வளியில் ஒரு விந்தை – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
அன்புள்ள ஜெ,
வணக்கம். நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைத் தாங்கிய ராக்கெட் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி (நம் விஷ்ணுபுர விழா அன்றுதான்!) விண்ணில் ஏவப்பட்டதை youtubeல் நேரடியாக கண்டு களித்தேன். கட்டுரையாளர் முரளி குறிப்பிட்டது போல் மனித வரலாற்றில் இது ஓர் மிக முக்கிய, மகத்தான மைல்கல்.
நாம் சென்ற நூற்றாண்டிலேயே இப்புவியின் அனைத்து மூலைகளிலும் கால் பதித்துவிட்டோம்.
உலகின் மிக உயர முகடான எவெரெஸ்ட்டில் டென்சிங், 1953ல் தனது ஏழாவது முயற்சியில், ஓர் அற்புத காலைப்பொழுதில், மானிடர்கள் அனைவரின் சார்பிலும் காலைப் பதித்தார். ஆனால் இந்த நூற்றாண்டிலோ (வருடம் 2019) ஏராளமானவர்கள் உச்சியை அடைய வரிசையில் நெருக்கியடித்து காத்துக்கொண்டிருந்த புகைப்படத்தைக் கண்டேன்.
புவியின் இரு துருவங்களையும் சென்ற நூற்றாண்டிலேயே அடைந்தாகிவிட்டது. Worst Journey in the world எனும் புகழ் பெற்ற தென் துருவ பயண நூலில் அண்டார்டிக்காவின் பனிக்காலத்தில் 24 மணி நேர இருள் பனிக்காலத்தில், 120 கிமீகள் பயணம் செய்து emperror penguin முட்டைகளை சேகரித்து விட்டு வந்த டாக்டர் வில்சனின் கடும் சாகஸ பயணத்தை மயிர் சிலிர்க்க வாசித்தது நினைவிற்கு வருகிறது.இன்றோ, அங்கு நிரந்தர விஞ்ஞான ஆய்வு களம் அமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சென்ற டிசம்பரில் கொரோனா கூட அங்கு சென்றுவிட்டது!இனி இப்புவியில் நமக்கு தெரியாத ரகசியங்களே இல்லை, அல்லது அவை மிக அருகிவிட்டன.
இது போன்று விண்வெளித்துறையில் பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாம் அடைந்திருக்கிறோம். சென்ற வருட பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் நாஸா, தனது ஐந்தாவது இயந்திர வாகனத்தை, ரோவரை இறக்கியது. கடந்த காலத்தில் உயிர் இருந்ததற்கான (இருந்திருந்தால்!) தடயங்களைத் தேடுவதற்கும் பாறை/மண் மாதிரிகளை சேகரித்து புவிக்கு அனுப்பவுதற்குமான பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இத்தகைய இந்நூற்றாண்டு முக்கியத்துவங்களில் ஒன்றுதான் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இந்த ஜனவரியில் இந்த தொலைநோக்கி, L2 எனப்படும் லாக்ரெஞ்ச் புள்ளியையும் அடைந்துவிட்டது. திட்டமிட்டபடி வரும் ஏப்ரலிலிருந்து இத்தொலைநோக்கி முழுமையாக செயல்படத்துவங்கும் எனத் தெரிகிறது.
புவியிலிருந்து கிட்டதட்ட ஒரு மில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து கொண்டு பிரபஞ்சத்தின் வரலாற்றை, பிரபஞ்சத்தின் ஆரம்ப விண்மீன்களை, நட்சத்திர மண்டலங்களை, அவற்றின் பிறப்புகளை இன்னும் எத்தனையோ, இன்னும் நமக்கு விலகாத திரைகளை விலக்கி அளிக்கப்போகிறது.
இன்றைக்கு, நிகழ்காலத்திலிருந்து கொண்டு நாம் இறந்த காலத்தை இன்னும் தெளிவாக காணப்போகிறோம். இதன் மூலமே எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கப்போகும் ஓர் பிரமாண்ட மாயக்கண்ணாடி, இத்தொலைநோக்கி.
ஒரு youtube வீடியோவை நம் மவுஸைக்கொண்டு முன்னும் பின்னும் நகர்த்திக்காண்பது போல் பிரபஞ்ச இறந்த, நிகழ் காலங்களைக் காணப்போகிறோம்!
இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குப்பின் அல்ல, நம் வாழும் காலத்திலேயே இந்த அதீத ஆச்சரியங்களை நாம் காணப்போகிறோம்.
இத்தனை நூற்றாண்டுகளாக மானிடன் ஆதாரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் மத, தத்துவ நம்பிக்கைகளை இக்கண்டுபிடிப்புகள் எப்படி மாற்றி அமைக்கப்போகின்றன என்று காண்பதை விட வேறு சுவாரசிய விஷயம் உண்டா என்ன?!
சிவா கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள சிவா,
நான் சிறுவனாக இருந்தபோது, 1969 ஜூலை 16 ஆம் நாள் மானுடன் நிலவில் கால் வைத்தான். அந்நிகழ்வை நான் அத்தனை தெளிவாக நினைவுகூர்கிறேன். பெரும் பதற்றத்துடன் அத்தனை நாளிதழ்களையும் வாசித்தேன். எனக்கு இருந்தது மகிழ்ச்சியோ கிளர்ச்சியோ அல்ல, ஒரு வகையான பதற்றம் என்றே நினைவுகூர்கிறேன். என்ன பதற்றம்? நான் வாழ்ந்த உலகம் இன்னொன்றாக ஆகிவிட்டது. நான் நம்பியவை உருமாறி வேறு அர்த்தம் கொண்டுவிட்டன. சட்டென்று நிலவு ஒரு ‘தரை’ ஆக மாறிவிட்டது.
அத்துடன் எங்களூர் கிறிஸ்தவ மேலாதிக்கம் கொண்டது. என் வகுப்பில் தமிழ்சார் ‘சிவனுக்க தலையிலே கிறிஸ்தவன் கால் வைச்சிட்டாண்டா’ என்றார். நான் அழுதுவிட்டேன். என் அம்மாவிடம் கேட்டேன். ‘இனிமே சிவன் என்ன செய்வார்?’ என்றேன். அம்மா ஒரு தயக்கமும் இல்லாமல் ‘அது வேற நிலாடா…ஒரு நிலாவா இருக்கு?’ என்றார். அவ்வளவுதான், முடிந்துவிட்டது. ஆயுர்வேத வைத்தியர் சங்கரன் நாயர் சொன்னார். ‘இந்த பிரபஞ்சத்திலே பலகோடி நிலாக்கள் இருக்கு. அதவிட பலகோடி மாயாநிலாக்கள் உண்டு. சிவன் தலையிலே இருக்கிறது மாயாநிலா… அது க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிட்டிருக்கும்”
எங்களூரில் அறிவியல்பார்வை தலைகீழாக மாறியது. அதுவரை நவீன அறிவியல்மேல் இருந்த சந்தேகம் அகன்றது. மக்கள் அலோபதி மருந்துக்கள், ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் ஆகியவற்றின் மீதான அவநம்பிக்கையை களைந்தனர். எதையும் ‘அதெல்லாம் சயண்டிபிக்காக்கும்’ என்று சொல்லும் மனப்பான்மை மிகுந்தது. சைபால், அமிர்தாஞ்சன் போன்றவை தாரளமாக விற்க ஆரம்பித்தன. ஆனால் பக்தி, மதநம்பிக்கை, புராணம்? அதெல்லாம் முன்னரும் வலுவுடன் நீடித்தன. ‘சந்திரசூடனுக்கு’ ஒன்றும் ஆகவில்லை.
மத உருவகங்கள் கவித்துவப் படிமங்கள் போல. அவை நேரடியாகவே புறவுலகில் இருந்துதான் உருவாகின்றன. மலைமுடிகள், ஆறுகள், கடல், சூரியன் சந்திரன் எல்லாம் கவிதையில் படிமங்களாகி பின் தொன்மங்களாகி ஆழ்படிமங்களாகி மதத்தில் நீடிக்கின்றன. அந்தப்பொருளின் அர்த்தம் மாறிவிடுவதனால் ஆழ்படிமங்களோ தொன்மங்களோ மாறுவதில்லை. மனிதன் அவற்றுக்கு அளித்த அர்த்தங்கள் அப்படியேதான் நீடிக்கும். அவை அவனுடைய அகவுலகு சார்ந்தவை.
மதம் சார்ந்த படிமங்களை பகுத்தறிவால் மாற்ற முடியாது. அவை உடனே தங்கள் புறவய விளக்கங்களை கைவிட்டுவிட்டு அகவயமான அர்த்தங்களை மட்டும் கைக்கொள்ள ஆரம்பித்துவிடும். மதம் சார்ந்த ஒரு வழிபாட்டுப்பொருளை பொருளிழப்பு செய்தால் அந்த வழிபாட்டுப்பொருள்மேல் ஏற்றப்பட்டிருந்த உளநிலைகளும் உருவகங்களும் படிமங்களாக மாறி நீடிக்கும்.
என் இளமையில் இன்னொரு உதாரணம் சபரிமலை மகரஜோதி. அது சபரிமலை உச்சியில் ஐயப்பனால் காட்டப்படுவதென்றே பக்தர்கள் நம்பினர். ஜோதி சட்டென்று மலைமேல் தெரியும்போது பல்லாயிரம்பேர் பக்திப்பரவசத்தால் கண்ணீர் விடுவார்கள். சபரிமலை ஐயப்பனே ஒளிவடிவாக மலையில் எழுந்தருளுவதாக தொன்மம்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 13 அல்லது 14 ஆம் தேதி (தைப்பொங்கல்நாளில்) இது கொண்டாடப்படுகிறது. இது தொன்மையான சௌர மதத்தின் விழா. சூரியன் மகர ராசியில் நுழையும் நாள். மகர சங்கிராந்தி என வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதம் மகரம் தொடங்கும் நாள் இது. கேரளத்தின் பழைய புத்தாண்டுப்பிறப்பு மகரம் ஒன்றுதான்.
1972ல் ஜோசப் இடமறுகு என்னும் நாத்திகப் பிரச்சாரகர் அது பழங்குடியினரின் மகரவிளக்குக் கொண்டாட்டம் என்றும் அதில் மர்மம் ஏதுமில்லை என்றும் சொன்னார். பக்தர்கள் அதை மறுத்தனர். இளைஞர்களின் குழு ஒன்று மலையேறிச்சென்று கண்காணித்தது. சபரிமலை தேவஸ்தான ஊழியர்கள் மலைமேல் ஓரிடத்தில் பெரிய குழியில் நெய்யும் விறகுமிட்டு தீ எழுப்புவதை கண்டனர். அவர்கள் தாங்களும் பல இடங்களில் அப்படி தீயிட அம்முறை ஏழெட்டு மகரஜோதி தெரிந்தது.
அதன்பின்னர் தேவஸ்வம் போர்டு ஒப்புக்கொண்டது. பழங்குடிகளான பளியர்தான் இருநூறாண்டுகளாக அங்கே மகரஜோதியை எரியவிட்டவர்கள். அது அவர்களின் விழா. ஆனால் அவர்கள் குடிபெயர்க்கப்பட்டனர். ஆகவே ஜோதியை தேவஸ்வம்போர்டு கொளுத்த ஆரம்பித்தது. 2008ல் மீண்டும் ஜோதி பற்றிய விவாதம் எழுந்தது. தகவலறியும் உரிமை சட்டப்படி ஒருவர் கோரிக்கை விடுக்க சபரிமலை தலைமை மேல்சாந்தி கண்டரரு மகேஸ்வரரு அது தேவஸ்வத்தால் கொளுத்தப்படுவது என சட்டபூர்வமாக அறிவித்தார்.
ஆனால் சபரிமலை ஜோதிதரிசனம் இன்று நூறுமடங்கு பெரிய விழா. பக்தர்களுக்கு அதே பரவசம். ‘ஐயப்பன் அப்டியே, தானா வந்திரமுடியுமா? ஆதிவாசிங்க மனசிலே அங்க தீய கொளுத்தி கும்பிடச்சொன்னது ஐயப்பன் அல்லவா?” என்று மகேஸ்வரரு கண்டரரு விளக்கினார்.
Unweaving the Rainbow ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய நூல்.அறிவியலின் தளராத புறத்தர்க்க முறைமையைப் பற்றியது. இந்த நூல் முன்பு டாக்கின்ஸ் எழுதிய The Selfish Gene மற்றும் The Blind Watchmaker ஆகிய நூல்களில் இருந்த கறாரான புறவய அணுகுமுறைக்குமேல் உருவான விமர்சனங்களுக்கான பதில். தொன்மங்கள், மதம் ஆகியவற்றை கடுமையாக மறுப்பவர் டாக்கின்ஸ்.அவர் வாழ்க்கையின் அழகுணர்வு, ஆன்மிகவுணர்வு, அடிப்படையில் மனித உள்ளத்தை செலுத்தும் வியப்புணர்வு பரவசங்கள் ஆகியவற்றை மறுக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
டாக்கின்ஸ் இந்நூலில் அவர் மானுட உள்ளத்தின் வியப்புணர்வையும் பரவசங்களையும் மறுக்கவில்லை என்றும், அவற்றை அறியாத சக்திகள் அல்லது தெய்வங்கள் என்னும் கற்பனையுருவங்கள் மேல் சுமத்தி ‘முடித்துவிடுவதை’ மட்டுமே எதிர்ப்பதாகவும், உண்மையில் அறிவியல் பிரபஞ்சத்தின் விந்தையையும் அதை அறிவதிலுள்ள பரவசத்தையும் பெருக்கவே செய்கிறது என்றும் சொல்கிறார்.
இந்த தலைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டு விவாதமொன்றை நோக்கிக் கொண்டுசெல்வது. இலக்கியத்தில் முக்கியமான ஒரு சொலவடை அது. ஜான் கீட்ஸ் அறிவியல் பிரபஞ்சத்தின்மீதான மானுடனின் அழகனுபவத்தை அழிக்கிறது என வாதிட்டார். பிரபஞ்சம் அளிக்கும் வியப்பும் புதிரும் பரவசமுமே மனிதனை பிரபஞ்சக்கூறுகளை படிமங்களும் தொன்மங்களும் ஆழ்படிமங்களுமாக ஆக்கிக்கொள்ளச் செய்கின்றன. அவற்றுக்கு அளிக்கப்படும் தர்க்கபூர்வ விளக்கங்களால் அந்த வியப்பும் புதிரும் பரவசமும் இல்லாமலாகிறது. அழகுணர்வும் மீமெய்மையுணர்வும் அழிகின்றன.
ஐசக் நியூட்டன் வானவில் என்பது நிறப்பிரிகையால் உருவாவது என விளக்கியபோது பல்லாயிரமாண்டுக்கால தொன்மங்கள் அழிந்தன என்றார் கீட்ஸ். தோர் என்னும் தெய்வம் மறைந்தது. ‘வானவில்லை பிரித்துப்பரப்புதல் ‘ (Unweaving the Rainbow)என அவர் இதைச் சொன்னார். அதையொட்டி இலக்கியத்தில் விரிவான விவாதம் நிகழ்ந்தது.Unweaving the Rainbow விவாதம் என அது அழைக்கப்படுகிறது. அறிவியல் பிரபஞ்சத்தின் மர்மங்களை அதிகரித்தபடியே இருக்கிறது, வியப்பை கூட்டிக்கொண்டே இருக்கிறது, ஆகவே மேலும் மேலும் படிமங்களும் தொன்மங்களும் ஆழ்படிமங்களுமே உருவாகும் என்று பதில் சொல்லப்பட்டது
அதை இலக்கியத்திலேயே காணலாம். இருபதாம்நூற்றாண்டு கவிதையிலும் வானவில் மேலும் அழகுடன் மிளிர்கிறது. அது நிறப்பிரிகை என்பதே மேலும் அழகிய படிமம் ஆகியது. அறிவியல் உருவாக்கிய கண்டுபிடிப்புகளும் கொள்கைகளும் புதிய படிமங்களை உருவாக்கி அறிவியல்புனைகதை என்னும் மிகப்பெரிய கற்பனைவெளியை சமைத்தன. காலப்பயணம், பொருள்-ஆற்றல் முயக்கம், வேற்றுக்கோள் உயிர்கள் என இன்றைய நவீன தொன்மங்களெல்லாம் அறிவியலால் உருவாக்கப்பட்டவை.
ஏனென்றால் அறிவியலும் இலக்கியமும் செயல்படும் தளங்கள் வேறுவேறு. அறிவியல் தர்க்கமுறைமை சார்ந்து மெய்மை நோக்கிச் செல்ல இலக்கியம் கற்பனை, உள்ளுணர்வு சார்ந்து மெய்மையை உசாவுகிறது. ஆகவே அறிவியல் அளிக்கும் உண்மைகளை எல்லாம் உடனுக்குடன் படிமங்களாக ஆக்கிக்கொண்டு இலக்கியம் முன்செல்லும்.
மதம் கவிதையுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது. அதன் வழிகள் அகவயமானவை. அது வெளியே நிலையான ஓர் அமைப்பு. ஆனால் அகவயமாக அது மாறிக்கொண்டே இருக்கிறது. சென்ற ஐம்பதாண்டுகளில் மதத்தின் குறியீடுகள் எப்படியெல்லாம் மாறியிருக்கின்றன என்று மட்டும் பாருங்கள், புரியும். கவிதைக்கு ஓர் அகராதி போடலாம், அதை வைத்து கவிதையை புரிந்துகொள்ள முடியாது. மதத்தையும் மதநூல்களைக்கொண்டு புரிந்துகொள்ள முடியாது.
ஜெ