பார்த்துதான் ஆல்பா திரைப்படத்தை பார்த்தேன். நாயுக்கும் மனிதனுக்கும் நட்பு உருவாகிய தருணங்கள் நாகரிக வளர்ச்சியல்லவா! இது சமமான இருவரின் நட்பல்ல. ஒன்று அண்ணாந்து பார்க்கிறது, இன்னொன்று இறங்கிக் கொஞ்சுகிறது. இருந்தும் நட்பு பலகாலம் நீடிக்கிறது. 2014 அல்லது 2015 பெங்களூரு மரத்தஹள்ளி சர்வீஸ் ரோட்டில் நடந்து வரும்போது முகநூலில் எழுதுவதற்காக நாயைப் பற்றி எனக்கு தெரிந்ததை யோசித்துக் கொண்டு வந்தேன். அன்று தோன்றிய யோசனை நம்மோடு சேர்ந்த நாய் புத்திசாலியா இல்லை நாயை சேர்த்த நாம் புத்திசாலியா? இந்த சிறுகதையைப் படித்தபின் நாய்தான் என்று நினைக்கிறேன். காட்டில் வாழ்ந்த நாய் இறைவனிடம் வரம் கேட்டது. நான் வாழும் வாழ்க்கையின் மொத்தத் துளியையும் அனுபவிக்க வேண்டும். அதற்கு இறைவன் கொஞ்சம் பொறுமை கொள், மனிதன் வருவான் அவனிடம் சேர்ந்துவிடு, நீ அவனை கொஞ்சம் பார்த்துக்கொள், அவன் உன்னை ரொம்ப பார்த்துக்கொள்வான். அன்பை கொடுப்பதில் அவன் கர்ணன் தான் ஆனால் முதலில் கொடுப்பதில்தான் கஞ்சன். அன்று முதல் நாய் நமக்காக காத்திருந்தது. நாம் சென்றோம், நம்மோடு வந்துவிட்டது. நம்மோடு வந்தபின் அன்பையும்,காதலையும், காமத்தையும் முழுவதுமாக அனுபவிக்கிறது. நமக்கும் அதைப் பார்த்து அதன்படி வாழ ஆசைதான் ஆனால் ஏதோ தடுக்கிறது. கடைசி தருணத்தில் வாழ விரும்பிய வாழ்க்கை கனவுக்குள் நினைவாய் வந்து செல்கிறது.

அன்புடன்

மோகன் நடராஜ்

https://www.vishnupurampublications.com/

முந்தைய கட்டுரைஇருட்கனி – பனியில் கதிரோன்
அடுத்த கட்டுரைஅருண்மொழி விழா, யோகேஸ்வரன் ராமநாதன்